World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Latest moves by Fed and European Central Bank

Financial parasitism and looting are the “new normal”

அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பினதும் ஐரோப்பிய மத்திய வங்கியினதும் சமீபத்திய நடவடிக்கைகள்

நிதியியல் ஒட்டுண்ணித்தனமும் கொள்ளையும்புதிய இயல்பு நிலை ஆகியுள்ளன

Nick Beams
17 September 2012
Back to screen version

சென்ற வாரத்தில் அறிவிக்கப்பட்ட அதிகளவு பணத்தை அச்சடித்து புழக்கத்தில்விடும் Quantitative Easing என்றழைக்கப்படுவதன் மூன்றாவது சுற்று (QE3) ஒன்றின் கீழ் நிதிச் சந்தைகளுக்கு காலவரையற்ற உதவியை வழங்குவதற்கு அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவும், முன்னதாக பத்திரச் சந்தைகளில் தலையீடு செய்வதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி செய்திருந்த முடிவும் சேர்ந்து, லேஹ்மென் பிரதர்ஸ் பொறிவுடன் ஆரம்பித்த உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நிலைமுறிவில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கின்றன.

2008 செப்டம்பரில் நிதிச் சந்தைகள் உருக்குலைவின் விளிம்பில் நின்றதன் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒரு சமயத்தில்இயல்புநிலைமைகளாகக் கருதப்பட்ட நிலைமைகளுக்குத் திரும்புவதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை என்பதையே உலக நிதி அமைப்புமுறைக்குள் மேலும் பணத்தை அச்சடித்து புழக்கத்தில்விடும் உலகின் முக்கிய மத்திய வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்துக் காட்டுகின்றன.

வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்குமான தனது உதவியை குறைப்பதற்கு அப்பாற்பட்டு, அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு அதை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய தலையீடுகள் எல்லாம் கால வரம்புகளுடன் செயல்படுத்தப்பட்டன. சமீபத்திய முடிவிலோ அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு காலவரையற்ற உறுதியை வழங்கியிருக்கிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் தலைப்பு கூறுவதைப் போல, ”அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு தனது பார்வையை முடிவற்ற காலத்திற்கும், அதற்கும் அப்பாலும் நிறுத்தியுள்ளது.”

இதைத்தவிரவும், இந்த கடமைப்பாட்டின் வடிவமும் கூட ஒரு முக்கிய திருப்பத்தைக் குறிக்கிறது. கருவூலப் பத்திரங்களை வாங்குவதற்குப் பதிலாக அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் அடமானப் பிணையுடனான பத்திரங்களை வாங்குவதற்கென மாதத்திற்கு 40 பில்லியன் டாலர் தொகை வரையிலும் கொண்டு தலையீடு செய்யவிருக்கிறது. வங்கிகளின் பொறிவிற்குத் தூண்டுதலை வழங்கியபெறுமதியற்ற சொத்துகள்சிலவற்றை வங்கிகள் தள்ளி விடுவதற்கு இது வழிவகையளிக்கும்.

விருந்து நடக்கும்போதே மதுரசப் பாத்திரத்தை எடுத்து விடுவது தான் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் பணி என்பதாகக் கூறப்பட்டு வந்தது. இனி அப்படிக் கிடையாது. இப்போது மதுவை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு உறுதிப்பாடு கொண்டிருப்பதுடன், எல்லைவரையறையற்று வழங்கிக்கொண்டே இருக்கும் வாக்குறுதியை அது அளித்திருக்கிறது.

இந்த முடிவிற்கு நியாயம் கற்பிப்பதற்கு அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவரான பென் பெர்னான்கே அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மையின் மிக உயர்ந்த மட்டங்கள் தொடர்வதையும் (அமெரிக்காவில் இப்போது நிலவுகின்ற மிகக் குறைந்த ஊதிய மட்டங்களிலும் கூட வேலை எண்ணிக்கை வளர்ச்சியென்பது மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கத் தோற்றிருக்கிறது) மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சியையும் மேற்கோள் காட்டினார். வழமையான தத்துவம் சொல்வதன் படி, அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகள் எல்லாத் துறைகளிலும் வட்டி விகிதங்களைக் குறைக்கும், அதன்மூலம் பெருநிறுவனங்களுக்கு முதலீட்டு முடிவுகளில் கவர்ச்சிகரமாக்கி, இது பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கும் இட்டுச் செல்லும் என்பதாகும்.

ஆனால் நிதி வட்டாரங்களில் உள்ள ஏனையோருக்கு தெரிவதுபோல் அந்த நிபந்தனைகள் எல்லாம் செயல்படுவதில்லை என்பது பெர்னான்கேவுக்கும் தெரியும். பெருநிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் மேலாய் நிதி நிறுவனங்கள், தொடர்ந்து இலாபங்களைக் குவிக்கின்றன, ஆனால் புதிய உற்பத்தி முதலீட்டுக்கு நிதியாதாரம் வழங்கும் பழக்கமெல்லாம் அவற்றுக்குக் கிடையாது. மாறாக அந்த இலாபங்கள் ஊக வணிகத்தில் செலுத்தப்படுகின்ற மிகப் பெரும் பணக் குவியல் கையிருப்புகளுக்குள்ளேயே பாய்ச்சப்படுகிறது.

மேலும், ஐரோப்பாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி, அரசாங்கச் செலவினத்திலான வெட்டுகள் ஊதியங்களைக் குறைத்து வேலைவாய்ப்பின்மையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதன்மூலமாக நுகர்வுத் தேவையையும் குறைத்துக் கொண்டிருக்கிறது. செலவினத்தை வெட்டி வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும் நோக்குடனான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்ற அரசாங்கங்களின் பத்திரங்களை மட்டுமே தான் வாங்கவிருப்பதை ஐரோப்பிய மத்திய வங்கி நிபந்தனையாக வைத்திருக்கிறது. அமெரிக்காவில், அரசாங்கச் செலவினம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டு முடிவில்நிதி உச்சி” (fiscal cliff-வரையறுக்கப்பட்டுள்ள சில விதிகளை தாமாகவே காலாவதியாக போகவிடுகையில்  வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை குறையும் மற்றும் வளர்ச்சி மந்தமாகும் என 2012களின் எதிர்பார்க்கப்படும்) என்றழைக்கப்படுவதான ஒன்று வந்து சேருவதை அடுத்து செலவினம் இன்னும் சரியும். அப்போது காங்கிரஸ் செய்த முந்தைய முடிவுகளின் படி வெட்டுகள் தானாக இயங்கும் வகையில் செயற்பாட்டுக்கு வரும்.

பொருளாதார மீட்சிஎன்கிற பதத்திற்கு உண்மையான எந்த அர்த்தத்திலுமான ஒரு மீட்சியைக் கொண்டுவருகின்ற நோக்கத்துடன் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் முடிவு இல்லை. மாறாக, உண்மையான பொருளாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலமாக இல்லாமல் மாறாய் நிதிய செயல்பாடுகளின் மூலமாக பங்குகள் மற்றும் சொத்துப் பிணை கொண்ட பத்திரங்களின் விலையை அதிகரித்து, அதன்மூலம் பெருநிறுவனங்களின் இலாபங்களை, எல்லாவற்றுக்கும் மேலாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இலாபங்களை உயர்த்துவது தான் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் சந்தைத் தலையீட்டின் நோக்கமாய் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்த நிதி ஒட்டுண்ணித்தனம் லேஹ்மென் பிரதர்ஸ் பொறிவுக்கும் அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியமைப்பு முறையின் ஏறக்குறைய உருக்குலைந்த நிலைக்கும் இட்டுச் சென்றதோ, அது இப்போது அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ கொள்கையாகவே மாறி விட்டிருக்கிறது.

இந்தக் கொள்கை எந்த வர்க்க நலன்களுக்குச் சேவை செய்கிறது என்பதை அது அமுலாக்கப்படுகின்ற விதத்திலும் அதன் பின்விளைவுகளில் இருந்தும் கண்டு கொள்ள முடியும்.

அது அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளை நிதியியல் செய்தியாளரான மைக்கேல் வெஸ்ட் சனியன்றான சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் துல்லியமாக சுருங்கக் கூறியிருக்கிறார்.

அவர் எழுதினார்: “அவர்கள் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு  ’செயல்பட வேண்டும் எனக் கோரினார்கள். ’செயலின்மையின் பின்விளைவுகள்  ‘அபாயமானவையாக இருந்ததாக அலறினார்கள். அதன்பின்அட்டகாசமான பண அச்சடிப்பு  உற்சவத்தைக் கொண்டுவோல்ஸ்ட்ரீட் வாசிகளின் வேண்டுகோளுக்கு பெர்னான்கே இணங்கினார்அதன்பின் இந்நடவடிக்கையை வேலைவாய்ப்பவற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகக்  காட்டுமளவுக்கு அவர்களுக்கு அகந்தையும் இருந்தது. உண்மையில், வங்கிகள் அவற்றின் இயக்கமற்றுப்போன அடமானக் கடன்களை மாதம் 40 பில்லியன் டாலர் அளவுக்கு வரிசெலுத்துவோரின் மடியில் இருந்து வாரிக்கொள்வதற்கான வாய்ப்பு பெற்றன.”

அவர் குறிப்பிட்டதைப் போல, அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு வெறும் அரசாங்கப் பத்திரங்களை மட்டும் வாங்கவில்லை, மாறாக  “வோல் ஸ்டீரிட்டின் வரவுசெலவு அறிக்கைகளில் அடைத்துக் கொண்டு நிற்கும் அடமானப் பிணை  பத்திரங்களையும்வாங்குகிறது.

அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் முடிவு உலகளாவிய பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். அவை எல்லாமே  தொழிலாளர்களின் மற்றும் அதேபோல் உலகின் மிகவும் ஏழ்மைப்பட்ட மக்களின், சமூக மற்றும்  பொருளாதார நிலைமைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கும். இந்த முடிவு  அறிவிக்கப்பட்ட மறுகணமே எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்து, பண்டப் பொருட்கள் ஊக  வணிகத்தின் ஒரு புதிய சுற்றின் ஆரம்பத்திற்கு சமிக்கை காட்டியது.

இது போக்குவரத்துக்கும் மற்றும் சமையல் மற்றும் வீடுகள் சூடாக்க உதவும் எரிபொருட்களின் விலைகளைப் பாதிக்கும், அது அடிப்படை உணவுப் பொருட்களிலான பணவீக்கத்தை தூண்டிவிடும்பில்லியன்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதான மக்காச்சோளம், கோதுமை மற்றும்  சோயா ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அதிகரிக்கத்தொடங்கி விட்டிருக்கின்றன.

பணத்தை அச்சடிப்பதன் மூலமாக, அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு உலக நாணயமதிப்புச் சந்தைகளில் அமெரிக்க டாலரின்  மதிப்பையும் கீழறுக்கிறது. இது யூரோ மதிப்பு உயரக் காரணமாவதால் ஐரோப்பாவிலும் கணிசமான  பாதிப்பைக் கொண்டிருக்கும். ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித்திறனில் அதிகமாய் இது சிரமம் ஏற்படுத்தும் என்பதால் அங்கு ஏற்றுமதிகள் இன்னும் அதிகமாய்க் குறைந்து வேலைவாய்ப்பின்மை  அதிகரித்துச் செல்ல இட்டுச் செல்லும்.

நாணயமதிப்பு அதிகரிப்பினால் ஏற்கனவே கனமான பாதிப்பைக் கண்டிருக்கக் கூடிய பிரேசில் மற்றும்  ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இன்னும் அதிகமான பாதிப்புக்குள்ளாகும். டாலர் மீதான மேலதிக அழுத்தமானது, தேசிய அரசாங்கங்கள் தமது ஏற்றுமதிச் சந்தையை காப்பாற்றிக் கொள்ள  போராடுகின்ற நிலையில், “நாணயமதிப்பு யுத்தசாத்தியத்தை அதிகரிக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் முடிவுக்கு ஒரு அரசியல் அம்சமும் கூட இருக்கிறது. 2008 இல் லேஹ்மென் பிரதர்ஸின்  பொறிவானது அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முக்கியமான பிரிவுகளின் ஆதரவை குடியரசுக் கட்சி போட்டி வேட்பாளரான ஜோன் மெக்கெயினைக் காட்டிலும் பராக் ஒபாமாவைத் தேர்வு செய்வதற்குப் பின்னால் மாற்றி விடுவதில் ஒரு அதிமுக்கியமான பாத்திரத்தை ஆற்றியது.

இந்த ஆண்டின் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் சமீபத்திய  நடவடிக்கை ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரச்சாரத்திற்கு இதேபோன்றதொரு  ஊக்குவிப்பினை வழங்கும்.

ஆனால் தொழிலாள வர்க்கம் மிக முக்கியமான அரசியல் முடிவுகளுக்கு வர வேண்டும்அமெரிக்காவிலும் மற்றும் உலகமெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் வேலைகளையும்வாழ்வாதாரங்களையும் மற்றும் சமூக நிலையையும் பலிகொடுத்து நிதி ஒட்டுண்ணித்தனத்தை  ஊக்குவிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முடிவானது முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று  நெருக்கடி மற்றும் திவால்நிலையின் இன்னுமொரு சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். எந்த பொருளாதார மீட்சியும்”  எந்தமுனையிலும் காத்துக் கொண்டிருக்கவில்லை.

திட்டமிட்ட கொள்ளையுடன் ஒன்றிணைந்த ஒட்டுண்ணித்தனமும் பரந்த மக்களை வறுமைக்குள்  தள்ளுவதும் தான் வங்கிகளும் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பினதும் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி  ஆகியவையால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற நிதியியல் நலன்களும் கொண்டிருக்கிற  வேலைத்திட்டம் ஆகும்.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கமானது முழுக்க சிந்தித்து  உருவாக்கப்பட்ட மற்றும் இறுதிவரை போராடத்தக்க தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை கையிலெடுக்க வேண்டும். பில்லியன்கணக்கான மக்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட  ஆதாரவளங்கள் இலாபம் ஈட்டுவதற்காக அல்லாமல் அதற்குப் பதிலாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி  செய்வதற்கெனப் பயன்படுத்தப்படுகின்றதான ஒரு திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கு முதலாவதும் தவிர்க்கவியலாததுமான படியாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை  பறிமுதல் செய்வதற்கு உறுதி பூண்ட தொழிலாளர்அரசாங்கங்களுக்கான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.