World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Reject the plantation unions’ fraudulent electoral front

தோட்ட தொழிற்சங்கங்களின் மோசடி தேர்தல் கூட்டணியை நிராகரியுங்கள்

By M. Thevarajah, SEP election candidate for Kegalla District, Sabaragamuwa Provincial Council
4 September 2012
Back to screen version

எதிர் வரும் சபரகமுவ மாகாண சபை தேர்தலில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) ஆகிய மூன்று போட்டி பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த மாவட்டங்களில் கணிசமானளவு தமிழ் பேசும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த முன்னணியை நிராகரிக்குமாறு தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த மதிப்பிழந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துக்கு விரோதமான தொழிலாளர்களின் எதிர்ப்பை பிற்போக்கு இனவாத அரசியல் முட்டுச்சந்துக்குள் திசை திருப்பி, தமிழ் பேசும் தொழிலாளர்களை அவர்களது சிங்களம் பேசும் வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இருத்துவதற்கே ஒன்றிணைந்துள்ளன.

அரசியல் கட்சிகளாக செயல்படும் இந்த தொழிற்சங்கங்கள், அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் வாழ்க்கைத் தர வீழ்ச்சிக்கு நேரடி பொறுப்பாகும். இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகிய இரண்டும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு அவற்றின் தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் வகிக்கின்றனர். ஜ.தொ.மு., தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு இழிபுகழ்பெற்ற வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் (யூ.என்.பீ.) கூட்டுச் சேர்ந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் கூட்டணியின் கொள்கைகளில் இருந்து தங்களை தூர விலக்கிக் காட்டும் முயற்சியில், இ.தொ.கா. மற்றும் ம.ம.மு., -இராஜபக்ஷவின் ஒப்புதலுடன்- தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை அடக்குவதற்கு இந்த தொழிற்சங்கங்கள் தேவைப்படும் என்று உணர்ந்தே இராஜபக்ஷ தனது அனுமதியை கொடுத்தார்.

இந்த தொழிற்சங்கங்கள் இனவாதத்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கின்றன. இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், மாகாண சபைக்கு "ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவுசெய்ய இந்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும்" என்று அறிவித்தார். அதே வரியை எதிரொலித்த ம.ம.மு. செயலாளர் ஏ. லோரன்ஸ், "சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக மலையக தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும்." என்று அழைப்பு விடுத்தார்.

இனவாத அரசியலின் பின்னால் உள்ள அடிப்படை தேர்தல் கணிப்புகளை விளக்கிய ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், "தமிழ் வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு, எதிர் கட்சியான யூ.என்.பீ.க்கு அல்லது எங்களுக்கு என்ற முறையில் வாக்குகளை பிரித்தால், ஒரு தமிழ் பிரதிநிதி இந்த தேர்தலில் வெல்ல முடியாது", என பிரகடனம் செய்தார்.

"ஒரு தமிழ் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டால்" தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கூற்று ஒரு மோசடி ஆகும். இந்த தொழிற்சங்கங்கள், தோட்ட நிறுவனங்களின் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் நேரடியாக பொறுப்பாளிகளாக உள்ளன. ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் அங்கமாக இருப்பதனால், அவை ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான உக்கிரமடைந்துவரும் தாக்குதல்களுக்கும், அதே போல், தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பாரபட்சங்களுக்கும் தலைமை வகிக்கின்றன. உணவு, எரிபொருள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகளை உயர்த்துவதோடு மானியங்களையும் வெட்டித் தள்ளும் இராஜபக்ஷ அரசாங்கத்திலேயே இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் வறிய மட்ட சம்பளத்தில் ஒரு அற்பத் தொகையை உயர்த்தியமைக்குப் பிரதியுபகாரமாக, உயர்ந்த உற்பத்தி இலக்குகளை சுமத்தும் கூட்டு ஒப்பந்தங்களுக்கு அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் பொறுப்பாளிகள் ஆவர். 2006, 2008 மற்றும் 2010 இல், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இ.தொ.கா. தோட்ட நிர்வாகங்களுடன் செய்துகொண்ட சம்பள வியாபார ஒப்பந்தங்களை நிராகரித்தனர். ஆனால், தொழிலாளர்களின் சீற்றத்தை தணிக்கும் பொருட்டு தங்களை ஒப்பந்தத்தின் எதிரிகளாகக்" காட்டிக்கொண்ட ஜ.ம.மு. மற்றும் ம.ம.மு., ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தங்களுக்கு முடிவுகட்டின.

சகல தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் இந்த தொழிற்சங்க தலைவர்கள், ஒரு சலுகை பெற்ற தமிழ் முதலாளித்துவக் கும்பலின் நலன்களுக்காக செயற்படுகின்றனர். தொழிற்சங்கங்களை நடத்தும் இந்த அதிகாரத்துவத்தினர், செல்வந்த வர்த்தகர்களாவர், சிலர் சொந்தமாக பெருந்தோட்டங்களை வைத்துள்ளனர். அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்கும்,  தமது குழந்தைகளுக்கு போதுமான கல்வி, கெளரவமான வீடு  மற்றும் சுகாதார வசதியின்றி பிழைப்பதற்குப் போராடி வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் குடும்பங்களுக்கும் இடையில் பொதுவான எதுவும் கிடையாது.

தீவின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், பெருந்தோட்ட மாவட்டங்களில் ஒரு போலீஸ்-அரச ஆட்சியை பேணி வந்தன. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த பாதுகாப்பு படைகள், அவர்கள் அனைவரையும் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் சந்தேக நபர்களாகவே நடத்தின. சிலர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமாக மெல்லிய விமர்சனங்களை முன்வைத்த தொழிற்சங்கங்கள், இனவாத யுத்தத்தை ஆதரித்தன. கைது செய்யப்பட வேண்டிய தமிழ் இளைஞர்களின் பட்டியலை போலிசுக்கு வழங்குவதில் இ.தொ.கா. இழிபுகழ் பெற்றதாகும்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் திணிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை நிலைமைகள், 1948ல் சுதந்திரம் என்றழைக்கப்படுவதன் பின்னரும் தொடர்கின்றது. இலங்கை ஆளும் வர்க்கம் எடுத்த முதல் நடவடிக்கை, ஒரு மில்லியன் தமிழ் பேசும் தோட்ட தொழிலாளர்களின் பிரஜா உரிமையை ரத்து செய்வதாகும். 1964ல், புதுடில்லியுடன் கைச்சாத்திடப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், அரை மில்லியன் தொழிலாளர்கள் கட்டாயமாக தென்னிந்தியாவுக்கு நாடுதிரும்ப தள்ளப்பட்டனர். அவர்களில் அநேகமானவர்கள் இன்னமும் இழி நிலையிலேயே வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் இப்போது தங்கள் உரிமைகளை அனுபவிக்கின்றனர் என அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறுகின்ற அதே வேளை, அவர்கள் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் சார்பாக செயற்படுகின்ற நிலையில், இந்த ஒடுக்குமுறையின் மூல வேர் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிலேயே ஊண்றி இருக்கின்றது.

நவசமசமாஜ கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) போன்ற முன்னாள் இடது குழுக்கள், தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியில் வக்காலத்து வாங்குகின்றன. உழைக்கும் மக்களின் உரிமைகளின் காவலனாக ஜ.ம.மு.வை தூக்கிப் பிடிக்கும் நவசமசமாஜ கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும், வலதுசாரி யூ.என்.பீ.யின் கூட்டணியில் ஜ.ம.மு. உடன் சேர்ந்துகொண்டன. ஆயினும், இந்தக் கட்சிகள் இரண்டும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காகளிகளுடன் ஜ.ம.மு. கொண்டுள்ள புதிய கூட்டணியைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ளதன் படி, உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் மீதான ஒரு புதிய தாக்குதலுக்கான தயாரிப்புடனேயே மாகாணசபை தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, இனவாதத்தை நிராகரித்து, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடுவதே.

சோசலிச சமத்துவ கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், தோட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. மே மாதம், சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்காக ஹட்டனில் தோட்டத் தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை நடத்தியது.

அந்த மாநாடு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, ஒவ்வொரு தோட்டத்திலும் தங்கள் சொந்த உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைப்பதோடு, இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள ஏனைய தொழிலாளர் தட்டினரின் பக்கம் திரும்ப வேண்டும், என அழைப்பு விடுத்தது.

இந்த போராட்டமானது வங்கிகள், பெரிய தொழிற்துறைகள் மற்றும் தோட்ட நிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான ஒரு அரசியல் போராட்டம் அவசியம்.

சோசலிச சமத்துவ கட்சி போராடிவரும் வேலைத்திட்டம் இதுவே ஆகும். நாம், கேகாலை மாவட்டத்தில் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் நமது முன்னோக்கை கற்குமாறும் மற்றும் சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக உருவாக்க செயற்படுமாறும் தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.