World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Retrenched garment workers speak with SEP campaigners

இலங்கை: தொழிலை இழந்த ஆடைத் தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசினர்

By Kapila Fernando
18 August 2012
Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் கடந்த வாரக் கடைசியில் கட்சியின் மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் உள்ள யடியந்தொட்டையில் முன்னெடுத்தனர். கேகாலை மாவட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஆனந்த தவுலகல தலைமையில் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள சோ.ச.க. ஆகஸ்ட் 19 அன்று யடியந்தொட்டையில் ஒரு தேர்தல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

யடியந்தொட்டையில் உள்ள ரன்மலு பெஷன் ஆடைத் தொழிற்சாலை, கடந்த நவம்பரில் சுமார் 1,000 தொழிலாளர்களை எந்தவொரு நட்ட ஈடும் இன்றி வெளியேற்றி மூடுவிழா செய்யப்பட்ட போது வேலை இழந்த பெண் தொழிலாளர்களை சோ.ச.க. பிரச்சாரகர்கள் சந்தித்தனர். தொழிலாளர்கள் தாமும் பங்களிப்பு செய்துள்ள ஊழியர் சேமலாப நிதியைக் கூட பெறவில்லை.

19 வருடங்களாக அங்கு வேலை செய்த ஒரு பெண், அந்த தொழிற்சாலையின் ஒடுக்குமுறை நிலைமைகளை விளக்கினார். நாங்கள் வேலைக்கு சேர்க்கப்பட்ட போது, நாங்கள் எந்தவொரு தொழிற்சங்கத்தையும் அமைக்க முடியாது என நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆண்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என நினைத்த நிர்வாகம், எந்தவொரு ஆணையும் அங்கு வேலைக்கு சேர்க்கவில்லை. கடைசியாக நாங்கள் வெறுமனே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.

அரசாங்கத்தின் தொழில் திணைக்களத்தின் அணுகுமுறையை அவர் கண்டனம் செய்தார். தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர், நாங்கள் கடந்த டிசம்பரில் எங்களது கடைசி சம்பளத்தைப் பெற ஒன்று கூடிய போது, எங்களைக் கவலைப்பட வேண்டாம் என தொழில் திணைக்கள அதிகாரிகள் கூறினர். அவர்கள் ஊழியர் சேமலாப நிதி உட்பட நட்ட ஈடு பெற்றுத் தருவதாக கூறினர். ஆனால் ஒரு ஆண்டு கடந்தும் ஒன்றும் நடக்கவில்லை. தொழில் திணைக்களம் தொழிற்சாலை உரிமையாளர்களை பாதுகாக்கின்றது.

ரன்மலுவில் தொழிலை இழந்த இன்னொரு தொழிலாளியான எஸ். மகேஸ்வரி, தனது வறிய வாழ்க்கை நிலைமையைப் பற்றி பேசினார். நான் 10 வருடங்களாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்தேன். எனது அற்ப உணவுக்கு போதுமானவற்றை மட்டுமே என்னால் சம்பாதிக்க முடிந்தது. இப்போது நான் வேலை செய்யும் இடத்தில், ரன்மலுவில் கிடைத்ததை விட மிகக் குறைந்த, அடிப்படை சம்பளமாக 9,000 ரூபா [68 அமெரிக்க டொலர்] மட்டுமே கிடைக்கின்றது. நாங்கள் வீட்டுக் வாடகையாக 1,500 ரூபா செலுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் போது நாங்கள் எப்படி வாழ்வது?

ஒரு குடும்பப் பெண்ணான பத்மாவதி, தொழிலை இழந்ததால் தனது மகள் தாங்கமுடியாத சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். எனது மகளுக்கு இரட்டையர்கள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர் ரன்மலுவில் தனது தொழிலை இழந்த பின்னர், அவர் மேலும் இரண்டு மாதங்களுக்கு அருகில் உள்ள அவிஸ்ஸாவலை நகரில் பிராடெக்ஸ் என்ற தொழிற்சாலையில் வேலை செய்தார். அவரது பிள்ளைகள் சுகயீனமுற்றிருந்த போதிலும் கூட அவரால் தொழிற்சாலையில் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் தொழிலை கைவிடத் தள்ளப்பட்டார். இப்போது அவர் கொழும்புக்கு அருகில் தேயிலை பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றார்.   

ஒரு உள்ளூர் வாசியான மெனிகே, தொழிற்சாலையை மூடுவதற்கு அனுமதித்தமைக்காக முன்னாள் சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் சம்பந்தமாக அதிருப்தியை வெளியிட்டார். ஹேரத், ஜனாதிபதி மஹிந்த இராஜ்பக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணத் தலைவராவார். பல மாதங்களாக மெளனமாக இந்த அழிவை அலட்சியம் செய்துவிட்டு, மஹிபால தனக்கு வாக்களிக்குமாறு [எதிர்வரும் தேர்தலில்] கேட்கின்றார் என அவர் கூறினார்.

மெனிகே மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்களுக்கு எங்கள் வீட்டில் தங்குமிடம் கொடுத்து வந்தோம். அவர்களுக்கு எங்கள் வீட்டு அறைகளை வாடகைக்கு விட்டும் அவர்களுக்கு உணவு கொடுத்தும் ஒரு சிறிய வருமானத்தை நாம் பெற்றோம். கம்பனி இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு தொழிற்படையை குறைத்து, பின்னர் தொழிற்சாலையை மூடிவிட்டது. டிசம்பரில் இருந்து, எமது வருமானம் அனைத்தும் இல்லாமல் போய்விட்டது. இப்போது அவருக்கு அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தில் இருந்து ஒரு சிறிய தொகை மட்டுமே கிடைக்கின்றது.

ரன்மலு பெஷனில் தொழிலை இழந்த ஒரு பெண்ணின் தாயார், அவரது புதிய தொழிற்சாலையில் ஒடுக்குமுறை நிலைமைகள் பற்றி விளக்கினார். நிர்வாகிகள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 வரை 10 மணித்தியாலங்கள் வேலை செய்யச் சொல்கின்றனர். சில சமயம் அவர்கள் கிழமையில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆயினும் மாதக் கடைசியில் அவர்கள் கொடுக்கும் சம்பளம் 12,000 ரூபாயை [91 அமெரிக்க டொலர்] தாண்டாது. தனது மகளின் சம்பளம் நான்கு பேர் அடங்கிய குடும்பத்தை சற்றே தாங்கக் கூடியது என்று அவர் விளக்கினார்.

இராஜபக்ஷ அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒரு ஆண்டுக்கு முன்னரே நடத்துவது ஏன் என்பதை, வேலையிழந்த ரன்மலு பெஷன் தொழிலாளர்களின் சீற்றம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அது தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பில் இருந்து தலை தப்புவதன் பேரில் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற அரச வளங்கள் மீதான அதன் கட்டுப்பாட்டை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

கிராமப்புற பகுதிகளில் 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஸ்தாபிக்கும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் திட்டத்தின் கீழேயே 1992ல் ரன்மலு பெஷன் திறந்துவைக்கப்பட்டது. இந்த திட்டம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்பை வழங்குவதற்காக ஒடுக்கப்பட்ட வேலையற்ற கிராமப்புற இளைஞர்களை சுரண்டுவதற்கு திட்டமிடப்பட்டதாகும். இந்த முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் கடன் வசதிகளும் கிடைக்கின்ற அதே வேளை, தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் மறுக்கப்படுகின்றன. இராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட அடுத்து வந்த அரசாங்கங்கள் இந்தத் திட்டத்தை தொடர்கின்றன.

2008ல் இருந்து ஆழமடைந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மூடுவிழா நடத்தப்பட்ட டசின் கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளில் ரன்மலு பெஷனும் ஒன்றாகும். ரன்மலு பெஷன் தொழிலாளர்களின் அனுபவங்கள், தீவு பூராவும் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான தலைவிதியை வெளிக்காட்டும் ஒரு மாதிரி மட்டுமேயாகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை ஆடை ஏற்றுமதியின் பெறுமதி 3.1 ஒரு வீதத்தால் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்பிரலிலான வீழ்ச்சிகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, முறையே 10 மற்றும் 9 வீதங்களாக உள்ளன. இந்த புள்ளிவிபரங்கள், ஆரம்ப பூகோள நிதிப் பொறிவினைத் தொடர்ந்து 2009ல் பதிவான 13 வீத ஆண்டு வீழ்ச்சியின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியாகும்.

மோசமடைந்து வரும் நெருக்கடியின் பூகோளப் பண்பை சோ.ச.க. பிரச்சாரகர்கள் விளக்கினர். தொழிலாளர்கள் சம்பள வெட்டு மற்றும் நலன்புரி வெட்டுக்களாலும், வெகுஜன வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும், சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக, சீனா போன்ற வற்றின் தலைமையிலான மலிவு உழைப்பைக் கொண்ட ஆசிய ஏற்றுமதி தொழிற்துறை, சுருங்கிப் போயுள்ளது.

2011ன் போது, நாட்டின் வெளிநாட்டு வருமானத்தைப் பெறும் இரண்டாவது பெரிய தொழிற்துறையான இலங்கை ஆடை ஏற்றுமதித் துறை, பெரும் கம்பனிகள் அமுல்படுத்திய துரிதப்படுத்தல் திட்டத்தின் விளைவாக உண்மையில் விரவாக்கம் கண்டன. இந்தியத் துணைக்கண்டத்தின் இன்னொரு பிரதான ஆடை ஏற்றுமதி நாடான பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்களின் நீண்டகால வேலை நிறுத்தங்கள் காரணமாக, இலங்கை கம்பனிகளுக்கு கிடைத்த புதிய உற்பத்தி வேண்டுகோள்களால் நன்மை கிடைத்தது.

எவ்வாறெனினும், சர்வதேச சந்தையின் தலைகீழ் சரிவின் காரணமாக, ஆடை உற்பத்தி நாடுகளுக்கு இடையில் கழுத்தை அறுக்கும் போட்டி உக்கிரமடைந்தது. டெயிலி மிரர் பத்திரிகையில் அண்மையில் வெளியான கட்டுரை தெரிவித்ததாவது: ஐரோப்பாவில் விற்பனை குறைந்துள்ளதனால் கொள்வனவு சக்தியில் வீழ்ச்சி ஏற்படக் கூடும்.

உலகம் பூராவும் வளர்ச்சியடையும் போராட்டங்கள் பற்றி கவனத்தை திருப்பிய சோ.ச.க. உறுப்பினர்கள், தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க வேண்டிய அவசியத்தையும் மற்றும் தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கக் கூடிய முன்னோக்கின் தேவையையும் பற்றி விளக்கினர். சோசலிசத்துக்கான அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கான போராட்டத்தினதும் சோசலிச வேலைத் திட்டத்தினதும் அவசியம் பற்றி அவர்கள் கலந்துரையாடினர்.

தொழிலாளர்கள் கட்சியின் வேலைத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, யடியாந்தொட்டை கூட்டத்தில் பங்குபற்றுவதில் கணிசமானளவு ஆர்வம் காட்டினர்.