World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: சம்பள உயர்வு மற்றும் தரமான இலவசக் கல்வியைக் கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடை பவணி

By our correspondent
28 September 2012
Back to screen version

சம்பள உயர்வும் தரமான இலவசக் கல்வியும் கோரி மூன்று மாத காலமாக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமது போராட்டத்துக்காக மக்களின் ஆதரவை திரட்டிக்கொள்வதற்காக காலியில் இருந்து கொழும்பு வரை ஐந்து நாட்கள் நடை பயணம் செய்கின்றனர்.

வேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் (எஃப்.யு.டீ.ஏ.) செப்டெம்பர் 24 அன்று காலியில் தொடங்கிய நடை பயணம், 118 கிலோமீட்டர் பயணம் செய்து கொழும்பை வந்தடையவுள்ளது. அன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு எஃப்.யு.டீ.ஏ. எதிர்பார்த்துள்ளது.

24ம் திகதி பெய்த கடும் மழையையும் பாராமல் பேராதனை, கொழும்பு, மொரடுவை மற்றும் ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களின் சுமார் ஆயிரம் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்று சேர்ந்த அந்த நடை பவணிக்கு வீதியின் இரு பகுதியிலும் குவிந்திருந்த மக்களின் ஆதரவும் கிடைத்தது. அருகில் இருந்த பாடசாலைகளின் ஆசிரியர்களும் தமது பாடசாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் கூடி கைகளை அசைத்தும் கை தட்டியும் தமது ஆதரவை தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக அலட்சியம் செய்து, தொழில் ஆணையாளர் ஊடாக கட்டாய தீர்வு ஒன்றை திணித்து விரிவுரையாளர்களுக்கு எதிராக அவதூறுகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஒடுக்குமுறை நடைவடிக்கைகளை அவிழ்த்துவிடுவதன் மூலம், வேலை நிறுத்தத்தை தகர்க்கும் அச்சுறுத்தல் தலைநீட்டியுள்ள தீர்க்கமான சந்தர்ப்பத்திலேயே இந்த நடை பவணி நடக்கின்றது.

தமது உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பையே இந்த நடை பவணிக்கு கிடைத்துள்ள விரிவுரையாளர்களின், மாணவர்களின் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு வெளிப்படுத்தியுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் தெற்கில் நடை பவணிக்கு ஆதரவு தெரிவித்து 25ம் திகதி பருத்தித் துறையில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் வரை 30 கிலோமீட்டர் தூரம் வாகன பவணியிலும் நடை பவணியிலும் வந்தனர். அங்கு நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தை சார்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜகுமாரன் பின்வருமாறு தெரிவித்தார்: எங்களது எதிர்ப்பு சுமார் மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்தாலும் அரசாங்கம் இன்னமும் எந்தவொரு அர்த்தமுள்ள தீர்வையும் வழங்கவில்லை. கல்வியை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாங்கள் இலவசக் கல்வியைப் பாதுகாக்கவே போராடுகின்றோம். இலவசக் கல்வியை அகற்றுவதனால் துன்பப்படுவது வறிய மக்களே.

அவரது உரை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என்று எஃப்.யு.டீ.ஏ.யின் தலைவர்கள் பரப்புகின்ற மாயையை பிரதிபலிக்கின்றது. அரசாங்கம் இலவசக் கல்வியை அழிப்பது ஏன் என்ற விடயத்தை அவரால் விளக்க முடியவில்லை.

அதே போல், விரிவுரையாளர்களின் பிரச்சினையை தீர்த்து பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்குமாறு கோரி விரிவுரையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கின்ற பல்லைக்கழக மாணவர்களின் நடை பவணி ஒன்றும் 24ம் திகதி கண்டியில் இருந்து ஆரம்பித்ததோடு அதுவும் 28ம் திகதி கொழும்பை வந்தடைய உள்ளது. அதற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மற்றும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களதும் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்”, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் தீர்க்கமான புள்ளிக்கு வந்துள்ளது மற்றும் அரசாங்கம் மாணவர் சங்க தலைவரை கைது செய்து தடுத்து வைத்துள்ளது போன்ற தலைப்பிலான சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் விரிவுரையாளர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கினர். அவர்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. உறுப்பினர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி நடை பவணியில் ஈடுபட்ட விரிவுரையாளர்களுடனும் அருகில் இருந்த மக்களுடனும் கலந்துரையாடினர்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்ததாவது: ஜூலை 4ம் திகதியில் இருந்து எங்களது சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் கொடுக்கின்ற சம்பளம் மட்டுமே எங்களுக்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. வேறு தனியார் வகுப்புகள் எதனையும் நாங்கள் நடத்தவில்லை. மனைவியின் சம்பளத்தில்தான் இப்போது வாழ்கின்றோம். இந்த போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும். அதனாலேயே நாங்கள் வீதிக்கு இறங்கினோம்.

எஃப்.யு.டீ.ஏ. தலைவர்கள் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெற்றிகொள்ள முடியும் என்ற மாயையை பரப்புவதோடு வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) உட்பட கட்சிகளுடன் அணிதிரண்டுள்ளனர். எஃப்.யு.டீ.ஏ.யின் இந்த திட்டத்தின் மூலம் நிச்சயமாக போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் ஆபத்து உள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டிய போது, அதற்கு, அது உண்மை, அவர்களோடு எந்தவொரு போராட்டத்தையும் வெற்றிகொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை என்று அந்த விரிவுரையாளரே தெரிவித்தார்.

இந்த போராட்டத்தை ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைக்காதது ஏன் என்ற கேள்விக்கு, நாங்கள் தொழிலாளர்கள் அல்ல. நாங்கள் புத்திஜீவிகள். அதனால் எமது கோரிக்கைகளை அரசாங்கத்தால் ஓரங்கட்ட முடியாது,” என அந்த விரிவுரையாளர் கூறினார். விரிவுரையாளர்கள் சிறப்புரிமைகள் பெற்ற தட்டினராக இருப்பதால், எந்த வகையிலும் அவர்களை சேவையில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்பதே எஃப்.யு.டீ.ஏ.யின் கருத்து, என அவர் மேலும் தெரிவித்தார். எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவத்தால் பரப்பப்படும் இந்த போலி நம்பிக்கை, இராஜபக்ஷ அரசாங்கமானது அரச பல்கலைக்கழகங்கள் உட்பட இலவசக் கல்வியை சீரழித்து மேலும் மேலும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதன் பக்கம் திரும்பியுள்ளது என்பதை முழுமையாக அலட்சியம் செய்கின்றது.

போராட்டத்துக்காக சோசலிச வேலைத் திட்டம் ஒன்றை நீங்கள் பிரேரிக்கின்றீர்கள். சோசலிசம் நடைமுறை சாத்தியமானது அல்ல என்று எமது தலைக்குள் ஒரு எண்ணம் இருக்கின்றது. அந்த எண்ணத்தை மாற்றினால் சோசலிசத்தை நடைமுறையில் அமுல்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை இருக்கின்றது. எஃப்.யு.டீ.ஏ. அரசியல் போராட்டத்தை எதிர்க்கின்றது என நீங்கள் சொல்கின்றீர்கள். அது உண்மை. தொழிற்சங்கங்கள் இயல்பாகவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதையே செய்கின்றன. அரசியல் செய்வது தொழிற்சங்கங்களின் வேலை அல்ல,” என ருஹுணு பல்கலைக்கழகத்தின் இன்னொரு விரிவுரையாளர் கூறினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி அவர் இவ்வாறு கூறினார். (அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்) சஞ்சீவ பண்டாரவை கைது செய்தது பிழை. அவர் எமது உரிமைக்காகவே போராடினார். அது எம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

இந்த நடைபவணியில் நுழைந்துகொண்டுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த பெண் உதவி விரிவுரையாளர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். 47ல் இருந்தே எம்மை ஏமாற்றுவதையே எல்லோரும் செய்தனர். எங்களுக்கு ஆதவரளிப்பதாக எதிர்க் கட்சியினர் வாய்சவாடல் விட்டுள்ளனர். என்னால் அதை நம்ப முடியாது. இப்போது தொடர்ந்தும் முன்செல்வதைத் தவிர மீண்டும் திரும்ப முடியாது.

விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை கொடுக்காமல் இருப்பது பற்றி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டிய கேகாலையைச் சேர்ந்த தாய் ஒருவர், அரசாங்கத்தின் ஊடகங்களும் மற்றும் மேவின் சில்வா போன்ற அமைச்சர்களும் விரிவுரையாளர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அருவறுப்புடன் நிராகரித்தார். எங்களது பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை இப்போது நாங்களே பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. அதை எமது பெற்றோர்களால் செய்ய முடியாது. கல்விக்கு செய்கின்ற ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்,” என களுத்துறை பாடசாலை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவம், மக்களின் ஒத்துழைப்புக்கும் விரிவுரையாளர்களது தைரியத்துக்கும் நேரெதிராக, பல்வேறு போலி இடது கட்சிகள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து இலவசக் கல்வியை அழிக்கும் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் துரோக சமசமாஜ மற்றும் ஸ்ராலினிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சங்கங்கள், அதே போல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து அத்தகைய தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) மற்றும் தாம் ஆட்சியில் இருந்த போது இலவசக் கல்விக்கு எதிரான தாக்குதல்களில் இழிபுகழ் பெற்ற சாதனைகளைக் கொண்ட வலதுசாரி யூ.என்.பீ. உடனும் அணிதிரண்டுள்ளது.

எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவம், இந்த நடைபவணியின் போது, இந்த சகல அமைப்புகளையும் தனது தோள்களில் சுமந்து செல்கின்றது. யூ.என்.பீ.யின் சஜித் பிரமேதாச, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் மங்கள சமரவீர போன்றவர்களோடு, ஜனாதிபதி இராஜபக்ஷ மீண்டும் இனவாத யுத்தத்தை தொடங்கிய போது அதை நடத்திச்சென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவத்தின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த நடைபவணியில் ஒன்று கூடியிருந்தனர்.

அத்தகைய எதிர்ச் சக்திகளுக்கு இடம் கொடுத்துள்ள எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவம், சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ.யும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கின்ற கொள்கைப் பிடிப்பான தலையீட்டுக்கு எதிராக பாய்ந்து விழுந்தது. செப்டம்பர் 26 அன்று, களுத்துறையில் நடைபவணியில் வந்த விரிவுரையாளர்கள் மத்தியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக்கொண்டிருந்த சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. உறுப்பினர்கள் மீது சரீரத் தாக்குதல் தொடுக்க முயன்ற, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் என்.டி.டீ. பிரிவின் ஜயரத்ன என்ற எஃப்.யு.டீ.ஏ. தலைவர், அவர்கள் கையில் இருந்த சுமார் 100 துண்டுப் பிரசுரங்களை அபகரித்து நாசமாக்கினர்.

கண்டியில் இருந்து கொழும்பு வரை மாணவர்களின் நடைபவணியை ஏற்பாடு செய்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (அ.ப.மா.ச.) அமைப்பாளர் சஞ்சீவ பண்டார, கல்வி தனியார்மயமாக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட யூ.என்.பீ. போன்ற கட்சிகள் பங்குபற்றுவதாலேயே தாம் விரிவுரையாளர்களின் நடைபவணியில் பங்குபற்றவில்லை என்றார். ஆயினும் நடைபவணியின் முடிவில், செப்டெம்பர் 28 அன்று கொழும்பில் தாம் எஃப்.யு.டீ.ஏ. உடன் கூட்டாக பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதா அல்லது தனியாக கூட்டம் ஒன்றை நடத்துவதா என்று இன்னமும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார். அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்களுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்கான சிறந்த முறை எது என்பதை கண்டுபிடிக்கவே இவ்வாறு பண்டார இரு பக்கமும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

எவ்வாறெனினும் அ.ப.மா.ச., விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை போலவே, தாம் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் மாணவர்களின் பிரச்சினை சம்பந்தமாக கொண்டுள்ள நிலைப்பாடு எதுவெனில், கல்வி வெட்டை தமது கொள்கையாகக் கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடாக அரசாங்கத்தை குணிய வைத்து அந்த வெட்டுக்களை கைவிடச் செய்ய முடியும் என்பதே ஆகும்.

அ.ப.மா.ச.க்கு தலைமைத்துவம் கொடுக்கும் ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிசக் கட்சி, அதன் ஜனரல பத்திரிகையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக நிச்சயமான ஒன்று என்ற தலைப்பில் வெளியிட்ட ஆசிரியர் தலைப்பு, எட்டு ஒன்பது நோய்களையும் ஒன்பது பத்து வியாதிகளையும் சுகப்படுத்திக்கொள்வதற்காக (தேசியப் பிரச்சினை உட்பட) சோசலிசத்தை ஸ்தாபிக்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது போக்கு எங்களுக்கு இல்லை”, என்று சோசலிச வேலைத் திட்டத்துக்கு எதிரான தமது பரம எதிர்ப்பை வாந்தியெடுத்திருந்தது. முதலாளித்துவ அரசாங்கத்துக்கு காட்டக் கூடிய குறைந்தபட்ச பண்பாட்டைக் காட்டி, பேச்சுவார்த்தையிலும் நடவடிக்கையிலும் தந்திரம் செய்யாமல் பிரச்சினையை தீர்க்க தலையீடு செய்யுமாறு நாங்கள் கடைசி முறையாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம் என்று கூறி, விரிவுரையாளர்களின் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே தமது வேலைத் திட்டம் என்பதை அந்த ஆசிரியர் தலைப்பு ஸ்தாபித்துள்ளது.