World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US Defense Secretary warns of “Pearl Harbor” cyber attack by Iran

"பேர்ல் துறைமுக" வகையிலான இணைய தாக்குதல் ஈரானிடம் இருந்து வரக்கூடும் என அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி எச்சரிக்கிறார்

By Niall Green
15 October 2012
Back to screen version

பாதுகாப்புத் தொழில்துறை நிர்வாகிகள் முன் பேசுகையில், அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா மத்திய கிழக்கில் இரண்டு எரிசக்தி நிறுவனங்களில் கணினித் தொற்று ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு செப்டம்பர் 11, 2011 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைப் போல் அல்லது 1941ல் ஜப்பானியர் பேர்ல் துறைமுகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது போன்ற நிலைமை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எதிர்நோக்குவதாக எச்சரித்தார்.

வியாழன் அன்று நியூயோர்க் நகரத்தில் தேசியப் பாதுகாப்பிற்கான வணிகநிர்வாகிகளின் வர்த்தகக் குழு ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் பானெட்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த அமைப்பு இராணுவ ஒப்பந்தங்காரர்கள் செல்வாக்கைச் செலுத்தும் அமைப்பு ஆகும். சவுதி அரேபிய அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனம் Aramco,  மற்றும் கட்டாரின் இயற்கை எரிவாயு நிறுவனம் Rasgas ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் இணையத்தாக்குதல்களுக்குப் பின் இக்கருத்துக்கள் வந்துள்ளன.

இரண்டு அமெரிக்க ஆதரவுடைய பாரசீக வளைகுடா முடியரசுகளின் அதிகாரிகள் Shamoon  என அழைக்கப்படும் இவ்வைரஸ் தொற்று தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டது என்றும் இது விரைவில் இரு நிறுவனங்களின் இணையங்களிலும் பரவி, முன்னிருந்த தகவல்களின் மீது பலவற்றைப் புதிதாக எழுதி 30,000 கணனிகளில் இருந்த தகவல்களையும் முற்றிலும் அழித்து விட்டது எனக்கூறினார். தன்னுடைய உரையில் பானெட்டா இந்தத் தொற்று Aramco இன் கோப்புக்களை ஓர் எரியும் அமெரிக்கக் கொடியால் பிரதியீடு செய்துவிட்டது என்றார்.

இத்தாக்குதல்கள் இணைய அச்சுறுத்தலில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கின்றன”  மற்றும் இனியும் வரக்கூடிய இன்னும் அதிக அழிவுதரும் காட்சிகளைப் பற்றிய கவலைகளைப் புதுப்பித்துள்ளன. என்றார் பானெட்டா.

இவ்வித தாக்குதலை செய்தவர்களை அமெரிக்கா கண்டுபிடிக்கும் தகுதி உடையது என்பதும் மற்றும் அமெரிக்கா அல்லது அதன் நலன்களுக்கு தீயன விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு அவர்களை பொறுப்பேற்கவைக்கும் என்பதும் தெரிய வேண்டும் என்று கூட்டத்தில் பானெட்டா கூறினார்.

இத்தகைய தாக்குதல்களின் கூட்டு முடிவு இணைய வகை பேர்ல் துறைமுகமாக முடியலாம் என்று பானெட்டா கூறினார். இவ்வாறான தாக்குதல் உடலியல்ரீதியாக அழித்தல், உயிர்களை அழித்தல், நாட்டை முடக்கி அதிரச்சிக்கு உட்படுத்தி, ஒரு புதிய பெரும் பாதிப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் தாக்குதலாக இருக்கும் என்றார்.

செப்டம்பர் 11, 2001 க்கு முன்பும் எச்சரிக்கை அடையாளங்கள் இருந்தன. நாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. நாம் தயாராக இல்லை. அந்தக் கவனமின்மையினால் நாம் பெரும் அவதி அடைந்தோம். மீண்டும் அவ்வாறு நடக்க நாம் விடக்கூடாது. இப்போது 9/11க்கு முன் இருந்த கணம் போன்றது ஆகும். என்றார் பானெட்டா.

Shamoon இணைய தாக்குதலை ஈரான் நேரடியாக நடத்தியுள்ளது என்று பானெட்டா கூறாவிட்டாலும், அவர் தெஹ்ரான் அரசாங்கத்தை இணைய பகுதியைத் தன் அனுகூலத்திற்கு பயன்படுத்துவதில் ஒருங்கிணைந்த முயற்சியைக் கொண்டுள்ளது என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்க மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் இணைய  பாதுகாப்பு வல்லுனராக உள்ள ஜேம்ஸ் லெவிஸ் பாதுகாப்பு மந்திரியின் உரை ஈரானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையைக் கொடுக்கும் நெருக்கத்தைக் கொண்டுள்ளது. இரண்டும் இரண்டும் என்ன என்பதை ஈரானியர்கள் அறிந்து கொள்ளுவர், அவர்களுக்கு ஒரு தகவலை மந்திரி அனுப்புகிறார் என்பதை உணர்வர் என்று நினைக்கிறேன் என்றார்.

நிறுவனத்தின் எண்ணெய், எரிவாயு உற்பத்தி ஆகியவற்றில் எந்தக் குறைப்பையும் இது ஏற்படுத்தவில்லை என்பது வெளிப்படையாகவுள்ளபோது மந்திரி பானெட்டாவின் இரத்தத்தை உறையவைக்கும் வார்த்தைபிரயோகங்களுக்கும் Shamoon கணிணித் தொற்றின் உண்மையான பாதிப்பிற்கும் இடையே உள்ள பகிரங்கமான தொடர்பற்ற தன்மையை அமெரிக்க அரசியல் ஆளும்தட்டு ஈரானுக்கு எதிரான ஒரு போரை நியாயப்படுத்துவதற்குத் தயாரிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவதன் மூலம்தான் விளங்கிக்கொள்ளமுடியும்

மத்திய கிழக்கில் ஒரு புதிய சுற்று அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான முன்னேறிய தயாரிப்புக்கள் பற்றிய விவாதம் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியுடன் குடியரசுக்கட்சியின் போல் ரையன் ஆகியோருக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பைடென் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கியுள்ளது பற்றி தம்பமடித்துக்கொண்டார். அதே நேரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியின் மத்திய கிழக்கு பற்றிய கொள்கை மிகவும் ஆக்கிரோஷமானது என்றும் காட்ட முற்பட்டார். ஒபாமா நிர்வாகம் கடைசிப் பட்சமாகத்தான் ஈரானுக்கு எதிரான போர் பற்றிக் கவனத்திற்கு எடுக்கும் என்று துணை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பானெட்டாவின் ஆவேச உரை, துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் நடத்திய இரவுதான் நிகழ்த்தப்பட்டது. இது தற்போதைய ஜனநாயக் கட்சி நிர்வாகம் மற்றும் ஒருவேளை ஆட்சிக்கு வரக்கூடிய குடியரசுக் கட்சி இரண்டையுமே அமெரிக்காவின் மூலோபாய நலன்களை முடிவில்லா இராணுவ ஆத்திரமூட்டல் போர்கள் மூலம் முன்னேற்றுவிக்க இரக்கமற்ற முறையில் உறுதி கொண்டவை என்பதைத்தான் காட்டுகிறது.

எவ்வாறான இணைய தாக்குதல்களை ஈரானிய அரசாங்கம் கையில் கொண்டிருந்தாலும், ஆரம்கோ மற்றும் ரஸ்காஸ் கணிணி முறைகளில் Shamoon தொற்று பரவியதற்கு தெஹ்ரான் தொடர்பு பற்றி சான்றும் முன்வைக்கப்படவில்லை. இவை அமெரிக்க அரசாங்கமும் அதன் இஸ்ரேலிய நண்பர்களும் ஈரானிய அரசாங்கம், இராணுவம் மற்றும் அறிவியல் அமைப்புக்கள், அவற்றில் பணிபுரிவோர் ஆகியவற்றிற்கு எதிரான இணையத்தாக்குதல்கள் மற்றும் உடலியல்ரீதியான தாக்குதல்கள் குறித்த ஒருங்கிணைந்த பிரச்சாரத்துடன் ஒப்பிட முடியாது.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரானுக்கு எதிரான பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றுள் இராணுவத் தளங்களுக்குள் வெடிப்புகள் மற்றும் ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டது ஆகியவை அடங்கும். இஸ்ரேலிய, அமெரிக்க உளவுத் துறை அமைப்புக்களைத்தான் இவற்றிற்காக தெஹ்ரான் குறை கூறியுள்ளது.

ஜூன் மாதம் நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிராக முக்கியமாக நடத்தப்படும் இணைய போர் வழிவகையை விரைவுபடுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. “Operation Olympic Games” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மிக உயர்மட்ட இரகசிய செயற்பாடு புஷ் நிர்வாகத்தின் காலத்திலேயே ஈரானின் அணுச்சக்தி ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள கணிணி முறைகளைத் தடை செய்தல் அல்லது அழித்தல் கணிணித் தொற்று மூலமாக என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2010 ஐ ஒட்டி அமெரிக்கா, முன்னாள் CIA தலைவர் மைக்கேல் ஹேடன் உடைய சொற்களில், ஈரானின் நாடன்ஸ் அணு ஆராய்ச்சி அலையில் Stuxnet தொற்றைப் பயன்படுத்தி ஒரு பெரிய இணைய தாக்குதலை ஆரம்பித்து ரூபிகானைக் கடந்துவிட்டது. அமெரிக்க உளவுத் துறையில் உத்தியோகபூர்வ மதிப்பீடான தெஹ்ரானிடம் தீவிர அணுவாயுதத் திட்டம் இல்லை என்பது இருந்தபோதிலும்கூட, Operation Olympic Games இல் ஈடுபட்ட ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி , டைம்ஸிடம் ஜனாதிபதி ஒபாமா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார் என்றார்.

ஈரான் நிலையங்கள் மீதான அமெரிக்க இணையத்தாக்குதல்கள் நாடன்ஸ் இலிருந்து வெளிவந்து 2010 கோடையின் போது உலகம் முழுவதும் நூறாயிரக்கணக்கான கணிணிகளைப் பாதித்தபிறகுதான் பகிரங்கமாகத் தெரிய வந்தது.

உலகில் இணையப்போரில் முதலிடத்தில் உள்ளது வாஷிங்டன் என்ற உண்மை இருந்தபோதிலும், பானெட்டா ஒரு ஓர்வெலியன் வகையிலான காட்சியை முன்வைத்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு சக்தி வாய்ந்த ஈரானிய அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது போல் பேசுகிறார்.

பென்டகன் கிட்டத்தட்ட $3 பில்லியன் ஒவ்வொரு ஆண்டும் இணைய போர்முறையில் முதலீடு செய்கிறது என்று பாதுகாப்பு மந்திரி கூட்டத்தில் கூறினார். இதில் ஒரு புதிய மத்தியப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க இணைய கட்டுப்பாட்டு முறை வளர்ச்சியும் அடங்கும். சரியான வடிவத்தில் காட்ட வேண்டும் என்றால், பென்டகன் இணைய போரில் மட்டும் 2011ல் ஈரானின் மொத்த இராணுவச் செலவுகளின் தொகையில் 40%ஐச் செலவழிக்கிறது.

வாஷிங்டனின் பாதுகாப்பு செலவீனங்கள் மற்றும் உலகிலேயே இது மிகப் பெரிய ஆயுதகிடங்கைக் கொண்டுள்ள நாடான அமெரிக்க அணுவாயுதக் கிடங்கிற்கு ஆகும் தனிச் செலவுகள் கடந்த ஆண்டு $750 பில்லியனுக்கும் மேலாக ஆயிற்று. அதாவது அமெரிக்க அரசாங்கம் ஈரானை விட அதன் இராணுவத்திற்காக நூறு மடங்கு அதிகம் செலவழிக்கிறது. அந்த நாட்டைத்தான் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பேராபத்து கொடுக்கும் தன்மையைப் பிரதிபலிக்கிறது என்று அபத்தமாக பானெட்டா கூறுகிறார்.

இதன் மிகஅதிக இராணுவச் செலவுகளைத் தவிர, வாஷிங்டன் மத்தியக் கிழக்கில் ஆயுத போட்டியையும் எரியூட்டுகிறது. நியூயோர்க்கில் பானெட்டா உரையைக் கேட்ட நிர்வாகிகள் போன்ற பென்டகனும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தக்காரர்களும், நூறாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஆயுதங்களை இஸ்ரேல், சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் போன்ற நாடுகளுக்குக் கொடுக்கின்றனர். இந்நாடுகள் அனைத்தும ஈரானுடனான ஓர் அமெரிக்கத் தலைமையிலான போரில் ஈடுபடக்கூடும்.