World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thanksgiving in America

அமெரிக்காவில் நன்றிதெரிவிக்கும் நாள்

Andre Damon and Barry Grey
28 November 2013

Back to screen version

வோல் ஸ்ட்ரீட் பொறிவின் ஐந்திற்கு ஆண்டுகளுக்கு மேலாக வந்திருக்கும் இந்த ஆண்டின் நன்றிதெரிவிக்கும் நாள், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வரவு-செலவு கணக்கில் வெட்டு ஆகியவற்றின் நாசகரமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஒரு சிறிய மேற்தட்டின் கைகளில் செல்வவளம் குவிந்து கொண்டே போவதையும் அது அடிக்கோடிடுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள உணவு வழங்கும் நிலையங்கள் அதிகரித்துவரும் தேவை மற்றும் குறைந்து வரும் வினியோகங்களைக் குறித்து குறிப்பிடுகின்ற போதினும், அமெரிக்க ஊடகங்களிலோ பனிப்பொழிவுகள், பயணநேர தாமதங்கள் மற்றும் கறுப்பு வெள்ளி (Black Friday) விற்பனைகள் என நிரம்பி உள்ளன. கட்டுக்கடங்கா வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி மற்றும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வீடற்ற நிலைமைகளைக் குறித்து அங்கே மேலோட்டமாக கூட ஒரு குறிப்பும் இல்லை.

அசோசியேடட் பிரஸ்ஸின் ஒரு ஜூலை 2013 செய்தியின்படி, அமெரிக்காவில் வயதுவந்த ஐந்தில் நான்கு அமெரிக்கர்கள் வேலையின்மையில், ஏறக்குறைய-வறுமையில் போராடுகின்றனர் அல்லது தங்களின் வாழ்நாளில் குறைந்தபட்ச காலத்திற்காவது சமூகநலத்திட்ட உதவிகளைச் சார்ந்துள்ளனர் என்பதை, ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீட்டிற்கு வந்தால், ஒருவரால் ஒருபோதும் தீர்மானிக்கமுடியாது.

1930களில் ரொட்டிகளைப் பெற வரிசையில் நின்றதை நினைவுபடுத்தும் விதத்தில், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நன்றிதெரிவிக்கும் நாள் உணவு வினியோகங்களைப் பெற நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். வேலையற்றோரிடம் இருந்து மட்டுமில்லாமல், மாறாக பெருகிவரும் வேலையில் உள்ள ஏழைகளிடமிருந்தும் தேவைகள் அதிகரித்து வருவதாக உணவு வழங்கும் நிலையங்கள் குறிப்பிடுகின்றன.

ஆண்டுக்கணக்கான பொருளாதார மந்தத்தால் தோற்றுவிக்கப்பட்ட கொடிய நிலைமைகள், ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்களுக்கு இணையான உணவைக் குறைத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த உணவு மானிய கூப்பன் சலுகைகளின் வெட்டுக்களோடு இணைந்துள்ளன. மில்லியன் கணக்கான மக்களை இன்னும் கூடுதலாக ஆதரவற்ற நிலைமைகளுக்குள் தள்ளும் விதத்தில், அவர்களுக்கான விரிவாக்கப்பட்ட வேலையின்மை மானியங்கள் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் வறுமை மற்றும் அவலத்திற்கு இடையில்இவற்றிற்கு எதுவும் செய்ய அங்கே பணமில்லை என்ற ஓயாத வாதங்களுக்கு இடையேபங்குச்சந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை எட்டுகின்றன. கடந்த வாரங்களில் மட்டும், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு 16,000ஐ எட்டி உள்ளது, ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் 500இன் பங்குக் குறியீடு 1,800ஐ எட்டியுள்ளது மற்றும் நாஸ்டாக் மீண்டுமொரு முறை 4,000ஐ கடந்து உயர்ந்துள்ளது.

பணக்காரர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முன்னில்லாத விதத்தில் கூடுதலாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்த முட்டு கொடுத்துவரும் பங்கு விலைகளின் இந்த தலையைச் சுற்ற வைக்கும்மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதஉயர்வு, ஒபாமா நிர்வாகம் மற்றும் மத்திய வங்கிக்கூட்டமைப்பால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ பூஜ்ஜிய அளவிலான வட்டிவிகிதங்கள் மற்றும் மத்திய வங்கிக்கூட்டமைப்பில் இருந்து நிதியியல் சந்தைகளுக்குள் மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் பாய்ச்சுவது ஆகியவை செல்வ வளத்தை கீழ்மட்டத்திலிருந்து சமூகப் படிநிலைகளின் உச்சியில் இருப்பவர்களுக்கு வேகமாக கைமாற்றுவதற்கு உதவி வருகின்றன.

அமெரிக்காவில் ஆயுள்காலம் கிரீஸ், போர்த்துக்கல், தென் கொரியா மற்றும் ஸ்லோவேனியாவிற்கு கீழே சரிந்து, சர்வதேச சராசரியையும் விட குறைந்துவிட்டதாக பொருளாதார ஒத்துழைப்புக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) இந்த வாரம் குறிப்பிட்டது. 2008இல் 28.2 மில்லியனாக இருந்த உணவு மானிய கூப்பன்கள் பெறும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை, 70 சதவீத ஒரு உயர்வோடு, இந்த ஆண்டு 47.7 மில்லியனாக அதிகரித்ததானது, சமூக நெருக்கடியின் ஆழமான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.

விடுமுறைகளுக்கு முன்னர் சலுகைகளைக் குறைப்பதே தேவையான வளர்ச்சியை எட்டுவதற்கு அரசியலமைப்பின் விடையிறுப்பாக இருந்துள்ளது. குடியரசு கட்சியினர் முன்மொழிந்த 40 பில்லியனுக்கு அதிகமான டாலர்கள் வெட்டுக்களுக்கு ஒரு "அர்த்தமுள்ள" மாற்றீட்டாக ஜனநாயக கட்சியினர் உணவு மானிய கூப்பன்களில் கூடுதலாக 4 பில்லியன் டாலர்கள் வெட்ட பரிந்துரைத்து வருவதோடு சேர்ந்து, நவம்பரின் தொடக்கத்தில் உணவு மானிய கூப்பன்களில் 5 பில்லியன் டாலர்கள் வெட்டியமை வெறும் தொடக்கம் மட்டுமே ஆகும்.

அந்நாட்டின் மிகப் பெரிய மகாநகரமும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் தலைமையகமாகவும் விளங்கும் நியூ யோர்க்கில் அமெரிக்காவின் சமூகப்பிளவு ஒரு ஒன்றுதிரண்ட விதத்தில் பிரதிபலிக்கின்றது. தொண்ணூற்றி ஆறு பில்லினியர்கள் அந்நகரில் வாழ்கின்றனர். சராசரியாக, அவர்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் அண்ணளவாக 20 மில்லியன் டாலர்கள் மதிப்புடையவை, அத்தோடு ஒன்றோ அல்லது இரண்டோ உல்லாச படகுகள், ஒன்றோ அல்லது இரண்டோ பிரத்யேக ஜெட் விமானம், மற்றும் அவர்களுக்கென சேவை செய்ய ஒரு சிறிய இராணுவம். அவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு அந்நகரின் ஆண்டு வரவு-செலவு கணக்கின் மூன்று மடங்கை விட அதிகமாகும்.

மான்ஹட்டனில் இருந்து ஹார்லெம் ஆற்றின் குறுக்கே இருப்பது புரோனெஸ், நியூ யோர்க்கின் மிக வறிய ஐந்து உட்பகுதிகள். பசிக்கு எதிரான நியூ யோர்க் கூட்டணி (New York City Coalition Against Hunger) என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, அங்கே வாழும் பாதி குழந்தைகள் உண்பதற்கு போதிய உணவில்லாத குடும்பங்களில் வாழ்கின்றன.

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் மற்றும் சினிமா தொழிலின் மையமாக விளங்கும் லாஸ் ஏஞ்சல்ஸில், அந்நகர சபை பிலடெல்பியா மற்றும் சீட்டெலின் வழிகாட்டுதலைப் பின்பற்றலாமா என்றும், வீடற்றவர்களுக்கு பொது இடங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கலாமா என்றும் விவாதித்து வருகிறது.

அமெரிக்க உற்பத்தித்துறையின் வரலாற்று மையமாக விளங்கும் டெட்ராய்ட், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அவசரகால மேனேஜரால் திவால்நிலைமைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது, அவர் அந்நகரின் பத்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவ நலன்களை வெட்ட மற்றும் உலகின் புகழ்வாய்ந்த கலை களஞ்சியமான டெட்ராய்ட் கலைக்கூடம் உட்பட அந்நகரின் சொத்துக்களை விற்க அவரது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகிறார். தொழிலாள வர்க்கத்திடமிருந்து திருடப்பட்ட பில்லியன்கள் வங்கிகளிடமும், நகர பத்திரங்களைப் பெருமளவில் வைத்திருப்பவர்களிடமும் ஒப்படைக்கப்பட உள்ளன.

மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கை தரங்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி குறித்து ஒபாமா நிர்வாகத்தால், ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பினால், அல்லது பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் ஒரு முக்கிய பிரச்சினையாக கூட எழுப்பப்படவில்லை. தற்போதைய நிலைமை ஒரு தற்காலிக வழுக்கல் தான் என்றரீதியில் அங்கே ஒரு போலிக்காரணமும் கூட இல்லை. அல்லது உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த எந்த கொள்கைகளும் முன்மொழியப்படவில்லை.

அதற்கு மாறாக, பாரிய வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வறுமை மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவை "புதிய வழக்கமாக" சர்வசாதாரணமாக வர்ணிக்கப்படுகின்றன.

இந்த சமூக எதார்த்தமானது ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் மற்றும் அது சேவை செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறையின் மீது நிறுத்தபட்டிருக்கும் ஒரு குற்றப்பத்திரிக்கையாகும். அனைத்திற்கும் மேலாக, இது ஒரு விதிவிலக்காக அல்ல, உலகம் முழுவதும் ஒரு நியதியாக மாறி உள்ளது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அரசியல் மற்றும் பொருளாதார கட்டுப்பாடு ஓர் ஒட்டுத்தனமான நிதியியல் பிரபுத்துவத்திடம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கைகளில் இருக்கும் வரையில் விஷயங்கள் இன்னும் மோசமடையும். சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, அது எகிப்து, கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளில் செய்யத் தொடங்கி உள்ளதைப் போல அமெரிக்காவில் வெடிப்பார்ந்த வடிவங்களை எடுக்கும்.

மிக அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புக்குஒரு வேலை, கண்ணியமான கூலி, மருத்துவ பராமரிப்பு, கல்வி, வேலையிலிருந்து ஒரு நாகரீகமான ஓய்வு, கலாச்சாரம் மற்றும் கலையை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றிற்குபெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் எதிரான ஒரு போராட்டம் அவசியப்படுகிறது. வரவிருக்கின்ற போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியாக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய தலைமையைசோசலிச சமத்துவக் கட்சியைகட்டியெழுப்புவதே முக்கிய விடயமாக உள்ளது.