World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Mass protests defy curfew, army crackdown in Egypt

எகிப்தில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இராணுவ ஒடுக்குமுறை, ஊரடங்கு உத்தரவை மீறுகின்றன

By Alex Lantier 
17 August 2013

Back to screen version

நேற்று எகிப்து முழுவதும் நகரங்களில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், எகிப்தின் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக்குழுவின் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒடுக்குமுறையை மீறின; ஆட்சிக்குழு 600 பேருக்கும் மேலானவர்களை கொன்று, நாடெங்கிலும் நடத்திய படுகொலைகளில் 4000 பேரைக் காயப்படுத்தி இரண்டு நாட்களுக்குப் பின் இது நடந்துள்ளது.

இராணுவ ஆட்சிக் குழு, ஹெலிகாப்டர்கள், கூரைகள், டாங்குகளின் மீது தாக்குபவர்களைர்களை அணிதிரட்டியது; கம்புகளையும் அகலக்கத்திகளையும் கொண்டிருந்த குண்டர்கள் ஜூலை 3 இஸ்லாமியவாத ஜனாதிபதி முகம்மது முர்சியை கவிழ்த்து மீண்டும் அவசரகால ஆடசியை கொண்டுவந்துள்ள இராணுவ ஆட்சி மாற்றத்தின் எதிர்ப்பாளர்களை தாக்கினர். ஆரம்ப அறிக்கைகள் நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளதோடு, குறைந்தபட்சம் 120 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு பின்னர் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பாகமாக ஒரு "சீற்ற நாள்" பேரணிக்கு முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவம் (MB) அழைப்புவிட்டது.

முஸ்லிம் சகோதரத்துவம் (MB) கெய்ரோ பெருநகரப் பகுதியில் தொடங்கி ராம்சேஸ் சதுக்கத்தில் முடியும் 28 இடங்களில் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது; ராம்சேஸ் இப்பொழுது ஆட்சிக்குழு ஒடுக்குமுறைக்கு குவிமையமாக உள்ளது. இராணுவப் பிரிவு தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்து டாங்குகள், கவச வாகனங்கள் மற்றும் முள்வேலிச்சுற்றுக்களை நிறுவி நகரத்தின் பெரும்பகுதியில் இருந்து எதிர்ப்பாளர்கள் கெய்ரோ மையத்திற்கு எதிர்ப்புக்களில் சேராமல் இருக்கத் தடைகளை உண்டாக்கினர். இறந்த, காயமுற்ற எதிர்ப்பாளர்கள் அருகில் இருந்த-படா மசூதிக்கு ஏராளமாக அழைத்துச் செல்லப்பட்டனர்; நேற்று மாலை வந்த தகவல்கள்படி ராம்செஸ் சதுக்கத்தில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாள் முழுவதும் ராம்செஸ் சதுக்க ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்காக கொண்ட துப்பாக்கிச் சூடுகள் எதிரொலித்தன; இராணுவம் அப்பகுதியை மூடியிருந்தது. ராம்செஸ் சதுக்கத்தின் அருகே, பெரிய அரபு ஒப்பந்தக்காரர்களின் கட்டிடங்களை கட்டமைப்பில் ஈடுபட்டவர்கள் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் எரித்தனர்; தீயணைக்கும் படையினர் அங்கு செல்ல முடியவில்லை. பின்னர் இரவில், இராணுவம் சதுக்கத்தைச் சூழ்ந்து பலமுறையும் அல் படா மசூதியை தாக்க முயன்றது; மசூதிக்குள் நூறுக்கணக்கான மக்கள் தங்கள் உயிருக்கு அஞ்சிப் பொறியில் அகப்பட்டது போல் இருந்தனர்.

எகிப்தின் இரண்டாம் முக்கிய நகரான அலெக்சாந்திரியாவில் டாங்குகள் தெருக்களில் வரிசையாக நின்றன, பாதுகாப்பு படைகள் மீண்டும் மீண்டும் எதிர்ப்பாளர்களுடன் மோதினர். அலெக்சாந்திரியாவின் ஆம்புலன்ஸ் அதிகாரத்தின் தலைவர் அமர் நசர் 23 எதிர்ப்பாளர்கள் கொலை, 101 காயமுற்றதை தானே எண்ணியதாகக் கூறினார். இறப்பு எண்ணிக்கை அதிகமாகும், ஏனெனில் பிரேதக் கிடங்கில் இருந்து பல சடலங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றார் அவர்.

இராணுவத்தின் தாக்குபவர்கள், இஸ்மைலியாவிவின் கூரைகளில் வரிசையாக நின்றனர்; எதிர்ப்பாளர்கள் “அமைதியாகக்” கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்; அடையாளம் தெரியாத துப்பாக்கி வீரர்களால், டாங்கு ஒன்றை தடுக்க முற்பட்ட ஒரு நபர் சுடப்பட்டதை காணொளிகள் காட்டுகின்றன. குறைந்தப்பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் நகரத்தில் காயமுற்றனர். எட்டு எதிர்ப்பாளர்கள் டமெயட்டாவில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டனர்; டன்டா, பாயௌம், அசியுட் ஆகியவற்றிலும் எதிர்ப்புக்கள் நடந்தன.

இராணுவ ஆட்சிக்குழு, தாராளவாத முதலாளித்துவத்திடமும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளிடத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் என்ற பொய்யான கூற்றைக்கூறி பாதுகாப்பற்ற எதிர்ப்பாளர்களை கொல்வதை நியாயப்படுத்த ஆதரவு தேடுகிறது. எதிர்ப்புக்கள் பற்றிய அதன் நேற்றைய தகவல்கள் அளித்தலுடன் அரச தொலைக்காட்சி, “எகிப்து பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகிறது” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கோஷம் ஒன்றைக் காட்டியது.

முஸ்லிம் சகோதரத்துவம், அதன் ஆதரவாளர்களை, இராணுவ ஆட்சிக் குழுவிற்கு  எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்களை அடுத்த வாரம் ஒவ்வொரு நாளும் நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

எகிப்திலும் சர்வதேச அளவிலும் மக்கள் சீற்றம், வாஷிங்டனுடைய உடந்தையுடன் பலமுறையும் எகிப்தின் இராணுவ ஆட்சிக் குழு ஏராளமான மக்களைப் படுகொலை செய்துள்ளதை குறித்து பெருகியுள்ளது. எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள், வலதுசாரி முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆதரவுத் தளத்திற்கு அப்பாலும் விரிந்துள்ளன; இதில் நகர்புற இளைஞர்ளின் தட்டுக்கள் உள்ளன; அவர்கள் போலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளுடன் 2011 எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து மோதி வருகின்றனர். இராணுவம் மறுமுறை அவசரகால ஆட்சியை சுமத்தியுள்ளதை எதிர்க்கின்றனர்.

முஸ்லிம் சகோதரத்துவம், ஆர்ப்பாட்டங்களை அது கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து அதிகரித்த வகையில் கவலைப்படுகிறது; ஏனெனில் சமூகத் தட்டுக்களில் பரந்த பிரிவுகள் எதிர்ப்பில் சேருகையில், இது முழு ஆட்சி மாற்றத்திற்கும் 2011 ஆரம்ப நாட்களில் இருந்ததைப்போல் ஒரு புரட்சிகர சவாலாக வளரக்கூடும்.

முஸ்லிம் சகோதரத்துவ செய்தித் தொடர்பாளர் ஜெகட் எல் ஹாடட் இந்த அச்சங்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் வியாழன் அன்று கூறினார்: “இது இப்பொழுது கட்டுப்பாட்டை விட்டு மீறிவிட்டது. அந்தக் கவலை எப்பொழுதும் இருந்தது. ஒவ்வொரு படுகொலையுடனும் அது அதிகமாகிறது உண்மையான ஆபத்து, அன்புக்கு உரியவர்களின் இழப்பினால் கோபமுற்றவர்கள் களத்தில் கூட்டம் கூட்டமாகத் திரளும்போது ஏற்படுகிறது.”

எகிப்தில் மக்கள் படுகொலைக்கு எதிர்ப்புக்கள் பாலஸ்தீனிய பகுதியில் பேரணிகள், துருக்கி, யேமன், பாக்கிஸ்தான், மலேசியா இன்னும் இந்தோனிசியா என சர்வதேச அளவில் பரவத் தொடங்கியுள்ளன. இந்தோனிசிய தலைநகரான ஜாக்கர்த்தாவில் 1000 எதிர்ப்பாளர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடி “எகிப்திய படுகொலைகளை நிறுத்துக”, “எகிப்தில் புனிதப்போர்”,  “கொலைகளை நிறுத்துக” என்று எழுதப்பட்ட கோஷ அட்டைகளை சுமந்து நின்றனர்.

துருக்கியில் கிட்டத்தட்ட 2,000 பேர் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் அணிவகுத்து, எகிப்து வன்முறைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கு எதிராகக் கோஷமிட்டனர்.

எகிப்தில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகரப் போராட்டம் என்பது, இராணுவ ஆட்சிக் குழு மற்றும் அதற்கு ஆதரவு கொடுக்கும் சர்வதேச அரசாங்கங்களுக்கு எதிராக என்று மட்டும் இல்லாமல், முதலாளித்தவத்திற்குள் உள்ள ஆட்சிக்குழுவின் தாராளவாத, மத்தியதர வகுப்புக்களின் வசதியான பிரிவுகள் மற்றும் போலி இடது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் இருக்கும்.

எகிப்தில் இச்சக்திகள் –மகம்மது எல்பரடேயின் தேசிய மீட்பு முன்னணி, போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் போன்றவை— தமரோட் கூட்டை ஆதரித்தன; அது, ஜூலை 3 முர்சி ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களை திசை திருப்பமுயன்றன.

எகிப்தின் மக்கள் படுகொலை, அமெரிக்க அரசியல் நடைமுறையிலும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தொடர்ந்து எகிப்திய இராணுவ ஆட்சிக் குழுவிற்கு ஆதரவு கொடுப்பது வாஷிங்டனை உலக மக்கள் பார்வையில் இழிவுபடுத்துகிறது என்ற கவலை எழுந்துள்ளது. வியாழன் அன்று கொடுத்த சுருக்கமான கருத்துக்களில் ஒபாமா கூட்டு அமெரிக்க எகிப்திய இராணுவப் பயிற்சிகளை இரத்து செய்தார்; ஆனால் எகிப்திய இராணுவத்திற்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் 1.3 பில்லியன் டாலர்கள் உதவியை நிறுத்தவில்லை.

குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஜோன் மெக்கெயின், லிண்சே கிரகாம் ஆகியோர் ஒபாமாவைச் சந்தித்து இந்த நிதியை நிறுத்துமாறு நேற்று கூறினர். இராணுவம் “எகிப்தை இருண்ட பாதையில் இட்டுச் செல்கிறது, அத்துடன் அமெரிக்க பயணிக்க முடியாது, கூடாது” என்று அவர்கள் கூறினர்.

மற்ற நாடுகளும் எகிப்திய ஆட்சிக்குழுவில் இருந்து தன்மை ஒதுக்கி வைத்துக் கொள்ள முற்பட்டுள்ளன. துருக்கி, எகிப்தில் உள்ள அதன் தூதரை திருப்பி அழைத்துக் கொண்டுள்ளது; பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஆலோசனைகளுக்குப் பின், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடைய அலுவலகம் ஜேர்மனி எகிப்துடனான அதன் உறவுகளை திங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அது பற்றி பேச இருக்கு முன் ஆராயும் எனக் கூறியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமை, கைதுகள், அடக்குமுறை இவற்றில் சரிகையில், ஆட்சிக் குழுவுடன் அதன் மோதல் கடினமாகையில், முஸ்லிம் சகோதரத்துவத்தின் பிரிவுகள் சில தலைமறைவாகி, எகிப்திய ஆட்சிக் குழுவிற்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பை ஏற்பாடு செய்யும் என பெருகிய முறையில் வாஷிங்டன் கவலைப்படுகிறது. இது இன்னும் வெடிப்புத் தன்மையை ஏற்படுத்தும்; ஏனெனில் அமெரிக்கா லிபியாவிலும் சிரியாவிலும் இஸ்லாமியவாத சக்திகளுடன் சேர்ந்து போர்களை நடத்துகிறது; இது முழு மத்திய கிழக்கு முழுவதும் போர்களை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்திற்குள் “எகிப்தில் நீடித்த ஆயுதமேந்திய எழுச்சி” வரக்கூடும் என்னும் அச்சுறுத்தலை குறிப்பிட்டுள்ள வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பெயரிடாத மூத்த அமெரிக்க அதிகாரியை மேற்கோளிட்டுள்ளது: “உள்நாட்டுப் போர் என்னும் உண்மையான வாய்ப்பு உள்ளது. எகிப்தும் சிரியா போல் செல்லும் ஆபத்தான வாய்ப்பு உள்ளது.”

அமெரிக்க புவியியல் மூலோபாயம் இயற்றுபவர்களின் கணக்கீடு, எகிப்திய இராணுவக்குழு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தலையிடும் தேவையை சுட்டிக்காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கம் தான் பரந்த பிராந்திய போர்ச்சரிவை நிறுத்த கூடியது.

ஜேர்னல் எழுதுகிறது அமெரிக்க அதிகாரிகளுக்கு, “பயங்கரக்கனவு போன்ற காட்சி எகிப்தில் உள்நாட்டுப் போர் ஆகும்; இது பிறை வடிவம் கொண்ட உறுதியற்ற தன்மையை சிரியா, லெபனானில் இருந்து ஈராக்,எகிப்து, லிபியா ஆகியவற்றில் தோற்றவிக்கும்.... அண்டை லிபியாவில் ஆயுதக் குவிப்புக்கள் உள்ளன; அந்நாட்டில் பாதுகாப்பு நிலைமை இதேபோல் கீழ்நோக்கிச் செல்லுகிறது. அது, லிபிய அரசாங்கத்தை, மறைந்த லிபியத் தலைவர் முயம்மர் கடாபியால் சேர்க்கப்பட்ட ஆயுதக்கிடங்களை மூடி வைக்கும் திறனை தடுக்கிறது. அமெரிக்க அதிகாரிகள், கிழக்கு லிபியா எகிப்திற்குள் நுழையும் எல்லையில் எழுச்சியாளர்கள் நுழைய வசதியான இடமாகப் போகும் என்று கவலைப்படுகின்றனர்.”