World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian coup

எகிப்திய ஆட்சி சதி

Johannes Stern
16 June 2012
Back to screen version

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றிற்கு முன் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு நடத்திய இராணுவ ஆட்சிசதி எகிப்திய புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு முக்கிய அச்சுறுத்தலாகும்.

இது இராணுவ ஆட்சிக்குழு பிரச்சாரம் செய்திருந்த ஜனநாயக மாற்றம் என்பதை ஒரு மோசடி என அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடைய ஆதரவுடன், ஆளும் SCAF (இராணுவப் படைகளின் தலைமைக்குழு) ஆரம்பத்தில் ஜனநாயகத்திற்கு ஒரு மாற்றம் என்ற நப்பாசையை கொடுப்பதற்கு நிறுவியிருந்த அனைத்து அமைப்புக்களையும் அகற்றிவிட்டது.

தலைமை அரசியல் நீதிமன்றம் (SCC) வியாழன் அன்று பாராளுமன்ற தேர்தல் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கண்டறிந்தபின், SCAF இஸ்லாமியவாதிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பாராளுமன்றத்தை கலைத்துவிட்டது. இராணுவ ஆட்சிக்குழு கெய்ரோவில் பாதுகாப்பை இறுக்கி, பொலிஸ் மற்றும் இராணுவப் படைகள் வெள்ளியன்று பாராளுமன்றத்தின்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு, அக்கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழையாமல் தடை செய்துவிட்டது.

இராணுவ ஆட்சிக்குழு செவ்வாயன்று பாராளுமன்றம் தேர்ந்தெடுத்த அரசியலமைப்பு மன்னறத்தையும் கலைக்க இருப்பதாக அறிவித்துள்ளதுடன், இது ஒரு அரசியலமைப்பு அறிவிப்பை வெளியிட உள்ளது. அது ஒரு தலைப்பட்சமாக புதிய சட்டமன்றத்தின் அமைப்பை நிர்ணயித்து, புதிய ஜனாதிபதியின் அதிகாரங்களையும் கோடிட்டுக் காட்டும்.

இச்சூழலில், முபாரக்கின் கீழ் இருந்த கடைசிப் பிரதம மந்திரி அஹ்மத் ஷபிக்கிற்கும், இஸ்லாமிய முஸ்லிம் சகோதரத்துவத்தின் வேட்பாளருக்கும் இடையே நடக்கும் இரண்டாம் சுற்றுப்போட்டி ஒரு மோசடித்தனம் ஆகும். இராணுவம், ஜனாதிபதி எந்த அதிகாரத்தைச் செலுத்துவார் என்பதைக் கட்டுப்படுத்த விரும்புகிறது என்பது தெளிவாகிவிட்டது. இரு வேட்பாளர்களில் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் ஒரு SCAF உடைய கைப்பாவையாகத்தான் இருப்பார். அவர் இராணுவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைக் பாதுகாத்து, தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் எதையும் நசுக்குவார்.

SCAF  இராணுவ ஆட்சிக்குழு வெளிப்படையாக எகிப்திய அரசியல் வாழ்வின் மீது தன் முழுக்கட்டுப்பாட்டையும் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேலாதிக்கத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு இது ஒப்படைத்திருந்த சட்டம் இயற்றும், வரவு-செலவுத் திட்டத்தை இயற்றும் அதிகாரங்களைப் பற்றி எடுத்துக் கொண்டு, அரசியலமைப்பையும் இயற்றுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு ஒரு நாள் முன்புதான் ஆட்சிக்குழு பொலிஸ், இராணுவம், அரசாங்க உளவுத்துறைப் படைகள் குடிமக்களை கைது செய்யும் அதிகாரத்தை அனுமதித்த ஆணை ஒன்றை வெளியிட்டது.

இந்த நடவடிக்கைகள் ஜனநாயக மாற்றம் என்பது ஆளும் உயரடுக்கின்முதலும் முக்கியமானதுமாக எகிப்தின் தளபதிகளுடைய-- சமூக நலன்களைக் பாதுகாக்கும் முக்கிய பங்கை மறைப்பதற்கு ஒரு காரணம் என்பதைக் காட்டுகின்றன. ஹொஸ்னி முபாரக்கின் இராஜிநாமா நடந்த தினத்தில் இருந்து அதன் இலக்கு என்பது எகிப்திய முதலாளித்துவத்தையும் மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியையும் பல தசாப்தங்களில் காணப்படாத மிகச்சக்தி வாய்ந்த புரட்சிகர இயக்கத்தால் கொடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராகக் பாதுகாத்தல் என்றுதான் உள்ளது.

இந்த இராணுவ ஆட்சிச்சதியை அடுத்து, தளபதிகள் சவாலுக்கு இடமில்லாத இராணுவ அதிகாரம் என்னும் சூழலை உருவாக்க முற்படுகின்றனர். புரட்சியின் ஆரம்ப வாரங்களில் இருந்த நிலைமையை மீண்டும் தவிர்க்க விரும்புகின்றனர். அப்பொழுது அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு இராணுவத்துருப்புக்களை நம்ப முடியாது என உணர்ந்திருந்தனர்.

இராணுவ ஆட்சிச்சதியின் முக்கிய இலக்கு உத்தியோகபூர்வ அரசியல் எதிர்த்தரப்போ அல்லது பாராளுமன்றத்தின்மீது ஆதிக்கம் கொண்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளோ, தாராளவாத அல்லது குட்டிமுதலாளித்துவ இடது குழுக்களோ அல்ல. மாறாக எகிப்திய புரட்சிக்குப் பின் உள்ள முக்கிய சக்தியான தொழிலாள வர்க்கம்தான்.

தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்படும் வேலைநிறுத்தங்களை தளபதிகள் இரக்கமற்ற முறையில் நசுக்குவர். இந்த இராணுவ ஆட்சிச்சதி ஆட்சிக் குழுவிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு மோதலுக்கு அரங்கு அமைக்கிறது. தொழிலாள வர்க்கம் தன்னைக் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், இராணுவக் குழுவை அகற்றுவதற்கான போராட்டம், அது பிரதிபலிக்கும் முதலாளித்துவ நலன்களை அகற்றும் போராட்டம் ஆகியவற்றின் மூலம்தான் முடியும்.

SPA எனப்படும் சோசலிஸ்ட் மக்கள் கூட்டணி, எகிப்திய சோசலிஸ்ட் கட்சி, எகிப்தின் கம்யூனிஸ்ட் கட்சி, RS எனப்படும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் போன்ற போலி இடது சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவின் கருவிகள் என்று அம்பலப்படுத்தப்பட்டு நிற்கின்றன. இராணுவ ஆட்சிக்குழு தோற்றுவித்த நிறுவன வடிவமைப்பிற்குள் புரட்சியின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கு போராடமுடியும் என அவை வலியுறுத்தியிருந்தன. இராணுவ ஆட்சிக்குழுவை அகற்றுவதற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் வளர்ச்சியை அவை எதிர்த்திருந்தன.

SCAF அதிகாரத்தை எடுத்துக் கொண்டபின், RS  உறுப்பினர் முஸ்தபா உமரின் சொற்களில், அவை முபாரக்கின் தளபதிகள் அரசியல், பொருளாதார முறையைச் சீர்திருத்தி, அதை இன்னும் அதிக ஜனநாயமுடையதாவும் குறைந்த அடக்குமுறை கொண்டிருக்கவும் அனுமதிப்பர் என்று கூறியிருந்தனர். SCAF  க்கு எதிராக தொழிலாள வர்க்கம் செயல்பட்டு வெகுஜனக் கோரிக்கையான ஒரு இரண்டாம் புரட்சியை நாடியபோது, அவை இதை எதிர்த்தன. 

பெருப்பாலான போலி இடது கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்கியிருந்த உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்தட்டிருந்தன. அது 1971 எகிப்திய அரசியலமைப்பிற்கு உறுதியளித்து, வெளிப்படையாக நாட்டின் அரசியல் வாழ்வில் இராணுவத்தின் பங்கிற்கு ஒப்புதல் கொடுத்திருந்தன. இக்கட்சிகள் ஆட்சிச்சதிக்கு சில நாட்கள் முன்புதான் இராணுவ ஆட்சிக்குழுவின் ஆட்சிக்குத் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தியிருந்தன.

எதிர்ப்புரட்சியை தோற்கடிக்க தொழிலாள வர்க்கம் வெகுஜன அரசியல் போராட்டம் என்னும் பாதையை எகிப்திய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக நடத்த வேண்டும்; இது எகிப்திய இராணுவ அதிகாரிகளின் ஆட்சி சதிக்குழுவினர், அவர்களுடைய ஏகாதிபத்திய ஆலோசகர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் அனைத்திற்கும் எதிராக இருக்கவேண்டும். இதற்கு மார்க்சிசத்திற்காக ஒரு உறுதியான அரசியல் போராட்டம் தேவை. அதுதான் இராணுவக்குழுவின் ஜனநாயக மாற்றம் எனப்படும் போலி இடது வக்காலத்து வாங்குவோரின் ஆளுமையை முற்றிலும் சிதைக்கும்.

இராணுவ ஆட்சிச்சதி, அரசு அதிகாரப் பிரச்சினையைத் தெளிவாக எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்திய தொழிலாள வர்க்கத்தைத் தெருக்களுக்கு இழுத்த கோரிக்கைகளான அரசியல் சுதந்திரம், சமூக சமத்துவம், வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவை இராணுவ ஆட்சிக்குழுவின் அதிகாரத்தை உடைக்காமல், அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கமே கட்டுப்படுத்தும் அரசாங்க அதிகாரத்தை அமைக்காமல் இயலாது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்குதான் சரியான முன்னோக்கு என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. அது அடிப்படை ஜனநாயக உரிமைகள் சோசலிசப் புரட்சி மூலமும், தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதின் மூலம்தான் பாதுகாக்கப்பட முடியும் என்று வலியுறுத்துகிறது. மேலும் எகிப்து, மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒரு பாகமாக அமைவதன் மூலம். இந்நிகழ்வுகள் எகிப்தியத் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினையான ஒரு புதிய, புரட்சிகரத் தலைமையை இந்த முன்னோக்கின் கீழ் கட்டமைக்க வேண்டும், அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் எகிப்தியப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.