World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions call off bus workers strike on government’s false promises

இலங்கை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை ஏற்று பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டன

Panini Wijesiriwardane
24 March 2012
Back to screen version

அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) 35,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தை அரசாங்கத்தின் போலி வாக்குறுதியை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை முடித்துக்கொண்டதன் மூலம் தொழிற்சங்கங்கள் அதை காட்டிக்கொடுத்து விட்டன. தீவு முழுவதும்  105 பஸ் பராமரிப்பு நிலையங்களில் இருந்து இ.போ.ச. தொழிலாளர்கள் மார்ச் 12 அன்று தொடங்கிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தனியார் பஸ் தொழிலாளர்கள் பங்குபற்றாததன் விளைவாக, இந்த வேலை நிறுத்தம் போக்குவரத்து சேவையில் ஒரு பகுதியே பாதிப்பை ஏற்படுத்தியது.

தாமதம் இல்லாமல் தக்க சம்பளத்தை கொடுக்க வேண்டும், பொதுத்துறை ஊழியர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பை இ.போ.ச தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு  சேவை நன்கொடை பணத்தை நேரத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின் படி, பொதுத்துறையில் உள்ள ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச மாத ஊதியம்11730 ரூபாவாகும் (100 அமெரிக்க டொலர்). எனினும், இ.போ.ச.யின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் 8430 ரூபா மட்டுமேயாகும்.

நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குடும்பத்தின் சராசரி செலவுகள் ஒரு மதிப்பீட்டின் படி 40, 000 ரூபா (333 அமெரிக்க டொலர் என புள்ளிவிபரவியல் திணைக்களம்  2010ல் கணிப்பிட்டிருந்தது. மேல் குறிப்பிடப்பட்ட சம்பளத் தொகை அதில் நான்கில் ஒரு பங்கை விட குறைவாகும். இது இ.போ.ச. தொழிலாளர்களும் இலங்கையில் மிக வறிய ஊதியம் பெறும் தொழிலாளர்களுள் அடங்குவதையே காட்டுகிறது. இந்த அற்ப தொகையும் தாமதமாகவும் மற்றும் பல தவணைகளிலுமே கொடுக்கப்படுகின்றது.

பல பஸ் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சீற்றமடைந்த தொழிலாளர்கள் தன்னிச்சையாக துவங்கிய வேலை நிறுத்தம், பின்னர் தீவு முழுவதும் பரவியது. வேலை நிறுத்தம்  கட்டுப்பாட்டை இழந்துவிடும் என அச்சமடைந்த, ஆளும் கூட்டணியின் கட்டுப்பாட்டிலான  இலங்கை தேசிய சுதந்திர போக்குவரத்துச் சங்கம் (இ.தே.சு.போ.ச.), அனைத்து இலங்கை போக்குவரத்து சேவைகள் சங்கம் (அ.இ.போ.சே.ச.) ஆகியவற்றின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் உடனடியாக தலையிட்டனர். அ.இ.போ.சே.ச., மக்கள் விடுதலை முன்னணியைச் (ஜே.வி.பீ.) சார்ந்ததாகும்.

 மற்ற துறைகளின் தொழிலாளர்கள் கூட ஊதிய உயர்வை கோரி போராட்டங்களில் குதிக்க ஊக்குவிக்கப்படுவர் என அரசாங்கமும் மற்றும் தொழிற்சங்கங்களும் அச்சமடைந்தன. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரித்ததால் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒரு பரந்த சீற்றம் காணப்பட்டது.

மார்ச் 16 அன்று, தொழிற்சங்க தலைவர்கள் துணை போக்குவரத்து அமைச்சர், ரோஹன திசாநாயக்க உடன் அமர்ந்து, வேலைநிறுத்தத்தைக் கவிழ்க்க ஒரு சமரசத்தை எட்ட நடவடிக்கை எடுத்தன. இதன் விளைவாக, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்வதற்கு  வசதியாக மூன்று மாதங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திசாநாயக்கவிடம்  ஒரு எழுத்து மூல உத்தரவாதத்தைப் பெற்றன

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் படி, இ.போ.ச. ஒரு சரியான புள்ளியில் நிறுத்தப்பட வேண்டும் அதாவது 2016 அளவில் செலவையும் வருமானத்தையும் சமப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டு முதல் இ.போ.ச.க்கான செலவு ஒதுக்கீடுகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தின் போது,  இ.போ.ச. ஒரு இலாபம் பெறும் நிறுவனம் இல்லை என்றாலும், நாங்கள் எங்களால் முடிந்தவரை செய்ய வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் குமார  வெல்கம கூறினார். [அந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக] நாங்கள் எப்போதும் திறைசேரிக்கு ஒரு சுமையாக இருக்க முடியாது, என அவர் ஊடகங்களுக்கு சுருக்கமாக வலியுறுத்தினார்

தேசியவாத கொள்கைகளின் ஒரு பகுதியாக 1958 ஆம் ஆண்டு இலங்கை பஸ் சேவையை தேசியமயமாக்கி .போ.. உருவாக்கப்பட்டது.  1977 முதல் திறந்த பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்ததன்  பகுதியாக தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை அனுமதிக்கப்பட்டதுடன் இ.போ.ச.யை கலைப்பது தொடங்கியது.  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதோடு சேவைகள் முற்றிலும் மோசமடைந்து வருகின்றன.

தொழிலாளர்கள் வென்ற சில சலுகைகள் இன்னமும் உள்ளன. மாதாந்த போக்குவரத்துக் கட்டணங்கள் மலிவான முறையில் பருவகாலச் சீட்டு முறைமையின் கீழ் வழங்கப்படுகின்றன. மேலும், இரவு நேர வேலையை முடித்துவிட்டு தொழிற்சாலைகளில் இருந்து தொலை கிராமங்களுக்கு செல்பவர்களை கொண்டு செல்லும் இ.போ.ச. சேவை நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு இன்றியமையாத சேவையாகும்.

அரசாங்கத்தின் செலவு வெட்டால் இந்த சேவைகள் ஆபத்தில் உள்ளன. தனியார் போக்குவரத்து சேவையுடனான போட்டியின் காரணமாக, இ.போ.சே. பேருந்துகள் போதுமான அளவு வருமானம் சம்பாதிக்க முடியாதுள்ளது. இதை ஒரு காரணமாகப் பயன்படுத்தி, நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளத்தை தாமதப்படுத்துகின்றது.

ஹோமாகம நிலையத்தில் இ.போ.ச. தொழிலாளி பதிராஜ, (வயது 45)  உலக சோசலிச வலை தள  நிருபர்களிடம் பேசும் போது, அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் எங்களிடம் இலாபம் கறக்க விரும்புகின்றன. நாம் இதை  எதிர்க்கின்றோம். இந்த பொது சேவை, இலாபம்  உருவாக்கும் நிறுவனம் அல்ல.  என்னுடைய பிள்ளைகள் உட்பட ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் எங்களுடைய சேவையினால் பாடசாலை செல்கின்றன. மேலும், தனியார் துறை பஸ்கள் இலாபம் தராத பாதைகளில் செல்வதில்லை, குறிப்பாக இரவில் ஓடுவதில்லை. ஆனால் நாங்கள்தான் நாள் முழுதும் தெருக்களில் நிற்கின்றோம், என்றார்.

அரசாங்கம் நலன்புரி சேவைகளை வெட்டக்கூடாது மாறாக, மேலும் அமுல்படுத்த வேண்டும். உடனடித் தேவை அதுவே என பதிராஜ மேலும் கூறினார்.

ஹோமாகம பராமரிப்பு நிலையத்தில்  மற்றொரு தொழிலாளி கூறியதாவது: எங்களது  அவநம்பிக்கையான நிலைமைகளிலும், தொழிற்சங்கங்கள் எங்கள் கவலையை தீர்க்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கும் ஏனைய தொழிலாளர்களுடன் கூட்டாக வேலை நிறுத்தத்தில் இறங்கினோம். இப்போது நாம் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். தேசத் துரோகிகள், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சர்வதேச சதி வேலையின் பங்காளிகள் என்றெல்லாம் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு முத்திரை குத்தப்படுகின்றது. இது எங்கள் மீதான சேறடிப்பாகும். ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மற்றும் பகிஷ்கரிப்பு செய்த பல்கலைக்கழக மாணவர்களையும் அரசாங்கம் இதே போல் முத்திரை குத்துகிறது.

இ.போ.ச. வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததைத் தொடர்ந்து, ஜே.வி.பீ. தலைமையிலான அ.இ.போ.சே.ச. பொதுச்  செயலாளர் சேபால லியனகே, எங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்றால், நாம் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று புலம்பினார். ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தொழிலாளர்களை ஏமாற்ற மீண்டும் மீண்டும் இத்தகைய கதைகளை அவிழ்த்துவிடுவர். கடந்த மாதங்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.

இராஜபக்ஷ அரசாங்கம் 2006 ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை புதுப்பித்த போது, ஜே.வி.பி. சார்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட தொழிற்சங்கங்கள் இராணுவ மோதலை ஆதரித்ததுடன், அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடுத்தன.  மீண்டும், புலிகளுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தின் போது செய்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக  .நா.  மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு எதிரான அரசாங்கத்தின் நாட்டுப்பற்று பிரசாரத்தில்  நுழைந்துகொண்டுள்ளன.

இ.போ.ச. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கவிழ்த்ததன் மூலம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அன்றி அரசாங்கத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை வெளிக்காட்டி விட்டன.