World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain faces worst recession since 1930s

1930களுக்குப் பின் மோசமான மந்த நிலையை பிரித்தானியா எதிர்கொள்கிறது

By Richard Tyler
5 May 2012

Back to screen version

பிரித்தானியா   மீண்டும் மந்த நிலைக்குள் வந்துவிட்டது. தேசியப் புள்ளி விவரங்கள் அலுவலகத்தின்படி (ONS), பொருளாதாரம் 2012ன் முதல் மூன்று மாதங்களில் 0.2%சுருங்கியுள்ளது. இது 2011 இறுதியில் இருந்து 0.3 சதவிகிதச் சுருக்கத்திற்குப் பின் வந்துள்ளது. இப்பொழுது அது 1970களுக்குப் பின்  முதல்தடவையாக மீண்டும் இரட்டை இலக்க மந்தநிலையில் நுழைந்துவிட்டது.

பிரித்தானிய பொருளாதாரம் கடந்த 12 மாதங்களாக பூஜ்ய வளர்ச்சி விகிதம் காட்டும் ஒரே நேர்கோடாக உள்ளது. இவ்வகையில் இது கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்லோவேனியா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் என்று யூரோப்பகுதியில் உத்தியோகபூர்வ மந்தநிலையிலுள்ள நாடுகளுடன் சேர்கிறது.

புள்ளிவிவரங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ONS, “1930களின் ஆரம்பத்தில் மந்தநிலையின்போது இதை ஒத்த கட்டத்தில் இருந்த மந்தநிலைக்கு முன்பு இருந்த உச்சக்கட்டத்தை விடப் பொருளாதாரம் வலுவற்றதாக உள்ளது என்று கூறுகிறது.

பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான நிலைமை கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின் மூலம் இன்னும் தெளிவாகிறது:

இக்கருத்து மற்ற நிதிய வல்லுனர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சிட்டிக்ரூப்பிலுள்ள பொருளாதார வல்லுனர் ஒருவரான மைக்கேல் சாண்டர்ஸின் கருத்துப்படி, பிரித்தானியா 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மந்த நிலையையும், மிக பலவீனமான மீட்புத் தன்மையையும் கொண்டுள்ளது.

2008-2009 மந்த நிலையில் இழக்கப்பட்ட உற்பத்தியில் பாதிக்கும் குறைவாகத்தான் பொருளாதாரம் மீண்டுள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில், நான்கு எதிர்மறை வளர்ச்சியைத்தான் காட்டியுள்ளன. ஜனவரி, பெப்ருவரியில் உற்பத்தி குறைந்துவிட்டது. இதே காலத்தில் 2011ல் இருந்ததைவிட 3% குறைவாகும். உலகப் பொருளாதாரம், குறிப்பாக யூரோப்பகுதியின் பலமற்ற தன்மையை” ONS  சுட்டிக்காட்டி பிரித்தானியாவின் மீதான எதிர்மறைப் பாதிப்பிற்கு அவைதான் முக்கிய கூறுபாடுகள் என்றும் கூறுகிறது.

உற்பத்தியின் முக்கால் பகுதிக்கு பொறுப்பான சேவைத்துறை நிதானமான வளர்ச்சியைத்தான் கண்டுள்ளது. அதன் நான்கு முக்கிய துணைப்பிரிவுகளில் மூன்று ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் சுருங்கின. பிற சேவை துணைத்துறைகளை விட மிக உயர்ந்து நிற்பவையான வணிக, நிதிய சேவைகள் பெப்ருவரியில் சுருக்கம் அடைந்து காலாண்டில் 0.1% வளர்ச்சியைத்தான் காட்டியது.

மார்ச் மாதம் பீதியில் வாங்கும் -panic buying- ஆர்வத்தை ஏற்படுத்திய செயற்கையாகப் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் நெருக்கடி இல்லாமலும்கூட நிலைமை மோசமாகத்தான் இருந்திருக்கும். அதுவோ பெட்ரோல் விற்பனையை 4.9% அதிகப்படுத்தியது.

கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 5% குறைந்துவிட்டன. 2010ல் தொடங்கிய கீழ்நோக்கும் சரிவு இன்னும் தொடர்கிறது. 2008 சரிவை அடுத்து பெரும் சரிவைக் கண்டபின் அப்பொழுது அது குறுகிய காலத்திற்கு நேரிய வளர்ச்சியைக் கண்டிருந்தது. இது இப்பொழுது கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களுக்கு வேலை கொடுக்கும் இத்துறையின் உடனடி அளவிற்கு மிகவும் அப்பால் பொருளாதாரம் முழுவதையும் பாதித்துள்ளது. இது 2008ல் உச்சக்கட்டத்தில் இருந்த 2.37 மில்லியனை விடக் குறைவாகும். சராசரி மற்றும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கும் ஒற்றை நபர்களுக்கும் வீடுகளுக்கு பெரும் பற்றாக்குறை இருந்தபோதிலும், வீடுகள் கட்டுதல் தொழில் 2011ல் சரிந்தது. அரசாங்கத்தின் பொதுத்துறை மூலதனச் செலவுத் திட்டங்கள் தாக்கப்பட்டது போலவே கட்டுமானத் தொழிலும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.

பிரித்தானிய ஏற்றுமதிகளும் குறைந்துவிட்டன, குறிப்பாக யூரோப்பகுதியில். பிரித்தானியாவின் மிகப்பெரிய ஒற்றை ஏற்றுமதிச் சந்தை நாடான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத நாடுகளில் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேலாகக் குறைப்பை ஏற்படுத்திவிட்டது.

தொழிலாளர்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டின் அனுபவம் பெருகும் வறுமை, இடர் என்றுதான் உள்ளது. கூலிகளும் ஊதியங்களும் மீண்டும் குறைந்துவிட்டன. ஆண்டின் வருமான வளர்ச்சியான 1.1 என்பது பணவீக்க விகிதமான 3.5%ல் பாதியையும் விடக் குறைவாகும். இது கூட ஒரு குறைமதிப்பீடுதான். ஏனெனில் இது அரசாங்கம் விரும்பும் நுகர்வோர் விலைகள் குறியீட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவை பொதுவாகக் குறைவான எண்ணிக்கையைத்தான் கொடுக்கும். குறைந்த வருமானங்கள் உடையவர்களுடைய நிலைமை இன்னும் மோசமாகும். ஏனெனில் ஒப்புமையில் அவர்கள் உணவு, எரிபொருள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளில் அதிகம் செலவழிக்கின்றனர். இது கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பணவீக்கத்தை மேல்நோக்கி உயர்த்திவிடும்.

 “இல்ல வருமானம், செலவு, சேமிப்பு ஆகியவற்றில் மந்தநிலையின் பாதிப்பு என்று ONS நடத்திய ஆய்வு, நிதிய நெருக்கடி மற்றும் 2008-09 மந்தநிலை மற்றும் அப்பொழுது முதல் இருக்கும் மோசமான பொருளாதார நிலைமை இல்லங்களின் நிதிய நிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கிறது.

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து 2008ல் இருந்து அதிகரித்திருக்கையில், உணவு மற்றும் மது இல்லாத பானங்கள் வாங்குவதின் மொத்த எண்ணிக்கை குறைந்து விட்டது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில் 2009 முதல் எட்டு காலாண்டுகளில் ஐந்து காலாண்டுகள் உண்மையான செலவழிக்கக் கூடிய வருமானங்கள் இல்லங்களில் சரிந்துவிட்டதைத்தான் காண்டுகின்றன.

இது ஏற்கனவே பெருகிய ஊட்டச்சத்தின்மை, குறிப்பாக குழந்தைகளிடையே என்ற நிலையைக் காட்டுகிறது. இளைஞர்கள் பற்றிய அறக்கட்டளையான The Prince’s Trust நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அளவை நடத்தப்பட்ட இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஊட்டச்சத்தின்மையால் அவதியுறும் மாணவர்களை வாடிக்கையாக எதிர்கொள்கின்றனர் எனத் தெரியவருகிறது. சிலர் அடிக்கடி தங்கள் ஊதியங்களில் இருந்து கஷ்டப்படும் மாணவர்களுக்கு உணவு வாங்குவதாகத் தெரிவித்தனர்.

உத்தியோகபூர்வ வேலையின்மை ஆண்டில் சற்றே பெயரளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் இது பகுதி நேரம் உழைப்போர் (குறைந்த ஊதியத்திற்கு அல்லது குறைந்தப்பட்ச ஊதியத்தைவிடச் சற்றே அதிகமாக வருமானம் ஈட்டுவோர்), எண்ணிக்கை உயர்ந்துவிட்டது, முழுநேர வேலைபுரிவோர் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்பதை மூடிமறைக்கிறது. நீண்டகால வேலையின்மை, அதாவது 12 மாதங்களுக்கு மேல் வேலையின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

மந்த நிலை மீண்டும்வந்திருப்பதற்கு யூரோ நெருக்கடியை அரசாங்கம் குறைகூறுகிறது; இது பிரித்தானியப் பொருளாதாரத்தையும் கீழே இழுக்கிறது. பிரதம மந்திரி டேவிட் காமெரோன் இதை எதிர்கொள்ளும் முறை பிரித்தானியாவில் இருக்கும் மக்களை வேலைக்கு அமர்த்துவது எளிதாக்கப்பட வேண்டும் என்பதாகும். இதன் பொருள் ஊதியங்களும் சமூகச் செலவுகளும் இன்னும் கீழேநோக்கி தள்ளப்பட வேண்டும் என்பதாகும். பணிநீக்கம் செய்தல் என்பது எளிதாக்கப்பட வேண்டும். அதற்கென ஏற்கனவே குறைந்த தன்மையில் இருக்கும் வேலைப்பாதுகாப்பு உரிமைகள், சந்தை வளைந்து கொடுக்கும் தன்மை என்ற பெயரில் அகற்றப்பட வேண்டும் என்பதாகும்.

சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ட் அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் பிரித்தானியா அதன் AAAகடன்தரத்தை இழக்காமல் இருக்கும் என்று உறுதியாக உள்ளார்.

தொழிற் கட்சியை பொறுத்தவரை, நிழல் முதல்மந்திரி எட் பால்ஸ் ஐரோப்பா முழுவதும் செலவுக் குறைப்புக்களில் இருந்த கருத்தொற்றுமை மாறிவருகிறது என்று கூறியுள்ளார். உண்மையில் தொழிற்கட்சி நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கத்தினர் மீது சுமத்துவதற்கு உடன்படுகிறது. இது நாடெங்கிலும் தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் காணப்படலாம். அங்கெல்லாம் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மிகவும் அவசியமான சேவைகள் வெட்டப்பட்டுவிட்டன.

ஜனவரி மாதம் தொழிற் கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் தொழிற் கட்சி அரசாங்கம் கடுமையான புதிய நிதிய விதிகளைக் கடைப்படிக்கும் என்று உறுதியளித்தார். தன்னுடைய பங்கிற்கு எட்பால்ஸ், அரசாங்கத்தின் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் அகற்றப்படும் என உறுதியளிக்க மறுத்துவிட்டார். நியூஸ்நைட் இல் கடந்த ஆண்டு இறுதியில் பேசியவர், அரசாங்கம் மிக அதிகமாகவும், விரவாகவும் வெட்டுக்களைக் கொண்டுவருகின்றன, தொழிற் கட்சி பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும்போது உண்மை நிலையைக் கருத்திற்கொள்ளும் என்றார்.

ஒன்று மட்டும் உறுதி: வெட்டுக்கள் இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளன. 2010 Spending Review வில், கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கம் 2014-15க்குள் பொதுச் செலவுகள் 81 பில்லியன் பவுண்டுகள் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த வெட்டுக்களில் 90% --77 பில்லியன் பவுண்டுகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இதைத்தவிர, பொருளாதாரத்திற்கும் வியாபாரத்திற்குமான ஆய்வு நிலையம்   இரட்டை இலக்க மந்தநிலையின் தொடக்கம் அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டமான 170 பில்லியன் பவுண்டு மொத்தத்தில் ஒரு பெரும் கறுப்பு ஓட்டையை இப்பொழுது முதல் 2016-17 வரை காணும் என்று கணித்துள்ளது. இது தற்போதைய செலவுக் குறைப்புக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்னும் அதிக வெட்டுக்கள் தேவை என்பதற்கு ஆதரவாக வாதிட இது பயன்படுத்தப்படுகிறது.