World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Unite auto workers in Europe, North America and internationally against wage-cutting and layoffs!

ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஆட்குறைப்புகளுக்கு எதிராக ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் சர்வதேசரீதியாக வாகனத் தயாரிப்பு தொழிலாளர்கள் ஒன்றுதிரள்வோம்!

By Jerry White, SEP candidate for US president
25 February 2012
Back to screen version

நானும் எனது சக வேட்பாளருமான பிலிஸ் ஸ்கெரரும் எங்களது தேர்தல் பிரச்சாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காகப் போராடுவதையே எங்களது வேலைத்திட்டத்தின் முதல் கோட்பாடாக ஆக்கியிருக்கிறோம். தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்து வறுமை மற்றும் சுரண்டலின் கொத்தடிமை நிலைமைகளுக்கு தொழிலாளர்களின் நிலைமையைக் குறைத்து தங்களது இலாபங்களை அதிகரித்துக் கொள்ள நாடு கடந்த நிறுவனங்கள் செய்யும் முயற்சிக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்திற்குத் தான் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தைக் கையிலெடுக்க வேண்டியிருப்பதன் அவசியம் வேறெந்த துறையைக் காட்டிலும் வாகனத் தயாரிப்புத் துறையில் தான் மிக வெளிப்பட்டு காணத்தக்கதாய் உள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக, வோல் ஸ்ட்ரீட்டின்னால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியை அனுகூலமாக எடுத்துக் கொண்டு ஒபாமா நிர்வாகம் ஜேனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் தொழிலாளர்கள் மீது வெட்டுகளைத் திணித்தது. ஒபாமாவின் வாகனத் தயாரிப்புத் துறை செயல் படை (Auto Task Force) ஐக்கிய வாகனத் தயாரிப்பு தொழிலாளர் சங்கத்தின்(UAW)ஒத்துழைப்புடன் புதிதாக பணியமர்த்தப்படுவோருக்கான ஊதியத்தை 50 சதவீதம் குறைத்தது, அத்துடன் ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய நல உதவிகளையும் வெட்டியது. டெட்ராயிட்டின் மூன்று பெரும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாய் 30 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதற்கு இது வழிவகை அளித்தது.

அமெரிக்க வாகனத் தயாரிப்புத் துறை தொழிலாளர்கள் மீது வறுமை நிலை ஊதியங்களை திணித்தமையானது இப்போது உலகளாவிய பெரும் வாகனத் தயாரிப்புத் துறை நிறுவனங்களால் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முந்தைய போராட்டங்களின் ஊடாகப் பெற்ற சில சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளின் மூலமாக, ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் இதுவரையிலும், அமெரிக்காவில் சகஜமாகி விட்டிருக்கக் கூடிய அளவில் ஆட்குறைப்புகளையோ ஊதிய வெட்டுகளையோ சந்தித்திருக்கவில்லை.

அந்நிலைமை வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கிரீஸில் சர்வதேச வங்கிகள் தொழிலாள வர்க்கத்தின் மீது பட்டினியைத் திணித்து ஐரோப்பாவெங்கும் தொழிலாளர்கள் மீது இதே வகையான தாக்குதல் தொடுக்கப்படுவதற்கான மேடையை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகக் கட்சியினர், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் முன்னாள் -இடது கட்சிகள் ஆகியவற்றின் துரோக வேலையில் நம்பிக்கை வைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக குறிப்பாக ஜேர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் அமெரிக்க-பாணி தாக்குதலைத் தொடுக்க தயாரிப்பு செய்து வருகின்றன.

ஜெனரல் மோட்டார்ஸ் அதன் ஐரோப்பிய ஓப்பல் மற்றும் வாக்ஸ்ஹால் பிரிவுத் தொழிலாளர்களைக் குறி வைத்திருக்கிறது. இது இப்போது PSA Peugeot-Citroën உடன் ஒரு கூட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறது. இதனால் அக்கண்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்படும். ஓப்பல் பிரச்சினை தீர்க்கப்படுகிறதென்றால், அது இப்போது தான் தீர்க்கப்படக் கூடியதாய் இருக்கும், ஆழமான வெட்டுக்கள் இருக்கும் என்று ஒரு ஜெனரல் மோட்டார்ஸ் அதிகாரி சமீபத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் தெரிவித்திருந்தார்.

ஜேர்மனியில் 3,100 பேர் பணிபுரிந்து வருகிற Bochum ஆலையையும், இங்கிலாந்தில் லிவர்பூல் அருகே எலிஸ்மீர் போர்ட்டில் இருக்கும் 2100 பேர் பணிபுரியும் இன்னொரு ஆலையையும் மூடவிருப்பதாக GM அச்சுறுத்தி வருகிறது. 2010 ஆண்டில் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் 2500 பேர் பணிபுரிந்து வந்த ஓப்பல் ஆலையை மூடிய நிகழ்வுக்குப் பின்னர் இது நிகழ்கிறது.

முன்னதாக 6,000 ஊழியர்களைக் குறைப்பதற்கான திட்டங்களை அறிவித்திருந்த Peugeot பிரான்சில் தொழிலாளர்களுக்காகும் செலவு கிழக்கு ஐரோப்பா மற்றும் பிற மலிவு-ஊதிய நாடுகளில் ஆவதைக் காட்டிலும் மூன்று மடங்காய் இருப்பதாக புகார் கூறிக் கொண்டிருக்கிறது. GM உடனான கூட்டு தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நல உதவிகளை வெட்டுவதையும் உற்பத்தி வேக அதிகரிப்பைத் திணிப்பதையும் நோக்கமாய்க் கொண்டிருக்கும்

UAW தலைவரான பாப் கிங் ஜேர்மன் தொழிற்சங்கமான IG Metall இன் ஆதரவுடன் ஓப்பலின் மேற்பார்வை வாரியத்தில் இடம்பெற்றிருக்கிறார். கிங் முழுக்க முழுக்க வாகனத் தயாரிப்புத் துறை முதலாளிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் கருவியாகச் செயல்படக் கூடியவர். பெருநிறுவனங்களுடன் போராடுவது குறித்த எந்த இருபதாம் நூற்றாண்டு யோசனைகளையும் UAW கைவிட்டு விட்டதாக தற்பெருமை கூறிக் கொண்டிருப்பவர். உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் இலாபங்களை அதிகரிப்பதும் தொழிலாளர்களுக்கென செலவாகும் தொகையை குறைப்பதில் நிர்வாகத்திற்கு உதவுவதும் தான் தொழிற்சங்கங்களின் பிரதான கடமை என்று அவர் பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறார்.

பிப்ரவரி 24 அன்று வெளியான டெட்ராயிட் ஃப்ரீ பிரஸ் பத்திரிகையில் பிரதானப் பத்தி பகுதியில் வெளியான கட்டுரையில் GM மற்றும் கிறைஸ்லரை ஒபாமா துணிச்சலாகவும் தீர்மானத்துடனும் மீட்சி செய்ததை கிங் வெகுவாகப் பாராட்டியிருந்தார். ஊதியங்கள் மற்றும் நல உதவிகளை வெட்டுவதிலும் ஆறு ஆண்டுகளுக்கு நமது வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைத் தளர்த்துவதற்குஉடன்பட்டதிலும் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பாத்திரத்தை ஏதோ உபகாரம் போல் அவர் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

ஓப்பல் மேற்பார்வை வாரியத்தில் கிங் இருப்பது ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்: அமெரிக்கத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் அதே நிலைமைகளை ஐரோப்பாவுக்குள் கொண்டுவருவதற்குத் தான் IG Metall தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. கொரியாவில் இருந்து சில உற்பத்தியை ஜேர்மன் தொழிற்சாலைகளுக்குக் கொண்டுவருவதான ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே தயாரிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமது சொந்த உறுப்பினர்களின் ஊதியங்களும் வாழ்க்கை நிலைமைகளும் அழிக்கப்படுவதை தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்றன என்பதையே இந்த அபிவிருத்திகள் எடுத்துக் காட்டுகின்றன. உயர் நடுத்தர-வர்க்கத்தின் வசதியான பிரதிநிதிகளாக இருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளின் நலன்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு நேர் விரோதமானவையாக இருக்கின்றன. ஊதிய-வெட்டுக்களுக்கான அவர்களின் ஆதரவென்பது தொழிற்சங்கங்களின் தேசிய அடிப்படையிலான சிந்தனை மற்றும் அவற்றின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு வேலைத்திட்டம் ஆகியவற்றில் இருந்து வருவதாகும்

நாடு கடந்த நிறுவனங்கள் மலிவு உழைப்பு கிட்டும் பிராந்தியங்களுக்கு உற்பத்தியை நகர்த்திக் கொள்ள இயலுகிற ஒரு உலகமயப் பொருளாதாரத்தில், தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் ஊதியங்களை மேம்படுத்துவதற்கான முயற்சி எதனையும் கைவிட்டு விட்டு அதற்குப் பதிலாக அந்த நிறுவனங்கள் நமது தாய்நாட்டில் உற்பத்தியைத் தொடரும் வகையில் அவற்றுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டு இந்த ஊதியங்களை மேலும் கீழே இறக்குவதற்கு முதலாளிகளுடன் சேர்ந்து வேலை செய்கின்றன இவர்களது ஊதிப் பெருத்த சம்பளங்களுக்கு பிரதானமான மூலாதாரமாக இருக்கக் கூடிய வருவாய் தரும் ஒரு தளத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கே அவர்கள் இத்தகையதொரு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இன்னும் மலிவான ஊதியங்களையும் மற்றும் இன்னும் கூடுதல் கடினமான தொழிற்சாலை நிலைமைகளையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் வேலைக்கு மற்ற நாட்டுத் தொழிலாளர்களுடன் போட்டியில் இறங்குகின்ற ஒரு சகோதர யுத்தத்தில் தொழிலாளர்கள் தத்தமது முதலாளிகளின் பின்னால் நிற்பதற்கு தொழிற்சங்கங்கள் கோருகின்றன. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல இந்தக் கொள்கை வாகனத் தொழிலாளர்களுக்கு கொண்டு வரக் கூடிய துயரகரமான பின்விளைவுகள் தெளிவடைந்து கொண்டே செல்கின்றன

மலிவு உழைப்பை உத்தரவாதமளித்து தொழிலாளர்களிடமிருந்து சுரண்டப்படும் இலாபங்களில் ஒரு துண்டைப் பெற்றுக் கொள்கிற தொழிலாளர் ஒப்பந்ததாரர்களுக்கும் கிங் மற்றும் IG Metall இல் இருக்கும் அவரது சகாக்கள் போன்ற மனிதர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

இந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிரான வகையில், எனது பிரச்சாரமானது, அமெரிக்கத் தொழிலாளர்களை ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அவர்களது சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்காகப் போராடுகிறது. தொழிலாளர்கள் எந்த நாட்டில் வாழ்பவராயும் இருக்கட்டும், அவர்களுக்கு ஒரு பத்திரமான மற்றும் நல்ல ஊதியத்துடனான வேலை பெறுவதற்குரிய உரிமை இருக்கிறது என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். சமூக உரிமையை உத்திரவாதப்படுத்துவதற்கான இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தை, உலக மக்களுக்குப் பயனளிக்கத் தவறியிருப்பதும் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினை வளப்படுத்தும் அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுகிறதுமான ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கிற்கு எதிராக அதாவது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக நிறுத்துகிறது

ஒரு சர்வதேச மற்றும் புரட்சிகர சோசலிச அடிப்படையில் தொழிலாளர்களது போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் ஐக்கியப்படுத்துவதற்கும் அவசியமான தலைமையைக் கட்டுவதற்கே நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். வாகனத் தயாரிப்புத் துறையும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உடைமைத்துவத்தின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் இருப்பது சமூக சமத்துவத்திற்கான இந்தப் போராட்டத்தின் அவசியமாக உள்ளது.