World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama touts economic recovery, steps up assault on workers

பொருளாதார “மீட்சி” குறித்து தம்பட்டம் அடிக்கும் ஒபாமா, தொழிலாளர்கள் மீது தாக்குதலை அதிகரிக்கிறார்

Andre Damon
24 July 2013

Back to screen version

ஜனாதிபதி ஒபாமா தன்னை “அரும்பாடுபடும் நடுத்தர வர்க்கத்தின்” நாயகனாக சித்தரிக்கும் நோக்கத்துடன் ஒரு உரைநிகழ்த்தல்  சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, 'அவரது நிர்வாகம் டெட்ராயிட் நகரத்துக்கு எந்த கூட்டாட்சி உதவியும் வழங்கப்  போவதில்லை' என்பதை வெள்ளை மாளிகை செய்திச் செயலரான ஜே கார்னி தெளிவாக்கி விட்டார்.

சென்ற வாரத்தில் டெட்ராயிட் நகரத் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களையும் சுகாதார நல உதவிகளையும் ஓரங்கட்டி வைப்பதற்கும்  அடிப்படையான பொதுச் சேவைகளை அகற்றுவதற்கும் நோக்கம் கொண்டு நகரின் அவசரநிலை மேலாளரான கெவின் ஓர் நகரத்தை திவால்நிலைக்குள் தள்ளினார்.  நிர்வாகத்திடம் இந்நகருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் எதுவும் “கொஞ்சமும் இல்லை” என்று செவ்வாயன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்த கார்னி, டெட்ராயிட்டின் கடன் குறித்த விவகாரம் “உள்ளூர்  தலைவர்களாலும் கடன் கொடுத்தவர்களாலும்” தீர்மானிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறினார்.

ஓர், டெட்ராயிட் மேயரான டேவிட் பிங் மற்றும் மிச்சிகன் கவர்னரான ரிக் ஸ்னைடர் ஆகியோர் உள்ளிட்ட டெட்ராயிட்டின் “உள்ளூர்  தலைவர்கள்” ஒபாமா நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு தான், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தமது தாக்குதலை ஒருங்கிணைத்துக் கொள்கின்றனர். உலகின் முன்னாள் வாகன உற்பத்தித் தலைநகரின் திவால்நிலையானது நாடெங்கிலும் இருக்கும் மற்ற  நகரங்களிலும், ஓர் போன்ற தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளையும் திவால்நிலைக்கான நீதிமன்றங்களையும் பயன்படுத்தி, தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார நல உதவிகளுக்கு எதிராய் இதேபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு  முன்மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

கார்னியின் அறிக்கை, புதனன்று இலினோயிஸ் மாகாணத்தின் காலேஸ்பர்க் நகரில் இருந்து ஒபாமா தொடக்கும் “வேலைகள் குறித்தான”  உரையாடும் சுற்றுப்பயணத்தின் மோசடியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெள்ளை மாளிகையானது பொதுத்துறை  ஊழியர்களின் சமூக வேலைத்திட்டங்கள் மீதும் ஓய்வூதியங்கள் மீதும்  சுகாதார நல உதவிகள் மீதும் மூழ்கடிக்கும் தாக்குதல்களை நடத்திக்  கொண்டிருக்கிறது. ”தனித்தனியான” செலவின வெட்டுகளின் பகுதியாக திணிக்கப்படும் விடுப்புகளின் மூலமாக கூட்டரசின்  நூறாயிரக்கணக்கிலான ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் ஊதியத்தை இழக்கத் தொடங்கியிருக்கின்றனர். இச்சூழலில் தான் வெள்ளை  மாளிகை தன்னை “நடுத்தர வர்க்கத்தின்” பாதுகாவலனாய் காட்டிக் கொள்ள இந்த சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்த இருக்கிறது.

ஏறக்குறைய நிர்வாகம் செய்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் போலவே, பொது வெளியில் பொருளாதார விவகாரங்களில் ஒபாமா  புதுக்கவனம் செலுத்துவதும் கூட, மிகவும் சிடுமூஞ்சித்தனமான வகை அரசியல் கணக்குகளால் தான் பெரும்பாலும் உத்தரவிடப்படுவதாக  இருக்கிறது. அமெரிக்க மக்கள் மீது அரசாங்கம் சட்டவிரோதமான பாரிய வேவு பார்த்த தகவல்கள் வெளியானதில் இருந்தும், தகவல் வெளிப்படுத்துபவரான (whistle-blower) எட்வர்ட் ஸ்னோடெனை அவப்பெயர் சம்பாதிக்கும் வகையில் சர்வதேச அளவில் வேட்டையாடுவதில்  இருந்தும் கவனத்தைத் திசைதிருப்புவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜே கார்னி கூறிய வகையில் சொல்ல வேண்டுமென்றால், குடியரசுக் கட்சியினர் போன்று  “ஜெயிப்பவனுக்கே அத்தனையும் என்கிற அணுகுமுறை”யாக இல்லாமல் “பொருளாதாரத்தை நடுவில் இருந்து வெளிப்புறம் நோக்கி  வளர்த்தெடுப்பது” என்கிற கோசத்தை ஒபாமா தழுவிக் கொண்டிருக்கிறார். தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுவதில் ஜனநாயகக்  கட்சி, குடியரசுக் கட்சி இரண்டு கட்சிகளுமே கைகோர்த்து வேலை செய்கின்ற நிலையில், ஒபாமாவும் அவரது அரசியல் கையாளுநர்களும், மக்களை முட்டாள்கள் போல் கருதும் அவர்களது அலட்சியமான மனோபாவத்துடன், இரண்டு கட்சியினருக்கும் இடையில் பொருளாதாரக்  கொள்கையில் பெரும் வேறுபாடுகள் இருப்பது போல் காட்டி பசப்புகின்றனர்.

டெட்ராயிட்டுக்கு நிதி உதவி வழங்க முடியாது என்று நிர்வாகம் அழுத்தம்திருத்தமாக கூறியுள்ளமையும், டெட்ராயிட் நகரத்  தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார நல உதவிகளை வெட்டுவதற்கான அவசரநிலை மேலாளர் கெவின் ஓரின் திட்டங்களுக்கு அது ஒப்புதல் அளித்துள்ளதும் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினால் உத்தரவிடப்படும் ஒரு கொள்கை தொடர்வதையும் அதிகரித்திருப்பதையுமே எடுத்துக் காட்டுகிறது.

புதனன்று காலேஸ்பர்கில் ஆற்றவிருக்கும் உரையில் ஒபாமா பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் மோசமடையும் வறுமை ஆகியவற்றை  நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான யோசனைகள் எதனையும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்கனவே தெளிவாக்கி விட்டது. அதற்குப் பதிலாய், பொருளாதார விடயத்தில் அவரது நிர்வாகத்தின் சாதனை குறித்துப் புகழ்பாடுவதற்கே அந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தவிருக்கிறார்.

அவ்வாறு அவர் முன்மொழிகின்ற “வேலைகளுக்கான” நடவடிக்கைகள் எதுவும் பெருநிறுவனங்களுக்கான வரி வெட்டுகள் மற்றும் மானியங்கள்  உட்பட பெருவணிகங்களின் நலன்களுக்கு அளவெடுத்து உருவாக்கியது போல கச்சிதமாக இருக்கும்.

செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கார்னி, பொருளாதார “மீட்சி” தொடங்கியது முதலாக ஒபாமா நிர்வாகம் 7 மில்லியன்  வேலைகளை உருவாக்கியிருப்பதாக தம்பட்டமடித்தார். ஆனால் இந்த சமயத்தில் வேலை வயதை எட்டிய மக்களின் எண்ணிக்கை 9.4 மில்லியன் அதிகரித்து விட்டிருந்தது என்ற உண்மையை இத்தம்பட்டம் கண்டுகொள்ளவில்லை. ஒபாமா நிர்வாகத்தின் ஒவ்வொரு ஆண்டிலும்  உழைக்கும் படையின் பங்கேற்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றிருக்கிறது.

2008 இல் இருந்து தொலைந்த சுமார் 2 மில்லியன் வேலைகளை ஒபாமாவின் “மீட்சி”யால் நான்கு வருடங்களில் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை. 2008 பொறிவின் சமயத்தில் தொலைந்த வேலைகளின் பெரும்பகுதி நடுத்தர வருமானத்தை ஈட்டித் தருவதாக  இருந்தவை என்ற அதே சமயத்தில் “மீட்சி”யின் போது புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளில் 58 சதவீதம் 7.69 டாலர்கள் முதல் 13.83  டாலர்கள் வரை பெற்றுத் தரும் மலிவூதிய வகையாக இருந்தன என்று சென்ற ஆண்டில் தேசிய வேலைவாய்ப்பு சட்ட திட்டத்தின் (The National Employment Law Project) அறிக்கை தெரிவித்தது.

ஆனால் மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதார சூழ்நிலை தான் இப்படி நாசமடைந்த நிலையில் இருக்கிறதே தவிர, ஒபாமா  உண்மையில் பிரதிநிதித்துவம் செய்கிற சமூக அடுக்குகளைப் பொறுத்தவரை, இப்போது தான் அவர்களுக்கு வாழ்க்கை முன்னெப்போதையும்  காட்டிலும் செழிப்பாக இருக்கிறது. ஊக வணிகர்களும், பண மோசடிப் பேர்வழிகளும், மற்றும் வோல் ஸ்ட்ரீட் மாபியாக்களும் ஒபாமாவின்  பொருளாதாரக் கொள்கைகளது புண்ணியத்தால், வரலாறு காணாத பங்குச் சந்தை மதிப்புகளையும் வரலாறு காணாத இலாபங்களையும் அனுபவிக்கின்றனர். தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு அதிகமாய் இருக்கிறது. பணக்காரர்களையும் பெரும் பணக்காரர்களையும் மக்களின் மற்றவர்களிடம் இருந்து பிரிக்கும் பிளவும் முன்னெப்போதையும் விட மிகவும்  பெரிதாக ஆகியிருக்கிறது. 2009க்கும் 2011க்கும் இடையில், அதாவது ஒபாமாவின் “மீட்சி”யின் முதல் இரண்டு ஆண்டுகளில், பணக்காரர்களின் உச்சியில் இருக்கும் 1 சதவீதத்தினரது வருமானம் 11 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்திருந்தது; எஞ்சிய 99 சதவீத மக்களின் வருமானமோ உண்மையில் சுருங்கி விட்டிருந்தது.

இதனிடையே, ஒபாமா அடுத்த நிதி ஆண்டுக்காய் தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தபடி, மெடிக்கேர் திட்டத்தில் இருந்து 400  பில்லியன் டாலர்களும் சமூகப் பாதுகாப்பில் இருந்து 130 பில்லியன் டாலர்களும் வெட்டும் தனது திட்டத்தை உந்தி முன்தள்ளிக் கொண்டிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் கூடி வேலை செய்து, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை 19  ஆம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் கண்டிராத மட்டத்திற்கு, அதாவது எட்டு-மணி நேர வேலை, குழந்தை தொழிலாளர் சட்டங்கள், திறம்பட்ட பொதுக் கல்வி, ஓய்வூதியங்கள், சுகாதார நல உதவிகள், வேலையிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள், மற்றும்  இன்னபிற உருவாகியிராத ஒரு காலத்திற்கு, பின்நோக்கி கொண்டு செல்வதே  ஒபாமா நிர்வாகத்தின் இலக்காக இருக்கிறது.

ஒபாமாவின் பின்னால் நிற்கும் நிதிய தன்னலக்குழுவின் தயவுதாட்சண்யமற்ற தாக்குதலுக்குப் பதிலிறுப்பாக, தொழிலாள வர்க்கமும் தனது  சொந்தக் கொள்கையை அதே தயவுதாட்சண்யமற்ற வகையில் முன்னெடுக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் அதிகாரத்தை உடைத்து, சமூகத்தை தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்  தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைவு செய்வதற்கான போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.