World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party presidential candidate issues bogus pledge to tax the rich

செல்வந்தர்கள்மீது வரிவிதிப்பு என்னும் போலியான உறுதிமொழியை பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வெளியிடுகிறார்

By Kumaran Ira
29 February 2012
Back to screen version

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைச் செயற்திட்டத்தின் பெரும்பகுதியை மாற்றுவதாக இல்லை என்று அறிவித்த அதே தினத்தில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் 1 மில்லியன் ஈரோக்களுக்கும் ($1.345 மில்லியன்) மேலான வரிகொடுக்கும் வருமானம் உடையவர்களுக்கு 75 சதவிகிதத்திற்கு வரிவிதிக்கப்படும் என்னும் ஒரு வெற்று உறுதிமொழியையும் வெளியிட்டுள்ளார்.

திங்களன்று TF1 தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் செய்தியாளர்களிடம்கூறினார்: “CAC-40 தலைவர்களின் [பங்குச் சந்தைக் குறியிட்டு எண்] ஊதியங்கள் கணிசமாக ஆண்டு ஒன்றிற்குச் சராசரியாக 2 மில்லியனுக்கு அதிகரித்துள்ளதை கண்டுள்ளேன். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ....இதைப்பற்றி நான் ஆராய்ந்துள்ளேன்; 1 மில்லியன் ஈரோக்களுக்கு மேற்பட்டவர்களுக்கு வரிவிகிதம் 75 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று நான் இங்கு அறிவிக்கிறேன்; ஏனெனில் அந்த அளவு ஊதியத்தைக் கொள்ளுவது ஏற்கத்தக்கதல்ல.

இத்தகையதொரு கருத்தை ஹோலண்ட் வெளியிட்டது என்பதுகூட பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சமூக சமத்துவமின்மை மற்றும் நிதிய மூலதனம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் சர்வாதிகாரம் குறித்துக் கொண்டிருக்கும் ஆழ்ந்த சீற்றத்தைத்தான் பிரதிபலிக்கிறது. ஆனால், இது ஒரு பொய்; நிதியப் பிரபுத்துவம் இதைப் பாராட்டினாலும், அவர்களுக்கு ஹோலண்ட் இதைச் செயல்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியும்.

ஹோலண்டிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு முக்கிய நிதியத் துறை வணிகரை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது; அவர் கூறினார்: இது சற்று ஜனரஞ்சகமாக உள்ளது; ஆனால் அவருடைய முகாமிலேயே அவர் தன் தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நிலை உள்ளது...வெற்றிபெறுபவர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்; எனவே எவரும் மடத்தனமான உறுதிப்பாடுகளைக் கூறமாட்டார்கள்.

அதாவது, ஹோலண்ட் தவறான முறையில் செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பைத் தான் ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை அவருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான தந்திர உத்தியாகக் கையாள்கிறார்; இதற்கு PS இன் குட்டி முதலாளித்துவ இடதுஆதரவாளர்களின்,  பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF),  புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றின் உதவியும் உள்ளது. அவருடைய நோக்கம் PS க்கும் அதன் குட்டி முதலாளித்துவ நட்பு அமைப்புக்களுக்கும் இடதில் இருக்கும் மக்கள் எதிர்ப்பை அடக்குவது ஆகும்; அதையொட்டி தொழிலாள வர்க்கம் ஒரு தேர்தலில் முற்றிலும் வாக்கிழந்துவிடும்இரு பெருவணிகக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஹோலண்ட் மற்றும் சார்க்கோசி இவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாகும்.

PS ஒரு பெருவணிக மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் கட்சி ஆகும்; வங்கிகளுக்காக சமூகநலக் குறைப்புச் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதாக உறுதிமொழி கொடுத்த கட்சியாகும். தேர்ந்தெடுத்தால் PS உடைய கொள்கை முந்தைய கிரேக்கத்தின் PASOK, ஸ்பெயினின் PSOE  போன்ற சமூக ஜனநாயகக் கட்சிகளுடையவற்றைப் போல்தான் இருக்கும்; அவைகள் இரண்டுமே தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான சமூகநலச் செலவுக் குறைப்புக்களைத்தான் சுமத்தின.

 

செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பு என்னும் உறுதிமொழியை ஹோலண்ட் கொடுப்பதற்குச் சில மணி நேரம் முன்னதாகத்தான் Le Monde அவருடைய தேர்தல் திட்டம் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது; இது ஹோலண்டின் உயர்மட்ட ஆலோசகர்களுடன் நடத்தப்பட்ட விவாதங்களை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் சார்க்கோசி சுமத்திய ஜனநாயக-விரோத, சிக்கன நடவடிக்கைகள் பெரும்பாலானவற்றை ஹோலண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் தக்க வைத்துக் கொள்வார் என்று வலியுறுத்தினர்.

தற்போதைய கன்சர்வேடிவ் ஜனாதிபதி சார்க்கோசிக்கும், முதலாளித்துவ இடது வேட்பாளரான ஹோலண்டிற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை என்பதைத்தான் இது உயர்த்திக்காட்டுகிறது. இருவருமே பெருவணிகத்தின் வேட்பாளர்கள்தாம்; பொது மக்கள் கருத்துக் குறித்து முற்றிலும் இழிவான தன்மையைக் காட்டிச் செயல்படுபவர்கள்தாம்.

ஹோலண்ட் தக்கவைத்துக் கொள்ள இருக்கும் சார்க்கோசியின்  நடவடிக்கைகள் சிலவற்றில் கீழ்க்கண்டவை அடங்கியுள்ளன:

* பர்க்கா மீதான தடை: பிரான்ஸில் பர்க்கா அணிவதின் மீதான பிற்போக்குத் தடையை முதலில் இயற்றிய சட்டமன்றக் குழுவில் PS ம் இருந்தது, ரோமாக்களை நாடு கடத்துதல் போன்ற ஜனநாயக உரிமைகள் மீதான சார்க்கோசியின் பிற தாக்குதல்களுக்கும் ஆதரவைக் கொடுத்திருந்தது.

* பொலிஸ் படைகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வடிவமைப்புக் கொடுத்து, விரைவாகக் குறுக்கிடும் பொலிஸ் குழுக்களை ஏற்பாடு செய்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டங்கள். டிஜோனில் PS மேயராக இருக்கும் François Rebsamen, ஹோலண்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைக்குப் பொறுப்பேற்றுள்ளவர், கூறினார்: சாதிக்கப்பட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

* பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி பற்றிய சட்டம்: இது தனியார் நிறுவனங்களுக்கு பதவி நியமனங்கள், பாடத்திட்ட முடிவுகள் பற்றிக்கூடுதலான செல்வாக்கைக்கொடுத்து, மாணவர்களை அதிகப் பயிற்சிக் கட்டணங்களைக் கொடுக்கும் கட்டாயத்தில் தள்ளியுள்ளது. ஹோலண்டின் கல்விப் பிரச்சாரத்திற்கு பொறுப்புக் கொண்டிருக்கும் Vincent Peillon இது ஒரு முக்கிய பிரச்சினை அல்ல என்றும், சட்டத்தை அகற்றுவது என்பது ஒரு தவறான விவாதம் என்றும் கூறினார்.

* பொதுத்துறை வேலைக் குறைப்புக்கள்: RGPP  எனப்படும் பொதுக் கொள்கை பொதுத் திருத்தம் என்பது இரண்டு ஓய்வு பெறுபவர்கள் இடத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்குத் தேர்ந்து எடுக்கப்படுவர், அரசப் பணிகள் குறைக்கப்பட்டுவிடும், உள்ளூராட்சி நிர்வாகமும் குறைப்பிற்கு உட்படும். 2007 ஆண்டு முதல் 100,000 வேலைகள் அகற்றப்பட்டுவிட்டன.

* குறைந்தப்பட்சப் பணி சட்டம் என்பது பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைத் தடைக்கு உட்படுத்துகிறது. இச்சட்டப்படி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் பற்றிய தகவலை இரு நாட்களுக்கு முன்னதாகத் தெரிவிக்க வேண்டும். ஒரு வார வேலைநிறுத்தத்திற்குப்பின், வேலைநிறுத்தம் தொடரலாமா என்பது குறித்து தொழிலாளர்களிடம் ஓர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம்; இது நிறுவனத்தின் நிர்வாகத்திற்குத் திறமையுடன் கட்டுப்பாட்டை அளித்துவிடும். ஹோலண்ட் இச்சட்டத்தை மாற்றுவதாக இல்லை, ஏனெனில் இது இப்பொழுது நம் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது என்றார்.

*   ஓய்வூதியத் தகுதிக்குக் குறைந்தப்பட்ச வயதை 60ல் இருந்து 62 என உயர்த்துதல், 65 வயதில் இருந்து 67 என முழு ஓய்வூதியம் பெறும் வயது உயர்த்தப்படல், மற்றும் குறைந்தப்பட்சம் 41 ஆண்டுகள் பணிக்காலத்தில் இருந்தால்தால் முழு ஓய்வூதியம் ஆகியவை, ஓய்வூதிய வெட்டுக்களில் இருப்பவை. சட்டபூர்வ வயதிற்கு முன்னரே மக்கள் ஓய்வு பெறத் தான் அனுமதிக்க இருப்பதாக ஹோலண்ட் கூறியுள்ளார்; ஆனால் முன்கூட்டி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் கடுமையான நிதிய அபராதங்களை தேவைப்படும் குறைந்தப்பட்ச பணி ஆண்டுகள் இல்லாவிட்டால் எதிர்கொள்வர்.

வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை, வாஷிங்டனிடம் வெளிநாட்டுக் கொள்கையில் தன் மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஹோலண்ட் பிரான்ஸை நேட்டோ இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் மறு ஒருங்கிணைத்த சார்க்கோசியின் முடிவை மாற்றப்போவதில்லை என உறுதிமொழி கொடுத்துள்ளார். ஹோலண்டின் பிரச்சார இயக்குனர் Pierre Moscovici  கூற்றின்படி, பிரான்ஸ் வெளியேறுவது என்பது பரிசீலிக்கப்படவில்லை.அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில், ஆப்கானிய, லிபியப் போர் போன்றவற்றில் சார்க்கோசியின் கொள்கையான பங்கு என்பதை ஹோலண்ட் தொடர்வார் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறதுஇப்போர்களுக்கு PS ம் ஆதரவைக் கொடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டைப் பொறுத்தவரை, ஹோலண்ட் சார்க்கோசிக்கும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடுகள் மீண்டும் பேச்சுக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்; உதராணமாக ஒரு சமச்சீர் வரவு-செலவுத் திட்டத்திற்காக தங்க விதி பின்பற்றப்பட வேண்டும் என்பது. தங்க விதி என்பது உண்மையில் ஆழ்ந்த பிற்போக்குத்தனத்தைக் கொண்டிருந்தாலும், ஹோலண்ட் அதைக் குறைகூறியிருப்பது எந்த வகையிலும் ஐரோப்பாவில் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தொழிலாளர்கள் காட்டும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக இது மேர்க்கெலுடன் எந்த ஐரோப்பிய நிதியப் பிரபுத்துவம் தொழிலாளிர்களின் இழப்பில்  பிணை எடுப்பு நிதிகளில் இருந்து அதிக பணத்தைப் பெற வேண்டும் என்பது குறித்த தந்திரோபாயக் கருத்து வேறுபாடுதான்.

இதற்கு மாறாக, சார்க்கோசியின் பிற்போக்குத்தன நடவடிக்கைகளுக்கு ஹோலண்ட் கொடுத்துள்ள ஒப்புதல் மீண்டும் குட்டி முதலாளித்துவ இடது சக்திகளை அம்பலப்படுத்தியுள்ளது; இதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் குட்டி முதலாளித்துவ இடதுகட்சிகளும் PS உடன் சார்பு கொண்டு ஒரு PS அரசாங்கம் நிறுவப்படும் திறனில் பங்கு பெற விருப்பம் உடையவையும் அடங்கும். அத்தகைய அரசாங்கம் ஆழ்ந்த பிற்போக்குத்தனமாக இருக்கும்; ஹோலண்ட் ஏற்கனவே அறிவித்துள் ளதை விடக் கூடுதலான வலதுசாரி நடவடிக்கைகளைத்தான் தொடரும்.