World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What is behind the global stock market rally?

உலகப் பங்குச் சந்தை ஏற்றத்தின் பின்னணியில் உள்ளது என்ன?

Andre Damon
29 September 2012
Back to screen version

தொடர்ச்சியான பேரழிவைக் காட்டும் புள்ளி விவரங்கள் இருந்தபோதிலும் கூட, உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்க டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி- Dow Jones Industrial Average- மற்றும் பிரித்தானியாவின் FTSE ஆகியவை 20% உயர்ந்தன. ஜேர்மனிய DAX 39% மிக அதிகமாக உயர்ச்சி பெற்றது. முக்கியமாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை தளமாகக் கொண்ட NASDAQ, அதன் முந்தைய நவம்பர் 2007ல் அடைந்திருந்த உயர் அதிகரிப்பை விஞ்சியது. DOW இப்பொழுது அதன் முந்தைய உயர்ந்த நிலையில் இருந்த 600 புள்ளிகளுக்குள்தான் உள்ளது.

இவ்வகையில் பங்குச் சந்தைகளின் தொடர்ந்த ஏற்றம் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா ஆகியவை மூன்று ஆண்டுகளாக அவற்றின் உற்பத்தி நடவடிக்கைகள் மிகக்குறைந்த மட்டத்தில் இருக்கையில் வந்துள்ளது. ஐரோப்பிய பொருளாதாரம் முழுவதுமே சுருக்கம் அடைந்துள்ளது. வியாழன் அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய மோசமான மேலதிக தகவல்கள், அமெரிக்காவில் நீடித்த பாவனையுள்ள பொருட்களுக்கான தேவை 2009ல் இருந்து மிகத் தீவிரமாகச் சரிந்துள்ளதைக் காட்டுகின்றன. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் ஏற்கனவே குறைந்த 1.7% என்பதில் இருந்து 1.3% எனத் திருத்தப்பட்டுவிட்டது.

உலகப் பொருளாதாரம் இன்னும் ஆழ்ந்த சரிவில் இருக்கையில் இவ்வகையில் பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய ஏற்றத்தை எவ்வாறு விளக்குவது?

பங்குகளின் விலைகளில் ஏற்றம் என்பது கீழிருந்து மேல் என்று உலகம் முழுவதும் செல்வம் மறுபகிர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதின் ஒரு வெளிப்பாடுதான். தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் தொடர்ச்சியாக கீழ்நோக்கிச் செல்லுகின்றன. அதே நேரத்தில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் முக்கியமாக நிதிய ஊகங்களுக்காக வங்கிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கு குறிப்பாக உலக முதலாளித்துவத்தின் மையமும், உலகப் பொருளாதார நெருக்கடியின் மையமுமான அமெரிக்காவில் வெளிப்படையாக உள்ளது.

மூன்று பெரிய பங்குச் சந்தை குறியீடுகள் கிட்டத்தட்ட அவற்றின் 2009இன்  மதிப்பில் இருந்து இருமடங்கு அதிகரித்துவிட்டன. மிகப் பெரிய செல்வந்தர்களின் சொத்து மதிப்புக்களும் அதையொட்டி உயர்ந்துவிட்டது. அமெரிக்காவில் செல்வம் அதிகம் படைத்த 400 பில்லியனர்களின் நிகர மதிப்பு 2009ம் ஆண்டு 1.27 டிரில்லியன் டாலர்கள் என இருந்தது. ஏற்கனவே வெறுப்பூட்டும் இந்த மதிப்பு இந்த ஆண்டுப் பட்டியலில் 1.7 டிரில்லியன் டாலர்கள் என அதிகரித்துவிட்டது. இது மூன்று ஆண்டுகளில் 33% உயர்வு ஆகும்.

தலைமை நிர்வாகிகள் ஊதியமும் இதேபோன்ற போக்கைத்தான் கொண்டுள்ளது. அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனங்கள் 350ல் ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் 12.14 மில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றார். இது 2010ல் 12.04 மில்லியன் டாலர்கள் என்றும், 2009ல் இருந்த 10.36 மில்லியன் டாலர்கள் என்பதுடனும் ஒப்பிடத்தக்கது. Economic Policy Institute இப்புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தினருக்கோ நிலைமை முற்றிலும் எதிரிடையானது. புள்ளி விவரங்கள் கிடைத்துள்ள ஆண்டுகளான 2009க்கும் 2011க்கும் இடையே, அமெரிக்காவில் வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2.6 மில்லியன் அதிகரித்து 49 மில்லியன் என ஆயிற்று. பரந்த வேலையின்மை ஒரு நெம்புகோல் போல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊதியக் குறைப்புக்களை சுமத்தப் பயன்படுத்தப்படுகிறது.

உத்தியோகபூர்வமாக மந்த நிலை முடிந்த ஜூன் 2009ல் வேலையின்மை  காலம் சராசரியாக 23 வாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 38 வாரங்கள் எனப் போயிற்று. வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்களில் வேலை செய்வோரின் விகிதம் சரிந்துவிட்டது.  வேலை நீக்கம்செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்கள் வேலை தேடுவதை நிறுத்தியுள்ளபோது மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஒரு மிகக்குறைந்த வேலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாதுள்ளது.

இன்னும் வேலையில் இருக்கும் தொழிலாளர்களை பொறுத்தவரை, உண்மையான மணிநேர ஊதியங்கள் கிட்டத்தட்ட 1.0% குறைந்துவிட்டது. ஒரு சராசரி இல்லத்தின் வருமானங்கள் 2010ல் மட்டும் 1.7% என குறைந்துவிட்டது.

தொழிலாளர்களைச் சுரண்டும் விகிதத்தில் அதிகரிப்பு என்பது பெருநிறுவனங்களுக்கு மிகப் பெரிய செலவுச் சேமிப்புக்கள் என மாறியுள்ளது; 2009ம் ஆண்டில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக இலாபங்கள் என்றும் ஆகிவிட்டது. இது மிகப் பெரிய செல்வந்தர்களின் வருமானங்களை அதிகரித்துவிட்டது.

தொழிலாளர் பிரிவின் நேரடி வறிய நிலையை ஏற்படுத்தியதைத் தவிர, பங்குச் சந்தைகள் உலகின் மத்திய வங்கிகளிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதின் மூலம் பெரும் உற்சாகத்தை பெற்றுள்ளன.

கடந்த மாதத்திற்குள்ளேயே, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் அனைத்தும் பில்லியன் கணக்கான டாலர்களை நிதியச் சந்தையில் உட்செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அமெரிக்காவில் மத்திய வங்கிக் கூட்டமைப்பு இம்மூன்றிலும் மிக வியக்கத்தக்க நடவடிக்கையை எடுத்து, 40 பில்லியன் டாலர்கள் அடைமான ஆதரவுடைய பத்திரங்களை ஒவ்வொரு மாதமும் வாங்குவது என்ற வரம்பற்ற செயலை ஆரம்பித்தது. இந்த விற்கமுடியாத சொத்துக்களை வங்கியில் இருப்பு நிலைக் குறிப்புக்களில் சேர்ந்துவிட்டது.

இந்த நடவடிக்கைகளுக்காக வெளிப்படையாகக் கூறப்படும் காரணம், வட்டி விகிதங்களைக் குறைத்து, வீடுகள் சந்தைக்கு புத்துயிர்கொடுத்து, பெருநிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிதியை அதிகரித்து, புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு என்பதாகும். ஆனால் பணத்தை உற்பத்திவகையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக பெருநிறுவனங்களும் வங்கிகளும் அவற்றை தமது கருவூலத்தில் வைக்கின்றன அல்லது பங்குச் சந்தைகளிலும் மற்றும் பிற ஊகவகைகளில் செலவழிக்கின்றன.

இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் ரொக்கமாக வைத்திருக்கும் மொத்தத் தொகை 1.7 டிரில்லியன் டாலர்களாகும். தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிள் இதற்கு உதாரணமாகக் கூறப்படலாம். இந்த ஆண்டு முதல் காலாண்டில் அது 98 பில்லியன் டாலர்களையும், இரண்டாம் காலாண்டில் 110 பில்லியன் டாலர்களையும் மூன்றாம் காலாண்டில் 117 பில்லியன் டாலர்களையும் கொண்டிருந்தது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பீடு பெருகுகிறது, தற்பொழுது 600 பில்லியன் டாலர்கள் என மதிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம் உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பெருநிறுவனமாக வரும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இத்தகைய மகத்தான நிதியங்கள் நிதிய முறையில் உட்செலுத்தப்படுகின்றன; இவை சொத்துக்களின் மதிப்பை வீங்க வைப்பதுடன் நிர்வாகிகளுக்கு மிக அதிக ஊதியங்களையும் கொடுக்க வைக்கிறது; அவர்களுடைய ஊதியங்கள் பல நேரமும் பங்கு விலைகளுடன் பிணைக்கப்படுகின்றன.

ஆழ்ந்த பொருளாதாரச் சரிவுக் காலத்தில் சொத்துக்களின் மதிப்பின் வீக்கம் காலவரையின்றி தொடர முடியாது. கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதக் கொள்கையின் அடிப்படையில் பங்கு மதிப்புக்கள், மற்ற நிதியச் சொத்துக்களின் மதிப்பு வளர்கையில், கிட்டத்தட்ட இலவச நிதி என்று மத்திய வங்கிகளிடம் இருந்து கிடைக்கும் நிலையில், புதிய பணவீக்கம் 2008ல் செப்டம்பரில் வெடித்த ஊகக் குமிழைவிட பாரியளவில்தான் ஏற்படும்.

பங்கு மதிப்புக்களில் ஏற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக ஆழ்ந்த நோய்வாய்ப்பட்டுள்ள பொருளாதாரத்தைத்தான் குறிக்கிறது. இதில் முதலாளித்துவ அமைப்புமுறையில் தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகள் இரக்கமற்ற, பேராசை பிடித்த நிதியப் பிரபுத்துவத்தால் அதிக்ப்படுத்தப்படுகின்றன. இப்பிரபுத்துவம் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் கொள்கை இயற்றுவதை கட்டளையிடுகிறது.

முதலில் புஷ்ஷின்கீழ், பின்னர் இப்பொழுது ஒபாமாவின்கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கம் 2008 சரிவை எதிர்கொண்ட விதம் தவிர்க்க முடியாத வகையில் அமெரிக்க முதலாளித்துவ அமைப்புமுறையின் நிதியமயமாக்கலின் விளைவு ஆகும். இதனால் பொதுநிதிகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டன. இதன் நோக்கம் நிதியச் சொத்துக்களின் மதிப்புக்களுக்கு ஏற்றம் கொடுப்பது, அதையொட்டி நிதியப் பிரபுத்துவத்தின் சொத்துக்களைத் தக்க வைத்து, அதிகரிப்பது என்பதாகும்.

அரசாங்கங்களும் இவற்றையே பின்பற்றுகையில், ஒவ்வொரு வங்கிப் பிணையெடுப்பும் தொழிலாளர்கள் மீதான இன்னும் கடுமையான தாக்குதலையும் கொண்டுள்ளது. ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி என அனைத்துமே வெட்டப்பட வேண்டும் என ஆயிற்று. ஆனால் நெருக்கடிக்குப் பொறுப்பானவர்களின் செல்வத்தைத் தவிர.

முக்கிய முதலீட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நிதிய வல்லூறுகள் பங்குச் சந்தைகளை ஏற்றம் பெறச்செய்வது வேலைகள், சமூகநலத் திட்டங்கள் மீது ஒவ்வொரு தாக்குதலிலும் அவற்றை அதிகரிக்கிறது. இப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்ந்த மந்தநிலையில் இருக்கும் நாட்டிற்குத் தலைமை தாங்கும் ஸ்பெயின் அரசாங்கம் வரைவு வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டபோது ஏற்பட்டது. அதில் அடுத்த ஆண்டு செலவுகள் 51 பில்லியன் டாலர்கள் குறைக்கப்பட உள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை தனிமைப்படுத்தி முறிக்கும் திறனே நிதிய மூலதனத்தின் வெற்றிக்கு இதுவரை திறவுகோலாக இருந்தது. அதற்காக அவை தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, கிரேக்கத்தில் சிரிசா, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு என பல போலி இடது அமைப்புக்களை நம்பியிருந்தன.

ஆனால் மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகள் எதையும் தீர்க்கவில்லை. பங்குச் சந்தைகளில் ஏற்றம் பற்றிய உத்வேகம் அழுகிய அஸ்திவாரங்களில் நிலை கொண்டுள்ளது. ஏற்றம் பெறும் சந்தைகள் முன்னோடியில்லாத சமூக அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதின் வெளிப்பாடுதான். ஏற்கனவே இவை உலக அளவில் வெடிப்புத் தன்மையுடைய வர்க்கப் போராட்டங்கள் என்ற வகையில் வெளிப்பட்டுள்ளன. ஒரு புதிய, புரட்சிகரத் தலைமை ஒவ்வொரு நாட்டிலும் கட்டமைக்கப்பட்டு இப்போராட்டங்களை ஐக்கியப்படுத்தி அவற்றினை சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.