World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan commission whitewashes war crimes

இலங்கை ஆணைக்குழு யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கின்றது

By Wije Dias
29 December 2011
Back to screen version

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் 2010 மே மாதம் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சீ.) இறுதியாக அதனது அறிக்கையை டிசம்பர் 16 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின் முடிவு, 2009 மே மாதம் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இராணுவத்தால் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்புவதற்காக திட்டமிடப்பட்ட மூடி மறைப்பாகும்.

எந்த வகையிலும் இந்த ஆணைக்குழு சுயாதீனமானது அல்ல. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் அர்சாங்கத்தைப் பாதுகாத்ததில் இழிபுகழ்பெற்ற முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர். டி சில்வாவே இந்த ஆணைக்குழுவுக்கு தலமை தாங்கினார். ஏனையவர்களில் முன்னாள் ஐ.நா. தூதர், உயர் மட்ட அரச அலுவலர்கள், ஒரு முன்னால் நீதிபதி மற்றும் ஒரு கல்விமானும் அடங்குவர். இவர்களில் எவரும் மனித உரிமைகளை பாதுகாத்ததாக சரித்திரம் கிடையாது. ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட இந்த ஆணைக் குழு அந்த நடவடிக்கையை மேலும் ஒரு வருடத்துக்கு இழுத்தடித்தது.

அதன் ஆய்வுக்கான காலகட்டம், 2002 பெப்பிரவரி 21 அன்று யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து 2009 மே 19 அன்று யுத்தம் முடிவடைந்தது வரை வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை யுத்த நிறுத்தத்தை மீறியதாக புலிகள் மீது குற்றஞ்சாட்டி, 2006 ஜூலையில் தீவை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிய இராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்து, இராஜபக்ஷவின் தேவைக்கு சேவை செய்துள்ளது.

கால எல்லையை மட்டுப்படுத்தியதன் மூலம், 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தமது ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்காக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்ட பிரிவினையான சிங்கள இனவாத அரசியலை தோற்றுவாயாகக் கொண்ட, நீண்டகால உள்நாட்டுப் போருக்கான காரணங்களை ஆணைக்குழு ஆராயாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொண்டது. அந்த அறிக்கை, 1983ல் யுத்தத்துக்கு வழிவகுத்த திட்டமிட்ட தமிழர்-விரோத பாரபட்சங்களை அணுக முயற்சிக்கவில்லை.

அதன் அதிகாரம் மற்றும் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால், இந்த ஆணைக்குழு ஒரு மூடி மறைப்பைத் தவிர வெறொன்றுமாக இருக்கப் போவதில்லை. அதனது விசாரணை முடிவுகள், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையுடன் குறிப்பிடத்தக்களவு முரண்படுகின்றது. அந்த நிபுணர் குழு, இலங்கை அரசாங்கம் ஒரு பரந்த மட்டத்தில் சர்வதேச சட்டத்தை மோசமாக மீறியுள்ளதாகவும், அவற்றில் சில யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சமமானவை என்றும் நம்பகமான ஆதாரங்களை கண்டுபிடித்திருந்தது. அந்த ஐ.நா. அறிக்கை, 2009 ஜனவரி முதல் மே மாதம் வரை பத்தாயிரக்கணக்கானவர்கள் [பொது மக்கள்] உயிரிழந்துள்ளதாக கூறுகின்றது.

பொதுமக்கள் வேண்டுமென்றே படுகொலை செய்யப்படவில்லை என எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை மறுக்கின்றது. அதற்கு முன்னிருந்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் அனைத்தையும் பார்க்கும் போது, இருபக்க மோதலில் பொது மக்கள் உயிரிழந்திருந்தாலும், பாதுகாப்பு படைகள் வேண்டுமென்றே பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொது மக்களை இலக்கு வைக்கவில்லை என ஆணைக்குழு தீர்மாணிக்கின்றது. புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதை தடுத்தமைக்காக இந்த சாவுகளுக்கான குற்றத்தை புலிகள் மீது சுமத்த அது முயற்சிக்கின்றது.

அநேகமான பொது மக்கள் சிகிச்சையை எதிர்பார்த்திருந்த ஆஸ்பத்திரிகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தியமை ஆயுதப் படைகள் செய்த ஆகவும் வெளிப்படையான குற்றங்களில் ஒன்றாகும். இந்த ஷெல் தாக்குதல்கள் இராணுவ உயர் மட்டத்தினரின் முடிவின்றி இடம்பெற்றிருக்க முடியாது. உண்மையில் ஆஸ்பத்திரிகள் மீது ஷெல்கள் விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு உயிரிழப்புக்களும் நேர்ந்துள்ளன என்பதை எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், சம்பவங்களின் துல்லியமான பண்பு, இடம்பெற்ற நேரம், நிச்சயமான பிரதேசம் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட திசை போன்ற ஆதாரங்கள் கொஞ்சம் குழப்பமான சித்திரத்தை காட்டுகிறது என தெரிவித்து படையினரை மன்னிக்கின்றது.

இந்த முடிவானது பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் இராணுவப் பேச்சாளரின் அப்போதைய அறிக்கைகள் உட்பட பல்வேறு தகவல் மூலங்களில் இருந்து வரும் ஆதாரங்களை சாதாரணமாக அலட்சியம் செய்கின்றது. குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு அருகில் புலிகளின் ஆட்டிலறிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன அல்லது ஆஸ்பத்திரிகள் பயங்கரவாத முகாங்களாக இருந்தன என அறிவித்ததன் மூலம், தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த ஆஸ்பத்திரிகளை இலக்குவைத்ததை அவர்கள் நியாயப்படுத்தினர். காரணத்தை தவிர்த்தால், ஆஸ்பத்திரிகள் மீது வேண்டுமென்றே நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் படி யுத்தக் குற்றங்களாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும், மற்றும் மேலும் துஷ்பிரயோகங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நிறுவன, நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகளயும் பரிந்துரை செய்யவும் மட்டுமே அதிகாரத்தைக் கொண்டிருந்த இந்த ஆணைக்குழு, ஆரம்பத்தில் இருந்தே இலாயக்கற்றதாக இருந்தது. யுத்தக் குற்றவாளி அல்லது மனிதத்துவத்துக்கு எதிரான குற்றவாளி என சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரிக்க, குற்றஞ்சாட்ட அல்லது தண்டனை அளிக்க அதற்கு அதிகாரம் கிடையாது.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் பயனற்ற வெற்றுரைகளாகும். சந்தேகம், பீதி, நம்பிக்கையின்மை மற்றும் வன்முறை போன்ற கலாச்சாரத்தை அகற்ற வேண்டும் என அது அழைப்பு விடுக்கின்றது. நல்லிணக்கத்துக்கும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்யவேண்டியது என்னவெனில், அரசு சிறுபான்மையினரை அணுக வேண்டும், மறு பக்கம் சிறுபான்மையினர் தமது வகிபாகத்தின் மூலம் அரசு மற்றும் நாட்டுடன் சேர்ந்து தங்களை மீள்நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும், என அது பிரகடனம் செய்கின்றது.

இனவாத பதட்ட நிலைமைகளை தணிக்க எந்தவொரு சலுகையும் கொடுக்கும் எண்ணம் இல்லை எண்பதை இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை ஒத்துக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது போல், அதனது இடைக்கால பரிந்துரைக்கு இன்னமும் முழு அக்கறை செலுத்தப்படவில்லை. விளைபயனுள்ள எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சியடைவதையும் மற்றும் சட்ட ஆட்சி தொடர்ந்தும் சீரழிவதையும் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் மக்களின் நம்பிக்கையீனத்தையுமே விளைவாக்கும் என அது எச்சரித்துள்ளது.

எல்.எல்.ஆர்.சீ. அறிக்கையின் குறிக்கோள், சர்வதேச விசாரணைக்கான அழைப்பை திசை திருப்புவதே அன்றி, அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதல்ல. இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவிடம் இருந்து தன்னை தானாகவே தூர விலக்கிக்கொள்ள நெருக்குவதன் பேரில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய சக்திகளும் யுத்தக் குற்ற விசாரணை முன்னெடுப்புகளை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொண்டுள்ளன.

காத்திரம் குறைந்த பிரதிபலிப்பை காட்டிய அமெரிக்கா, மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் அறிக்கை முழுமையாக கவனமெடுக்கவில்லை என்பதையிட்டு கவலை கொண்டுள்ளதாக பிரகடனம் செய்தது. அறிக்கையை முழுமையாக படிக்க நேரம் தேவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கையை வரவேற்ற இந்தியா, அதன் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு கோரியுள்ளது. இத்தகைய சக்திகளில் எவற்றுக்கும், இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் பற்றியோ அல்லது இலங்கை அரசாங்கம் தற்போது ஜனநாயக உரிமைகளை மீறுவதைப் பற்றியோ கொஞ்சமும் கவலை கிடையாது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை தேசிய முதலாளித்துவம், தீவின் தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கி வந்துள்ளது. பிரித்தாளும் கொள்கையிலேயே தங்கியருந்த ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சியை பேணுவதற்காக தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தை கிளறிவிட்டு வந்துள்ளன.

யுத்தத்துக்கு காரணமான விவகாரங்களை தீர்ப்பதற்கு ஒரு அரசியல் தீர்வை காண்பது அவசரமானது என எல்.எல்.ஆர்.சீ. பிரகடனம் செய்துள்ளது. தசாப்தகால பாரபட்சங்கள் மற்றும் தமிழர்களின் ஜனநாயக உரிமை மீறல்களுக்கு முடிவுகட்டுவதற்கான ஒரே அரசியல் தீர்வு, பிரச்சினைக்கு காரணமாக உள்ள முதலாளித்துவ முறைமையையே தூக்கிவீசுவதாகும். அந்த முடிவை எட்டுவதற்காக, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு, அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட வேண்டும்.