World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The way forward in Egypt

எகிப்திற்கு ஒரு முன்நோக்கிய பாதை

Johannes Stern
26 November 2012
Back to screen version

அனைத்து சட்டமியற்றும், அரசியலமைப்பு, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பெறும் எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சியின் அரசியலமைப்பு சட்டம் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் முன்னோக்கு குறித்துச் சில அடிப்படை வினாக்களை எழுப்புகிறது.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) தலைவர் கடந்த வாரம் தான் புரட்சியை பாதுகாக்கவும், தேசிய ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை தக்க வைத்துப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அசாதாரண அதிகாரங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். புரட்சியை பாதுகாப்பதற்கு என்பது பற்றிய குறிப்புக்கள் மோசடித் தன்மையானவை. முர்சியின் நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு தொழிலாள வர்க்கம் ஆகும். எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டுடன், நீண்டகால விளைவுடைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அவர் வலியுறுத்துகிறார்.

முர்சியின் செயல்கள் எகிப்திய அரசாங்கத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது. பழைய அரசாங்க அமைப்பின்  பிரிவுகள் முஸ்லிம் சகோதரத்துவத்தின் செயல்களுக்கு எதிராக வெளிவந்துள்ளன. ஹொஸ்னி முபாரக்கை வெற்றிகரமாகக் கவிழ்ப்பதற்கு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் முன்பு போட்டியிட்டிருந்த முகம்மது எல்-பரடோய் முர்சியை புதிய ஃபாராவோ (pharaoh) என்று கண்டித்து ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து பரந்த மக்கள் விரோதப் போக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால், தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ நடைமுறையில் எந்தப்பிரிவும் இதற்கு ஒரு முன்னேற்றப்பாதையை முன்வைக்கவில்லை.

முர்சியின் செயல்கள், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முன்னோக்கை உறுதி செய்கின்றன: அதாவது ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரமடைவது உட்பட ஜனநாயகப் புரட்சியின் பணிகள் சோசலிஸ்ட் புரட்சியின் மூலம் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக திரட்டப்பட்டால் ஒழிய தீர்க்கப்பட முடியாதவை என்பதே அது.

முர்சியில் செயல்கள் கணிசமான மக்கள் எதிர்ப்புக்களை தூண்டியுள்ளன. தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் முபாரக்கிற்கு எதிராக ஜனவரி 2011ல் நடந்த ஆரம்ப புரட்சிகரப் போராட்டங்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றன. அதிலுள்ள மிகப் புகழ் பெற்ற கோஷங்களில் ஒன்று, வீழ்க, வீழ்க, முர்சி-முபாரக் வீழ்க என்பதாகும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக தேவைப்படுவது, இதுவரை நடந்துள்ள எகிப்தியப் புரட்சியின் அனுபவங்கள் குறித்த தெளிவான மதிப்பீடு ஆகும். கடந்த ஆண்டின் புரட்சிகர எழுச்சி முபாரக்கைப் பதவியில் இருந்து அகற்றுவதில் வெற்றி அடைந்தது. ஆனால் எகிப்திய மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் அது தீர்க்கவில்லை. இதற்குக் காரணம் ஒரு சுயாதீன முன்னோக்கும், தொழிலாள வர்க்கத்தின் தலைமையும் இல்லாமையாகும். இதனால் எகிப்திய முதலாளித்துவம் முர்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதில் தடையேதும் இல்லாமலிருந்ததுடன், அதன் அடிப்படைக் கொள்கைகளான தொழிலாளர்களை மோசமாக  சுரண்டுதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பு, ஒரு சர்வாதிகார ஆட்சி என்பவற்றைத் தொடர முடிந்தது.

எகிப்தின் முக்கிய ஏகாதிபத்திய ஆதரவைத் தரும் நாடான அமெரிக்காவின் பங்கு இதில் முக்கியமானதாகும். முர்சி சட்டத்தை வெளியிட்டுள்ள நேரம் தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த அறிவிப்பு இஸ்ரேலிய அரசு காசா மீது நடத்திய மிருகத்தனத் தாக்குதலுக்கு அவர் வகித்த பங்கிற்கு அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் நன்றி செலுத்தியுள்ள மறுநாள் வந்துள்ளது. காசா குடிமக்கள் மீது ராக்கெட்டுக்கள் பொழிந்தபோது, முர்சி தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பிக்கைக்கு உரிய கைக்கூலி என்று காட்டிக் கொள்ள முன்வந்தார். இதனால் காசா மீதான தடையை இறுக்கவும் மற்றும் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவுடன் தன் உறவுகளை ஆழப்படுத்திக் கொள்ளவும் உறுதிகொண்டார்.

ஆகக்குறைந்தது தற்போதைக்கேனும், ஒபாமா நிர்வாகம் முஸ்லிம் சகோதரத்துவத்தை மத்திய கிழக்கில் அதன் பொது மூலோபாயத்தின் ஒரு முக்கிய கூட்டாக காண்கிறது. இதில் சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடக்கும் ஏகாதிபத்திய ஆதரவைக்கொண்ட உள்நாட்டுப்போர் மற்றும் ஈரானுக்கு எதிரான போர்த்திட்டங்களும் அடங்கும்.

அதே நேரத்தில் நிதிய உயரடுக்கு முர்சியைத்தான் கடுமையான தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு நம்பியுள்ளது. கடந்த வியாழன் அன்று முர்சி $4.8 பில்லியன் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்றார். சர்வதேச நாணய நிதியம்தான் எகிப்தில் இருந்து மத்தியதரைக்கடலுக்கு அப்பாலுள்ள கிரேக்க தொழிலாள வர்க்கம் வரை மிருகத்தனமாக வறிய நிலையில் தள்ளியுள்ளது. சர்வதேச நாணய நிதியக் கடனைப் பெறுவதற்கு பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகள் எகிப்திய தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும். புதன் அன்று முர்சி முதல் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியநிதிகளை வெட்டுவதாக அறிவித்தார்.

ஒரு பெயரிடப்படாத கெய்ரோத் தளமுடைய மேற்கு அவதானி ஒருவரை மேற்கோளிட்டு பைனான்சியல் டைம்ஸ் அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடித்தளத்தில் இருக்கும் உணர்வுகளைக் கூறுகிறார் என்றது. எவரேனும் இந்த அரசியல் உட்பூசலைத் தாண்டி முடிவுகளை எடுக்க வேண்டும். அதாவது உலக வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்கள் கோரும் முடிவுகளை.

முர்சி சர்வாதிகார அதிகாரங்களை எடுத்துக் கொண்டுள்ளமை போலி இடது குழுக்களான எகிப்திய புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள், அவற்றின் சர்வதேச நட்பு அமைப்புக்களான அமெரிக்க  சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) மற்றும் பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றின் எதிர்ப்புரட்சிப் பங்கை அம்பலப்படுத்தியுள்ளது. இச்சக்திகள் முதலாளித்துவ அரசியல்வாதிகள் எகிப்தில் ஜனநாயகத்தைக் கட்டமைக்க முடியும் என்ற முன்னோக்கை முன்வைத்துள்ளனர். முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் பதவிக்கு வந்த இராணுவ ஆட்சிக் குழுவிற்கு  இன்னும் சீர்திருத்தங்களைச் செய்ய அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறியபின், புரட்சியின் பணிகளை அவர் செய்யத்தொடங்குவார் என்று அவருடைய தேர்தலுக்கும் ஆதரவு கொடுத்தன.

ஜூலை மாதம் சர்வதேச சோசலிச அமைப்பின் Socialist Worker.org  முக்கிய புரட்சிகர சோசலிஸ்ட் உறுப்பினர் சமேஷ் நகிப்பிடம் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது; அது முர்சியின் வெற்றி இந்த எதிர்ப் புரட்சியை பின்னுக்குத் தள்ளவும் இந்த ஆட்சி சதியை பின்னுக்குத் தள்ளும் வகையில் ஒரு பெரிய சாதனை என்று அறிவித்ததாகக் கூறுகிறது.

இக்குழுக்கள் வாஷிங்டன் வலதுசாரி இஸ்லாமியச் சக்திகளுடன் ஒத்துழைப்பதற்கும் அரசியல் மறைப்பைக் கொடுக்கின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மரபார்ந்த நட்பு நாடுகள் பதிலிப் போர்கள் நடத்தவும் லிபியாவிலும் சிரியாவிலும் அமெரிக்க சார்பு ஆட்சிகளை நிறுவ உதவுகின்றன. இது ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கான ஒரு சாத்தியப்பாட்டை மத்தியாக கொண்டு இப்பிராந்தியத்தில் இராணுவத்தீ ஏற்படுவதற்கு அரங்கு அமைத்துள்ளது.

உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக உரிமைகளுக்கான பாதை சோசலிச புரட்சிக்கான போராட்டத்திற்கு வெளியே இல்லை. தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக, அனைத்து முதலாளித்துவ சக்திகளில் இருந்து விடுபட்டு, முதலாளித்துவத்தை அகற்றிவிட்டு, அரச அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர்க்கமுடியாமல் இஸ்ரேல், அரபு உலகம் மற்றும் சர்வதேச அளவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அதன் பிராந்தியம் முழுவதும் குருதி கொட்டும் போர் உந்துதலுக்கு எதிரான ஒரு பொதுப்போரட்டத்துடன் பிணைந்துள்ளது.

எகிப்தில் நடக்கும் சமீபத்திய போராட்டங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்கை உறுதிப்படுத்துகின்றன. நாம் முபாரக் வீழ்ச்சி அடைந்த அன்று எழுதினோம்: தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மத்திய பணி அதிகாரத்திற்கான பரந்த அமைப்புகளை உருவாக்குவதாகும். அவை தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டு, முபாரக் ஆட்சியின் தப்பிப்பிழைத்துள்ள பிரிவுகளை அகற்றி அவற்றை ஒரு தொழிலாளர் அரசாங்கத்தால் பிரதியீடு செய்யப் போராட வேண்டும். இப்புரட்சியின் வெற்றி அது எகிப்திற்கு அப்பால் விரிவடைதல், மற்றும் எகிப்திய தொழிலாளர்களை அவர்களுடைய மத்திய கிழக்கு மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்திப் போராடுவதில்தான் உள்ளது.

ட்ரொட்ஸ்கிச முன்னோக்குகளுக்காக போராடும் கட்சிகளை கட்டமைப்பதற்கான போராட்டம்தான் எகிப்திலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாளர்களுக்கு ஆயுதபாணியாக்கி, முபாரக்கின் வீழ்ச்சியை கொண்டுவரும் வர்க்கப் போராட்டங்களை தீவிரமயமாக்கும்.

இந்த அறிக்கை வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடக்கப்பட்டுவிட்டபோது அத்தகைய போராட்டத்தின் சாத்தியம் மற்றும் தேவை ஆகியவற்றை நிரூபிக்கிறது. முபாரக் அகற்றப்பட்டது சர்வதேச அளவில் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் ஆசியா வரை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களுக்கு உந்துதல் கொடுத்தது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொதுப் போராட்டங்களின் அவசரத்தேவை காசா, சிரியா இவற்றின் போர் உந்துதலுக்கு எதிராகவும் மற்றும் இறுதியில் ஒபாமாவின் மறு தேர்தலுக்குப்பின் ஈரானுக்கு எதிராக விரைவடைவதிலும் இன்னும் தெளிவாகியுள்ளது.

ஆனால் இத்தகைய போராட்டங்கள் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டங்களாக நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முன்னோக்கினால் வழிகாட்டப்படும் கட்சிகளால் தலைமை தாங்கப்பட்டால்தான் வெற்றிபெற முடியும். சமூக சமத்துவத்திற்கும், முர்சி போன்றவர்களுக்கு எதிராக உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நடத்துவதற்கும், தொழிலாளர்கள் கடந்தகால போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பற்றி எடுத்துக் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை எகிப்திலும் சர்வதேச அளவிலும் கட்டமைக்க வேண்டும்.