World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Euro zone economy posts worst contraction since 2009

2009ல் இருந்து மோசமான சுருக்கத்தை யூரோப்பகுதி காண்கிறது

By Andre Damon
15 February 2013

Back to screen version

17 உறுப்பினர் அடங்கிய யூரோப் பகுதியின் பொருளாதாரம் 2012ன் கடைசி மூன்று மாங்களில் 0,6 சுருக்கம் அடைந்தது. அதே நேரத்தில் ஜப்பான் 0.1 சதவிகிதம் சுருங்கியது என்று வியாழன் அன்று உலகப் பொருளாதாரத்தை பீடித்திருக்கும் பொருளாதாரச் வீழ்ச்சியின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில்அதிகாரிகள் கூறினர்.

யூரோப் பகுதியும் ஜப்பானும் கடந்த ஆண்டின் நான்காம் காலண்டில் சுருங்கங்களை அனுபவித்துள்ள சமீபத்திய பெரிய பொருளாதாரங்கள் ஆகும். அமெரிக்கா வியப்புத்தரும் வகையில் கடந்த மாதம் அதன் பொருளாதாரத்தில் 0.1 சுருக்கத்தை அறிவித்தது. பிரித்தானிய அரசாங்கம் அதன் பொருளாதாரம் 0.3% சுருக்கம் அடைந்தது எனக் கூறியுள்ளது.

யூரோப் பகுதிப் புள்ளிவிவரங்கள் நான்கு ஆண்டுகளில் பொருளாதார உற்பத்தியில் ஒற்றைக் காலாண்டின் மிக அதிக சரிவைக் காட்டுகின்றன. இதையும் விட மோசமானது என்ன என்றால், யூரோப் பகுதிப் பொருளாதாரம் 2012 முழுவதும் 0.5 % சுருங்கியதுதான். 1995ம் ஆண்டிற்குப் பின் ஒரு காலாண்டில் கூட பொருளாதார வளர்ச்சியைக் காட்டாத ஒரு முழு ஆண்டும் பகுதியும் இதுதான்.

கடந்த ஆண்டு பிணையெடுப்புக்கள், நிதியக் கொள்கை விரிவாக்கம், நிதிய ஊகவணிகர்கள் மற்றும் வங்கிகள் ஆணையிட்ட முன்னோடியில்லாத சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு மூலம் அரசின் கடன் நெருக்கடி விரிவடைவதை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டன. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தின்மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

வியாழன் அன்று வெளிவந்த தரவுகள் இப்பிராந்தியத்திற்கு ஒரு போட்டித்தன்மைமிக்க பொருளாதார அனுகூலங்களை வழங்க யூரோ இன்னும் மதிப்புக் குறைப்பிற்கு உட்படுத்தபடுமா என்னும் ஊகத்தைத் தூண்டியது. இது ஐரோப்பிய மத்திய வங்கி வட்டிவிகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் யூரோ சரிந்தது. சமீபத்திய அறிக்கையில் அது பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்குக் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிவிட்டது.

 “ஐரோப்பிய மத்திய வங்கி [ECB], யூரோவின் பலத்திற்கு மாற்றாக இருக்க முயற்சிக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ளோம்” என்று ABN Amro இல் பொருளாதார வல்லுனராக இருக்கும் நிக் கௌனிஸ் பைனான்சியல் டைம்ஸில் மேற்கோளிடப்பட்டுள்ள ஒரு குறிப்பில் தெரிவிக்கிறார். “வார்த்தையளவில் தலையிடுதல் என்பது ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. அது செயல்படாவிட்டால், வட்டி விகிதங்கள் குறைப்புக்கள் மீண்டும் மேசைக்கு வரும்.” என்றார் அவர்.

அமெரிக்க டாலருக்கு எதிராக வியாழன் அன்று மூன்றுவாரங்களில் யூரோ அதன் மிகக் குறைந்த தரத்தை அடைந்தது. தரவுகளை எதிர்கொள்கையில் யென்னிற்கு எதிராக இன்னமும் சரிந்தது.

FTSE 250 புள்ளிகள், 0.75 சதவிகிதம் குறைந்தன, DAX 1.05% குறைந்தது என இப்புள்ளிவிவரங்கள் வெளிவந்தவுடன் ஐரோப்பியப் பங்குகள் சரிந்தன. உலகப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. இதற்குக் காரணம் உலக மத்திய வங்கிகள் உட்செலுத்தும் நிதிகளாகும். கடந்தமூன்று மாதங்களில் அமெரிக்க S&P 500 11.88% உயர்ந்தது, அதே நேரத்தில் பிரித்தானிய FTSE 250, 16.6% ஏற்றம் பெற்றது.

வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களும் இதேபோல் 27 உறுப்பினர் கொண்ட முழு ஐரோப்பிய ஒன்றிய்திலும் பேரழிவுத் தன்மையைக் கொண்டிருந்தன. இது 17 உறுப்பினர் கொண்ட யூரோப் பகுதியின் 0.6% உடன் ஒப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 0.5% சுருக்கம் அடைந்தது. முந்தைய காலாண்டில் 17 உறுப்பினர் பகுதி 0.1 சதவிகிதம் சுருக்கம் கண்டது, 27 உறுப்பினர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியமும் அதே அளவிற்கு விரிவடைந்தது.

யூரோப் பகுதியின் இரு பெரும் பொருளாதாரங்களான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இன் பொருளாதார உற்பத்தி கணிசமான சுருக்கங்களைக் கண்டன. ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவிகிதம் சரிந்தது, பிரான்சுடையது 0.3 % சுருங்கியது.

கடந்த மாதம் பிரெஞ்சு கார்த்தயாரிப்பு நிறுவனம் ரெனோல்ட் நாட்டில் உள்ள அதன் தொழிலாளர் தொகுப்பு எண்ணிக்கையான 44,000த்தில், 7,500 வேலைகளை அதாவது 14 சதவிகிதத்தை அகற்றும் திட்டத்தை அறிவித்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியாளர் நீக்கம் 4,000 என நடந்ததை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் ஜேர்மனியில் போஹும் ஓப்பல் ஆலையை மூடும் திட்டங்களை அறிவித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் ஜேர்மனியில் மூடப்படும் முதல் கார்த்தயாரிப்பு ஆலையாகும் இது. இத்துடன் அதன் ஜேர்மன் தொழிலாளர் பிரிவில் உள்ள 20,000 உறுப்பினர்களுக்கும் ஊதிய முடக்கமும் வருகிறது.

இத்தாலியின் பொருளாதாரமும், நான்காம் காலாண்டில் 0,9% வீழ்ச்சியடைந்து, சுருங்கியது. இது தொடர்ச்சியான ஆறாம் காலாண்டுப் பொருளாதாரச் சரிவாகும். போர்த்துக்கல்லின் பொருளாதாரமும் 1.8% என்று கூர்மையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2011ன் நான்காம் காலண்டிற்கும் 2012ன் நான்காம் காலாண்டிற்கும் இடையே, கிரேக்கத்தின் பொருளாதாரம் 6% இனாலும், போர்த்துக்கல்லுடையது 3.8% இனாலும் சரிந்தது.

கடந்த மாதம் அமெரிக்க வணிகத் துறை அமெரிக்கப் பொருளாதாரம் 2012 இன் நான்காம் காலாண்டில் சுருங்கியது என அறிவித்தது. இது 2009 இரண்டாம் காலாண்டிற்குப் பின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதல் சரிவாகும்.

அமெரிக்க அறிக்கை பொருளாதார வல்லுனர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் 1.1% விரிவாக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். உத்தியோகபூர்வ வர்ணனையாளர்கள் இப்புள்ளிவிவரங்களை வானிலையுடன் தொடர்புபட்ட எதிர்பாராத நிகழ்வான “நிதியச் செங்குத்துவீழ்ச்சி என்று உதறித் தள்ளிவிட்டனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் சற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி, இக்கூற்றுக்களுக்கு மாறாக, அமெரிக்க புள்ளிவிவரங்களின் பேரழிவுத் தன்மை இன்னும் பரந்த பொருளாதாரச் சரிவின் ஒரு பகுதி என்று காட்டுகின்றன.

இந்த வாரம் முன்னதாக ஒபாமா தன்னுடைய இரண்டாம் பதவியேற்பு உரையில் அறிவித்த “பொருளாதார மீட்சி” என்பதற்கு முற்றிலும் மாறாக, உலகப் பொருளாதாரம் ஒரு மோசமான வீழ்ச்சியில் ஆழ்ந்துபோகும் நிலையில் உள்ளது; ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு, பரந்த பணிநீக்கங்கள், சிக்கன நடவடிக்கை, நாணயப்போர் என்பதைத்தவிர வேறு எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியவில்லை.