World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Colombo residents defy government bid to demolish “unauthorised” housing

இலங்கை: கொழும்பு குடியிருப்பாளர்கள் அதிகாரமற்ற வீடுகளை இடித்தழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்து நிற்கின்றனர்

By an SEP reporting team
9 March 2012
Back to screen version

மார்ச் 1ம் திகதி, கொழும்பு மாளிகாவத்தைப் தொடர்மாடி குடியிருப்பில் வசிப்போர், தமது சிறிய வீடுகளை பெரிதாக்கி கட்டியுள்ள பகுதிகளை இடித்துத் தள்ளுவதற்காக அனுப்பபட்ட கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளை எதிர்த்து நின்றனர். சிறுவர் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள். மறியலில் ஈடுபட்டு வீடுகள் இடித்து அழிப்பதை தடுத்து நிறுத்தினார்கள்.நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தோம், ஆனால் அவர்கள் இப்படித்தான் எங்களை நடத்துகிறார்கள் மற்றும் நாங்கள் வீதியிலா வசிப்பது? போன்ற சுலோகங்களை அவர்கள் பிடித்திருந்தார்கள்.

இராஜபக்ஸ அரசாங்கத்தின், தென்னாசியாவின் நிதி மையமாக நகரத்தினை மாற்றும் முயற்சியின் ஒருபாகமாக, கொழும்பில் உள்ள பொது வீட்டுத்திட்டங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள சகல கட்டிடங்களையும் இடித்தழிப்பதற்கான உத்தரவுகளை வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச வழங்கியிருந்தார்.

மார்ச் 1ம் திகதி காலை 8.30 மணியளவில், ஒரு ட்ரக் நிறைய வந்திறங்கிய பொலிசார் மாளிகாவத்தையைச் சுற்றிவளைத்தனர். எந்தவிதமான எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் தண்ணீர் பீரங்கிகளுடன் தயாராக நின்றிருந்தனர். எவ்வாறாயினும் குடியிருப்பாளர்கள், பொலிஸ் மற்றும் தொடர்மாடி முகாமைத்துவ அதிகாரசபை (சி.எம்.ஏ.) தலைவர் கபில கமகே ஆகியோரை நேருக்கு நேர் சவால் செய்தனர். பின்னர், இடித்தழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு புல்டோசரையும் தடுத்து நிறுத்தினர்.

வீடமைப்பு அமைச்சின் பாகாமான சி.எம்.ஏ., பெப்ரவரி நடுப்பகுதியில் மேலதிக கட்டிடங்களை இடித்து தள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், குடியிருப்பாளர்களின் எதிர்ப்பினால் அதில் இருந்து பின்வாங்கத் தள்ளப்பட்டது. பின்னர் அது மார்ச் மாதம் 1ம் திகதி வரை ஒரு வாரக் கால்கெடு வைத்தது. சி.எம்.ஏ. கடந்த வார நடவடிக்கையை தள்ளிப் போடத் தள்ளப்பட்டபோதிலும், “அதிகாரமற்ற கட்டிடங்களை அகற்றுமாறும் இந்த கட்டளைகளை உதாசீனப்படுத்தினால் அதிகாரிகளால் அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்படுவதோடு அதன் செலவுகளை குடியிருப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

மாளிகாவத்தைக் குடியிருப்பாளர்கள், அவர்களுடைய குடும்பங்கள் விரிவிடைந்த பொழுது தங்களின் தொடர்மாடிகளில் புதிய அறைகளை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் (யு.டி.ஏ.) அனுமதியுடன் கட்டினார்கள். விரிவுபடுத்தப்பட்ட கட்டிடங்கள், அரசாங்க அதிகாரிகள் வடிகால்களை சுத்தம் செய்ய தடையாக உள்ளது என சி.எம்.ஏ. பொய்யாக வலியுறுத்தியது. கடந்த 38 வருடங்களாக இந்த கால்வாய்களை தாங்களே சுத்தப்படுத்தி வருவதாகவும் அரசாங்கம் அல்ல என்றும் சுட்டி காட்டி, குடியிருப்பாளர்கள் அந்த கூற்றை நிராகரித்தார்கள்.

தொடர்மாடியில் வசிக்கும் சட்டத்தரணி கிருஷாந்த நிஷாந்த, மார்ச் முதலாம் திகதி திடீரெனக் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில், சி.எம்.ஏ. யின் மேலதிக  கட்டிடங்களை இடிக்கும் முயற்சி, நீதிமன்ற உத்தரவோ அல்லது உத்தியோக பூர்வ அனுமதியோ இல்லாத சட்டவிரோதமான நடவடிக்கை என்று தெரிவித்தார். கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியளித்த யு.டி.ஏ. கடிதத்தின் பிரதி ஒன்றினையும் அவர் ஊடகங்களுக்கு காட்டினார். நிஷாந்த பின்வருமாறு கூறினார்:இந்த வீடுகள் எமது தனிப்பட்ட சொத்து. யாரும் இதை அகற்ற முடியாது. நாங்கள் இந்த வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருக்கின்றோம். அதிகாரிகள் புதியகட்டிடங்களை உள்ளடக்கியே இவற்றினை மதிப்பிட்டனர்.

அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி, மாளிகாவத்தை தேசிய வீடமைப்பு திட்ட தொகுதியில் உள்ள 1,512 வீடுகளில் 1,700 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த சிறிய வீட்டுத் தொகுதிகள், ஒரு படுக்கை அறை, ஒரு சிறிய வரவேற்பறை, ஒரு சிறிய சமையலறை மற்றும் ஒரு மலசலகூடத்தை மட்டுமே கொண்டதாக 1973 மற்றும் 1978ம் வருடங்களில் கட்டப்பட்டன. வளர்ந்து வரும் குடும்பங்களுக்காக எந்தவிதமான புதிய அரசாங்க வீடமைப்புத் திட்டங்களும் கட்டப்படாதமையினால், குடியிருப்பாளர்கள் மேலதிக அறைகளைக் கட்டுவதற்குத் தள்ளப்பட்டார்கள்.

மாளிகாவத்தை குடியிருப்புக்களில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வரும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆதரவாளர்கள், வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராகவும் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்தியும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

இராஜபக்கஷ அரசாங்கம், தென்னாசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக கொழும்பு மாநகரத்தினை மாற்றியமைக்கும் திட்டத்தின் ஓரு பாகமாக, கொழும்பில் இருந்து பெருந்தொகையான மக்களை வெளியேற்றத் திட்டமிடுகின்றது. இராஜபக்ஸ, எதிர்புக்களை நசுக்குவதன் பேரில், இராணுவத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் யு.டி.ஏ.யை கொண்டுவந்துள்ளார். இந்த தொடர்மாடிகள், மாநகரத்தினை சுற்றுலா பயணிகளையும் மற்றும் முதலீட்டாளர்களையும் கவரும், அரசாங்கத்தின் அழகுபடுத்தல் என்று அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பாகமாக, 38 வருடங்களின் பின்னர் முதற்தடைவையாக திருத்தப்படுகின்றன, என அந்த துண்டுப் பிரசுரம் தெரிவித்தது.

2008 மற்றும் 2010ல், அரசாங்கம் இராணுவம் மற்றும் பொலிஸ் படை பலத்தினை பயன்படுத்திகொண்டு, கொழும்பில் உள்ள கொம்பனி வீதி மற்றும் தெமட்டகொட பிரதேசங்களில் நூற்றுக் கணக்கான குடும்பங்களை வெளியேற்றியிருந்தது. பல குடியிருப்பாளர்கள், மாநகரத்துக்கு வெளியே எதுவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தற்காலிக பலகை குடிசைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மாளிகாவத்தைப் தொடர்மாடிக்கு வருகை தந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த காஹந்தகம, “தொடர் மாடிகளுக்குப் பின்புறமாக மூன்றடிகள் மட்டும் (ஒரு மீட்டர்) அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். கஹந்தகம, இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உடன் இணைந்த ஜனநாயக இடதுசாரி முன்னணியைச் சேர்ந்தவராவார். சமரசம் என்று அழைக்கப்படும் அவரது இரக்க சுபாவம் கொண்ட முயற்சிகளை குடியிருப்பாளர்கள் நிராகரித்ததோடு, அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டார்.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் (யூ.என்.பீ) பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அவரது கட்சி கட்டிடங்களை இடிப்பதை எதிர்ப்பதாகவும் மற்றும் சி.எம்.ஏ.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு உதவுவதாகவும் கோபமடைந்திருந்த குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார். அவர், முன்னர் கொம்பனி வீதியில் வெளியேற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த போதிலும் எந்தவிதமான வெளியேற்றத்தினையும் அவர் தடுத்து நிறுத்தவில்லை. சேனசிங்கவின் யூ.என்.பீ. ஆட்சியில் இருந்த போது, பொது வீட்டுத் திட்டத்தில் குடியிருந்தவர்களை வெளியேற்றத் தயங்கவில்லை.

மாநகர சபைத் தேர்தல்களின் போது, யூ.என்.பீ. மாநகர முதல்வர் எம். முசம்மில், 75,000 குடிசை வாசிகளை வெளியேற்றும் இராஜபக்ஸ நிர்வாகத்தின் திட்டத்தினை எதிர்ப்பதாக அறிவித்தார். தற்பொழுது அவர் அரசாங்கத்தின்அபிவிருத்தி மற்றும்அழகுபடுத்தல் திட்டங்களுடன் ஒத்துழைப்பதற்கான தனது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து ஆயிரக்கணக்கான நகர்புற ஏழைகள் வெளியேற்றப்படுவதை நிறுத்த, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கோ அல்லது மாநகர அதிகாரிகளுக்கோ திட்டத்தை கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பினால் செய்ய முடியாது. இந்த தாக்குதல்கள், அரசாங்கத்தின் பரந்த நிகழ்ச்சி நிரல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கையின் ஒரு பாகமாகும்.

அடிப்படை சமூக உரிமையான வீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் தேவையானவர்களுக்கு நாகரீகமான வீடுகளை அமைக்க பில்லியன் ரூபாய்கள் ஓதுக்குவதற்கான திட்டங்களுக்காகவும் மற்றும் இராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிராகவுமான ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் பாகமாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.

சோ.ச.க. பொது வீட்டுத் திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்க்குமாறும் மற்றும் சகல மக்களதும் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாக்கும் போராட்டத்தின் ஓரு பாகமாக, வீட்டுரிமைகளைப் பாதுகாப்பதற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் சகல உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.