World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

“The attacks on us are extraordinarily revealing”

WikiLeaks founder Julian Assange speaks with WSWS

எங்கள்மீதான தாக்குதல் அசாதாரணமுறையில் வெளிப்படுத்தி காட்டுகிறது”

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகிறார்

By Richard Phillips
16 March 2012
Back to screen version

இந்த வாரம் ஜூலியான் அசாஞ்ச், WSWS உடன் விக்கிலீக்ஸ்மீது அமெரிக்காவின் தலைமையிலான தாக்குதல்கள், செய்தி ஊடகத்தின் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் போலியான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படவுள்ளதற்கு எதிரான அவரது மேல்முறையீடு பற்றிய வரவுள்ள பிரித்தானிய தலைமை நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை குறித்தும் பேசினார்.
 

விக்கிலீக்ஸின் நிறுவனரும், அதன் தலைமை ஆசிரியரும் ஸ்வீடனிலோ, பிரித்தானியாவிலோ அல்லது எந்த நாட்டிலுமோ ஒரு குற்றம்சாட்டப்பட்டது கிடையாது. ஆயினும்கூட அவர் வீட்டுக்காவலில் 450 நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளார்; மின்னணு கணுக்கால் கருவி ஒன்றை அணிந்து கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் எங்கும் செல்லக்கூடாது என்று தடையையும், அன்றாடம் பொலிசாரிடம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுள்ளார்.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: அமெரிக்காவின் பெருநடுவர் - grand jury- குற்றச்சாட்டு குறித்த சமீபத்திய விவரங்கள் மற்றும் ஸ்வீடனுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்பட்டால் என்ன நேரிடும் என்று கருத்துத் தெரிவிக்க முடியுமா?

ஜூலியன் அசாஞ்ச்: டெக்சாஸ் தளமுடைய தனியார் உளவுத்துறையின் மின்கடிதங்களை அடித்தளமாக கொண்ட Stratfor கோப்புத் தொகுப்பில் இருந்து வெளிப்பட்டுள்ள புதிய சான்றுகள் அமெரிக்க அரசாங்கம் ஒரு இரகசியப் பெருநடுவர் மன்றத்தில் இருந்து எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களைப் பெற்றுள்ளதைக் காட்டுகின்றன. இங்கிலாந்தில் இருக்கும் அமெரிக்க தூதரான லூயி சுஸ்மன், பெப்ருவரி 2011ல் அமெரிக்க அரசாங்கம் தற்போதைய ஸ்வீடனின் நாடுகடத்தப்படும் வழக்கின் முடிவிற்காக காத்திருப்பதாகவும் மற்றும் அதுவும் நாடுகடத்துவதை செய்யுமா என்பதைக் கண்காணித்துக் காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்கத்தூதர் [ஜெப்ரி எல். ப்ளீக்] ஒபாமாவின் சமீபத்திய வருகைக்கு ஒரு வாரம் முன்பு ஆஸ்திரேலிய செய்தி ஊடகத்திடம், ஒருவேளை நான் ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிவந்தால், ஆஸ்திரேலிய அரசாங்கம் என் தொடர்பான நாடுகடத்தல் கடமைகள் பற்றி பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார். விக்கிலீக்ஸின் பலபேர் சட்டரீதியான தாக்குதலுக்குட்பட்டு இருக்கையில், அமைப்பே கூட நீதிமன்றத்திற்குப் புறம்பான நிதிய முற்றுகையில் உள்ளது. கிட்டத்தட்ட 40 பேர் FBI, Scotland Yard அல்லது பிற பொலிஸ் பிரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் ஸ்வீடனினுக்கு நாடுகடத்தும் வழக்கு நிலுவையில் இருப்பதைப் பொறுத்தவரை, எங்களுக்கு வெற்றி கிடைக்காவிட்டால், 10 நாட்களுக்குள் என்னை ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்றுவிடுவர் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதன்பின் அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஒருவேளை நாடுகடத்தப்படக்கூடும். தலைமை நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றிபெற்றாலும்கூட, நிலைமை அப்படித்தான் இருக்கும்; ஏனெனில் உளவு பார்த்த குற்றச்சாட்டின்கீழ் அமெரிக்கா பெருநடுவர் மன்றத் தீர்ப்பை உடைத்து, நேரடியாக என்னை பிரிட்டனில் இருந்து அழைத்துச் செல்ல நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இவை அனைத்துமே நடைபெறாது, அரசியல்ரீதியாக செய்ய முடியாது என்றால், என்பது உண்மையே. ஒரு சட்ட வழக்கு மிக அதிகமாக மக்கள் கவனத்தை ஈர்த்து நிற்கையில், அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது அரசியல் விடயமாகிவிடும்.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகியவை உங்களை நாடுகடத்துவது குறித்து, நேரடியாக இயைந்து செயல்படுவது குறித்து உங்களிடம் விரிவான தகவல் ஏதேனும் உள்ளதா?

ஜூலியான் அசாஞ்ச்: நாம் பகிரங்கமாக தெரிவிக்கக்கூடியதெல்லாம், டிசம்பர் 8, 2010ல் Independnet செய்தித்தாள் ஏற்கனவே அந்தக்கட்டத்தில் அமெரிக்கா, ஸ்வீடனிடையே என்னை நாடுகடத்துவது குறித்து முறைசாராத் தொடர்புகளைக் கொண்டுள்ளது பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டதுதான். வாஷிங்டனில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகமும், அந்நேரத்தில் கான்பெர்ராவிற்கு ஒரு தகவல்தந்தியை அனுப்பியது; அதில் அமெரிக்க உளவுத்துறை மற்றும் குற்றவியல் விசாரணைக்குழு ஆகியவை விக்கிலீக்ஸ் குறிந்த நடவடிக்கைகள் முன்னோடியில்லாத அளவு, தன்மையைக் கொண்டுள்ளன என்று அதில் கூறப்பட்டது. மேலும் என்னைப் பற்றிய குற்றவியல் விசாரணை தீவிரமாகவும், கடுமையாகவும் உள்ளது என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இத்தகவல் சில மாதங்களுக்கு முன் சிட்னி மார்னிங் ஹெரால்ட் சுதந்திரமாக தகவல் பெறும் உரிமையினால் பெற்றதின் விளைவாக வெளியிடப்பட்டதில் உள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்க குற்றவியல் துறை இப்பொழுதுள்ள அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுப்பதற்கு மறுத்து விட்டது; அது மற்ற நாடுகளுடன் உள்ள கிரேட் பிரிட்டனின் ராஜதந்திர உறவுகளை பாதிக்கும் எனக் காரணம் காட்டிவிட்டது. கடந்த ஆண்டின் நடுவில், ஐக்கிய இராச்சியத்தின் அழைத்துச் செல்லுவது குறித்த குழு ஒன்று, உள்துறை மந்திரியால் நியமிக்கப்பட்டது, அமெரிக்காவின் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டரையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உறுப்பனர்கள் பலரையும் சந்தித்தது. இதைத்தவிர, சமீபத்தில் ஸ்வீடனின் வெளியறவு மந்திரி

கார்ல் பில்ட் [கார்ல் ரோவின் நெருங்கிய நண்பர்], மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கிற்கும் இடையே சில பேச்சுக்கள் இருந்தன.

ரிச்சார்ட் பிலிப்ஸ்:  ஆஸ்திரேலியாவின் கில்லார்ட் அரசாங்கத்தின் பங்கு பற்றி நீங்கள் ஏதேனும் கருத்துக் கூறமுடியுமா?

ஜூலியான் அசாஞ்ச்: விக்கிலீக்ஸின் நடவடிக்கைகள் குறித்து கில்லார்ட் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, குறிப்பாக அமெரிக்கத் தூதரகத் தகவல் தந்திகளை நாங்கள் வெளியிட்டது குறித்து, எந்த நாடும் பகிரங்கமாகச் செய்யாத மோசமான தன்மையைக் கொண்டது. எங்கள் அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாக கில்லார்ட் தவறாகக் கூறினார். ஆஸ்திரேலியாவின் மத்திய பொலிஸ் விசாரணைகூட அக்கூற்று தவறு எனக் கண்டறிந்தது.

அரசாங்க வக்கீலுடன் சேர்ந்துகொண்டு, அவர் விக்கிலீக்ஸிற்கு எதிராக முழு அரசாங்கப் பணிப்பிரிவு ஒன்றைத் தொடக்கி, அதில் ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ், வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பு ASIS, உள்நாட்டு உளவுத்துறை அமைப்பு ASIO, பாதுகாப்புத் துறை மற்றும் அரசாங்க வக்கீல்துறையில் இருந்து உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தார். ஒரு ஆதரவு அறிக்கையை கூட கில்லார்ட் பகிரங்கமாக வெளியிட்டதில்லை, தனிப்பட்ட ஆதரவு குறித்து எங்களுக்கும் ஏதும் தெரியாது.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: பெருநிறுவனச் செய்தி ஊடகம் பே பால், மாஸ்டர்கார்ட், விசா இன்னும் பல நிறுவனங்கள் நிதிய முற்றுகை இட்டுள்ளதாகவும், மற்றவை அமைப்பைச் சிதைத்துள்ளதாகவும் கூறுகின்றன. இதற்கு உங்கள் விடையிறுப்பு என்ன?

ஜூலியான் அசாஞ்ச்: தடைக்கு எதிரான எங்களிடம் இரு தீவிர நீதிமன்ற வழக்குகள் உள்ளன. ஐரோப்பிய ஆணையத்திற்கு மூன்றாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான துவக்க அறிக்கை கொடுக்கப்பட வேண்டிய கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த தடை விக்கிலீக்ஸின் வருமானத்தில் 95% ஐ வெட்டிவிட்டது என்றாலும், அமைப்பு இன்னும் உலகம் முழுவதும் செல்வாக்கைக் கொண்டுள்ளது. எப்படியும் எங்கள் செயற்பாடுகளைத் தொடர முடிகிறது.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: ஈரான் மற்றும் சிரியாவிற்கு எதிரான போர்த்தயாரிப்புக்கள் குறித்த தவகல்களை விக்கிலீக்ஸ் வெளியிடுமா?

ஜூலியான் அசாஞ்ச்: ஆம். கடந்த வாரம் முழுவதும் இவற்றைப் பற்றி வெளியிட்டோம்; அது தொடர்ந்து நடக்கும். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் நடத்தப்படும் சிறப்புப் படைகளின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் ஒரு ஆர்வமான அறிக்கையை வெளியிட்டோம்.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: நீங்கள் உலக சோலிச வலைத் தளத்தை வாசிக்கின்றீர்களா, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் மீதும் விக்கிலீக்ஸின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களின் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றி WSWS வாசகர்கள் பிறரிடம் என்ன விளக்க வேண்டும்?

ஜூலியான் அசாஞ்ச்: பல ஆண்டுகளாக WSWS ஐ நான் வாசித்து வருகிறேன். அதன் எளிய வடிவமைப்பையும், அதில் வரும் கட்டுரைகளையும் நான் வியந்து பாராட்டுகிறேன். பொதுவாகக் கட்டுரைகள் துல்லியமாக உள்ளன. வாசகர்கள் சோசலிசக் குறுங்குழு பற்றிய பிரச்சினைகளில் நுழையவேண்டாம் என கூறுகின்றது. WSWS வாசகர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: முதலில் wlfriends.org ல் உள்ள Friends of WikiLeaks இல் சேரவேண்டும். இரண்டாவதாக Justice4assange.com ல் உள்ள உண்மைகளைப் படிக்க வேண்டும், பல போலிக்கருத்துக்களுக்கு பதிலாக; விக்கிலீக்ஸின் ட்விட்டர் கருத்துக்களையும் பின்பற்ற வேண்டும். நீங்கள் எங்கு அவதூறுகளைப் பார்த்தாலும் அவற்றைத் திருத்த வேண்டும்; உங்கள் பணியிடங்கள், மற்றும் குடும்பம், நண்பர்களிடையே விக்கிலீக்ஸின் மதிப்பீடுகளையும் உயர்சிந்தனைகளையும் பரப்ப உதவ வேண்டும்.

விக்கிலீக்ஸ் நேர்மையான சீர்திருத்தம் அடையப்படுவதற்கும் சில மதிப்பீடுகளைப் பரப்புவதற்கும் போராடும் அமைப்பு. நீதியைப் பரப்புவதில் நாங்கள் வெற்றி அடைந்தால், எங்கள் மதிப்பீடுகளை மற்றவர்களும் எடுத்துக் கொண்டால், அமைப்பின்மீது எத்தகைய தாக்குதல்கள் இருந்தாலும், நாம் வெற்றி அடைவோம்.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: உங்கள் மீதும் விக்கிலீக்ஸின் மீதும் நடக்கும் தாக்குதலை உண்மையான செய்தியியல், அதன் வருங்காலம் என்ற நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்?

ஜூலியான் அசாஞ்ச்: எங்கள்மீதான தாக்குதல்கள் அசாதாரணமானவற்றை வெளிப்படுத்தியுள்ளன. ஆம், நாங்கள் அமெரிக்க அரசாங்கம் இன்னும் பல நாடுகள் பல ஆண்டுகளாக செய்துவரும் செயற்பாடுகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளோம். ஆனால் இதற்கு எதிர்-விடையிறுப்பு அதாவது எங்கள்மீதான தாக்குதல் எந்த அளவிற்கு அரசாங்கங்களும் தற்காலத்திய அரசியலும் செயல்படுகின்றன என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க அரசாங்கம் செய்தியாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை நிறுவ முயல்கிறது. ஆதாரத்துடன் கூடிய எந்தச் செய்தியும் சட்டபூர்வமாக ஒரு சதித்திட்டம் என்று காண விரும்புகிறது. வேறுவிதமாகக் கூறினால், செய்தியாளர்கள் பிறரிடம் இருந்து முற்றிலும் வெறுமனே செய்தியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் தேசிய பாதுகாப்புச் செய்தித் தகவல்கள் மரபார்ந்த முறையில் இப்படி ஒருபோதும் செய்யப்படுவதில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், உலகில் நாம் அறிந்துள்ள தேசிய பாதுகாப்பு செய்திதிரட்டுதல் என்பது முடிவிற்கு வந்துவிடும்.

எங்கள் மீதான இத்தாக்குதல்கள் மற்ற நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தங்கள் சொந்த இலக்குகளைத் தாக்குவதை நெறிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இப்பொழுது இரண்டு ஸ்வீடன் நாட்டுச் செய்தியாளர்கள் எத்தியோப்பியாவில் சிறையில் தள்ளப்பட்டுனர். அவர்கள் லுண்டின் என்ற பெயரில் இருக்கும் ஸ்வீடனின் எண்ணெய் நிறுவனம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி கார்ல் பில்ட் முன்பு அந்நிறுவனத்தில் இயக்குனராக இருந்தவர். ஆனால் அவர்கள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் எதியோப்பியாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். எதியோப்பிய முதல் மந்திரி செய்தியாளர்களை இப்படி நடத்துவது முற்றிலும் ஏற்கத்தக்கதுதான் என்றும் என்னுடைய நிலைமையைக் காட்டி அதை நியாயப்படுத்துகிறார்.

விக்கிலீக்ஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முற்றிலும் அரசியல் ரீதியானவை. எனவே பொதுமக்களின் அக்கறைக்கு உரியவையாகும். எல்லா இடங்களிலும் இருக்கும் மக்களுக்கு என்னுடைய செய்தி இதுதான்: விக்கிலீக்ஸ் திவாலாகும் வரை காத்திருக்காதீர்கள்; அதன் உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் வரை காத்திருக்காதீர்கள். அது மிகவும் தாமதமாகிவிடும். இப்பொழுதே மக்கள் வலுவாகச் செயல்பட்டால்தான், அமைப்பிற்கு வெற்றி கிடைக்கும். விக்கிலீக்ஸிற்கு நிறைய ஆதரவு உள்ளது; கடினமாக நாங்கள் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கிறோம். போராடாமல் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், நாம் வெற்றி அடைவோம்.