World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian junta intensifies crackdown before presidential elections

ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு அடக்குமுறையைத் தீவிரப்படுத்துகிறது

By Johannes Stern 
7 May 2012

Back to screen version

மே 23ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்வதைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு ஈடுபட்டுள்ளது. வெள்ளி பிற்பகல், இராணுவப் பொலிஸும், பாதுகாப்புப் பொலிஸும் ஆயுதமேந்திய குண்டர்களுடன் இணைந்து கெய்ரோவில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு முன் இருக்கும் அப்பசேயச் சதுக்கத்தில் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர்.

அமெரிக்க ஆதரவைப் பெற்றுள்ள இராணுவ ஆட்சிக் குழு அகற்றப்பட வேண்டும், அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் மகம்மது ஹுசைன் தந்தவி தூக்கிலிடப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு அமைச்சரகத்தைத் தாக்க முற்படுகின்றனர் எனக்கூறி வெள்ளி பிற்பகல் இராணுவம் மற்றும் பொலிஸ் படையினர் அவர்களைத் தாக்க முற்பட்டனர். நீரைப் பீய்ச்சி அடித்தல், கண்ணீர்ப்புகை குண்டு போடுதல், உண்மை தோட்டாக்களை பயன்படுத்துதல் ஆகியவை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன; பிந்தையவர்கள் கற்களைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டனர். குறைந்தப்பட்சம் ஒரு ஆர்ப்பாட்டகாரரும், ஒரு சிப்பாயும் இறந்து போனதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர். அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை இராணுவம் செயல்படுத்தியது. இராணுவ விசாரணை கூடாது என்னும் நடவடிக்கைக் குழு கொடுத்துள்ள தகவல்படி, 311 ஆண்கள்,18 பெண்கள் என்று எதிர்ப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டு, இராணுவ விசாரணை அவர்கள்மீது நடத்தப்படும் என்னும் அச்சுறுத்தலும் வந்துள்ளது.

அமைச்சரகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குப் பல தாராளவாத குழுக்கள், மற்றும் Kefaya (நடந்தது போதும்) போன்ற மத்தியதர வர்க்கக் குழுக்கள், ஏப்ரல் 6ம் திகதி இளைஞர் இயக்கம், எகிப்திய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் அழைப்பு விடுத்து இராணுவ ஆட்சிக் குழு மீது அழுத்தம் கொடுத்தன. அதே நேரத்தில், முஸ்லிம் பிரதர்ஹுட் (MB),  கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தில் அமைச்சரகத்திற்கு முன் எதிர்ப்பு நடத்துவோருக்கு ஆதரவாக எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தது.

குடிமக்களுக்கு அதிகாரம் விரைவில் மாற்றப்பட வேண்டும், அரசியலமைப்புப் பிரகடனத்தின் 28வது விதி இரத்து செய்யப்பட வேண்டும் என்று இக்குழுக்கள் கோரின. 28வது விதி SPEC எனப்படும் ஜனாதிபதித் தேர்தல்களை மேற்பார்வையிடும் தலைமை ஜனாதிபதித் தேர்தல்கள் குழுவின் முடிவுகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று கூறுகிறது. தேர்தலில் தில்லுமுல்லுகளைத் தடுக்கும் பொருட்டு, இக்குழுக்கள் தேர்தல்களைக் கண்காணிக்கச் சுயாதீன நீதிபதிகள் தேவை எனக் கூறியுள்ளன. சமீபத்திய வன்முறைத் தாக்குதல்கள் உள்துறை அமைச்சரகத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள்மீது நடத்தப்பட்டதையும் அக்குழுக்கள் கண்டித்தன. தகுதியில் இருந்து அகற்றப்பட்ட சலாபிச ஜனாதிபதி வேட்பாளர் ஹாசெம் சலா அபு இஸ்மெயிலினால் முதலில் எதிர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குண்டர்கள் குழு ஒன்று ஆத்திரமூட்டல்களை செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வரையில் எதிர்ப்புக்கள் அமைதியாக இருந்தன என்று கண்ணால் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இராணுவ ஆட்சியாளர்கள் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. முதல் நாளன்று மேஜர் ஜேனரல் மொக்தார் அல்-முல்லா அப்பசேயா சதுக்கத்தில் எந்த எதிர்ப்புக்களும் இனி வன்முறை கையாளப்பட்டு அடக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். SCAF எனப்படும் ஆயுதப்படையின் தலைமைக்குழு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சரகத்தை அணுகும் எவரும் தாங்களேதான் வன்முறைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சரகத்தைச் சுற்றி நிலைப்பாடு கொண்டுள்ள படைகள் அமைச்சரகத்தை எவரும் அணுகாதவாறு நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

எகிப்திய ஆளும் உயரடுக்கிற்குள் பூசல்கள் ஆழ்ந்துள்ள நிலையில் இத்தாக்குதல் வந்துள்ளது. SCAF க்கும், MB யின் அரசியல் பிரிவான Freedom and Justice Party FJP  க்கும்இடையே சமீபத்திய வாரங்களில் அழுத்தங்கள் பெருகியுள்ளன.

ஆரம்பத்தில் SCAF, அதன் அமெரிக்க ஆதரவாளர்கள் மற்றும் MB ஆகியவை கடந்த ஆண்டு எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன எழுச்சியை ஒரு கூட்டு நடவடிக்கை மூலம் அடக்கினர். இஸ்லாமிய MB  பெப்ருவரி 11, 2011ல் நீண்டக்கால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டபின் இராணுவ ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது, அதற்கு ஆதரவைக் கொடுத்து, வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை முறித்தது.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதிக மக்கள் பங்கு பெறாத, பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி அடைந்தபின், MB, SCAF இராணுவ ஆட்சிக் குழு மீது கூடுதலான மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.

FJP பலமுறையும் பிரதம மந்திரி கமால் கன்ஜௌரி தலைமையில் இராணுவம் நியமித்த இடைக்கால அரசாங்கத்திற்குப் பதிலாக பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்று கோரிவருகிறது. MB யின் கோரிக்கையை இராணுவ ஆட்சிக் குழு எதிர்த்ததால், MB அதன் துணைத் தலைமை வழிகாட்டியும், பெரும் வணிகருமான கெய்ரத் அல்-ஷடெரைத் தன் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது. தான் வேட்பாளரை நிறுத்துவதாக இல்லை என்று முன்னதாகக் கூறியிருந்த முடிவை மாற்றிய MB யின் புது முடிவு இராணுவத்திற்குள்ளும் அத்துடன் நெருக்கமாக இருப்பவர்களாலும் குறைகூறப்பட்டது; அவர்கள் இஸ்லாமிய வாதிகள் தங்கள் வணிக நலன்களைப் பாதிக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

எகிப்திய பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகளை MB கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது; அதன் கொள்கைகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல், தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை ஆதரிப்பதாக உள்ளன. பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளைத் தானே கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் இராணுவம் MB ஐத் தன் வணிக நலன்களுக்கு அச்சுறுத்தல் என்று காண்கிறது; எனவே நம் திட்டங்களைக் காக்க போராடுவோம் என்று அது எச்சரித்துள்ளது.

இஸ்லாமிய வாதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இராணுவ ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள SPEC கெய்ரத் அல்-ஷேடர் மற்றும் சலாபி வேட்பாளர் ஹசம் சலா அபு இஸ்மெயிலையும் ஏப்ரல் 17 அன்று தகுதியற்றவர்கள் என அறிவித்தது. SCAF “பழைய ஆட்சியை மீண்டும் தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று MB குற்றம்சாட்டி, தொடர்ந்து போராடப்போவதாக உறுதி கொண்டது. இரண்டாம் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, SCAF  க்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தேவை, தளபதிகள் அதிகாரத்தை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

சமீபத்திய அடக்குமுறைக்குப்பின், அழுத்தங்கள் அதிகரிக்கலாம். SCAF, “இறந்தவர்கள், காயமுற்றவர்களுக்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டிய அறிக்கை ஒன்றை MB  வெளியிட்டது. நாட்டின் விவகாரங்களை நிர்வாகம் செய்யும் திறன் இல்லை என்றும், குடிமக்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை என்றும் அதில் கூறப்பட்டது. தேசியக் கட்சிகள், சக்திகள், உரிமை உடையவர் அனைவரும் தங்கள் பூசல்களை மறந்து ஒன்றுபட்டு எதிர்ப் புரட்சியில் இருந்து புரட்சியைக் காக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்தது.

FJP யின் துணைத் தலைவரும் People’s Assembly Foreign Affairs Committee  உடைய தலைவருமான எசம் எல்-எரியான் சமீத்திய நிகழ்வுகளை ஒரு காரணமாக வைத்து குடிமக்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படுவதை ஒத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ கூடாது என்று எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், மற்ற அரசியல் சக்திகளும் இராணுவத்துடன் தங்களை நெருக்கமாகப் பிணைத்துக் கொள்ள முயல்கின்றன. சலாபிய நௌர் கட்சி தகுதி இழந்துவிட்ட அபு இஸ்மெயிலிடம் இருந்து தன்னை தூர ஒதுக்கி வைத்துக்கொண்டு எதிர்ப்புக்களில் கலந்து கொள்ளவில்லை. MB உடைய வேட்பாளரான முகம்மத் முர்சிக்குத் தேர்தல்களில் ஆதரவு கிடையாது என்றும் கடந்த ஆண்டு MB யில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் நிற்கப்போவதாகக் கூறியவுடன் விலக்கப்பட்ட அப்தெல் மோனீம் அபௌல் போடௌக்கு ஆதரவு என்றும் அறிவித்துள்ளது. போடௌக்குத் தீவிர வலதுசாரி இஸ்லாமியக் குழுவான அல்-கமா அல்-இஸ்லாமியாவின் ஆதரவும் உள்ளது.

இஸ்லாமியவாத வேட்பாளர் முகம்மத் செலிம் எல்-அவா உள்துறை அமைச்சரகத்தின் முன் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அகற்றப்பட்ட ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆணைகளின்படி நடக்கும் சதிகாரர்கள் என்று விவரித்தார். எதிர்ப்புக்கள் குழப்பம் நிலவுகின்றன என்பதை நிரூபிக்க முற்படும் முயற்சிகள் என்றும், எகிப்திய இராணுவத்திற்கு எதிரான அவமதிப்புக்களைக் கண்டிக்கவும் செய்தார். தலைனமைக் குழுவிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் மாற்றப்படுவதில் அனைவரும் குவிப்புக் காட்டவேண்டும் என்று தொலைக்காட்சியில் அவர் அறிவித்தார்.

நாசரிச கரமாக் கட்சி மற்றும் தாராளவாத சுதந்திர எகிப்தியர்கள் கட்சி என்று வணிகப் பிரமுகர் நகுப் சவிரிஸ் நிறுவிய கட்சி ஆகியவையும் எதிர்ப்புக்களை எதிர்க்கின்றன. சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அக்கட்சி நாட்டை மோதலுக்குத் தள்ளும் முயற்சிகள், குழப்பத்திற்கு வழிசெய்யக்கூடிய அரசியல் சுயநலம் ஆகியவற்றைக் கண்டித்தது.