World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna Teaching Hospital Volunteer workers struggle is at a turning point

இலங்கை: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் திருப்புமுனையில்

By Subash Somachandran
23 December 2013

Back to screen version

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதாரப் பிரிவு தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் இன்று 13வது நாளாகவும் தொடர்கின்றது. இத் தொழிலாளர்கள், “நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது, நிரந்தர நியமனத்திற்கான எழுத்து மூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும்என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் வகையில், இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான மகப்பேற்று தொண்டர் தாதிகள் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 300 தாதிகள் நிரந்தரமாக்கப்படாமல் தொண்டர்களாக பல வருடங்கள் சேவையாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தினை கைவிட்டு கடமைக்கு திரும்ப வைப்பதற்கான அனைத்து அழுத்தங்களின் மத்தியிலும் தொண்டர் தொழிலாளர்கள் தங்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி அரசாங்கம் பொலிஸ் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (.பீ.டி.பீ), யாழ் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் ஆளுநர் சந்திரசிறி உடனும் தனித்தனியான சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளது.

.பீ.டி.பீ. இன் தலைமையகத்திற்கு சென்ற ஊழியர்களை, யாழ் மாவட்ட இணைப்பாளர் கே. ஜெகன், “கபொத சாதாரண தரம் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனத்தில் எடுக்காவிட்டால், உங்களை அகற்ற இராணுவம் அல்லது பொலிஸ் வரவழைக்கப்படுவதோடு புதியவர்களுக்கு வேலை கொடுப்போம்,” என அச்சுறுத்தி அனுப்பினார்.

20ம் திகதி போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ். மாவட்ட சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் ஆணையாளர் செல்வரஞ்சன், தங்களுடைய சின்னம் பொறிக்கப்பட்ட உடையுடன் தொண்டர்கள் போராட்டம் நடத்த முடியாது என்று கூறி, அந்த சின்னத்தினை அகற்றுமாறு கோரினார். போராட்டக்காரர்கள் அதை மறுத்த போது, பொலிஸைக் கொண்டுவந்து அகற்றுவதாக அச்சுறுத்தினார். எனினும் தொண்டர் தொழிலாளர்களின் வர்க்க சகோதரர்களான வைத்தியசாலையின் நிரந்தர தொழிலாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் அவர் வெளியேறினார். இச் சம்பவம்தொண்டு நிறுவனம்என்ற பெயரில் ஏறத்தாள எந்த சம்பளமும் இல்லாமல் இத் தொழிலாளர்களின் உழைப்பை வருடக் கணக்காக சுரண்டிய இந்த அமைப்பின் நிஜ தோற்றத்தை தொழிலாளர்களுக்கு முன் அம்பலப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் ஒழுங்கமைப்பில், ஆளுநர் சந்திரசிறி உடன் ஊழியர்கள் ஒரு ஸ்கைப் உரையாடலை மேற்கொண்டனர். “கா.பொ.. சாதரண தர சித்தியுள்ள 80 பேருக்கு உடனடியாக நிரந்த நியமனம் எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி வழங்குவதாகவும், ஏனைய 123 பேருக்கும் அமைச்சரவையில் விசேட செயன்முறை கொண்டுவந்து நிபந்தனையின் அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்என தெரிவித்து, அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். வழங்கப்பட்ட உறுதிமொழிகளைஎழுத்து மூலம் வழங்குமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரியபோதும் அவர்களுக்கு எழுத்து மூலமான எந்த ஒரு ஆவணமும் வழங்கப்படவில்லை.

போலி அனுதாபத்தை காட்டும் முயற்சியில், சட்ட விதிகளை தனக்கு சாதகமாக மேற்கோள் காட்டிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், “யாழ்.போதனா வைத்தியசாலை வடமாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலை இல்லை. இந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்திற்கு கீழ் வருகின்றது. இதனால் வடமாகாண சுகாதார அமைச்சு நேரடியாக இந்த தொண்டர்களுடைய பிரச்சினைகளில் தலையிட சந்தர்ப்பங்கள் இல்லை,” என கூறி தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டார்.

சுகாதார அமைச்சு யாழ் போதனா வைத்தியசாலைக்கு 350 சிற்றூழியர்களை தர உறுதியளித்துள்ளதாக, லங்காசிறி வானொலிக்கு தெரிவித்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பவானந்தராஜா, “அந்த நியமனத்துள் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த இந்த தொண்டர்கள், தமக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்என்றார். “சிலவேளை கல்வித் தகமைகளின் அடிப்படையில் மட்டுமே நிராகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதே தவிர வேறொரு காரணத்தால் அவர்களை நிராகரிக்க வேண்டிய தேவை இல்லை என நான் நினைக்கிறேன்என அவர் மேலும் கூறினார்.

கடந்த 6 வருடங்களாக இத் தொழிலாளர்கள் தாம் செய்துவரும் வேலையை தொடர்ந்து செய்வதற்கு தகுதியானவர்கள் என்பதையும், புதிய நியமனத்தில் அத் தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது, சுகாதார பராமரிப்புத் தரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் டாக்டர் பவானந்தராஜாவின் கருத்து உறுதிப்படுத்துவதோடு, “350 சிற்றூழியர்களைவழங்கும் வாக்குறுதியையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.

வருடக்கணக்காக மிக அற்ப சம்பளத்தோடு, எதிர்காலத்தில் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வந்த தொழிலாளர்கள், இந்த ஏமாற்றமான பதிலிறுப்புக்களின் பின்னர், டிசம்பர் 19 அன்று, தாம் நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக உறுதியாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு வைத்தியசாலையின் ஏனைய தொழிலாளர்களதும் ஆதரவு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி இராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தில், சுகாதாரத்திற்கு அற்ப தொகையாக 117 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய. அதேவேளை, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை 253 பில்லியன் ரூபாய்களாகும். இந்த நிதி, நாட்டில் வளர்ச்சிகண்டு வரும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக பாதுகாப்பு படைகளை தயார்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி, இராஜபக்ஷவின் அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கான செலவுகளை வெட்டிக் குறைக்கும் அதே வேளை, அவற்றில் தனியார் துறைகளை ஊக்குவிக்கின்றது. தனியார் மருத்துவமனைகள் இந்த வருடம் ஆரம்பத்தில் மட்டும் சம்பாதித்த இலாபம் 153 வீதமாக அதிகரித்துள்ளது.

இவற்றை மூடி மறைப்பதற்காக பெரும் நாடகபாணியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்த அரசாங்கம், பயிற்சி முடித்து வெளியேறிய தாதியர் மற்றும் மருந்தாளர்கள் உட்பட சுமார் 10,000 பேருக்கு நியமனங்களை வழங்கி, வரலாற்றிலேயே சுகாதராத்துக்கு அதிக சேவை செய்யும் அரசாங்கம் என கூறிக்கொண்டது. அங்கு உரையாற்றிய இராஜபக்ஷ தாம் நாட்டின் சுகாதாரத் துறைக்குபொற்காலத்தைஏற்படுத்தப் போவதாக பிரகடனம் செய்தார்.

இந்த வெட்டுக்களுக்கு எதிராகவும், தமது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்காகவும் போராட்டத்துக்கு வரும் சுகாதார ஊழியர்களின் எதிர்ப்புக்களை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் மூலம் கறைத்துவிடுவதில் சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னிலை வகிக்கின்றன. இதன் பாகமாக இந்த வாரம் நாடு பூராவும் சுமார் 20,000 சிற்றூழியர்களின் வெறும் 3 மணிநேர வேலை நிறுத்தத்துக்கு இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. எனினும் இந்த தொழிற்சங்கங்கள் யாழ்ப்பாண தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக மௌனம் சாதித்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம், நாட்டின் சுகாதாரத்துறை உட்பட சகல தொழிலாளர் தட்டினரதும் போராட்டத்தின் பாகமாகும். இந்த தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் எவ்வளவு போர்க்குணம் மிக்கதாக இருந்தபோதிலும், அதற்கும் மேலாக இப்போராட்டத்தை வெல்வதற்கு ஒரு அரசியல் முன்னோக்கு மிகவும் அவசியமாகும். முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அப்பால் தற்போதுள்ள அரசியல் கட்சிகளை நாடி, ஏதாவது அற்பசொற்ப உதவிகளையென்றாலும் பெறலாம் என்ற நிலை காலங் கடந்துவிட்டதையே இந்த தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் நிரூபிக்கின்றது.

தொண்டர் தொழிலாளர்களும், தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்களும் எதிர்கொண்டிருக்கும் நிலைமைக்கு எளிய, சாதாரண தீர்வு ஏதும் கிடையாது. ஆளும் வர்க்கத்தின் திட்டமிடப்பட்ட மூலோபாயத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் சொந்த மூலோபாயத்துடன் எதிர்த் தாக்குதலை தயார் செய்ய வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க முடியாதென்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கும் எந்த கட்சிகள் மீதும் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. தொழிலாளர்களின் எந்தப் போராட்டமும் சாத்தியமாக வேண்டுமாயின், அவர்கள் தற்போதுள்ள அமைப்புக்கள் மற்றும் கட்சிகளில் இருந்து அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முறித்துக்கொள்ள வேண்டும். சிங்கள முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தமிழ் இனவாதத்தை பரப்பி தொழிலாளர்களை பிளவுபடுத்தும் தமிழ் கூட்டமைப்பின் அரசியலை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், தமது போராட்டம் தனிமைபடுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதை தவிர்க்க, இன, மொழி மற்றும் மத பேதமற்று தமது வர்க்க சகோதரர்களான ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்படல் அவசியமாகும். இதற்காக அவர்கள் தமது சொந்த உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைத்து, தீவு முழுதும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்ட செயற்பட வேண்டும் என்றும், அதேபோல் ஏனைய தொழிலாளர்களும் தொண்டர் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

தனியார்மயமாக்கம், யுத்தம் மற்றும் அழிவின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கம் தமது வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாக்கவும் மற்றும் பொதுச் சுகாதாரம் உட்பட ஏனைய உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்.

சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடும் சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது.

இந்த முன்னோக்குடன் உடன்பாடு காணும் தொண்டர் தொழிலாளர்கள் உட்பட தீவின் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்ளையும் உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ள முன்வருமாறும் அழைப்பு விடுகிறோம்.