World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European Union and Greece

ஐரோப்பிய ஒன்றியமும் கிரீசும்

Peter Schwarz
23 February 2012
Back to screen version

ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸின் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கும் தாக்குதல்களுடன் ஒப்பீட்டைக் காண வேண்டுமென்றால் ஒருவர் சிலியில் இருந்த பினோசே ஆட்சி போன்ற இராணுவ-பாசிச சர்வாதிகாரங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். புரூசெல்ஸில் இருக்கும் ஆணையர்கள், பேர்லின், பாரிஸ் மற்றும் இலண்டனது கட்டளையின் பேரில், கிரேக்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கிறதும் அவர்களது வாழ்க்கையை நரகமாக்குகிறதுமான புதிய கோரிக்கைகளை சார்ந்த புதிய நிதித் தொகுப்புகளை வக்கிரமான உத்வேகத்துடன் ஒவ்வொன்றாய் உருவாக்கி அளித்து வருகின்றனர்.

கிரீஸின் நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான தன்மையை எடுத்தியம்புகின்றன. இது உண்மையான ஐரோப்பிய ஐக்கியத்தை சாதிக்கும் ஒரு சாதனமல்ல, மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு சாதனமாகும்.

ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபனங்கள் எல்லாம் ஜனநாயகக் கோட்பாடுகளை கேலிக்கூத்தாக்கி வருகின்றன. எதற்கும் பொறுப்புக் கூறக் கடமையற்ற தேர்ந்தெடுக்கப்படாத ஆணையர்கள் தான் மொத்த நாடுகளின் தலைவிதியையும் தீர்மானிக்கின்றனர். ஐரோப்பிய கவுன்சிலின் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு சக்திவாய்ந்த உறுப்பு நாடுகளான ஜேர்மன் நாட்டின் சான்சலர் அங்கேலா மேர்கெலுக்கும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசிக்கும் இடையிலான பேரத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படுவது வழக்கமாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் என்பது எதனையும் தீர்மானிக்காமல் ஒரு போலி-ஜனநாயக மறைப்பாக மட்டுமே சேவை செய்து கொண்டிருக்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே அது ஐரோப்பாவில் சமூக முன்னேற்றத்தின் கடிகாரத்தினைப் பின்னோக்கித் தான் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்திருக்கிறது. யூரோவானது கண்டத்தை ஐக்கியப்படுத்துவதற்குப் பதிலாக பொருளாதாரரீதியாக பலவீனமான நாடுகளின் மீது சக்திவாய்ந்த நாடுகள், எல்லாவற்றுக்கும் முதலாய் ஜேர்மனி, செலுத்துகின்ற ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்த மட்டுமே செய்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவில், ஐரோப்பிய ஒன்றியம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நல உதவி அமைப்புகள் அழிக்கப்படுவதை மேற்பார்வை செய்திருக்கிறது. அரச சொத்துகளைத் தனியார்மயமாக்குவதன் மூலமும் ஐரோப்பிய ஒன்றிய மானியங்களின் மூலமும் தங்களை வளமாக்கிக் கொண்ட ஒரு ஊழலடைந்த உயரடுக்கின் வளர்ச்சிக்கு அது உரம்போட்டிருக்கிறது. மக்களில் பெரும்பகுதியினருக்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரவேசித்தமை ஒரு கெட்ட கனவாக மாறி விட்டிருக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவின் சமூகச் சரிவு ஒரு இடைமருவு கட்டம் மட்டும் தான் என்பதாக வெகுகாலம் கூறப்பட்டு வந்தது. முந்தைய ஸ்ராலினிச ஆட்சிகளிடம் இருந்து நோய்வாய்ப்பட்ட பொருளாதாரத்தை பெற்றிருந்த இந்த நாடுகள் எல்லாம் ஒரு வளமான எதிர்காலத்திற்குத் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.

கிழக்கு ஐரோப்பாவின் சமூகரீதியான சரிவு ஒரு விதிவிலக்கு அல்ல, மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கான விதியே இதுதான் என்பதை கிரீஸின் தலைவிதி எடுத்துக் காட்டுகிறது.

கிரேக்க மக்கள் தியாகம் செய்யக் கோரும் இந்த உதவித் தொகுப்புகள் என்பனவற்றின் நோக்கம் மக்களுக்கு உதவுவது அல்ல, மாறாக வங்கிகளை, சாகச நிதிகளை (hedge funds), மற்றும் ஊக வணிகர்களை வளப்படுத்துவது தான். பல நிபுணர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கிரீசின் திவால் நிலை முன்கூட்டியறிந்த ஒரு முடிவு தான். அவர்கள் அதை உத்தியோகபூர்வமில்லாமல் ஒப்புக்கொள்கிறார்கள் என்கிறது ஸ்பீகல் ஆன்லைன்: 130 பில்லியன் [யூரோக்கள்] பிரச்சினையைத் தீர்த்து விடாது என்பது உண்மை தான். இது கால அவகாசம் பெறுவதற்கான ஒரு பிரச்சினை தான். கிரீஸின் திவால் நிலை ஒரு சங்கிலி விளைவினை ஏற்படுத்தா மட்டத்திற்கு அதனைக் கையாளும் வண்ணம் நிதிச் சந்தைகள் ஸ்திரமுறுகின்ற வரைக்குமான கால அவகாசம்.

திங்களன்று ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் ஒப்புக் கொண்ட 130 பில்லியன் யூரோவில், 30 பில்லியன் யூரோக்கள் கடனளிக்கும் வங்கிகளுக்கு - கிரீசுக்கு அவை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டிருந்த கடன்களின் ஒரு பகுதிக்கு பணத்தை (வட்டியுடன்) திருப்பியளிப்பதற்கான உத்தரவாதத்துடன் - நேரடியாகப் போகவிருக்கிறது. மீதிப் பணம் அத்தியாவசிய அரசாங்கச் செயல்பாடுகளுக்கு திருப்பி விடப்பட்டு விடக் கூடாது, கடன்களைச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக ஒரு மூன்றாம் தரப்பு கணக்கிற்கு செல்லும்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவுகள் பற்றிய கோபம் கிரீஸில் மட்டுமன்றி நிதிச் சந்தைகளால் குறி வைக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளான போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்திலும் கூட அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில், நூறாயிரக்கணக்கிலான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறித்துக் கொள்ளாமல் தொழிலாள வர்க்கம் ஒரேயொரு சமூக அல்லது ஜனநாயக உரிமையையும் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது மேலும் மேலும் தெளிவடைந்து கொண்டிருக்கிறது.

கிரீசுக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு பக்கத்திலுமே சில அரசியல் சக்திகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. அவை முதலாளித்துவ-ஆதரவு அடிப்படையின் மீது தான் இவ்வாறு செய்கின்றன. அது தொழிலாள வர்க்கத்தை மேலும் வறுமைக்குள் தள்ளுவதற்கும் ஐரோப்பாவை மேலும் துண்டாடுவதற்கும் மட்டுமே இட்டுச் செல்லும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெகுஜன எதிர்ப்பை இத்தகைய சக்திகளின் தலைமையின் கீழ் சென்று விடுவதற்கு தொழிலாள வர்க்கம் அனுமதிக்கவே கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சக்திகள் எல்லாமே, அவை வலது என்றாலும் சரி அல்லது பெயரளவு இடது என்றாலும் சரி, தொழிலாள வர்க்கத்தை ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் பின்னால் அணிதிரளச் செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் எழுவதையும் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஐக்கியப்படுவதையும் தடுப்பதற்கும் இவை தேசியவாதத்தை பயன்படுத்துகின்றன.

ஒரு தன்னிச்சையான கிரேக்க முதலாளித்துவம் தாக்குப்பிடிப்பதாய் இல்லை. நாடு சர்வதேச நிதிச் சந்தைகளின் கருணையில் தான் தொடர்ந்து உயிர்வாழத் தள்ளப்படும், பெருமளவில் யூகோஸ்லாவியாவில் இருந்து உடைந்த மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, சேர்பியா, கொசோவோ மற்றும் பிற சிறிய அரசுகளைப் போல.

சர்வதேச மூலதனத்தின் சில செய்தித் தொடர்பாளர்கள் அத்தகையதொரு அபிவிருத்திக்கே ஆலோசனையளிக்கின்றனர். யூரோ குழுவில் இருந்து கிரீஸ் வெளியேறி அதன் நாணய மதிப்பைக் குறைத்துக் கொள்ளுமாயின் கிரிஸ் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் 30 சதம் குறையுமென்று எச்சரிக்கும் ஜேர்மன் Ifo நிறுவனத்தின் தலைவரான ஹான்ஸ்-வேர்னர் சின் அதே நேரத்தில் இன்னும் நேரடி ஊதிய வெட்டுகளைத் தவிர்ப்பதென்பது நாட்டை உள்நாட்டுப் போரின் விளிம்புக்குக் கொண்டு செல்லும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

கிரேக்கத் தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்குப் போராட வேண்டியிருப்பதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிரேக்கத் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவுகளை நிராகரிப்பதென்பது கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான கூட்டாளிகளான ஜேர்மனியில், பிரான்சில், இத்தாலியில், பிரிட்டனில், ஸ்பெயினில், போர்ச்சுகலில், மற்றும் சர்வதேச அளவில் இருக்கக் கூடிய தொழிலாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளிக்கும். சிக்கன நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் இது ஐரோப்பியத் தொழிலாளர்களை ஒன்றாய்க் கொண்டுவரும்

கிரீஸின் தேசியத் திவால்நிலைக்கும் மற்றும் அதனையடுத்து தவிர்க்கமுடியாமல் சூழக் கூடிய சமூக மோதல்களுக்கும் ஐரோப்பா மற்றும் கிரீஸில் உள்ள உயரடுக்கினர் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கத்தில் ஜனநாயக இடது கட்சி போன்ற போலி இடது அமைப்புகளையும், Syriza வையும் மற்றும் ஸ்ராலினிச KKE ஐயும் அரசாங்கத்துக்குள் கொண்டு வர அவர்கள் சிந்தித்து வருகின்றனர். தொழிலாள வர்க்கம் தொடுக்கக் கூடிய எந்தத் தாக்குதலையும் மட்டுப்படுத்திக் கலைத்து விடுவதும் அத்துடன் ஒரு பதில்தாக்குதலுக்கு ஆளும் வர்க்கம் தயாரித்துக் கொள்கிற வரை அரசு எந்திரத்தை கட்டுக் குலையாமல் காப்பதும் தான் அத்தகையதொரு இடது அரசாங்கத்தின் பணியாக இருக்கும்.

அதே சமயத்தில், கிரேக்க இராணுவம் 1967க்கும் 1974க்கும் இடையில் திணித்த சர்வாதிகார ஆட்சி வடிவங்களைத் திணிப்பதற்கு தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரேக்க ஜெனரல்கள் நேட்டோவிற்கு உள்ளாக அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் அதிகாரிகளுடன் நெருக்கமாய் ஒத்துழைத்து வருகின்றனர். உலகின் மிகப் பெரிய இந்த இராணுவக் கூட்டணி வெகுகாலமாகவே தனது பொறுப்பு எல்லைக்குள் இராணுவ சர்வாதிகாரங்களை ஆதரித்து வந்திருக்கிறது. பாசிச போர்ச்சுகல் 1949ல் நேட்டோவில் ஒரு ஸ்தாபக உறுப்பினராய் இருந்தது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஸ்பெயினில் பிராங்கோவுடன் நெருக்கமாய் வேலை செய்தது. கிரீஸ் மற்றும் துருக்கி - இங்கு ஜெனரல்கள் மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு இராணுவச் சதியை நடத்தியிருந்தனர் - 1952ல் இணைந்தன.

பாரிய வறுமையையும் சர்வாதிகாரத்தையும் தடுத்திட வேண்டுமென்றால் கிரேக்கத் தொழிலாள வர்க்கம் வெறுமனே ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டும் எதிர்த்திட்டால் போதாது, கிரேக்க முதலாளித்துவத்தையும் அதன் அரசையும் கூட எதிர்த்திட வேண்டும். கிரேக்கத் தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காகப் போராட வேண்டும். அத்தகையதொரு அரசாங்கம் பெரும் செல்வங்களையும், வங்கிகளையும் மற்றும் பெருநிறுவனங்களையும் பறிமுதல் செய்து பொருளாதாரத்தை நிதிப் பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்காய் இல்லாமல் மாறாய் ஒட்டுமொத்த சமூகத்திற்கான நலனுக்கேற்ற வகையில் சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைக்கும்.

தொழிலாளர்கள் தங்களை ஐரோப்பிய ஒன்றியத்துடனும் கிரேக்க முதலாளிகளுடனும் கட்டிப் போட முனைகின்ற அத்தனை தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் முறித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வேலையிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி அன்றாட வாழ்க்கையின் ஒழுங்கமைப்பை தங்களது கையிலெடுக்க வேண்டும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அத்துடன் பாசிஸ்டுகள் மற்றும் இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் தங்களது போராட்டத்தை ஒரு தேசிய மட்டத்தில் ஒருங்கிணைத்துக் கொள்வதோடு அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கவிழ்த்து விட்டு அதனை ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு இடம் பெயர்க்கும் பொருட்டு ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

புரட்சிகரத் தலைமை பற்றிய பிரச்சினை தான் மிக அவசரமானது ஆகும். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் அரசியல் சுயாதீனம் ஆகியவற்றுக்கான போராட்டம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய தலைமை கட்டப்பட வேண்டும். அத்தலைமையைக் கட்டும் முடிவினை கிரீஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவினை ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவதன் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.