World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A new turn in the euro zone financial crisis

யூரோப் பகுதி நிதிய நெருக்கடியில் ஒரு புதிய திருப்பம்

Nick Beams
3 November 2012
Back to screen version

இந்த வாரம் கிரேக்கப் பொருளாதாரம் குறித்து வெளியாகியுள்ள கடன் கணிப்புக்களை அடுத்து யூரோப்பகுதி நிதிய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 167 சதவிகிதம் என்னும உச்ச நிலை அடையும் என காட்டுகின்றது. இது பிணையெடுப்புப் பொதி நடைமுறைக்கு வந்த மார்ச் மாதம் கூறியபடி என்று இல்லாமல், இந்த ஆண்டு 189 சதவிகிதத்தையும், 2014ல் இது 192%ஐ அடையும். இது எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமைகளையும் விட மிக மோசமானதாகும்.

கிரேக்க அரசாங்கம் நவம்பர் 16 அளவில் நிதியில்லாத நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகையில், யூரோப்பகுதி நெருக்கடி ஞாயிறன்று மெக்சிக்கோ நகரத்தில் ஆரம்பிக்க இருக்கும் G20 மந்திரிகள் உச்சிமாநாட்டில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும் என்பது உறுதி. இனி எந்த நிதியும் தருவதற்கில்லை என்று ஜேர்மனிய அரசாங்கம் மறுத்துள்ளது. இது கிரேக்கம் செலுத்துமதியின்மையை அடையும் என்ற அச்சுறுத்தலைக் கொடுப்பதுடன் மற்றும் நிகழ்ச்சிநிரலில் ஒரு முழு அளவு நிதிய முறிவு மீண்டும் வந்துவிடும்.

கூட்டத்திற்கு முன்னதாக ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள கிரேக்கமும் மற்ற அதிக கடன்பட்டுள்ள யூரோப்பகுதி உறுப்பு நாடுகளும் சிக்கன நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மற்ற பெரும் சக்திகளிடம் இருந்த வரும் குறைகூறல்களைத் திசைதிருப்பும் முயற்சியில், அவர் ஜி-20 முற்றிலும் யூரோப்பகுதி மீது மட்டும் குவிப்புக் காட்ட வேண்டும் என்பதில்லை என்றும் அதன் கவனத்தை அமெரிக்காவின் “நிதிய உச்சி” பற்றியும் செலுத்த வேண்டும், அதாவது ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பின் ஆரம்பிக்கப்பட இருக்கும் பாரிய செலவு வெட்டுக்கள் குறித்தும் மற்றும் ஜப்பானின் பெருகும் கடன் பிரச்சினைகள் குறித்தும் இருக்க வேண்டும் என்றார். ”ஐரோப்பியர்களான நம்மைப் போலவே, அமெரிக்காவும் ஜப்பானும் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தப் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன” என்றார் அவர்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்னும் முக்கூட்டின் சிக்கனத் திட்டம் 1930களின் பெருமந்தநிலைக்குப் பின் காணப்படாத அளவிற்குப் பொருளாதாரப் பேரழிவை தோற்றுவித்துள்ளது என்று உறுதிபடத் தெரிவிக்கின்றன.

2007ல் அதன் உச்சக் கட்டத்தில் இருந்து கிரேக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 21.5% சரிந்துவிட்டது. இது அடுத்த ஆண்டு மேலும் 4.5% சரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய மொத்த சுருக்கத்தின் அதிகரிப்பினால் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் வரும் மொத்த அரசாங்க வருமானம் சர்வதேசக் கடன்களுக்கு வட்டியை கூடக் கொடுக்க முடியாத அளவிற்குப் போய்விடும் என்பதைக் காட்டுகிறது. இன்னும் ஏதேனும் “உதவி” வருமானால் அல்லது கடன் விதிகள் தளர்த்தப்படுமானால், அவை சர்வதேச கடன்கொடுத்தபவர்களுக்கு பணப் பாய்ச்சல் தொடரும் வகையில் இருக்குமே அன்றி, கிரேக்கத்தின் பொருளாதார நிலைமையைச் சீர்ப்படுத்தாது.

கிரேக்கத்தின் பேரழிவு, யூரோப்பகுதி முழுவதும் பரவியுள்ள ஒரு நெருக்கடியின் தீவிரமான வெளிப்பாடுதான்.

கடந்த வாரம் இத்தாலிய மத்திய வங்கியின் ஆளுனர் இக்நேசியோ விஸ்கோ அவருடைய நாடு ஒரு வலுவற்ற வளர்ச்சி, நம்பிக்கையின்மை என்ற ஒரு “நச்சு வட்டத்தை” எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார். புதிய புள்ளி விவரங்கள் வேலையின்மை 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த கட்டத்தை அடைத்துள்ளதைக் காட்டியபின் அவர் இவ்வாறு கூறினார். ஆலைகள் மூடப்பட்டு, நிறுவனங்கள் திவாலாகி, அரசாங்கத்தின் செலவுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மொன்டி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாகக் குறைந்திருக்கையில், இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் இப்பொழுது 35% என்று உள்ளது.

கடந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் இத்தாலியப் பொருளாதாரம் மந்த நிலைக்கு நகர்ந்தது. இந்த ஆண்டு பொருளாதாரம் 2.4% சுருக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013ல் மற்றும் ஒரு 0.2% சரிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரமும் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் அதிகரிக்கலாம்.

ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றன. கிரேக்கம் செல்லும் பாதையிலேயே இவையும் செல்கின்றன. ஐரோப்பிய பிணையெடுப்பு நிதிகள் கடந்த காலக் கடன்களை தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட முடியாது புதிய கடன்களை ஒட்டித்தான் செலவழிக்கப்பட வேண்டும் என்று ஜேர்மனி வலியுறுத்தும் ஒரு தீர்மானம் வருவிருக்கும் நிலையில், ஸ்பெயினின் வங்கி நெருக்கடி உள்ளது. இதன் பொருள் கடந்த ஜூன் மாதம் யூரோப்பகுதி மந்திரிகள், தேசிய அரசாங்கங்கள் அவற்றின் வங்கிகளுடைய கடன்களை தீர்க்கும் பொறுப்பை உடையவை என்று கூறிய உறுதிமொழிகள் வெற்றுச் சொற்கள் என்றே இது அர்த்தப்படும்.

ப்ளூம்பேர்க் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், கொலம்பியா பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுனர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் ஐரோப்பிய “மீட்பு” என்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார். “ஐரோப்பா சிக்கனப் பொதிகளை செயல்படுத்துகிறது; இவை தவிர்க்க முடியாமல் பொருளாதாரங்களை நலிவுறச் செய்யும். பொருளாதார வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் வகையில் அவை எதையும் செய்யவில்லை. ஐரோப்பாவின் உண்மையான வளர்ச்சிக்கு எது உந்துதல் என்பதை நிர்ணயிப்பது மிகவும் கடினம்” என்றார் அவர்.

நிதியச் செய்தி ஊடகத்தில் வரும் விமர்சனங்களும் ஒரு புறம் சிக்கன நடவடிக்கைகள் மறுபுறம் மந்திய வங்கிகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை உலக நிதியமுறைக்குள் செலுத்தும் கொள்ளைகள் குறித்து வேறுபாடுகள் உள்ளன என்ற கட்டுக்கதையை ஊக்குவிக்கும் முறையில் தொடர்கின்றன. நிதியச் செய்தியாளர் ஆஸ்திரேலியாவின் Business Spectator ஐச் சேர்ந்த Stephen Koukoulas உடைய கருத்துக்கள் மாதிரிபோல் அமைந்துள்ளன. “ஐரோப்பிய மத்திய வங்கி பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும்போது, அரசாங்கங்கள் ஊதியங்கள், பணிகள் ஆகியவற்றைக் குறைத்து வரிகளையும் அதிகரிக்கின்றன”

உண்மையில் எத்தகைய முரண்பாடும் இல்லை. ஐரோப்பிய மத்திய வங்கி அதன் நிதிய ஊக்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையைத்தான் விதித்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பிற மத்திய வங்கிகள் வழங்கும் மிக குறைந்த வட்டியிலான கடன்கள் உண்மைப் பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல. அவை வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களும் ஊக வணிகத்தில் இலாபம் பெறும் வகையில் கொடுக்கப்படுகின்றன; அதே நேரத்தில் உண்மைப் பொருளாதாரம் தொடர்ந்து சரிகிறது. மேலும் இந்த நடவடிக்கைகள் ஒரு புதிய நெருக்கடிக்கான சூழலைத் தோற்றுவிக்கின்றன. ஏனெனில் மத்திய வங்கிகள் உலக நிதியச் சந்தைகளை இன்னும் அதிகமாக நம்பியிருக்கும் நிலை ஏற்படும்.

யூரோ நெருக்கடியானது தவறான நிலைப்பாட்டைக் கொண்ட ஜேர்மன் பிடிவாதத்தின் விளைவு மற்றும் பேர்லினில் மனமாற்றம் இருந்தால்தான் தீர்க்கப்பட முடியும் என்னும் கூற்று பரந்த கட்டுக்கதையாக நிலவுகிறது. கடன்பட்டுள்ள ஐரோப்பியப் பொருளாதாரங்களின் தேவைகளுக்கு ஜேர்மனி இன்னும் அதிகமான பொறுப்பை எடுக்கவேண்டியுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் ஷொய்பிள மற்றும் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உடைய திட்டம் ஜேர்மனிய வங்கி முறையும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது என்னும் அச்சத்தினால் உந்துதல் பெற்றுள்ளது என்னும் உண்மையை மூடிமுறைக்கத்தான் முற்படுகின்றன.

இந்த ஆபத்துக்கள் கடந்த மாதம் கடன் தர நிர்ணய நிறுவனம் மூடியினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஜேர்மனிய வங்கிகள் குறித்த அதன் “எதிர்மறைப் பார்வையை” அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது முதலில் 2008ல் வெளிப்பட்டது. மேலும் அவை உலக அதிர்ச்சிகளின் பாதிப்பிற்கு உட்பட்டவை என்றும் எச்சரித்தது. ஏனெனில் ஐரோப்பாவில் அதிக இலாபம் இல்லாதவற்றுள் அவை உள்ளன, பெரும்பாலும் நலிந்த மூலதனத்தைத்தான் கொண்டுள்ளன. ஜேர்மனிய வங்கி முறை பணப்பாய்வில் இருந்து ஆதாயம் அடைந்திருப்பதற்கு காரணம் பெரும்பாலான கடன்பட்டுள்ள நாடுகளில் நெருக்கடி இருப்பதால்தான். அவை சர்வதேசச் சந்தைகளில் இருந்து கடன் பெறுவதை நம்பியுள்ளன. மூலதனத்தரங்கள் முன்னேறியுள்ளன என்று குறிப்பிட்ட Moody’s நிறுவனம் யூரோப்பகுதிக் கடன் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள வெளி அதிர்ச்சிகளால் விளையும் பெருகிய இடர் இந்த ஆதாயத்தை “ஈடுகட்டும் வகையில் குறைத்துவிட்டது” என்று குறிப்பிடுகிறது.

இப்பொருளாதார உண்மைகள் ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளன. யூரோப்பகுதி நெருக்கடி, அரசாங்கங்கள் மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளால் அதிகரித்துள்ளது என்றாலும், அதன் மூலங்கள் பிழையான “கொள்கைகளில்” அல்ல, மாறாக அவை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவில்தான் அதன் வேர்களைக் கொண்டுள்ளன.

இந்த நெருக்கடிக்கு ஆளும் உயரடுக்குகளிடையே தீர்வு ஏதும் இல்லை. ஆனால் தொழிலாள வர்க்கத்தை 1930களில் நிலைமை, அதற்கும் மோசமான தன்மைக்கு திருப்பும் வகையில் உறுதியான செயற்பட்டியலை அவை கையாள்கின்றன. இதைத்தவிர பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றிற்கான தயாரிப்புக்களையும் கொண்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன் கிட்டத்தட்ட அதிகம் அறியப்படாத நிலையில் இருந்த கிரேக்க பாசிச இயக்கமான கோல்டன் டான், இப்பொழுது கருத்துக் கணிப்புக்களில் 15% ஆதரவைக் கொண்டிருப்பதாக விரைவில் வளர்ந்திருப்பது இந்த ஆபத்துக்களைப்பற்றி சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய இயக்கங்கள் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் உள்ளன.

நிதி மூலதனத்தின் சர்வாதிகாரமான ஐரோப்பிய ஒன்றியத்தை அகற்றுவதற்கு தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்திற்காகப் போராடவில்லை என்றால் இவை தொடர்ந்து உறுதியடைவதுடன் வளர்ச்சியுமடையும். இத்துடன் வங்கிகள், நிதி மூலதனத்தின் சொத்துக்களை பறித்தெடுத்துக் கொள்ளும் தொழிலாளர் அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். அவை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் நிறுவப்படவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் வேண்டும்.