World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Former leading member of Tamil nationalist LTTE assassinated in Paris

தமிழ் தேசியவாத விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முன்னணி உறுப்பினர் பாரிஸில் படுகொலை செய்யப்பட்டார்

By K. Nesan
22 November 2012
Back to screen version

நவம்பர் 8 அன்று இரவு, பாரிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) தலைவரான நடராஜா மதீந்திரன் பாரிஸில் TCC அலுவலகம் அருகே முகம் மறைத்துக் கொண்டு வந்த இரண்டு மனிதர்களால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மனைவியும் குழந்தையும் அலுவலகத்தில் தான் இருந்தனர். இரண்டு பேரைக் கைது செய்திருக்கின்ற போலிஸ், அவர்களுக்கு இக்குற்றத்தில் உள்ள் தொடர்பு குறித்து விசாரணையில் தான் தெரியவரும் என்று கூறியிருக்கிறது.

இலங்கை அகதிகளுக்கு உதவுகின்ற நோக்கமுடையதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒரு முன்னணி அமைப்பாகவும் 1980களின் ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்ட TCC, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே இயங்கி வருகின்ற புலிகளுக்கு ஆதரவான பல்வேறு போட்டிக் குழுக்களில் ஒன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினரும் இராணுவத் தலைவருமான மதீந்திரன் 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவர் அரசியல் நடவடிக்கைகளுக்கும் நிதி திரட்டலுக்கும் தலைமை வகித்தார்.

பிரான்சின் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக அவருக்கு விரிந்த தொடர்புகள் இருந்தன. சோசலிஸ்ட் கட்சி, கோலிச கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளின் தலைவர்கள் TCC பேரணிகளில் வழமையாக உரையாற்றினர். தமிழ் மக்களிடையே TCC இன் பணி என்பது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரெஞ்சு அரசாங்கம் தலையிட்டு ஒரு முதலாளித்துவ தமிழ் அரசினை ஸ்தாபிப்பதற்கு உதவி செய்யும் என்பதான நப்பாசைகளைப் பரப்புவதை சுற்றியே அமைந்திருந்தது.

அவரது பிணையில் விடப்பட்ட (probation) நிலைமைகளிலான மாற்றம் அவர் மீதான கொலை முயற்சிகளை மேலும் கடினமாக்கும் என்ற நிலையில் தான், அந்த மாற்றத்திற்கு சற்று முன்னதாக மதீந்திரனின் கொலை நடத்தப்பட்டிருக்கிறது.

2006 இல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதியான மகிந்த இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரானதொரு போரை அறிவித்ததற்குப் பின், ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. 2007 இல் பிரான்சின் பயங்கரவாதத்தடுப்பு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் மீது தொடர்ச்சியான சோதனைகளை நடத்தி, மதீந்திரன் மற்றும் 30க்கும் அதிகமானோரைக் கைது செய்தது. மதீந்திரன் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 2009 இல் ஏழாண்டு சிறைத் தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆயினும் மேல்முறையீடு செய்த அவர் 2010 இல் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டார். அரசியல் நடவடிக்கையில் பங்குபெறுவதற்கான தடையும் இதில் அடங்கும்.

Tamil Net கூறுகிறது, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பிரெஞ்சு சட்ட நடைமுறைகள் அவருக்கு 10 மாத கால பிணையில் செல்வதற்கான ஒப்புதலை வழங்கின. இதன்படி அவர் மின்னணு முறையிலான கண்காணிப்பு உட்பட வரம்புக்குள் இயங்க அனுமதிக்கின்ற நெருங்கிய கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டிருப்பார். இந்த பிணைக்காலம் வெள்ளியன்று ஆரம்பமாகவிருந்தது, அவ்வாறு அது ஆரம்பமாகிருந்தால், அவரைப் படுகொலை செய்வதென்பது எவரொருவருக்கும் சிரமமான காரியமாகி விட்டிருக்கும்.

மதீந்திரன் படுகொலை குறித்து TCC இன்னும் அறிக்கை எதனையும் வெளிவிடவில்லை. இலங்கை இராணுவத்தின் உளவுத்துறை இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தமிழ் தேசியவாத போட்டிக் குழுக்களின் வலைத் தளங்கள் கூறுகின்றன. உள்நாட்டு யுத்தக் காலம் முழுவதிலுமே, இராணுவத்தின் உளவுத் துறை ஆயுதமேந்திய குழுக்களுக்குள் ஊடுருவி அவற்றின் உள்மோதல்களை சூழ்ச்சியாகக் கையாண்டு மரணகரமான மோதல்களுக்கு வழிவகுத்தது. இதுபோன்ற உள்மோதலே 2004 இல், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிரிவு உடைவதற்கு இட்டுச் சென்று, நூற்றுக்கணக்கான போராளிகளின் மரணத்திற்கும் வழிவகுத்து.

2009 மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் வடக்கு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத்தை நசுக்கியதை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் போட்டிக் குழுக்களாக சிதறி வன்முறையான மோதல்களுக்குள் கொண்டுசென்றுள்ளது.

இப்படுகொலையில் இந்த போட்டி தமிழ் தேசியவாதக் கன்னைகளும் கூட சம்பந்தப்பட்டிருக்கக் கூடும். 2011 அக்டோபரில் சாமுராய் வாளேந்திய முகமூடியணிந்த மனிதர்களின் இன்னொரு தாக்குதலில் மதீந்திரன் காயமடைந்தார். தாக்குதல் நடத்தியவர்களுடன் கூட வந்தவர்களில் இருவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று அவர் அடையாளம் காட்டினார்.

இந்த அனைத்துக் கன்னைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படையான நிலைநோக்குடன் உடன்பட்டவையே: அதாவது இலங்கையிலான தமிழ் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை, போரில் தலையீடு செய்வதற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் செய்கின்ற கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்வது, அதேநேரம் தமிழ் தொழிலாளர்களை சிங்கள தொழிலாள வர்க்கத்திடம் இருந்து துண்டிப்பது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுவதிலும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மீதான அரசியல் கட்டுப்பாட்டை கொண்டிருப்பதிலும் தான் இக்கன்னைகளுக்கு இடையே பிரதானமாக வித்தியாசமே இருப்பதாகத் தோன்றுகிறது.

2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நசுக்கப்பட்டதற்குப் பின் இலங்கை அரசாங்கம் பல்வேறு தமிழ் தேசியவாத கன்னைகளிடையே கணிசமான செல்வாக்கையும் அபிவிருத்தி செய்திருக்கிறது. இலங்கையில் புதிதாய் மீண்டும் வெற்றிகண்டுள்ள தமிழர்-பெரும்பான்மை பகுதிகளில் முன்னணி நிர்வாக அதிகாரம் படைத்தவர்களாகும் வாய்ப்புடையவர்களாக செல்வராசா பத்மநாதன் போன்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அது வளர்த்தெடுத்து வருகிறது. (பார்க்கவும்: உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இயங்குகின்றனர்)

முக்கியமாக, மதீந்திரன் படுகொலைக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ் தேசியவாத கன்னைகளின் சர்வதேச செயலகத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்திருந்தன.

TCC, சர்வதேச செயலகக் கன்னையுடன் இணைந்ததாகும். இந்தக் கன்னையின் தற்போதைய தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன் அதன் தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் மேற்கத்திய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஸ்தாபகக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தியவர்கள் என்பதோடு இப்போதும் அதன் சொத்துகளைப் பெருமளவில் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவர்கள்.

இரண்டாவது தலைமைச் செயலகக் கன்னை, தோல்விக்குப் பிந்தைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் தொடர்ச்சியாக தன்னை கூறிக் கொள்கிறது. தலைமைச் செயலகம் என்ற பதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரான வே.பிரபாகரன் அரசியல் அறிக்கைகளில் கையெழுத்திடுகையில் பொதுவாகப் பயன்படுத்தி வந்தார். இந்தக் கன்னையின் பல தலைவர்களும் இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் தப்பித்து ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். பிரான்ஸ் தமிழர் நடுவம் (Centre des Tamoules France) இந்தக் கன்னையுடன் இணைந்ததாகும்.

பிரான்ஸ் தமிழர் நடுவத்தினால் நடத்தப்படுகின்ற தமிழ் வலைத் தளம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாவீரர் தின அனுஸ்டிப்புக்காய் ஒரு ஒன்றுபட்ட நிகழ்வை நடத்துவதற்காக TCC உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டதும், ஒரு தனியான மாவீரர் தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முடிவு மேற்கொள்ளப்பட்டதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாவீரர் தினம் என்பது உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் போராளிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வாகும். கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தினத்தையே பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தனர். 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள், அவர்களுக்கு LTTE இன் அரசியலோடு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். ஒரு முக்கியமான அரசியல் சொத்தாக இரண்டு கன்னைகளாலுமே கருதப்படுகின்ற இந்த நிகழ்வுக்கு மாறி மாறி இருதரப்பும் உரிமை கொண்டாடுவது, கடும் மோதலை தூண்டிவிடுகிறது.

நவம்பர் 4 அன்று பிரான்ஸ் தமிழர் நடுவம் தெரிவித்தது: மாவீரர் தின அனுஸ்டிப்புகளை இணைந்து ஒரே இடத்தில் ஏற்பாடு செய்வதற்கு உடன்பாட்டை எட்டுவதற்கு TCC மற்றும் தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இன்று பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகள் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆனால் TCC இல் இருந்து முடிவெடுக்கத் தகுதியான எந்தப் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்குபெறவில்லை. எனவே ஒரு ஒன்றுபட்ட மாவீரர் தினத்தை நடத்துவதற்கான ஒன்றிணைந்த முயற்சி வருத்தமான வகையிலும் துரதிர்ஷ்டமான வகையிலும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

சென்ற ஆண்டில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் கன்னைகளிடையே சண்டை வெடித்தது. கடுமையான மோதல்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் போலிஸ் தலையீடுகளுக்கு பின்னர், இரண்டு கன்னைகளும் தனித்தனியான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்ச்சிகள் குணாம்சத்தில் ஒன்றாகவே இருந்தன. இந்தப் பேரணிகளில் உரையாற்றுவதற்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து திராவிட அரசியல்வாதிகளும் மற்றும் உள்ளூர் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அழைக்கப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் மீதான ஒரு விசாரணையை முன்னெடுப்பதற்கும் ஒரு தனித் தமிழ் அரசை ஆதரிப்பதற்குமாய் சர்வதேச சமூகத்திற்கு விண்ணப்பம் செய்கின்ற இரண்டு தனித்தனியான ஆனால் ஒரேமாதிரியான அறிக்கைகளே வெளியாயின.