World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Support grows for workers’ inquiry into Weliweriya water pollution

இலங்கை: வெலிவேரிய நீர் மாசுபாடுதல் தொடர்பான தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவு அதிகரிக்கின்றது

By Vilani Peiris
12 December 2013

Back to screen version

கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரியவில் உள்ள வினோக்ரஸ் கையுறை உற்பத்தி (Venigros Dipped Products) தொழிற்சாலையினால் எற்பட்டுள்ள நீர் மாசடைதல் பிரச்சினை பற்றி சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) தொடங்கிய சுயாதீன தொழிலாளர் விசாரணைக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு எதிர்ப்பாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர் உட்பட, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், ஆகஸ்ட் 1ம் தேதி இந்த பிரச்சினைக்காக நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை நசுக்க, பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தியபோது, இரண்டு மாணவர்களும் ஒரு இளம் தொழிலாளியும் சுட்டு கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். தொழிற்சாலையின் கழிவுநீர், தமது நீர் விநியோகத்தில் அமிலத்தன்மையை அதிகரித்து, கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக, உள்ளூர்வாசிகள் ஆலையை மூடிவிடுமாறு கோருகின்றனர்.

அரசாங்கம், எதிர் கட்சிகள் மற்றும் ஊடகங்களும் மக்கள் எதிர்ப்பை ஒடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் நிலைமையை மூடி மறைக்கவும் முற்படுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி, நீர் மாசுபாடு பற்றி உண்மையை வெளிக்கொணரவும், ஆகஸ்ட் 1 துப்பாக்கிச் சூட்டுக்கு யார் பொறுப்பாளிகள் என்பதை உறுதிப்படுத்தவும் மற்றும் தொழில்துறை மாசுபடுத்தலின் பரந்த தோற்றுவாய்களை ஆராயவும் தொழிலாளர் விசாரணை ஒன்றை தொடங்கியது.

டிசம்பர் 1, கம்பஹாவில் மிரிஸ்வத்தையில், சனச மண்டபத்தில் நடந்த சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவுடன் கலந்துரையாடலில் பங்குபற்றிய குடியிருப்பாளர்கள்.

இராணுவத் தாக்குதலில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான ஜூட், ஆகஸ்ட் 1 அன்று நடந்தது என்ன என்பதை விளக்கினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லக்கூட எந்த வாய்ப்பும் கொடுக்காமலேயே சிப்பாய்கள் சுடத் தொடங்கினர் என அவர் கூறினார். "இராணுவம் முதலில் பத்திரிகையாளர்களை விரட்டியடித்தது. படைப்பிரிவுக்கு கட்டளையிட்ட பிரிகேடியர், மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். நாம் இணங்கியதோடு அதற்கு அரை மணி நேரம் தர வேண்டும் எனக் கேட்டோம். பின்னர் பிரிகேடியருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. திடீரென்று துப்பாக்கி சூடு தொடங்கியது. அது மாலை நேரம். முதலில், அவர்கள் மின் இணைப்புகளை சுட்டார்கள். பின்னர் முழு பகுதியும் இருண்டது," என்று அவர் கூறினார்.

ஜூட் போல், கடுமையாக தாக்கப்பட்டார் மேர்வின் ரோயல், மக்களை சுடுமாறு மேலிடத்து உத்தரவு வந்தது என்ற முடிவுக்கு வந்திருந்தார். கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்ற, துப்பாக்கி சூடுகள் பற்றிய உத்தியோகபூர்வ விசாரணைக்கான சாட்சிகளின் பட்டியலில் உள்ள ரோயல், தான் விசாரணையில் திருப்தி அடையவில்லை என்றார்.

அடையாளம் காண்பதற்காக சிப்பாய்கள் நிறுத்தப்படுவார்கள் என முன்னர் அறிக்கைகள் கூறிய போதிலும், சிப்பாய்கள் அங்கு அழைக்கப்படவில்லை என ரோயல் சுட்டிக்காட்டினார். "நான் இந்த சம்பவம் பற்றிய இராணுவத்தின் கூற்றை மறுக்கத் தயாராக இருந்தேன், ஆனால் எனது சாட்சி எடுக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். தன்னை போன்ற கண்கண்ட சாட்சிகள் சாட்சியமளிப்பதை தடுக்க விசாரணையில் சூழ்ச்சி செய்யப்பட்டிருந்தது என அவர் கூறினார்.

அரசு நிறுவனங்கள் மூலம் முன்வைக்கப்படும் அனைத்து நீர் பரிசோதனை அறிக்கைகளும் தொழிற்சாலைக்கு சார்பாக இருப்பதால், அவை பொய்யான ஆவணங்கள், அதனால் "நமது சொந்த விசாரணை" ஒன்று தேவை என்று ஜூட் கூறினார். "உண்மையில் இந்த சுயாதீன விசாரணையில் என்ன நடைபெறுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன், " என அவர் கூறினார்.

ஜூட், வினோக்ரஸ் நிறுவனம் மக்கள் எதிர்ப்பை கவிழ்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார். அவர் உட்பட இராணுவ சூட்டில் காயமுற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா ($US190) கொடுக்கப்பட்டு, பத்திரிகைக்கு விவரங்கள் கொடுக்க வேண்டாம் என்றும் தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஒரு கலந்துரையாடல் நடத்தி தொழிற்சாலையை மீண்டும் திறக்க உடன்படுமாறு கோருவதற்கும் நிறுவனம் கிராமத்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. "மக்கள் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஒப்புக் கொண்டால், அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாகவும், மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி வகுப்புகள் தொடங்குவதாகவும்" நிறுவனம் வாக்குறுதி அளித்ததாக ஜூட் கூறினார். குடியிருப்பாளர்கள் இந்த வாக்குறுதிகளை நிராகரித்தனர்.

வேறொரு இடத்தில் தொழிற்சாலையை நிறுவுமாறு சியனே (Siyane) நீர் பாதுகாப்பு இயக்கம் விடுக்கும்  கோரிக்கையையும் ஜூட் விமர்சித்தார். அந்த பகுதியில் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று ஜூட் கேட்டார்.

சியனே இயக்கம், எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பீ) பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலானதாகும். யூஎன்பீ, தேர்தல் காரணங்களுக்காக மக்கள் மத்தியிலான கோபத்தை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. போலி இடது கட்சியான நவ சம சமாஜக் கட்சி, யூஎன்பீ மற்றும் சியனே இயக்கத்தின் பிரச்சாரத்தை ஆதரிக்கின்றது. வேறு எந்த பகுதியிலாக இருந்தாலும் அந்தப் பிரதேச மக்களுக்கு இதை ஒத்த மாசுபாடும் பிரச்சினைகளை இது ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்தும், அவர்கள் தொழிற்சாலையை இடமாற்றம் செய்யக் கோருகின்றனர்.

வெலிவேரிய விசாரணைக் குழு கூட்டத்தில், இரு இளைஞர்கள், நிறுவனம் காயமடைந்த மக்களுக்கு உதவியது என்றும் ஆலை கழிவுகள் நீரை மாசுபடுத்துகின்றன என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆரம்பத்தில் கூறினார். குழப்பத்தை விதைப்பதற்காக நிறுவனம், அரசாங்கம் மற்றும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தின் பாதிப்பை அவர்களது கருத்துக்கள் காட்டின. எனினும், குழுவின் உறுப்பினர்கள் விளக்கிய பின்னர், அவர்கள் ஒரு சுயாதீன விசாரணை தேவை என்று ஏற்றுக்கொண்டார்.

வெலிவேரிய விசாரணைக் குழு உறுப்பினர்கள், ஆகஸ்ட் 21, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீர் பரிசோதனை அறிக்கைகளின் முரண்பாடான தன்மையை சுட்டிக்காட்டினார். குடியிருப்பாளர்கள், வினோக்ரஸ் தொழிற்சாலை பற்றி 1997ம் ஆண்டு பெறப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிக்கையின் ஒரு நகலை கூட நீதிமன்றுக்கு வழங்கினர். 1996ல் தொடங்கியது முதல், ஒரு முறையான நீர் இயக்கு முறை இல்லாமலேயே இந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது என தெரிவிக்கும் அறிக்கை, "இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கழிவு நீர் வெளி சூழலில் விடுவிக்கப்பட்டு வருகிறது என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டதுஎன்று மேலும் சுட்டிக் காட்டுகிறது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தற்போதைய செயல்முறையில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், கழிவுநீர் உரிய தரங்களுடன் இயைந்து போகவில்லை என்று வழமையான ஆய்வுகள் காட்டியுள்ளன, எனத் தெரிவிக்கின்றது. கழிவுநீரை பிரதேசத்தின் வடிகால் அமைப்புக்குள் சேர்த்துவிடுவதை தொழிற்சாலை முகாமைத்துவம் நிறுத்த வேண்டும் என அந்த அறிக்கை ஆலோசனை கூறியுள்ளது.

2012 ஆகஸ்டில் வெளியான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேலும் ஒரு அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. து, நீர் சுத்தீகரிப்பு செயன்முறை முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பதை பற்றி வேறு விவரங்களைக் கொண்டிருக்கவில்லை.

ஒரு முன்னாள் ஆலை தொழிலாளி, தொழிற்சாலையின் தினசரி கழிவுநீர் வெளியேற்றம் சுமார் 40,000 லிட்டராக இருந்தாலும், ஒரு பகுதி மட்டுமே சுத்தீகரிப்பு முறை மூலம் செல்கின்றது, என சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் கூறினார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பரிசோதனை அறிக்கைகள், பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் அமிலத்தன்மையுடையது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இதற்கு தொழிற்சாலையே பொறுப்பு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நைட்ரேட் மற்றும் சல்பேட் அயனிகள் ஆலை கழிவுநீர் வாயிலாக வெளித்தள்ளப்பட முடியும் என்று ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அயன் செறிவு நிலை மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு ஏற்படுத்தாது என்று உறுதியாக கூறுகின்றது.

எனினும், ஆலையின் கழிவுநீரால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளை தாம் எதிர்கொள்வதாக பிரதேசவாசிகள் சொல்கின்றனர். 11 ஆண்டுகளாக ஆலையில் பணிபுரிந்த ஒருவர், பெரும்பாலான குழந்தைகள் குளித்த பின்னர் அரிப்பால் அவதிப்படுகின்றனர், என கூறினார்.

ஒரு வினோக்ரஸ் தொழிலாளி, இரசாயனம் தொழிற்சாலையில் இருந்து வெளியாவது எப்படி என விளக்கினார். இரசாயனங்கள் நீருடன் கலக்கப்பட்ட பின்னர் வெளியே போடப்படுகின்ற காரணத்தால், பிரதேசத்தின் தண்ணீர் மாசடைந்துள்ளது... ஒரு லான்ட்மாஸ்டர் டிராக்டரைப் பயன்படுத்தி, ஒரு நாளுக்கு நான்கு முறை சாம்பல் வெளியே கொண்டுசெல்லப்படுகிறது. ஆனால் தண்ணீர் கலந்த பின்னர், இந்த சாம்பல் அரிப்பை ஏற்படுத்தும்."

தனது சிறுநீர் குழாயில் ஒரு கல் உருவாகி இருந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட எல்.டி. பிரேமாவதி, அவரது மகனுக்கும் இதே போன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறினார். இப்போது அவரது குடும்பத்தினர் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து குடிநீரை கொண்டு வருகின்றனர்.

சாதாரண மக்கள் வழங்கிய இந்த ஆதாரங்கள், ஒரு சுயாதீனமான தொழிலாளர் விசாரணையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. உண்மையை நிரூபிப்பதற்காக விசாரணைக்கு உதவ முன்வருமாறு, நாம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்பவியாலளர்கள் உட்பட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.