World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Vote SEP in Sri Lankan provincial elections

இலங்கை மாகாண சபை தேர்தலில் சோ.ச.க.க்கு வாக்களியுங்கள்

By Socialist Equality Party (Sri Lanka)
07 September 2012

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, செப்டெம்பர் 8 அன்று நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

வாழ்க்கை நிலைமைகள், கல்வி, நலன்புரி சேவை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் போன்ற உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளை, அனைத்துலக சோசலிச முன்நோக்குக்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே தீர்க்க முடியும். குறுகிய மாகாண சபைகளுக்குள் அல்லது தேசிய மட்டத்தில் தீர்வுகாண முடியும் என வாக்குறுதியளித்து, மீண்டும் வெகுஜனங்களை ஏமாற்ற முனையும் சகல மோசடி அரசியல் கட்சிகளையும் நிராகரிக்குமாறு நாம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். 

சனிக்கிழமை நடக்கவுள்ள தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியம் கோரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என சோ.ச.க. ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது. மேலும் 500 மில்லியன் டொலர் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்க்கும் இராஜபக்ஷ, இந்த ஆண்டின் முடிவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 6.2 ஆகக் குறைக்க உடன்பட்டுள்ளார். இது எதிர்வரும் மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமையில் ஆழமான சீரழிவை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், குண்டர் நடவடிக்கைகள் மற்றும் அரச வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. தேர்தல் செயலகத்தின் படி, வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் பற்றிய 337 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றில் அநேகமானவை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிரானவையாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை முன்னெடுப்பதற்கு வெகுஜன ஆதரவு இருப்பதாக போலியாக கூறிக்கொள்வதற்காக எவ்வழியிலாவது தேர்தலில் வெற்றிபெறுவதே அதன் இலக்காகும்.

இராஜபக்ஷ நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்கின்றார். அவர் செப்டெம்பர் 2 கேகாலையில் நடந்த தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த கூட்டத்தை உரையாற்றுவதற்குப் பயன்படுத்திக்கொண்டதோடு இந்த நாட்டை ஆசியாவின் மையமாக ஆக்கி, மக்களுக்கு பிரமாண்டமான சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கச் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். இந்த தேர்தலின் ஊடாக, நாடு சரியான பாதையில் செல்கின்றது என்ற உண்மையான செய்தியை சர்வதேச சமூகத்துக்கு மக்கள் விடுப்பார்கள் என்று தொடர்ந்து கூறினார்.

ஆனால், பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும் போலவே, இலங்கையும் அழிவுகரமான யுத்த ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் அமெரிக்க-சீன பகைமையின் நீர்ச்சுழிக்குள் இழுபட்டுச் செல்கின்றது. இலங்கை அரசாங்கத்தை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக வைப்பதற்காக நெருக்குவதன் பேரில், வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக உரிமை மீறல்களை பயன்படுத்தி வருகின்றன. இராஜபக்ஷவின் செய்தியானது அழுத்தத்தை தளர்த்துமாறு அமெரிக்காவுக்கு விடுக்கும் அற்ப வேண்டுகோளாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின்னர், சமாதானமும் சுபீட்சமும் வரும் என இராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது அரசாங்கம் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை பேணி வருகின்றது என ஜனாதிபதி பெருமைப்பட்டுக் கொண்டாலும், மோசமடைந்து வரும் பூகோள பொருளாதார நிலமை தீவின் பொருளாதாரத்தின் மீது கனமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏற்றுமதி வருமானமும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானமும் குறைந்து வருவதனால் ஏற்பட்டுள்ள சென்மதி நிலுவை பற்றாக்குறை அதிகரிப்பை தணிப்பதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறத் தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு தொழிற்துறை வேலைத் தளம் கூட ஸ்தாபிக்கப்படவில்லை.

இது உழைக்கும் மக்களுக்கு அழிவுகரமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. வேலையற்றவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. சம்பள அதிகரிப்புகள் முடக்கப்பட்டுள்ள அதே வேளை, மறு பக்கம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதுடன் பணவீக்க வீதமும் அதிகரித்து வருகின்றது. அரசாங்கம் உணவு, எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கான விலை மாநியங்களை வெட்டிக் குறைத்துள்ளது. அதே சமயம், அது கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளுக்கான செலவுகளையும் வெட்டித் தள்ளியுள்ளது.

கிராமப்புற இலங்கையின் பிரமாண்டமான பகுதி முன்னெப்போதும் இல்லாத ஒரு அழிவை எதிர்கொண்டுள்ளது. வரட்சியின் காரணமாக 12 மாவட்டங்களில் 150,000 ஏக்கர்களின் நெற் பயிர்ச்செய்கை இழக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி போலியானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணத்தில் உடனடி நிவாரணங்களைக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடினர்.

வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் அடக்குமுறையின் மூலம் பதிலிறுத்தது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறை, இப்போது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிராகத் திருப்பப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின் மீது பொலிஸ் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார், ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மீது சுட்டதில் இன்னொருவர் கொல்லப்பட்டார்.

அரசியல் ஸ்தாபனத்தின் எதிர்க் கட்சிகள் எவையும் உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு மாற்றீட்டையும் வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பீ.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.) புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்ததோடு அதன் யுத்தக் குற்றங்களையும் ஜனநாயக உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தின. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டம் சம்பந்தமாக இந்தக் கட்சிகளில் எவற்றுக்கும் அடிப்படை முரண்பாடுகள் இல்லாததோடு அவை தற்போதைய ஆளும் கூட்டணியைப் போலவே அவற்றை ஈவிரக்கமற்று அமுல்படுத்தும். யூ.என்.பீ. 1970களின் பிற்பகுதியிலேயே சந்தை-சார்பு மறு சீரமைப்பை ஆரம்பித்ததோடு அதே நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்திய 2004-05 ஸ்ரீ.ல.சு.க. கூட்டரசாங்கத்தின் பங்காளியாக ஜே.வி.பீ. இருந்தது.

தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) சபரகமுவ மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் (ஜ.ம.மு.) ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக்கொண்டு போட்டியிடுகின்றன. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளான இ.தொ.கா. மற்றும் ம.ம.மு, மற்றும் யூ.என்.பீ. உடன் கூட்டணி வைத்துள்ள ஜ.ம.முன்னணியும், ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற மோசடியை முன்னிலைப்படுத்துகின்றன. இந்தக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக தமிழ் தொழிலாளர்களை அவர்களது சிங்கள தொழிலாள சகோதரர்களில் இருந்து பிளவுபடுத்தும் அதே வேளை, தமது சொந்த நலன்களை பெருகச் செய்ய முயற்சிக்கும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி தீவிரவாத அமைப்புகள், மிகவும் அழிவுகரமான அரசியல் பாத்திரத்தை ஆற்றுகின்றன. நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், யூ.என்.பீ. தம்மை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக மோசடியான முறையில் காட்டிக்கொள்வதை நியாயப்படுத்த உதவுவதன் பேரில், யூ.என்.பீ.யின் சுதந்திரத்துக்கான மேடை என்றழைக்கப்பட்டதில் இணைந்துகொண்டன. இந்தக் கட்சிகள் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பாகமாக இயங்கி வருவதோடு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வுக்காக சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.

உள்நாட்டு யுத்தத்தை எதிர்ப்பதிலும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதிலும் கொள்கைப் பிடிப்பான நீண்ட வரலாற்றைக் கொண்டே ஒரே ஒரு கட்சி சோ.ச.க. மட்டுமே. நாம் முதலாளித்துவ முறைமைக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுடன் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றோம். முன்னெப்போதையும் விட இந்தப் பணி இப்போது அவசரமானதாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தமது வாழ்க்கைத் தரத்தின் மீதான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களையும், அதே போல் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான ஆழமடைந்துவரும் பகைமை மற்றும் யுத்த ஆபத்தினையும் எதிர்கொள்கின்றனர்.

சோ.ச.க., சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை அமைப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும், அவர்களுக்குப் பின்னால் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டவும் முயற்சிக்கின்றது. ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகள், தொழிற்துறைகள் மற்றும் சேவைகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஒட்டு மொத்த மனித குலத்தினதும் அபிலாஷைகளை திருப்திப்படுத்த சமுதாயம் உலக ரீதியில் மறு ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமானது தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்கான மற்றும் அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டத்துடன் முழுமையாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

எமது சகோதரக் கட்சியான அமெரிக்க சோ.ச.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரீ வைட்டின் அண்மைய விஜயம், சோ.ச.க.யின் அனைத்துலக வேலைத் திட்டத்தை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது. வங்குரோத்து முதலாளித்துவ ஒழுங்கை தூக்கி வீச, அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் பாகம் என்ற வகையில், அமெரிக்க தொழிலாளர்களும் இலங்கைத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே தமது வர்க்க நலன்களை பாதுகாக்க முடியும். நாம் எமது கட்சிக்கு வாக்களிக்குமாறும், எமது வேலைத் திட்டத்தை கற்குமாறும் மற்றும் சோ.ச.க.யை ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் கேகாலை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.