World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Foxconn strikes and the global class struggle

பாக்ஸ்கான் வேலைநிறுத்தங்களும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

John Chan
10 October 2012
Back to screen version

ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் உலகின் மிகப்பெரிய மின்னியல் கருவிகள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நடத்தும் மோசமான சுரண்டல் அடக்குமுறை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களையும், வேலைநிறுத்தங்களையும் செய்திருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.

சமீபத்திய தசாப்தங்களில் மேற்கில் நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் அரக்கத்தன வளர்ச்சியை நியாயப்படுத்துவதற்கு முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் பலமுறையும் தகவல் பொருளாதாரத்தின் ஏற்றத்துடன், மதிப்பைத் தோற்றுவிப்பதற்கு உண்மையான உற்பத்தி வழிவகையை நம்பியிருக்கவில்லை என்று அறிவிக்கின்றனர். இதன் விளைவாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கருத்துக்கள், குறிப்பாக தற்கால உற்பத்தி சக்திகளைக் கொண்டிருத்தல், ஒரு உயர்வகைப் பொருளாதார ஒழுங்கமைப்பான சோசலிசத்தின் தாங்கியான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு காலத்திற்கு ஒவ்வாதது என்றும் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிள், பங்குச் சந்தை மதிப்பீட்டின்படி (அமெரிக்க $600 பில்லியன்) இதற்கு நிரூபணமாகக் காட்டப்படுகிறது. ஏனெனில் அது எந்த உற்பத்தி ஆலைகளையும் செயல்படுத்தாமல் பெரும் இலாபங்களை ஈட்டுவது போல் தோன்றுகிறது.

ஆப்பிளின் iPhone5 ன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானில் உள்ள தொழிலாளர் அமைதியின்மை பிற நிகழ்வுகளுடன் சேர்ந்து இந்தக் கற்பனையைத் தகர்த்துவிட்டது. ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் ஒரு பரந்த உலக உணவுச் சங்கிலியின் உச்சியில் அமர்ந்து எஞ்சிய மதிப்பைத் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து பெருமளவில் திரட்டுகின்றன. இந்த அமைப்பின் கீழ்ப்பகுதியில் இருப்பவைதான் இரக்கமற்ற குறைவூதியத் தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ஆகும். இதில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் தொழிலாளர்கள் சீனாவில் மட்டும் உள்ளனர். ஜெங்ஜோ நகரில் இருப்பது போன்ற 200,000 தொழிலாளர்களைக் கொண்ட இதன் மிகப் பெரிய ஆலைகள் மிக நவீன மின்னியல் பொருட்களைத் தயாரிக்கின்றன. பாக்ஸ்கான் நிறுவனம் புவியியல் அளவில் இருப்பதே தொல்சீர் மார்க்சிச கோட்பாடான உபரி மதிப்பின் உண்மையை உறுதிபடுத்துவதுடன், தொழிலாள வர்க்க உழைப்பில் இருந்துதான் இலாபம் பெறப்படுகிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. பாக்ஸ்கானில் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் வெடித்திருப்பது சர்வதேச அளவில் பெருகும் இயக்கத்தின் ஒரு பகுதியாகச் சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகள் வெளிப்படுவதைத்தான் முன்னிழலிட்டுக் காட்டுகின்றன.

வெள்ளியன்று பாக்ஸ்கானின் ஜெங்ஜோ வளாகத்தில் நடந்த சமீபத்திய வேலைநிறுத்தம் ஆழ்ந்த உலகளாவிய பொருளாதார நிலைமுறிவின் விளைவு ஆகும். ஆப்பிளைப் பொறுத்தவரை, அதன் வருங்காலம் அது வெற்றிகரமாக iPhone5 ஐத் ஆரம்பிப்பதில்தான் உள்ளது. உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்துவது என்பதற்கான அதன் கடுமையான தேவைகள் பாக்ஸ்கான் தொழிலாளர்களை நீண்ட மணி நேர வேலை, கடுமையான கட்டுப்பாடு, விரைவில் முடிப்பதற்கு இடைவிடாத அழுத்தம் என்பதற்குள் தள்ளுகின்றன. புதிய தரக்கட்டுப்பாட்டு விதிகள் கடந்த வாரம் சுமத்தப்பட்டவை கடுமையான வாதங்கள், அச்சறுத்தல்கள் மற்றும் உடல்ரீதியான வன்முறை ஆகியவற்றை ஆலையில் மேற்பாற்வையிடும் தர ஆய்வாளர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டன.

பாக்ஸ்கானில் உள்ள பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமைகள் சமீபத்தில் தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள், பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள் ஆகியோரின் சமீபத்திய போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களுக்கு எரியூட்டிய தன்மைக்கு இணையாக இருந்தன. கடந்த ஆண்டு துனிசியா மற்றும் எகிப்தில் ஆரம்பித்த எழுச்சிகள் வெளிப்படுத்திய சர்வதேசத் தொழிலாள வர்க்கப் போராட்டம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதின் ஒரு பகுதிதான் இவை. ஐரோப்பாவில் இப்பொழுது நடக்கும் வெகுஜன எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள், அமெரிக்காவில் பெரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள், சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் போன்றவை, நிதிய உயரடுக்குகள் ஆழ்ந்த உலக நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் முயற்சியான இதே அடிப்படை மூலகாரணத்தைத்தான் கொண்டுள்ளன.

சீனப் பொருட்களை அதிகம் நுகரும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் சீனாவில் பாரிய பொருளாதார துன்பங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஏனெனில் பாக்ஸ்கான் போன்ற ஏற்றுமதி நிறுவனங்கள், மிகச்சிறிய இலாபத்தில் செயல்படுபவை அவற்றின் தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதை தீவிரப்படுத்துகின்றன. சுருங்கும் சந்தைகளுக்கான கடுமையான போட்டியினால், இப்பொழுது சர்வதேசப் பெருநிறுவனங்கள் சீனாவின் ஊதியங்களை மிகவும் அதிகமானது என்று கருதுகின்றன. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைப் பெறுவதற்காக, கடலோரச் சீனாவில் இருந்து உள்நாட்டிற்கு அதிகம் வந்துள்ள பாக்ஸ்கான், இப்பொழுது தென்கிழக்கு நாடுகளான இந்தோனிசியா போன்றவற்றிற்கு உற்பத்தியை மாற்ற முயல்கின்றன; அந்நாடுகளின் சராசரி ஊதியம் சீனாவில் இருப்பதைப் போல் மூன்றில் ஒரு பகுதிதான். இதையொட்டி, இச்சூழல்கள் சீனாவில் மட்டும் இல்லாமல் மேற்கு உட்பட உலகம் முழுவதும் தொழிலாளர்களின் ஊதியங்கள், பணிநிலைமைகள் ஆகியவற்றிற்கு அடையாளமாகி விட்டன.

இவ்வகையில் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரே வழி, சோசலிசத்திற்காகப் போராட தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவதுதான். இதன் அர்த்தம் உலகளாவிய தன்மை உடைய உற்பத்தி வழிவகைகளைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் வைப்பதுதான். சீனாவில் மோசமான சுரண்டல் முறையை அற்றுவது என்பது தவிர்க்கமுடியாமல் முதலாளித்துவச் சுரண்டல் உலக முறையின் உச்சியில் அமர்ந்திருக்கும் வோல்ஸ்ட்ரீட் நிதிய தன்னலக் குழுவின் மேலாதிக்கத்தை அமெரிக்கத் தொழிலாளர்கள் முற்றுப்புள்ளி வைக்க நடத்தும் போராட்டங்களுடன்தான் பிணைந்துள்ளது.

சீனாவிற்குள் தொழிலாள வர்க்கம் அதன் உரிமைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரத்துவத்தை அகற்றும் அரசியல் போராட்டத்தை தவிர்ந்த வேறுவகையில் பாதுகாக்க முடியாது. அந்த அதிகாரத்துவம்தான் தீவிரமாக பெருநிறுவனங்களான பாக்ஸ்கான், ஆப்பிள் போன்றவற்றுடன் நெருக்கமாக உறவாடி, இரக்கமின்றி தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பொறுக்க முடியாத நிலைமையினால் ஏற்படும் எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்குகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச மூலதனத்தின் திறமையான பங்காளி என்று வளர்ச்சி பெற்றுள்ளது என உலக ட்ரொட்ஸ்கிச  இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு (ICFI), சீனாவில் முதலாளித்துவ மீட்பு குறித்து விடுத்த எச்சரிக்கைகள் சக்தி வாய்ந்த முறையில் உறுதிப்படுத்தப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்புதான், டெங் ஜியாவோபிங் பிற்போக்குத்தன ஸ்ராலினிச கோட்பாடான ஒரு நாட்டில் சோசலிசம் என்பது தோற்றுவித்த பொருளாதார நெருக்கடியை வெளிப்படையாக சீனாவை மீண்டும் உலக முதலாளித்துவ முறையில் ஒருங்கிணைப்பதின் மூலம் தீர்த்துவிடலாம் என்று நம்பினார். இத்திட்டம் 20ம் நூற்றாண்டு ஆரம்ப சகாப்தங்களில் இருந்த மில்லியன் கணக்கான சீனத் தொழிலாளர்களின் பாட்டானார்களுக்கு ஊக்கம் அளித்த பொருளாதார சமூக முரண்பாடுகளின் வெடிப்புத்தன்மை அனைத்தையும் மறுபடியும் தோற்றுவித்தது. ஏகாதிபத்திய சுரண்டலை அகற்றுவதற்காகத் தற்கால வரலாற்றில் பெரும்புயல் போன்ற வர்க்கப் போராட்டங்கள் அந்நேரத்தில் தோன்றின.

சீனத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வருகையில், அவர்களுக்கு அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கமான அனைத்து சீனத் தொழிற்சங்க கூட்டமைப்பு (All-China Federation of trade Unions ACFTU) நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் நலன்களைத்தான் பாதுகாக்கின்றன என்பதை நன்கு அறிவர். ஆனால் பல தொழிற்சங்க செயலர்கள் அவர்களுடைய வர்க்க நலன்கள் சுயாதீன தொழிற்சங்கங்கள் அல்லது இருக்கும் ACFTU சங்கங்களைச் சீர்திருத்துவதின் மூலம், முதலாளிகளுடன் கூட்டு பேரம் நடத்துவதின் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் சலுகைகளுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் பாதுகாக்கப்படலாம் என்ற போலித் தோற்றங்களில் நம்பவைக்க முற்படுகின்றனர்.

இத்தகைய தொழிற்சங்கவாத முன்னோக்கில் உள்ள ஆபத்துக்கள் தென்னாபிரிக்காவில் மிக வெளிப்படையாக அம்பலமாகிவிட்டன. அங்கு தென்னாபிரிக்கத் தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் மற்றும் தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கம் இரண்டும் பல தசாப்தங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சிறந்த மாற்றீட்டு தொழிற்சங்கங்கள்தான் என்பதற்கு நிரூபணம் என்று பாராட்டப்பட்டன. இதே தொழிற்சங்கங்கள்தான் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸுடனும்-ANC- பெரும் சுரங்க நிறுவனங்களுடனும் ஒத்துழைத்து ஆகஸ்ட் மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 34 பிளாட்டினச் சுரங்கத் தொழிலாளர்களைக் கொன்றன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸுடன் சேர்ந்து இந்த அமைப்புக்கள் தென்னாபிரிக்க தொழிலாளர்களை அடக்கும் அமைப்புக்களாக விளங்கி, உலகிலேயே மிகச் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றிற்குத் தலைமை தாங்குகின்றன.

பாக்ஸ்கானிலும் பிற மோசமான சுரண்டல் பட்டறைகளிலும் உள்ள சீனத் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  ஆட்சிக்கு எதிரான சுயாதீனமான அரசியல் சுயாதீனப் போராட்டத்தின் மூலம்தான் பாதுகாக்க முடியும். இதற்கு முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் ஆதரவை நாடி நிற்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சோசலிச முன்னோக்கு மற்றும் 20ம் நூற்றாண்டின் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் படிப்பினைகளை தளமாகக் கொண்ட, அதுவும் குறிப்பாக ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் நீடித்த போராட்டத்தின் மூலோபாய படிப்பினைகள் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டமைப்பதுதான் தேவையாகும். இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப் பிரிவை கட்டமைத்தல் என்பதாகும்.