World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

CBS’s “60 Minutes” interviews Nora Volkow, head of the National Institute on Drug Abuse and great-granddaughter of Leon Trotsky

CBS “60 நிமிடங்கள்” தேசிய போதை மருந்துகள் கூடத்தின் தலைவரும் லியோன் ட்ரொட்ஸ்கியின் கொள்ளுப் பேத்தியுமான நோரா வோல்கோவைப் பேட்டி காண்கிறது

By Fred Mazelis
1 May 2012

Back to screen version

ஒரு அசாதாரண, ஆனால் குறிப்பிடத்தக்க தொலைக்காட்சிப் பேட்டியில், ஏப்ரல் 29ம் திகதி 60 நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்வில் டாக்டர் நோரா வோல்கோவ் தோன்றி NIDA  எனப்படும் தேசிய போதைப்பொருள் துஸ்பிரயோக அமைப்பின் இயக்குனர் என்னும் முறையில் தன் பணிகளை விவாதித்தது மட்டும் இல்லாமல், ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் கொள்ளுப் பேத்தி என்னும் முறையில் தன்னுடைய குடும்பப் பின்னணி பற்றியும் கூறினார்.

2003ல் இருந்து NIDA க்குத் தலைவராக இருக்கும் டாக்டர் வோல்கோவ் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கான இரசாயனவியல் காரணங்கள் பற்றிய அவருடைய பணிக்கும் புகழ் பெற்றுள்ளார். இப்பழக்கம் ஒரு மருத்துவப் பிரச்சினை, குணநலன்களின் தவறு இல்லை என்பதை வலியுறுத்திவருவதற்கும் புகழ் பெற்றுள்ளார். பல தசாப்தங்கள் இப்பிரச்சினை குறித்து அவர் உழைத்துள்ளார்; உலகெங்கிலும் பல மில்லியன் மக்களுக்குத் தீமை விளைவிக்கும் இந்நிலை பற்றி மருத்துத் தலையீடு மற்றும் ஆராய்ச்சியின் தேவையில் கவனத்தை செலுத்துகிறார்.

60 நிமிடங்கள் நிகழ்வின் கடைசிப்பகுதியின் 15 நிமிடம் டாக்டர் வோல்கோவ் வாழ்க்கைக் குறிப்பை பற்றி விவாதிக்கின்றது. அதில் அவருடைய குடும்பம் மற்றும் இளமைப் பருவம் மெக்சிகோவில் இருந்தது பற்றிக் கூறுகிறது. அங்குதான் அவர் 1955ல் ஆகஸ்ட் 20, 1940ல் ஒரு ஸ்ராலினிச கையாளால் படுகொலை செய்யப்பட்ட கொள்ளுப் பாட்டனார் வாழ்ந்த அதே வீட்டில் பிறந்தார். மூத்த தொலைக்காட்சிச் செய்தியாளர் மோர்லி சேபர் ட்ரொட்ஸ்கியை இன்னும் உலக வரலாற்றில் மேன்மையுடன் நடை போடுபவர் எனக் குறிப்பிட்டார்.

தன்னுடைய தந்தை, இப்பொழுது 86 வயதான ஓய்வுபெற்ற வேதியல் வல்லுனர், எஸ்டபென் வோல்கோவுடன் மற்றும் அவருடைய மூன்று சகோதரிகளான வெரோனிகா-ஓர் எழுத்தாளர்; பாட்ரிசியா- ஒரு மருத்துத்துறை டாக்டர், நத்தலியா- அரசாங்கப் புள்ளிவிவரத் துறையில் பணிபுரிபவர் ஆகியோருடன் டாக்டர் வோல்கோவ் இருப்பது காட்டப்படுகிறது. டாக்டர் வோல்கோவ் தன்னுடைய குடும்ப வரலாற்றையும் ட்ரொட்ஸ்கி கொலைசெய்யப்பட்ட வீட்டையும் பற்றிப் பேசுகிறார். சோவியத் ஒன்றியத்தில் இருந்து 1929ல் சமரசத்திற்கு இடமில்லாத போராட்டத்தை தேசியவாத, பிற்போக்குத்தன ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்காக வெளியேற்றப்பட்ட ட்ரொட்ஸ்கி பல நாடுகளிலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டார். இறுதியில் மெக்சிகோவில் 1937ம் ஆண்டு புகலிடம் பெற்றார்.

தன்னுடைய 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் எஸ்டபென் வோல்கோவ் விளக்கியுள்ளது போல், அவருடைய குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினரும் ஸ்ராலினிச ஆட்சியால் கொல்லப்பட்டனர் அல்லது இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எஸ்டபென்னின் தாயாரும் நோரா வோல்கோவின் பாட்டியாருமான ஜினைடா 1930களின் தொடக்கத்தில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். அவருடைய தந்தையார் ஒரு ஸ்ராலினிச கடும் சிறை முகாமில் மாண்டு போனார். அவருடைய அத்தையார் 1928ல் காச நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். இரு சித்தப்பாக்களான லியோன் செடோவ், செர்ஜி செடோவ் ஆகியோர் ஸ்ராலினின் கொலை இயந்திரத்தினால் உயிரை இழந்தனர். எஸ்டாபென் மெக்சிகோவிற்குத் தன் பாட்டன், பாட்டியாரோடு 13 வயதுச் சிறுவனாக வந்தார். மே 1940ல் ட்ரொட்ஸ்கி படுகொலை முயற்சியின்போது இவரும் இலக்கு வைக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டபோது  கண்ணால் அதைக் கண்ட சாட்சியாகவும் இருந்தார்.

இத்தொலைக்காட்சிப் பேட்டியில், இப்பொழுது லியோன் ட்ரொட்ஸ்கி இல்ல நூதனசாலையான காசா ம்யூசியோ லியோன் ட்ரொட்ஸ்கி - Casa Museo Leon Trotsky- இன் பல புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ட்ரொட்ஸ்கியின் கல்லறை முற்றத்தில் உள்ளது. புரட்சிகரத் தொழிலாள வர்க்கத்தின் அடையாளமான சுத்தியல், அரிவாள் பொறிக்கப்பட்டுள்ளது. படுகொலை நடத்தப்பட்ட அறையும் காட்டப்படுகிறது; அன்று இருந்தது போலவே அது இப்பொழுதும் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

60 நிமிடங்கள் குறிப்பு சில முக்கிய வரலாற்றுக் காட்சிகளையும் கொண்டுள்ளது; இதில் ஒரு நேர்காணலின் பகுதியாக ட்ரொட்ஸ்கி பேசியதின் ஒரு பகுதி, ட்ரொட்ஸ்கியைப் பற்றிய ஒரு குறிப்பு மற்றும் அவருடைய மனைவி நத்தலியா மெக்சிகக் கலைஞர்கள் டியாகோ ரிவேரா மற்றும் ப்ரீடா காஹ்லோ உடன் இருப்பது மற்றும் மருத்துவமனையில் ட்ரொட்ஸ்கியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டிருக்கும் காட்சிகளும் உள்ளன.

நான்கு சகோதரிகளும் தங்கள் குடும்ப வரலாற்றினால் ஆழ்ந்த பாதிப்பைக் கொண்டுள்ளனர். இதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்துள்ளனர். பேட்டியின் ஒரு கட்டத்தில் நடாலியா வோல்கோவ் கூறுகிறார்: நாங்கள் அனைவருமே இந்தப் பொதுப்பணி உணர்வு, சமூக உணர்மையை கொண்டிருப்பதுடன் மற்றும் தனிமனிதர் என்றவகையில் தனிப்பட்ட பொறுப்பு என்பது மட்டும் இல்லாமல் சமூகத்திற்கும் பொறுப்பை கொண்டுள்ளோம். என விளக்கியுள்ளார்.