World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Buddhist mob in Sri Lanka threatens to demolish a mosque

 

இலங்கையில் ஒரு பெளத்த கும்பல் மசூதியை இடிக்க அச்சுறுத்துகின்றது
By K. Ratnayake
8 May 2012

Back to screen version

இலங்கையில் சமூக பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், பௌத்த துறவியான இனாமலுவே ஸ்ரீ சுமங்கள, கடந்த மாதம் தனது ரங்கிரி தம்புளு விகாரையுடன் சம்பந்தப்பட்ட புனித பகுதி என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தில் உள்ள மசூதி ஒன்றை இடித்துத் தள்ளக் கோரி ஒரு ஆத்திரமூட்டும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த பிற்போக்கு நடவடிக்கைக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றது.

ஏப்ரல் 20 அன்று, மத்திய மாகாண நகரான தம்புள்ளையில் உள்ள மஸ்ஜிதுள் கயிரா மசூதிக்கு வெளியில் சுமார்1,000 பேர் கூடினர். அவர்கள், கோஷங்களை எழுப்பி, பெளத்த கொடிகளை தூக்கிப் பிடித்து, மசூதியை இடிக்க வேண்டும் எனக் கோரினர். சுமங்கள இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தி, கட்டளைகளையிட்டவன்னமிருந்தார். அடுத்த நாள் நடவடிக்கைக்கான ஒரு எச்சரிக்கையாக, அடையாளம் தெரியாத நபர்களால் முந்தைய இரவு ஒரு பெட்ரோல் குண்டு மசூதி மீது வீசப்பட்டது.

கும்பல் மசூதியை முற்றுகையிட்ட போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடி இருந்த சுமார் 50 பேர் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தனர். மசூதி அறங்காவலர்கள் பாதுகாப்பு கோரியதையடுத்து இராணுவம், பொலிஸ் மற்றும் அதன் விசேட அதிரடிப் படைகளும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டன. பல துறவிகள் வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் கூட, பாதுகாப்பு படைகள் கூட்டத்தை கலைக்கவோ அல்லது எவரையும் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மசூதிக்குள் இருந்தவர்களை ஒரு உள் அறையில் மறைந்திருக்குமாறு கூறிய போலீஸ், பின்னர் வளாகத்தைவிட்டு வெளியேறுமாறு அவர்களை கேட்டுக்கொண்டது. ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஏப்ரல் 23 அன்று ஒரு தீர்வு தருவதாக உறுதியளித்த பின்னரே, அந்த கும்பல் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றது. மசூதி இடிக்கப்படாவிட்டால் மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என அந்த துறவி சுமங்கள அச்சுறுத்தினார். அவர், அதே பகுதியில் இருந்த ஒரு இந்து கோவிலையும் அகற்றக் கோரினார்.

பாதுகாப்பு படைகள் இந்த இனவாத கும்பல் சம்பந்தமாக திட்டமிட்டு செயற்பட்ட விதமானது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடக்குவதில் அவர்களுடைய வன்முறை செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறானதாகும். பெப்ரவரியில், அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது பாய்ந்த போலீஸ், ஒரு மீனவரைக் கொன்றதோடு பலரைப் படுகாயப்படுத்தியது.

தம்புள்ளையில் குண்டல் கும்பல் ஆர்ப்பாட்டம் செய்து இரண்டு நாட்களின் பின்னர், பௌத்த விவகாரங்களுக்கும் பொறுப்பான பிரதமர் டி.எம். ஜயரத்ன, மசூதியை பிரிதொரு பகுதியில் மறுநிர்மானம் செய்யுமாறு கட்டளையிட்டார். தான், அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட அரசாங்க சார்பு முஸ்லீம் தலைவர்களை சந்தித்து ஒப்புதல் பெற்றதாகவும் அவர் கூறினார். அவர்களோ அது ஒரு புணையப்பட்ட வெளிப்படையான பொய் எனக் கூறி, பிரதமரை தாம் சந்திக்கவில்லை என மறுத்தனர்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் கட்சிகள், நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு மத்தியில் அதிருப்தி பெருகிவருவது பற்றி அச்சமடைந்துள்ளன. கடந்த ஆண்டு, அனுராதபுரத்தில் ஒரு மசூதி புனிதமான பகுதியில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி தரைமட்டமாக்கப்பட்டது. தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் போலவே, முஸ்லிம்களும் திட்டமிட்ட பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி இராஜபக்ஷவைத் தலையிடக் கோரி ஏப்ரல் 30 அன்று அவரைச் சந்தித்தார். “தான், பிரச்சினை கட்டுப்பாட்டை விட்டு வெளியே செல்லவிடப் போவதில்லை, எந்தவொரு தனிநபரினதோ அல்லது சமூகத்தினதோ நலன்களுக்கு பாதிப்பின்றி, சர்ச்சைக்குரிய விஷயத்தை தீர்ப்பதாக இராஜபக்ஷ ஹக்கீமுக்கு உறுதியளித்தார்.

தம்புள்ளை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி போன்ற பண்டைய பௌத்த மையங்கள், பிரதமர் ஆர். பிரேமதாசவின் )ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி அரசாங்கத்தினால் புனித பிரதேசங்களாக 1982ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த முடிவு,  1983ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு முன்நகர்வாக, தமிழ் மற்றும் பிற சிறுபான்மையினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர்ச்சியான இனவாத ஆத்திரமூட்டல்களின் பாகமாகும்.

தம்புள்ளை மசூதியின் அறங்காவலர் எம். ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஏனைய முஸ்லீம் தலைவர்களும், தமது வழிபாட்டுத் தளம் பௌத்த விகாரையின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற உரிமை கோரலை நிராகரித்தனர். இது 1960 களின் முற்பகுதியிலிருந்து இருந்து வருகிறது, அதை கட்டியெழுப்ப அனுமதி தேவையில்லை என ரஹ்மதுல்லாஹ் கூறினார்.

ஒரு இலங்கை சிந்தனைக் குழுவான மாற்று கொள்கை நிலையம், "புனிதப் பிரதேசங்களை" பிரகடனப்படுத்த அதிகாரமளிக்கும் சிறப்பு சட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. அது, தனியார் சொத்துக்களை "புனித பகுதியாக" மற்றும் "பாதுகாப்பு பகுதியாக" அறிவிக்க அனுமதிக்கும் ஒரு மசோதாவை 2011ல் இராஜபக்ஷ அரசாங்கம் முன்கொணர்ந்ததாக விளக்கியது. மாற்று கொள்கை நிலையம் அதை நீதிமன்றத்தில் சவால் செய்ததோடு அது பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மசூதிகள் மற்றும் இந்துக் கோயில்களுக்கு எதிரான சிங்கள-பெளத்த மேலாதிக்கவாதிகளின் சமீபத்திய பிரச்சாரங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதனால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக பதட்டங்களுடன் பிணைந்துள்ளன.

அரசாங்கம் ஆழமாக சிங்களப் பேரினவாதத்தில் ஆழ்ந்துள்ளது. இராஜபக்ஷ 2006ல் புலிகளுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கி, இரக்கமற்ற முறையில் முன்னெடுத்தார்.  2009ல் புலிகளின் தோல்வியை அடுத்து, ஜனாதிபதி திட்டமிட்டு சிங்கள-பௌத்த வெற்றி ஆரவாரத்தை கிளறிவிட்டார். இது ஆத்திரமூட்டும் வகையில் சில தமிழ் மற்றும் முஸ்லீம் பகுதிகளில் பௌத்த விகாரைகளை வைப்பது உட்பட, புதிய பௌத்த ஸ்தலங்கள் பரவுவதற்கு வழிவகுத்தது.

ஆளும் கூட்டணியை உருவாக்கியுள்ள கட்சிகளில் ஒன்று ஜாதிக ஹெல உறுமய ஆகும். இது பௌத்த உயர்மட்டத் தட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு சிங்கள அதி தீவிரவாத கட்சியாகும். ஹெல உறுமயவும் அதன் ஆதரவாளர்களும் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதில் இழிபுகழ்பெற்றவையாகும். மற்றும் அவர்கள் கிறிஸ்துவ சபைகளினால் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப் பிரச்சாரம் செய்பவர்கள்.

ஹெல உறுமய தம்புள்ளையில் மசூதி எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது. ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித, ஏப்ரல் 20 அன்று குண்டர் கும்பலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். அரசாங்க அதிகாரிகள் மசூதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதனால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த துறவிகள் மக்களுடன் சேர்ந்து வீதிக்கு இறங்கினர், என அவர் கூறினார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கை ஆளும் தட்டுக்கள் சிங்கள மேலாதிக்க நிலைபெற்றுள்ளதுடன், அவர்களது ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற ஏழைகளையும் பிளவுபடுத்தும் வழிமுறையாக தீவின் சிறுபான்மையினருக்கு எதிராக பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

1948ல் உத்தியோகபூர்வமாக சுதந்திரமடைந்த உடனேயே, யூ.என்.பி. அரசாங்கம் ஒரு மில்லியன் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமையை அபகரித்தது.  1956ல் )ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு. சிங்களத்தை மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக முன்னிலைப்படுத்தி சட்டமாக்கியதோடு, அதை எதிர்த்த தமிழர்கள் மீது வன்முறையை தூண்டிவிட்டது. 1972ல் அரசியலமைப்பைத் திருத்திய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், மற்ற மதங்களுக்கு மேலாக பௌத்த மதத்துக்கு உச்ச ஸ்தானத்தைக் கொடுத்தது.

போதுமான வசதிகள் மற்றும் தமது அரிசி மற்றும் மரக்கறி உற்பத்திக்கு தக்க விலை கோரிய விவசாயிகள் பெருமளவில் தம்புள்ளையில் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியமை ஒரு தற்செயலான விடயமல்ல. தமது பொது வர்க்க நலனுக்காகப் போராடும் உழைக்கும் மக்களின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை தடுப்பதற்கு, இலங்கை அரசியல் ஸ்தாபனம் மீண்டும் பிரித்தாளும் பிற்போக்கு அரசியலை நாடுகின்றது.