World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Nationwide protests against fuel price hikes

இந்தியா: எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து தேசிய அளவிலான எதிர்ப்பு போராட்டம்

By Deepal Jayasekera
30 May 2012

Back to screen version

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) மத்திய அரசாங்கத்தால் சமீபத்தில் சுமத்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாளை நடக்கவுள்ள வெகுஜன எதிர்ப்புக்களில் இந்தியா முழுவதும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் இணைந்துகொள்வர்.

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மே 23 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7.54 ரூபாய்களால் அதிகரிப்பதாக அறிவித்தன. இது ஒரே வருடத்தில் மூன்றாவது விலை உயர்வு மட்டுமன்றி, ஒரே தடவையில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை அதிகரிப்பும் இதுவாகும். அரசாங்க அதிகாரிகள், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு, பணவீக்கத்தை உயர்த்தி, உழைக்கும் மக்கள் மீதும் கிராமப்புற வறியவர்கள் மீதும் மேலும் தாங்க முடியாத சுமைகளை திணிக்கும்.

இந்தியாவிலும் உலகம் பூராவும் வர்க்க போராட்ட அலை உயர்ந்து வருகின்ற நிலைமையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. கடந்த ஆண்டு வட இந்தியாவின் ஹரியானாவில் மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்க்குணம் மிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புக்களும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான், பி.வை.டி. எலெக்ட்ரானிக்ஸ், சன்மினா மற்றும் ஹூண்டாய் தொழிற்சாலைகளில் நடந்த வேலைநிறுத்தங்களும் இவற்றில் அடங்கும். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி.) உள்ள சுமார் 14,000 ஒப்பந்த தொழிலாளர்கள், தற்போது நிரந்தர ஊழியர்களுக்கு சமமான ஊதியத்தையும் மற்றும் நிலைமைகளையும் கோரி ஒரு நீடித்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விலை உயர்வுக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பிய போதிலும், யூ.பி.ஏ. அரசாங்கம், வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கு இந்த விலை உயர்வு அவசியம் என வலியுறுத்தி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து தெரிவுகளையும் மேற்கொண்டுவிட்டன என கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். என் சொந்த கட்சி (காங்கிரஸ்) உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்தவையே... (ஆனால்) நாம் மக்கள் நல உணர்வுகளுடன் நாட்டை நடத்த முடியாது," என அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் அறிகுறிகளின் மத்தியில், அரசாங்கம் சந்தை சார்பு மறுசீரமைப்பை துரிதப்படுத்தக் கோரும் பெரும் வணிக அழுத்தத்துக்கு முகங் கொடுத்துள்ளது. ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவு குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதுடன் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது. 2011-12 பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆண்டில் இருந்து 1.5 சதவிகிதத்தால், 6.9 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, 4.6 சதவிகிதம் என்ற அரசாங்கத்தின் சொந்த வரையறைக்கு மேல், 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை சபையின் தலைவர் சி. ரங்கராஜன், பெட்ரோல் விலைகள் உயர்ந்ததன் மூலம், "அரசாங்கம் நிதிய ஒருங்கிணைப்புக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது" என்று கடந்த வெள்ளியன்று கூறினார். அரசாங்கம் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க தொடர்ந்தும் செயற்படுகின்றது என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரூபிப்பதற்காக, டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

நாளைய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதான எதிர் கட்சிகள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுடன் எந்தவொரு அடிப்படை வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP), ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். ஆகியவை, தமது சொந்த அரசியல் நலன்களை உயர்த்திக்கொள்வதற்காக, மக்களின் கோபத்தை பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றன.

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அல்லது சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி நாளைய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இரண்டு கூட்டணிகளும், விலை உயர்வுக்கு எதிரான எதிர்ப்பு ஒரு நாள் போராட்டமாக மட்டுமே இருப்பதையும் மற்றும் அரசியல் ரீதியில் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பதையும் உறுதிய செய்ய முயற்சிக்கின்றன. 

கடந்த வாரம் மும்பையில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பி.ஜே.பி. தலைவர் நிதின் கட்காரி, "காங்கிரசால் உருவாக்கப்பட்ட குளறுபடியை தீர்ப்பதற்கு மீண்டும் பி.ஜே.பி. வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அறிவித்தார். ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது போல், "காங்கிரஸ்தான் பிரச்சினை... பி.ஜே.பி. தான் தீர்வாக இருக்கும்" என்று கட்காரி வாய்ச்சவாடலாக அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி. உழைக்கும் மக்களை பெரிதும் பாதித்த சந்தை சார்பு மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்தியதன் பின்னர், 2004ல் தேசிய அளவில் தோல்வி கண்டது. காங்கிரஸ் தலைமையிலான யூ.பி.ஏ. அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கைகளால் வெகுஜன அந்நியப்படுதலும் சீற்றமும் வளர்ச்சியடைந்து வந்தபோதும், 2009 தேர்தலில் பி.ஜே.பி. தோல்விகண்டது.

ஸ்ராலினிச கட்சிகளின் உதவியுடன் மட்டுமே பி.ஜே.பி.யால் உழைக்கும் மக்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முடிகிறது. சி.பி.எம். மற்றும் அதன் இடது முன்னணியும், இந்த வலதுசாரி இந்துப் பேரினவாத கட்சியையும் அதன் வெற்று ஜனரஞ்சக பாசாங்குகளையும் சவால் செய்வதில்லை. அவ்வாறு செய்தால், அது 2004 இலிருந்து 2008 வரையிலான காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து, உழைக்கும் மக்கள் மீதான அதன் தாக்குதல்களை ஆதரித்த சி.பி.எம். இன் பதிவுகள் பற்றிய விமர்சனங்களை தூண்டிவிடுவதாக அமையும்.

காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. போன்று சி.பி.எம். அதே திறந்த சந்தை "சீர்திருத்தம்" முதலாளித்துவ வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகும். மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அதிகாரத்தில் இருந்த சி.பி.எம். தலைமையிலான அரசாங்கங்கள், அந்த மாநிலங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்பு தளங்களாக ஆக்க முயன்றதோடு, இரு மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை இரக்கமற்று அடக்கின. இதன் விளைவாக அவை கடந்த ஆண்டில் இரு மாநிலங்களிலும் அதிகாரத்தை இழந்தன.

சி.பி.எம்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சி.பி.ஐ.) சேர்ந்து, பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்களுடன் யூ.பி.ஏ. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 28 அன்று நடந்த அனைத்து இந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஒத்துழைத்தது. சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. தலைவர்கள், பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர்களுடனான தமது ஒத்துழைப்பை பலமுறையும் ஒரு "வரலாற்று" நிகழ்வாகப் புகழ்ந்துகொண்டதோடு, பரந்த அரசியல் ஒத்துழைப்புக்கான தங்கள் விருப்பத்தை சமிக்ஞை செய்தனர்.

நாளைய எதிர்ப்பு பற்றிய ஒரு சுருக்கமான அறிக்கையில், இடது முன்னணியானது "விலை உயர்வைக் கைவிடக் கோரும் ஒரு நீடித்த இயக்கத்தை" உருவாக்கும் இலக்கை நிர்ணயித்ததுள்ளதாக அறிவித்தது. உண்மையில், ஸ்ராலினிஸ்டுகள், விலை அதிகரிப்பு சம்பந்தமான மக்களின் சீற்றத்தை தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும் அதே வேளை, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தை தடுக்கும் பிரதான சக்தியாக செயற்படுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், சி.பி.எம். சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் தனது முக்கியத்துவத்தை பெரும் வணிகர்களுக்கு நிரூபிக்க முயற்சிக்கின்றது.

கோடிக்கணக்கான மக்கள் நாளைய எதிர்ப்பு பிரச்சாரத்தில் பங்கெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லாவிட்டாலும், ஆளும் யூ.பி.ஏ. மீது அழுத்தத்தை திணிப்பதன் மூலம் அவர்களின் கோரிக்கைகளை வெல்ல முடியாது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்வது மட்டுமன்றி, உழைக்கும் மக்களின் சமூக நிலை மீது பரந்த தாக்குதலை நடத்துவதன் பாகமாக மேலும் விலை அதிகரிப்புகளை சுமத்தவும் திட்டமிட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்கனவே நன்றாகத் தெளிவுபடுத்திவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் போல், யூ.பி.ஏ. அரசாங்கமும், முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் பூகோள நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீதும் கிராமப்புற ஏழைகள் மீதும் சுமத்த முயற்சிக்கின்றது.

சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதின் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரள்வதன் ஊடாக மட்டுமே அரசாங்கத்தின் தாக்குதல்களை வெற்றிகரமாக தோற்கடிக்க முடியும். அதற்கு, இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகள் அனைத்திலிருந்தும், குறிப்பாக இலாப முறைமைக்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் தடுக்கும் சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். ஆகியவற்றிடம் இருந்தும் அடிப்படையில் முறித்துக்கொள்வது அவசியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த நூற்றாண்டில் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கும் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் எதிரான போராட்டத்தில், அனைத்தலுக ட்ரொட்ஸ்கிச இயக்கம் பெற்ற மூலோபாய படிப்பினைகள் அனைத்தையும் அடித்தளமாகக் கொண்டுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்தியப் பகுதியை கட்டியெழுப்புவது அவசியமாகும்.