World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

SYRIZA leader Tsipras lays out right-wing policies for Greek crisis

சிரிசா தலைவர் சிப்ரஸ் கிரேக்க நெருக்கடிக்கு வலதுசாரிக் கொள்கைகளை முன்வைக்கிறார்

By Alex Lantier
6 June 2012

Back to screen version
 

மே 31ம் திகதி, கிரேக்கத்தில் முற்போக்கு இடது கூட்டணி சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் Time இதழிற்கான ஒரு நீண்ட நேர்காணலில், ஜூன் 17 தேர்தல்களில் கிரேக்கத்திற்கு தன் கட்சி முன்வைக்கும் வேலைத்திட்டம் பற்றி விவரித்தார்.

கருத்துக் கணிப்புக்களில் மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 30% பங்கை பெற்று சிரிசா முன்னணியில் உள்ளது. இது 2009 முதல் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு ஆணையிடும் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி அதனது விமர்சனத்தினாலாகும். இச்சிக்கன நடவடிக்கைகள் கிரேக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்துவிட்டதுடன், அதே நேரம் கிரேக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை முற்றுகையிட்டுவிட்டன. ஊதியங்கள் 30% அல்லது அதற்கும் மேலாகக் குறைக்கப்பட்டுவிட்டன; வேலையின்மை விகிதம் 22% என உயர்ந்துவிட்டது (இளைஞர்களிடையே 50% ஆகவுள்ளது).

மக்கள் சீற்றம் பெருகுகையில், பலரும் சிரிசாவிற்கு வாக்களிக்க விரும்புகின்றனர். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள விரோதப் போக்கை வெளிப்படுத்துவதற்கும், கிரேக்கத்தின் இரு முக்கிய பெரிய வணிகக் கட்சிகளான சமூக ஜனநாயக PASOK மற்றும் புதிய ஜனநாயகம் ஆகியவை செயல்படுத்திய வெட்டுக்களுக்கு எதிரான போக்கை காட்டவுமாகும். ஆனால் சிரிசா ஒன்றும் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல. இது வசதி படைத்த மத்தியதர வகுப்பினரின் கட்சியாகும். இதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், உயர்கல்விக் கூடத்தினர், தொழில்நேர்த்தி உடையவர்கள், பாராளுமன்றவாதிகள் போன்றோர் இருப்பதுடன், இவர்கள் தங்கள் சலுகைகளை தற்போதிருக்கும் சமூக ஒழுங்கை தக்கவைத்துக்கொள்வதின் மூலம் பாதுகாக்க விரும்புகின்றனர். சிப்ரஸ் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்களின் விதிகளை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த விரும்புகிறாரே அன்றி தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை பின்வாங்க செய்வதற்கு அல்ல. கிரேக்கம் வங்கிகளுக்குத் தொடர்ந்து நிதியத்தை அளிப்பதற்கு உறுதியளிக்கிறார். (பார்க்க-Greek SYRIZA leader Tsipras pledges to repay banks in European tour) இவருடைய டைம் பேட்டி அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு தான் பாதுகாப்பான நபர் என உத்தரவாதப்படுத்துவதாகும்.

தேவையான கட்டுமானச் சீர்திருத்தங்களைச் செய்ய விருப்பம் உடையவராக உள்ளாரா என வினவப்பட்டதற்கு, சிப்ரஸ் பின்வருமாறு விடையளித்தார்: பொதுத்துறை இன்னும் நம்பகத்தன்மை பெறுவதற்குத் தேவையான கட்டுமானச் சீர்திருத்தங்களை நாம் செய்ய வேண்டும், நியாயமான, திறமையான வரிவிதிப்பு முறையைத் தோற்றுவிக்க வேண்டும்; கிரேக்கப் பொருளாதாரத்தில் ஆறாத புண் போல் உள்ள கறுப்புச் சந்தைப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்

வங்கிகளுக்கு கிரேக்கம் நிதி திருப்பித்தருவதற்குத் தான் வரி அதிகரிப்புக்கள் மற்றும் வேலை வெட்டுக்கள், ஊதிய வெட்டுக்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிப்ரஸ் கூறியுள்ளார். அரசாங்க ஊழியர்களை அவர் தாக்கினார், கிரேக்கத்தின் திறமையற்ற பொதுத்துறை, பகுத்தறிவற்ற தன்மையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். PASOK, ND இரண்டும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வாக்குகளை பெறுவதற்காக வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பது போல் வேலைகளைக் கொடுத்துள்ளன என்றார் அவர். ஆனால் முறையான இலக்குடன் செய்யப்பட்டாவிட்டால், பணிநீக்கங்கள் எதிர்பார்த்த பலன்களைத்தராது என்று அவர் எச்சரித்தார்.

உயரும் வரிகள் மற்றும் வீழ்ச்சியுறும் ஊதியங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான கிரேக்கர்கள் தங்கள் வீடுகளை இழக்கையில், சிரிசா முடிந்தமட்டும் வரிகளை வசூலிப்பதில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் என்றார் சிப்ரஸ். குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமல்லாது, அதிக வருமானங்கள், மேல்மட்டத்தில் இருந்து வருபவர்கள் மீதும் வரிவிதிக்கப்படும் என்றார். சாதாரண கிரேக்க மக்கள் தமது பங்களிப்புக்கள் வழங்க அவர்கள் வெட்டுக்கள் குறைந்த ஊதியம் உடையவர்களுக்கு மட்டும் அல்ல, உயர்ந்த வருமானம் உடையவர்களுக்கும்தான் என்பது நம்பவைக்கப்பட வேண்டும் என்றார்.

வரி ஏமாற்றுக்களையும் பொதுத்துறை திறமையின்மையும் இப்படிக் கண்டித்தல், ஐரோப்பாவின் குட்டி முதலாளித்துவ இடதின் இழிந்த தன்மையின் உருவகம் ஆகும். அரசாங்கக் கொள்கைகள் குறித்த இதன் விமர்சனங்களும் அவற்றின் தொழிலாள வர்க்க விரோத நிலைப்பாட்டை மறைக்கும் வகையில்தான் கூறப்படுகின்றன.

வரி ஏமாற்றுவோர் மீது அரசாங்கத்தின் தாக்குதல் என்னும் சிப்ரஸின் திட்டங்கள் வாடிக்கையாக செல்வந்தர்கள் வரி ஏமாற்றுச் செய்வதைக் கணிசமாக மாற்றாது. இது எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் நடைபெறுவதுதான். இதன் நோக்கம் கிரேக்கத்தை வங்கிகள் கொள்கையடிப்பதற்கு தொழிலாளர்கள் சமரசத்துடன் இணங்கிப் போக வேண்டும் என்பதுதான். கிரேக்கப் பொதுத்துறையில் பகுத்தறிவற்ற தன்மை இருப்பதாக அவர் கூறும்போது, சிப்ரஸ் அவர் அதை எப்படி மாற்ற இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் பணிநீக்கம், வேலைகளை விரைவாக்குதல் ஆகியவை போதுமானதாக இல்லை என அவர் கருதினால் தொழிலாளர்களின் அத்தகைய பிரிவுகளை அவர் கையாள்வார் என்ற முடிவிற்கே ஒருவர் வரமுடியும். டைம் இற்கு தன்னுடைய வங்கியாளருடனான நட்பு நிலை பற்றி சிப்ரஸ் உறுதியளிக்கும் வகையில், மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் கொள்கைகளை பாராட்டினார். தன்னுடைய ஐரோப்பிய பயணத்தின்போது தெளிவாக்கியது போல், அவர் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா, அமெரிக்க முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் எனக் கருதுவதாகக் கூறினார்.

இது சிப்ரஸின் அரசியலில் இருக்கும் வர்க்கத் தன்மையை பேரழிவு தரும் வகையில் அம்பலப்படுத்துகிறது. ஏனெனில் ஒபாமா பொதுநிதிகள் டிரில்லியன் டாலர் கணக்கில் வங்கிகளுக்கு பிணையெடுப்பிற்குக் கொடுத்ததிலிருந்து, அரசாங்கம் வேலைகள் தோற்றுவிக்கும் திட்டத்தையும் எதிர்த்தல், வேலையில்லாதவர்களுக்கு முக்கிய உதவியளிக்க மறுத்தல், தங்கள் வீடுகளை இழந்துவிட்டவர்களுக்கு உதவ மறுத்தல் மற்றும் கார்த்தயாரிப்புத் துறையில் புதிதான வேலைக்கு எடுக்கப்படுபவர்களுக்கு 50% ஊதியம் ஆகியவற்றைத்தான் சுமத்தியுள்ளார்.

ஆனால் டைம் பேட்டியில், சிப்ரஸ் ஒரு படி மேலே சென்று, அறிவித்தார்: அமெரிக்காவில் எப்பொழுதெல்லாம் அரசாங்கம் தனியார் வங்கிகளுக்கு மறுமூலதனத்தை அவற்றை உறுதிப்படுத்த கொடுக்க அழைக்கப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் அது செலவழித்த பணத்திற்கு ஏற்ற மதிப்புடைய பங்குகளையும் பெற்றது. என் வங்கி திவாலாகிவிட்டது, ஆனால் பொதுப் பணத்தில் அது பிணையெடுக்கப்பட்டாலும்கூட என் பதவியில் இருப்பேன் என்று ஒரு வங்கியாளரும் கூறவில்லை. என்றார்.

அமெரிக்க அரசியலைப் பற்றி சிப்ரஸிற்கு முற்றிலும் சரியாகத் தெரிவிக்கப்படவில்லையா அல்லது அவர் பொய்கூறுகிறாரா என வியக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும் அவருடைய அறிக்கை அப்பட்டமான தவறு ஆகும். வங்கிகளைக் கடிந்து கொண்டு அவற்றை பொறுப்பாக்குவதற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா நிர்வாகம் அவற்றை டிரில்லியன் கணக்கான டாலர்கள் பொதுநிதி, உதவித்தொகைகளை வைத்திருக்கச் செய்ததுடன், அதே நேரத்தில் தங்கள் நிர்வாகிகளை பதவியில் நிலைநிறுத்தி அவர்களுக்கு மிக அதிக அளவு மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்கவும் அனுமதித்தது.

கிரேக்கத்திற்கு ஐரோப்பியப் பிணையெடுப்பு விதிகளை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும், அவற்றில் பெரிய வங்கிகளின் பிணையெடுப்பும் அடங்க வேண்டும் என்னும் சிரிசாவின் வேண்டுகோள், ஐரோப்பிய முதலாளித்துவப் பிரிவுகளிடம் இருந்து, குறிப்பாக ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலிடம் இருந்து தீவிர எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தலை நிறுத்திவிடுவதாக அவர் அச்சுறுத்துகிறார். அது அந்நாட்டை திவாலாக்கி, தன் சொந்த தேசிய நாணயத்தை மறுபடியும் அறிமுகப்படுத்தும் கட்டாயத்தில் தள்ளிவிடும்.

ஒரு புதிய கிரேக்க நாணயத்திற்கு எதிராக வங்கிகள் ஊக வணிகம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது விரைவாக அதன் சரிவை சர்வதேச சந்தைகளில் ஏற்படுத்தி, கிரேக்க மக்களை பெரும் பணவீக்கத்தின் மூலம் ஒரே நாளில் கிட்டத்தட்ட வறிய நிலைக்குத் தள்ளிவிடும். கிரேக்க அரசாங்கம் அப்படி ஏற்பட்டால் இராணுவத்தை அணிதிரட்டும் திட்டங்களைக் கொண்டுள்ளது. அதன்மூலம் வங்கிகளில் இருந்து பணத்தை முழுவதுமாக எடுத்துவிடுவது தடுக்கப்படும், எதிர்ப்புக்கள் பலவந்தமாக நசுக்கப்படும். (see, “Greek ruling elite prepares for showdown with working class”).

 

யூரோவை விட்டு நீங்குதல் சிரிசாவிற்கு ஒரு விருப்புரிமை இல்லை என்று சிப்ரஸ் வலியுறுத்தினார். இதனால் டைம் அவரை, திரு.சிப்ரஸ் மன்னிக்கவும், ஐரோப்பியர்கள் உங்கள் திட்டத்தை நாங்கள் விரும்பவில்லை எனக் கூறினால், என்ன செய்வீர்கள் எனக் கேட்டது.

சிப்ரஸ் கருத்துப்படி, சிரிசா யூரோவில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவர் விடையிறுத்தார்: உண்மையில், இது ஐரோப்பாவின் நிலைப்பாடாக இருந்தால் நாங்கள் கடினமான நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்களிடம் ஒரு மாற்றீட்டுத் திட்டம் உண்டு. அதில் சமூகத்தில் பெரும் பாதிப்புடைய, நலிந்த பிரிவுகளுக்கு ஆதரவுகொடுப்பதில் கவனம் செலுத்தப்படும். அதை நாங்கள் அத்தகைய நிலைமையில் செயல்படுத்துவோம்.

இத்தகைய தெளிவற்ற விடையிறுப்பு, கிரேக்க அரசாங்க நிதியச் சரிவுகளுக்கு சிரிசா சமூக நலச் செலவுகளைக் குறைப்பதின் மூலம் எதிர்கொள்ளும் என்ற உட்குறிப்பைக் கொண்டது, மக்களின் மிக வறிய அடுக்குகளுக்கு செலவழிப்பதை குறைக்கும் திட்டம், டைமிற்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த ஏடு அவரை மீண்டும் ஒரு மோசமான நிலைமையில் அவருடைய திட்டத்தை விளக்குமாறு கேட்டது.

எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. பொருளாதார வல்லுனர்கள்குழு திட்டங்களை இயற்றுகின்றனர், அன்றாடம் சீராக்குகின்றனர், அவற்றைப் பற்றித் தெரிவிக்கின்றனர்.... அதைப்பற்றி இப்பொழுது நான் கூற விரும்பவில்லை என்றார்.

இத்தகைய திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசுவது பயனுடையது அல்ல என நினைக்கிறேன். அதைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவது நாங்கள் அதை நோக்கி செல்கின்றோம் என்ற  கருத்தை தோற்றுவிக்கும். மாறாக, அதைத் தவிர்க்க விரும்புகிறோம். அதன் விளைவுகளை பற்றி நாங்கள் முற்றிலும் அறிவோம். நாட்டின் மீதும் ஐரோப்பா மீதும் பொதுவாக அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி நாங்கள் நன்கு அறிவோம் என்று அவர் விளக்கினார்.

சிரிசாவின் இழிந்த குட்டி முதலாளித்துவ அரசியலை தொழிலாள வர்க்கத்தின் நிலைநோக்கிலிருந்து பிரிக்கும் இடைவெளியை இத்தகைய கருத்து எடுத்துக்காட்டுகிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு அது எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்தும், அதற்கு எதிராக அது தன்னை அணிதிரட்டுமானால் அது எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்க முற்படுகிறது. வங்கிகளும் முக்கிய சக்திகளும் நெருக்கடிகாலத் திட்டங்களை தயாரிக்கின்றன, அதுவும் ஏகாதிபத்திய கொள்ளைகளின் முன்னோடியில்லாத செயல்களுக்காக. முழு நாடுகளின் தொழிலாளர்களையும் பிணைக் கைதிகள் போல் வைத்திருப்பதுடன், நிதியச்சந்தைகள் மூலம் அவற்றைத் தாக்கத் தயாரிப்புக்களை நடத்துகின்றன. இது முதலாளித்துவத்தின் முழு திவால்தன்மையையும்தான் குறிப்பிடுகிறது.

ஆயினும்கூட சிப்ரஸ் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு ஏதும் கொண்டிருக்கவில்லை; உண்மையில் அச்சொல் டைம் நேர்காணலில் தென்படக்கூட இல்லை. ஏனெனில் அவரும் அவருடைய கட்சியும் தீவிரவாத இடது அல்ல, மாறாக அரசியல் நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதிதான். சிறந்த சூழலில் கூட, சிரிசா செயல்படுத்த விரும்பும் கொள்கைகள் முற்றிலும் மரபார்ந்தவையும் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் இடர்களைத் தீவிரப்படுத்தும் வலதுசாரி நடவடிக்கைகளாகும்.

கிரேக்கமும் ஐரோப்பாவும் சரிவின் விளிம்பில் உள்ளன என்பதை நன்கு அறிந்துள்ள சிரிசா, மக்களுக்கு அது வெளியிடத் தயாராக இராத பேரழிவு குறித்த இரகசியத் திட்டங்களையும் விவாதித்து வருகிறது. சிரிசாவின் தலைமை பெயரிடப்படாத பொருளாதார வல்லுனர்களுடன் மட்டுமே பேசவில்லை. டைம் பேட்டியை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சிப்ரஸ் கிரேக்கத்தின் பாதுகாப்பு அமைச்சரகத்தில் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டுப்பாட்டுடன் பரந்த வகையில் மூன்று மணி நேர விவாதங்களை நடத்தினார். (see, “SYRIZA leader Tsipras backs the Greek military”).

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்றீட்டை சிரிசா பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அரசியல் ஆளும்வர்க்கத்தின் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அது திசைதிருப்ப உதவுவதுடன், ஒரு முதலாளித்துவ அரச கட்சிக்கு வாக்களிப்பதற்கூடாகாக, முலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கப் போராட்டம் அபிவிருத்தியடைவதை தடுப்பதுதான்.  

இத்தகைய இயக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பக்கத்தில் நிற்கும் சிரிசா போன்ற போலி இடதுபோக்குகளைக் கொண்ட குழுக்களுடைய அரசியல் அதிகாரத்தை இல்லாதொழிப்பதன் மூலம்தான் அபிவிருத்தியடையமுடியும்.