World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Flight: A pilot saves the day, but not himself

Flight: ஒரு விமானி விபத்திலிருந்து காப்பாற்றுகிறார், ஆனால் தன்னை அல்ல

By David Walsh
10 November 2012
Back to screen version

ஜான் காடின்ஸால் திரைக்கதை எழுதப்பட்டு, ராபர்ட் செமகிஸால் இயக்கப்பட்டது

ராபர்ட் செமகிஸால் இயக்கப்பட்ட Flight திரைப்படத்தில், தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனை பிரச்சினைகளுடன் கூடிய மிகத் திறமை வாய்ந்த வர்த்தக விமான நிறுவனத்தின் விமானியாக டென்சில் வாஷிங்டன் (Denzel Washington) வைப் விடேகராக (Whip Whitaker) நடித்துள்ளார்.

ஒரு விமான உதவியாளரான கத்ரினாவுடன் (Nadine Velazquez) ஓர் இரவு மதுபானம் மற்றும் காலை கோக்கெய்ன் உட்கொண்ட பின்னர், விதிவசமான ஒரு நாளில், விடேகர் ஃப்ளோரிடாவிலுள்ள ஓர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு ஒரு விமானத்தை செலுத்த திட்டமிடுகிறார்.

மோசமான காலநிலையின் மத்தியில் விமானம் புறப்படுகிறது மேலும் கொந்தளிப்பின் மத்தியில் ஒரு இடைவேளையை எடுப்பதற்காக விடேகர் விமானத்தை அதனுடைய அதிகபட்ச வேகத்துடன் செலுத்த வேண்டியிருக்கிறது. அவரது சக விமான ஓட்டியான கென் இவான்ஸ் ((Brian Geraghty)) கட்டுப்பாட்டினை எடுத்துக் கொள்ளும்பொழுது, இவர் குட்டித் தூக்கத்தைத் தொடர்கிறார்.

எப்படியோ சில நிமிடங்கள் கழித்து, அந்த விமானம் கட்டுப்படுத்த முடியாத வகையில் கீழ்நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. அசாதாரணமான செயல்நுட்பம் மற்றும் சுய-கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி விடேகர், குறைந்தபட்ச உயிர் இழப்புகளுடன் மோசமாக பாதிக்கப்பட்ட அந்த விமானத்தை ஒரு இடத்தில் தரையிறக்குகிறார்.

ஊடகங்களால் ஒரு நாயகனாக அறிவிக்கப்பட்ட விடேகர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர், ஒரு முக்கிய சிக்கலை சந்திக்கிறார். விபத்து இடத்தில், அவரிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் உயர்ந்த அளவு மதுபானம் மற்றும் கோகெய்ன் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. விப்பின் நண்பனும் விமான ஓட்டிகள் சங்கப் பிரதிநிதியுமான சார்லி ஆண்டர்சனால் (Bruce Greenwood) கொண்டு வரப்பட்ட ஒரு சாமர்த்தியமான வக்கீலான ஹக் லேங் (Don Cheadle) பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் கவனிக்கப்படாது விடப்பட்ட நஞ்சியல் (toxicology) அறிக்கைகளைப் பெற்றுக்கொள்கின்றார்.

தேசிய போக்குவரத்து பாகாப்பு சபையின் (National Transportation Safety Board -NTSB) விசாரணைக்கு விடேகர் நிதானமாகவும் தெளிவாகவும் வருகிறார் என்பதை உறுதி செய்து கொள்வது ஆண்டர்சனுக்கும் லேங்குக்கும் இப்போது முதன்மையான சவாலாக இருக்கிறது. அந்த திட்டமும் குலைந்துபோகின்றது என்பதை பற்றி கூறத்தேவையில்லை.

இந்த சம்பவங்கள் நடக்கும் வேளையில், விடேகர் அந்நாட்டிலுள்ள தனது தாத்தாவின் பண்ணையில் இருந்து, பரபரப்பான மற்றும் தேவையற்ற ஊடகங்களின் கவனத்திலிருந்து தன்னை கிட்டத்தட்ட மறைத்துக்கொள்கிறார். ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்மணியான நிகோலுடன் (Kelly Reilly) இவர் ஓர் உறவினை அமைத்துக் கொள்கிறார்.

செமகிஸின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒருவர் எதிர்பார்ப்பதற்கு உள்ள காரணங்களைவிட இதில் அதிக சுவாரஸ்யமான மற்றும் “முதிர்ச்சியான”   விஷயங்கள் இருக்கின்றன. இத்திரைப்பட இயக்குனர் கடந்த பல பத்தாண்டுகளில், Forrest Gump (1994), அதிகம் மறக்கக்கூடிய Romancing the Stone (1984), Back to the Future (1985), Who Framed Roger Rabbit (1988), Contact (1997) மற்றும் Cast Away (2000) போன்ற பெருமளவு தீவிர இணக்கவாத திரைப்படங்களுக்கு பொறுப்புள்ளவராக இருக்கிறார்.

Flight இல் விமானம் கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாவது போன்ற காட்சிகள் திறம்படவும் அச்சுறுத்தும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதன்போது வாஷிங்டன் தன் பிரச்சினைகளைப் பற்றி தன்னிடமே பொய் சொல்லிக் கொள்கிற ஒரு மனிதராகவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்வதிலும் சிறப்பாக நடித்துள்ளார். உண்மையில், கிரீன்வுட், சீடில், ரீலி, ஜெராதி, வைப்பின் போதை மருந்து தொடர்புள்ளவராக ஜான் குட்மேன், NTSB புலனாய்வாளராக மிலிசா லியோ, துரதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு விமானத்தில் விமான உதவியாளராக தமாரா துனீ போன்ற மற்றும் பிற திறமையான நடிகர்களை செமக்கிஸ் இதில் ஒன்றிணைத்திருக்கிறார். 

தான் சித்தரிக்கின்ற சில சிக்கல்களை தனிப்பட்ட முறையில் அனுபவித்திருப்பதாகத் தெரிகின்ற ஜான் கடின்ஸின் இக்கதை, உறவுகளை மிகவும் ஆழமாக ஆராய்வதில்லை என்றாலும் பல்வேறு உறவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் சிறப்பைக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில், இது கார்ட்டூன் கதாபாத்திரங்களை பற்றியல்லாது மனிதர்களைப் பற்றிய ஒரு திரைப்படமாக உணர வைக்கிறது. மேலும் துயரகரமாக, அது தற்போது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.

இத்திரைப்படத்தில் அதிக தெளிவற்ற காட்சிகள் இருக்கின்றன என்பது கூறப்படவேண்டுமென்றாலும், உண்மையில் அவை அளவுக்கு அதிகமாக இல்லை. கடவுள் மற்றும் விதி குறித்த எண்ணற்ற குறிப்புகள், பொருட்கள் அல்லது தனி நபர்கள் துரதிர்ஷ்டவசமாக தோன்றுகிற பல சந்தர்ப்பங்கள் போன்ற (கிட்டத்தட்ட போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட்ட நிகோல் ஒரு பெட்டியை விடுவதும் ஒரு மருந்துசெலுத்தப்படும் ஊசி வெளியில் சுழல்வதும், நிதானத்திலிருக்கும் வைப் முழுதும் மதுபானம் நிரப்பப்பட்ட ஒரு சிறு-மதுபானக் கடைக்கு இட்டுச் செல்கிற, ஒரு விடுதியின் அறையின் திறந்திருக்கும் கதவைக் கண்டுபிடிப்பதும், மற்றும் பல) பாவத்தின் தவிர்க்கமுடியாத தன்மை மற்றும் அதற்கு பரிகாரம் தேடுவது என்பவற்றை ஒருவரை நம்பவைப்பதற்கு போதுமானவை இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

இது சுவாரஸ்யமில்லாமல் இருப்பதுடன், மேலும் இங்கு வெளியிடப்படும் இன்னொரு சுவாரஸ்யமற்ற விஷயமான, தனிப்பட்டமுறையில் பொறுப்பான தேர்வுகளை எடுக்க வேண்டிய தனிநபர்களுக்கான தேவையுடன் முரண்படுவதுபோல் காணப்படுகின்றது. சுதந்திரமான விருப்பங்களை நியதிவாதத்திற்கு (determinism-மனிதச்செயல்கள் புறநிலையால் தூண்டப்படுகின்றன என்ற கருத்து) எதிராக முன்வைக்கும் (Cloud Atlas-ஐப் பார்க்கவும்) ஒரு பொதுவான கவனத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சிக்கிற திரைப்படங்கள் அதிக அளவு நம் மீது சுமத்தப்படுகின்றது என்றால், நாம் உண்மையில் பல காலமாக இருண்ட காலத்தில் இருக்கிறோம்.

Flight இல் பெரும் பிரச்சினையாக இருப்பது ஒப்பீட்டளவில் அதனுடைய குழப்பமான மற்றும் உட்பொருளற்ற கதாப்பாத்திரங்களே. மிதமிஞ்சிய மதுப்பழக்கம் மற்றும் மதுவருந்துபவர்கள் பற்றி ஆராயப்படுவது ஒரு நியாயமான விடயம்தான். ஆனால் சுய-மறுப்பு மற்றும் வெறித்தனமான நடத்தைகளின் குறிப்பிட்ட நிலைகளை  அடையாளம் காணாதது மட்டுமல்லாது, செமகிஸ்-ஜாடின்ஸ் இந்த விஷயத்திற்கு கிட்டத்தட்ட சிறியளவு முக்கியத்துவமே கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தன்னை-அழித்துக் கொள்ளும் வகையில் வைப் ஏன் மது அருந்துகிறார் மற்றும் போதை மருந்தை உட்கொள்கிறார் என்பதற்கும் (உளவியல்ரீதியாக அல்லது சமூகவியல் சார்ந்த) ஒரு குறிப்பும் கொடுக்கப்படவில்லை. துயரகரமாக, நாம் நவீன திரைப்பட உருவாக்கத்தில் அதற்கு மிகவும் அப்பால் இருக்கிறோம். மேற்கோள்காட்டுவதில் காற்புள்ளிகளுக்குள் விளக்கவும் என்ற இன்னொரு வார்த்தை இந்நாட்களில் மட்டும் அடிக்கடி காணப்படும் ஒன்றல்ல. 

இங்கு எல்லா வலியுறுத்தல்களும் விடேகரின் குறைபாடுகளிலும் மேம்பட வேண்டிய அவசியத்திலும் இருக்கிறது, மேலும் சரியாக சிந்திப்பவர்களுக்கு மட்டுமே, தங்களுடைய விமான ஓட்டியோ அல்லது இதய அறுவை சிகிச்சை நிபுணரோ தெளிவான சிந்தனையுடையவராக இருக்கவேண்டும் என்பதில் ஐயுறவேதும் இல்லை.  

இன்றைய விமான ஓட்டிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பணியில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட அழுத்தங்கள் ஏதாவது இத்திரைப்படத்தில் இருக்கின்றனவா? இதுபோன்ற ஒரு சாத்தியக்கூறில் சிறிதளவு ஆர்வத்தைக்கூட Flight இல் பதிவு செய்யவில்லை. கடவுள், பூர்வவிதி மற்றும் ஒருவரின் தெளிந்த நிலையுடன் தொடர்பான ஜாடின்ஸுடைய கதை, 2002, 1992 அல்லது 1962இற்கு பொருத்தப்பட முடியும். 

கடந்த பத்தாண்டுகளுக்கு மேல், விமான நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளும் புறமும் தள்ளாடியது மற்றும் எரிபொருள் செலவினங்கள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளில் போராடியது போல், ஆயிரக்கணக்கான (விமான) பணியாளர்கள் தங்கள் வேலையை இழந்தனர், அல்லது கூலிகளில், சுகாதார காப்புறுதி மற்றும் ஓய்வூதியங்களில் அதிக வெட்டுக்களை அனுபவித்தனர் என்று அக்டோபர் 2010-ல் ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டது. இது விமான ஓட்டிகளின் மனநிலை அல்லது மனச்சூழலில் எதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? இதுபோன்ற ஒரு தனிநபரின் ஒழுக்க மற்றும் உணர்வுரீதியான நெருக்கடிகளைக் கையாளும்போது, இத்தகைய சூழ்நிலைமைகள் பற்றி ஒரு திரைப்பட இயக்குனர் கவனத்தில் எடுத்துக் கொள்ள விரும்புகின்றாரா?

ஒரு விடயங்கள் அவ்வாறே இருப்பது போன்ற ஒரு சமுதாய துல்லியத்தன்மை சம்பந்தப்பட்ட விஷயமல்ல இது. ஜாடின்ஸ் மற்றும் செமகிஸ்க்கு தாங்கள் தேர்ந்தெடுக்கிற அனைத்து உறுதித்தன்மையையும் புறக்கணிப்பதற்கான உரிமை இருக்கிறது... ஆனால் பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது.  

ஒரு திரைப்படமோ அல்லது வேறு எந்த கலைப்படைப்போ, அதனுடைய நோக்கத்தில் எந்த அளவு பரந்து விரிந்ததாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும், விஷேடமாக இங்கே இப்போதே  குறிப்பிட்டு எந்தளவிற்கு மிக ஆழமாக எடுத்துக்காட்டுவதன் மூலமே    பொதுமக்களுக்கு அதனுடைய இயக்கங்களையும் அர்த்தங்களையும் நிரூபிக்கமுடியும். வாழ்வுடனான இந்த தொடர்பு, அது அவசியமாக இருப்பது போன்று பார்வையாளனுக்கு அப்படைப்பின் செழுமையையும் சாரத்தினையும்  கொடுக்கிறது. இது பார்வையாளர்களை படைப்பை நோக்கி முன்வர அழுத்துகிறது.

மாறாக, Flight இல் ஒருவர் தன்னை ஏமாற்றிக்கொள்வது பற்றிய அபாயம் மற்றும் பலவித பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதற்கு எதிரான போராடுவது பற்றிய ஒருவரின் திறம் போன்றவற்றின் (உன்னதமான) தொடர்ச்சியை நாம் பலமுறை பார்க்கிறோம். மேலும், அதன் விளைவாக, இத்திரைப்படத்தின் நடுவில் எங்கோ, அவை எல்லாம் சிறிது சலிப்பூட்டுவதாகிறது.

மீண்டும், இத்திரைப்படத்தின் கதையிலும் விமானியின் “தனிப்பட்ட பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இப்படத்தின் கதைப்படியே, உண்மையில் விமானம் அல்லது விமானத்தின் பின்பகுதியின் பழுதை சரிசெய்ய மறுத்த உற்பத்தியாளர் பற்றி, அல்லது அந்த விபத்திற்கு பொறுப்பானவர்களைப் பற்றி எமக்கு ஒரு வார்த்தைகூட சொல்லப்படவில்லை. ஆறு பேரின் இறப்புக்காக எந்த நிறுவனத்தின் செயலதிகாரியாவது சிறைக்கு செல்வாரா? நமக்கு பதில் தெரியும். இதை திரைப்பட இயக்குனர்களும் வெளிப்படையாக அறிவார்கள், ஏனெனில் இந்தக் கேள்வி எழுப்பப்படவே இல்லை. அவர்கள் அதற்கும் அக்கறையற்றவர்களாக இருக்கும் வரை மட்டும்.

சூழ்நிலையின் பெரிய மற்றும் சமுதாய விடயங்கள் மற்றும் விமானத்துறையின் தற்கால உண்மை நிலைமைகளில் அவர்களின் ஆர்வமின்மை காரணமாக, ஜாடின்ஸோ அல்லது செமகிஸோ, அல்லது ஹாலிவுட்டில் மிகப்பலர், இந்த  விஷயங்களில் அநேகமாக மிகவும் சிக்கலான, பிரச்சினைக்குரிய பார்வைகளுடன் வருவார்கள்.

உயிரிழப்பினை ஏற்படுத்துகின்ற ஒரு விபத்து நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதற்கு உடனடியாக விமான ஓட்டி பொறுப்புள்ளவராக இருக்கிறார். அவர் ஒரு ஊடகங்களின் நாயகன் இல்லை; முரணாக, அவர் பூதாகாரமாக்கப்படுகிறார். மிக ஆழ்ந்த நோக்கில், இந்த துயரத்திற்கு அதிக வேலை, அழுத்தம் மற்றும் அவர்கள் உருவாக்கியுள்ள ஒழுக்கக்கேடுகள் மூலமாக விமான நிறுவனங்களும் மற்றும் செயலதிகாரிகளுமே பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என சட்ட நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் கருத்தின் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட வேண்டும்.

இதேவேளை, Flight அவ்வப்போதான அதன் பிரகாசமான காட்சிகளுடன்  ஆனால், மொத்தத்தில் சலிப்பூட்டுவதாக இருக்கிறது.