World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Ruling UPFA wins provincial elections but with reduced votes

இலங்கை: ஆளும் ஐ.ம.சு.மு. மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதன் வாக்குகள் குறைந்துள்ளன

By Deepal Jayasekera
10 September 2012
Back to screen version

 

இலங்கையில் சனிக்கிழமை நடந்த மாகாணசபை தேர்தலில், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைக்கப் போதுமான ஆசங்களை அதனால் பெற முடியவில்லை.

 

முன்னதாக 2008ல் நடந்த மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, சுதந்திர முன்னணியின் ஆசங்கள் 65ல் இருந்து 63 ஆகக் குறைந்துள்ள அதே வேளை, அதன் வாக்குகள் 54.7 வீதத்தில் இருந்து 51.1 வீதம் வரை குறைந்துள்ளது. இந்த புள்ளி விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது கிராமப்புற வறியவர்கள் மத்தியில் காணப்படும் பரந்த அதிருப்தியின் ஒரு சிறிய வெளிப்பாடாகும்.

 

ஆளும் கூட்டணி வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தனது ஆசங்களை முறையே 20ல் இருந்து 21 வரையும், மற்றும் 25 முதல் 28 வரையும் அதிகரித்துக்கொண்டுள்ளது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாகாணங்களில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் மற்றும் அவர்களை இனவாத முறையில் வாக்களிக்கச் செய்யவும், வேண்டும் என்றே தமிழர்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிட்டதன் மூலமே அது இந்த அதிகரிப்பைப் பெற்றது.

 

சுதந்திர முன்னணி தலைவர்கள், 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள், சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் இலங்கையிலும் வெளிநாட்டிலும் மீண்டும் கூடுகின்றனர் என்று பீதியை கிளப்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். தனது அரசாங்கம் மேற்கத்தைய சக்திகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டிய இராஜபக்ஷ, சர்வதேச சமூகத்துக்கு எதிராக நாட்டை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் போலியானவையாகும். அமெரிக்கா உட்பட சகல மேற்கத்தைய சக்திகளும் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு அதன் யுத்தக் குற்றங்கள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களையும் பற்றி பெருமளவில் மௌனமாக இருந்தன. இப்போது வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் மனித உரிமைகள் பிரச்சினையை சுரண்டிக்கொள்வது தீவின் தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலக்குவதற்கு நெருக்குவதற்கே ஆகும்.

 

கணிசமானளவு தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கும் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில், சுதந்திர முன்னணிக்கான ஆசணங்கள் 20ல் இருந்து 14 ஆக சரிந்துள்ளன. 2008ல் அதனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் (டீ.எம்.வி.பீ.) கூட்டுச் சேர்ந்து மாகாண ஆட்சியொன்றை அமைக்க முடிந்தது. ஆனால் அதனால் இம்முறை அவ்வாறு செய்ய முடியாமல் போனது.

 

புலிகளில் இருந்து பிரிந்து சென்ற டீ.எம்.வி.பீ., குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் வாழும் அரசியல் எதிரிகளை பயமுறுத்துவதில் இழிபுகழ்பெற்றதாகும். யுத்தத்தின் முடிவின் பின்னர் பெருந்தொகையான தமிழர்களும் முஸ்லிம்களும் இழி நிலையிலான அகதி முகாங்களில் வாழ்ந்து வருவதோடு, அவர்கள் தமது வாக்குகளை அரசாங்கம் மற்றும் டீ.எம்.வி.பீ. மீதான தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய பயன்படுத்தியுள்ளனர்.

 

கிழக்கு மாகாணத்தில் நிர்வாகம் ஒன்றை அமைக்க வேண்டுமெனில் சுதந்திர முன்னணியானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை (ஸ்ரீ.ல.மு.கா.) நம்பியிருக்க வேண்டும். ஸ்ரீ.ல.மு.கா. கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் இராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதிலும், அந்தக் கட்சி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிட்டது இது அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஆழமான அதிருப்தியின் சமிக்ஞையாகும்.

 

இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியம் கோரும் அடுத்த சுற்று சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு மக்கள் ஆணையைப் பெறவும் மற்றும் அவரது அரசாங்கத்தின் மனித உரிமைகள் சாதனையைப் பற்றிய சர்வதேச விமர்சனங்களை மழுங்கடிக்கவும் மேற்கொள்ளும் முயற்சியாகவே முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். சுதந்திர முன்னணி அரச வளங்களை தவறாகவும் மற்றும் குண்டர் வழிமுறைகளையும் பயன்படுத்தியிருந்த போதிலும், தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி எதிர்பார்த்ததைப் போன்ற அங்கீகாரம் அல்ல.

 

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள் எந்தவொரு முறையான மாற்றீட்டையும் வழங்காமையினால் மட்டுமே சுதந்திர முன்னணியின் வாக்குகள் மேலும் சரியவில்லை. அவர்களின் கொள்கைகள் சுதந்திர முன்னணியின் கொள்கைகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. இரு கட்சிகளும் சிங்கள இனவாதத்தில் மூழ்கிப் போனவையே. அவர்கள் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு சர்வதேச நிதி மூலதனம் கோரிய சந்தை சார்பு திட்டங்ளையும் ஆதரித்தன.

 

கடந்த 18 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த யூ.என்.பீ., உட்கட்சி மோதல்களால் ஆழமாக பிளவுபட்டுள்ளது. இந்த மூன்று மாகாணங்களிலும் அது கொண்டிருந்த ஆசணங்களின் எண்ணிக்கை 44ல் இருந்து 29 வரை வீழ்ச்சியடைந்ததோடு அதன் வாக்கு வீதம் 40.2 வீதத்தில் இருந்து 27.7 வீதமாக குறைந்து போனது. ஜே.வி.பீ., சபரகமுவவில் அதன் இரு ஆசணங்களையும் கிழக்கில் அதன் ஒரு ஆசணத்தையும் இழந்துவிட்டதோடு இப்போது வட மத்திய மாகாணத்தில் ஒரு ஆசணத்தை மட்டுமே கொண்டுள்ளது. அதன் வாக்குகள் 2.8 வீதத்தில் இருந்து 1.6 வீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன.

 

யூ.என்.பீ., ஜே.வி.பீ ஆகிய இரண்டும் வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கைச் செலவுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்த போதிலும், இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் வித்தியாசமாக எதாவது செய்வார்கள் என்று நம்புபவர்கள் மிகச் சிலரே.

 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசணங்களை வென்றுள்ளது. இது தமிழ் கூட்டமைப்பை அங்கீகரிப்பது என்பதை விட, பெருமளவில் அரசாங்கத்துக்கு எதிரான தமிழ் சிறுபான்மையினரின் எதிர்ப்பு வாக்காகும். புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் இருந்தே, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் நுழைந்துகொள்ள ஏக்கத்துடன் முயற்சித்து வருகின்றது.

 

இப்போது தமிழ் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவ தட்டுக்கு ஒரு பெரும் அரசியல் சிறப்புரிமையை கொடுக்கும் அதிகாரப் பகிர்வு ஒழுங்குக்காக இராஜபக்ஷவை நெருக்குமாறு சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுக்க தனது தேர்தல் வெற்றிகளைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகின்றது. கட்சி சிறப்பாக வெற்றி பெற முயற்சித்தமை தெளிவு. தமிழ் வாக்குகள் போதாதன் காரணமாக, எதிர்பார்த்ததை விட குறைந்த வாக்கே கட்சிக்கு கிடைத்தது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அசோசியேடட் பிரசுக்குத் தெரிவித்தார்.

 

தேர்தல் முடிவுகள், இலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் நிலைமையின் உச்சளவு திரிபுபட்ட பிரதிபலிப்பாகும். இந்தப் பிரச்சார காலம் பூராவும், வாழ்க்கை நிலைமை சீரழிவுக்கு எதிராக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் மற்றும் மாணவர்களதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெற்று வந்தன. சுமார் 15,000 மின்சார சபை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஒரு வாரம் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதே வேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். வரட்சி நிவாரணம் தருவதாக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை எதிர்த்து வட மத்திய மாகாணத்தில் விவசாயிகள் அடிக்கடி போராட்டம் நடத்தியதோடு பல்கலைக்கழகம் மூடப்படுவதற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இராஜபக்ஷ அரசாங்கம் அதன் சிக்கன திட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கவும், சகல முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயதீனமாக தொழிலாளர்களையும் கிராமப்புற வறியவர்களையும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதை தொடங்கவும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது. சோ.ச.க. வென்ற 86 வாக்குகளில் ஒவ்வொன்றும், சோசலிச மற்றும் அனைத்துலக மாற்றீட்டுக்காக வர்க்க நனவுடன் வழங்கப்பட்ட வாக்காகும்.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க சோ.ச.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் இலங்கைக்கு வந்திருந்ததோடு கேகாலை உட்பட்ட இடங்களில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். அவரது விஜயமானது அனைத்துலக ட்ரொட்ஸ்கி இயக்கத்தின் முன்நோக்கின் இதயமான சோசலிச அனைத்துலகவாதத்தை வெளிப்படுத்தியது. முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடி மோசமடைந்துகொண்டிருக்கின்ற நிலையில் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் வங்குரோத்து இலாப முறைமையை தூக்கி வீசுவதே ஒரே தீர்வாகும்.

 

தமிழ் பேசும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட கணிசமானளவு தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரத்தில் ஆர்வங் காட்டினர். எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கும் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். நாம் கட்சியின் வேலைத் திட்டத்தை அக்கறையுடன் கற்குமாறும் சோ.ச.க.யை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.