World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

TNA drops opposition to Sri Lankan war crimes whitewash

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை யுத்தக் குற்ற மூடிமறைப்பு மீதான எதிர்ப்பை கைவிட்டது

By Wije Dias
9 January 2012
Back to screen version

இலங்கையின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) இறுதி அறிக்கையை ஆரம்பத்தில் நிராகரித்தது. அதன் மூலம், அது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் முடமாக்கப்பட்ட பொது மக்களின்மேன்மையைக் காக்க பெரும் வல்லரசுகளின் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்தது.

ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட தமிழ் கூட்டமைப்பின் அறிக்கை, இழைக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு அதிகப் பொறுப்பானவர்கள் இலங்கைக்குள் குற்றஞ்சாட்டப்படமாட்டார்கள் என்ற உண்மையை எல்.எல்.ஆர்.சி. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, என தெரிவித்துள்ளது. பொறுப்புடைமைக்கான ஒரு சர்வதேச பொறிமுறையை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை, உண்மையான நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை பெருமளவில் சிதைத்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்துக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது என அந்த அறிக்கை முத்திரை குத்தியது. தமிழ் கூட்டமைப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெறுவது பற்றியோ அல்லது, இனவாத மோதல்களை தூண்டிவிட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பாரபட்சங்களுக்கு முடிவுகட்டுவது பற்றியோ கவலைப்படவில்லை. தமிழ் கூட்டமைப்பைப் பொறுத்தவரை நல்லிணக்கம் என்பதன் அர்த்தம், உழைக்கும் மக்களை பரஸ்பரம் சுரண்டுவதற்காக தமிழ் மேற்தட்டுகளுக்கும் கொழும்பு அரசாங்கத்துக்கும் இடையிலான ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்கான வழிமுறையே ஆகும்.

தமிழ் கூட்டமைப்பின் அறிக்கையானது இராஜபக்ஷவுக்கும் அவரது யுத்தத்துக்கும் ஆதரவளித்த அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் மற்றும் இந்தியாவுக்கும் விடுக்கும் இன்னுமொரு அற்ப வேண்டுகோளாகும். பொறுப்புடைமைக்கான ஒரு சர்வதேச பொறிமுறையை அமைக்குமாறு அது விடுக்கும் அழைப்பு, சலுகைகள் பெறுவதற்காக கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக விடுக்கப்பட்டதாகும்

தமிழ் கூட்டமைப்பின் வேண்டுகோள் தோல்விக்கு நிகரானதாகும். அமெரிக்கா இலங்கையில் மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்வது, இந்த பிராந்தியத்தில் தனது நலன்களை பலப்படுத்திக்கொள்வதற்காகவே அன்றி, தமிழர்கள் மீதான எந்தவொரு அனுதாபத்தினாலும் அல்ல. அது, யுத்தத்தின் போது சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கமான உறவுகளை விலக்கிக்கொள்ளுமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே யுத்தக் குற்ற விசாரணைகள் என்ற மறைமுக அச்சுறுத்தலை விடுக்கின்றது. இந்தியாவும் இதே போன்ற முயற்சியையே எடுக்கின்றது.

சர்வதேச அழுத்தங்கள் அதன் தாக்கத்தைக் கொண்டிருந்தன. மேற்கத்தைய சக்திகள் மற்றும் இந்தியாவுடனான உறவுகளை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை இராஜபக்ஷ சமிக்ஞை செய்தார். அவரது அரசாங்கம் பொருளாதாரத் துறையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதோடு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான அதன் இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களையும் தொடர்கின்றது. 2009ல் யுத்தத்தின் கடைசி மாதங்களில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை திசை திருப்பும் வழியாகவே எல்.எல்.ஆர்.சி.யை இராஜபக்ஷ ஸ்தாபித்தார்.

எல்.எல்.ஆர்.சி. அறிக்கையானது இராஜபக்ஷ அரசாங்கமும் அவரது இராணுவத் தளபதிகளும் பொறுப்புச் சொல்ல வேண்டிய, பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் படுகொலைகள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட வெளிப் பூச்சே ஆகும். (பார்க்க: இலங்கை ஆணைக்குழு யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கின்றது) பெரும் வல்லரசுகள் மற்றும் பிராந்திய சக்திகளின் பிரதிபலிப்புகள் மௌனமாகின.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட், எல்.எல்.ஆர்.சி. யின் கண்டுபிடிப்புகள் பற்றி எந்தவொரு விமர்சனமும் செய்யாததோடு, இலங்கை அரசாங்கம் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளபடியே இட்டு நிரப்புவது மட்டுமன்றி, அந்த அறிக்கையில் உள்ளடங்கியிராத விவகாரங்களையும் அணுக வேண்டும், என வெறுமனே ஊக்குவித்தார்.

இந்தியாவின் சமரசத்துக்கும் குறைவில்லை. டிசம்பர் 25 விடுத்த அதிகாரப்பூர்வமான ஒரு அறிவிப்பில், வெளி விவகார அமைச்சு, மோதலின் காயங்களை தணிப்பது மற்றும் இலங்கையில் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவுவதற்கான நடவடிக்கையை ஊக்குவிப்பது சம்பந்தமான விவகாரங்களை அணுகுவதற்காக பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை பரிந்துரைத்தமைக்காக எல்.எல்.ஆர்.சி.யை பாராட்டியது.

இந்தியா [இலங்கை அரசாங்கத்துடன்] அவர்களுடன் இந்த முன்னெடுப்புகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்வது சம்பந்தமான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை எட்டுவதற்காக பங்காளி முறையில் எமது ஆதரவை வழங்குவோம் என அந்த உத்தியோகபூர்வ அறிக்கை பிரகடனம் செய்தது.

சர்வதேச சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட தமிழ் கூட்டமைப்பு, உடனடியாக அதன் சுருதியை மாற்றிக்கொண்டது. டிசம்பர் 24 அன்று நேஷன் பத்திரிகைக்கு செவ்வி கொடுத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், இலங்கை அரசாங்கத்தின் பயணப்பாதை பதிவின் படி, இவை யதார்த்தமாகும் என்பதை நம்புவதற்கு முன்னதாக, எல்.எல்.ஆர்.சி.யால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய சிபாரிசுகள் என்னவாக இருந்தாலும் அதன் அமுல்படுத்தலை ஒருவர் எதிர்பார்த்திருக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

எல்.எல்.ஆர்.சி.யை நியாயப்பூர்வமானதாக ஏற்றுக்கொண்ட தமிழ் கூட்டமைப்பு, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதில்லை என்ற அதன் நான்கு மாத பகிஷ்கரிப்புக்கு உடனடியாக முடிவுகட்டியது. கடந்த (2011) ஜனவரியில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள், தமிழ் தட்டுக்களின் கோரிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை கூட வழங்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்காத காரணத்தால், அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கு சம்பந்தமான எந்தவொரு சமிக்ஞையையும் வெளிப்படுத்தவில்லை.

ஆகஸ்ட்டில், தமிழ் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான தனது நிபந்தனைகளை முன்வைத்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது மற்றும் வட-கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் என்ற விடயத்தில், இந்த வலியறுத்தல்கள் ஏற்கனவே நாட்டின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் ஒரு காலமும் அமுல்படுத்தப்படவில்லை.

தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை சாதாரணமாக நிராகரித்த இராஜபக்ஷ அரசாங்கம், எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை வெளியானமை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேச விசாரணைக்கான ஆதரவை நிறுத்திவிடும், அதன் மூலம் தமிழ் கூட்டமைப்பின் எந்தவொரு நெம்புகோலையும் பலவீனப்படுத்தலாம் என கணக்கிட்டது.

எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை சம்பந்தமாக அமெரிக்காவும் இந்தியாவும் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகள் சம்பந்தமான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் இறுக்கியது. கடந்த மாத கடைப் பகுதியில், இந்தியாவைத் தளமாகக் கொண்ட டெகான் க்ரோனிகல் ஊடகத்துக்கு பேட்டி கொடுத்த போது, வடக்கு மற்றும் கிழக்குக்கு பிராந்திய சுயாட்சி வழங்குவதை விளைபயனுள்ள வகையில் நிராகரித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, தமிழ் கூட்டமைப்பு தமிழ் புலம்பெயர்ந்தவர்களால் இயக்கப்படுவது போலவும், புலிகளைப் போன்று அதே போக்கைக் கொண்டிருப்பதாகவுமே தெரிகிறது, எனப் பிரகடனம் செய்தார்.

அதே சமயம், புது டில்லிக்கு சலுகை கொடுத்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் ஏனைய சக்திகளின் பக்கம் திரும்புவதற்கு முன்னதாக எப்போதும் இந்தியாவை பற்றியே அக்கறை செலுத்தியுள்ளது, எனக் கூறினார். நாங்கள் சீனர்களுக்கு கொடுத்துள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவுக்கே கொடுத்தோம். இதில் ஹம்பந்தொட்டையில் உள்ள பெரிய துறைமுகத் திட்டமும் அடங்கும், என அந்த செய்திப் பத்திரிகையிடம் இராஜபக்ஷ தெரிவித்தார். அதற்குப் பதிலிறுத்த இந்தியா, ஜனாதிபதியுடனும் எதிர்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனவரி மூன்றாவது வாரம் வெளி விவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்னா இலங்கைக்கு விஜயம் செய்வார் என அறிவித்தது.

சர்வதேச சமூகத்துக்கான தமிழ் கூட்டமைப்பின் வேண்டுகோளின் பயனற்ற நிலை, மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதற்கான ஒரே வழி, இலங்கையின் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை செய்வதற்கான போராட்டத்தில் வர்க்க அடிப்படையில் தமது சகோதர சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதே ஆகும். தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் சிறப்புரிமைகளை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பு, இத்தகைய போராட்டத்தை இயல்பிலேயே எதிர்க்கின்றது.