World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Socialist Equality Party to contest Australian federal election: A socialist program to fight the drive to war

சோசலிச சமத்துவக் கட்சி ஆஸ்திரேலியக் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது: போரை தூண்டுவதை எதிர்த்து போரிடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்

By the Socialist Equality Party
26 April 2013

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) செப்டம்பர் 14 அன்று நடைபெறவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் ஐந்து மாநிலங்களில் செனட் இருக்கைகளுக்கு ஒரு வேட்பாளர்கள் குழுவை நிறுத்தவிருக்கிறது.

அதிகரித்துவரும் போர் அபாயத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியாவிலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும், ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற இலக்குடன் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகள் செய்து வருகின்ற ஒரு ஒன்றுபட்ட பிரச்சாரத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இன் இந்தத் தேர்தல் தலையீடு இருக்கும். பெருமந்த நிலை காலத்திற்குப் பின்னரான உலக முதலாளித்துவத்தின் மிக மோசமான பொருளாதார உடைவிற்கு நடுவே, மூன்றாம் உலகப் போருக்கான விதைகள் விதைக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதல் என்ற வடிவத்தில் அவை  ஏற்கனவே வேர் விட்டு வளரவும் தொடங்கி விட்டன.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பரந்த மற்றும் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே எமது பிரச்சாரத்தின் மத்திய இலக்காக இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது, தனது வரலாற்றுவழியான பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் முயற்சியில் கடந்த இரண்டு தசாப்தங்களில் பால்கன்கள், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான மூர்க்கத்தனமான போர்களை நடத்தி வந்திருக்கும் நிலையில், இப்போது சீனாவின் பொருளாதார சக்தி அடக்கி வைக்க வேண்டிய ஒரு அச்சுறுத்தலாக பெருகி விட்டிருக்கிறது என்ற  மதிப்பீட்டின் அடிப்படையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ வலிமை மீது கவனம் குவித்து வருகிறது. துரிதமாக அணுஆயுதப் போரின் பரிமாணங்களை எடுக்கக் கூடியதும், மனித நாகரிகத்தின் அடிப்படையான எதிர்காலத்தையே அச்சுறுத்தக் கூடியதுமான ஒரு போர் என்பது அமெரிக்காவின் திட்டநிரலின் தடுக்கவியலாத தர்க்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை அமைப்பு(Australian Strategic Policy Institute -ASPI) அமெரிக்க இராணுவத்தின் புதிய வான்கடல் (AirSea Battle) யுத்த திட்டங்கள் குறித்து 2013 ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்று இந்த முடிவிற்கு வந்திருந்தது: “எதிர்காலத்தில் சீனாவிற்கு எதிராய் வரக் கூடிய போரில் ஈடுபடுவதற்கும் வெல்வதற்குமான ஒரு இராணுவ மூலோபாயம் என்றசிந்தித்துப் பார்க்கமுடியாத ஒன்றைபென்டகன் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.”

பசுமைக் கட்சியினர் உடந்தையாக இருக்க, லிபரல் மற்றும் தேசியவாதக் கட்சிகளின் முழு ஆதரவுடன், கிலார்டின் தொழிற்கட்சி அரசாங்கமானது ஆஸ்திரேலியாவை இந்தப் போர் தயாரிப்புகளின் முன்வரிசையில் நிறுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களின் முதுகின் பின்னால், கில்லார்ட், ஒபாமா நிர்வாகத்தின் சீன-விரோத ஆசியாவுக்குமுன்னுரிமை கொடுத்தலுக்குநிபந்தனையற்ற ஆதரவுக்கரம் நீட்டி, இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதேசமயத்தில் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களுடன் ஒரே குரலில், இந்த ஒப்பந்தங்களின் தாக்கத்தையும் அவற்றின் விரிவாக்கத்தையும் மறைக்கிறார்.

எதிர்வரவிருக்கும் தேர்தல் முற்றுமுதலாய் ஒரு மோசடியான அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஊடக-ஆதரவுடனானஉத்தியோகபூர்வபிரச்சாரத்தில் உண்மையான பிரச்சினைகள் எதுவுமே எழுப்பப்படுவதில்லை, எழுப்பப்படப் போவதுமில்லை. தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் உண்மையை கூறுவதற்கும், அவர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வா-சாவா பிரச்சினைகளை எழுப்புவதற்குமே சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தலில் தலையீடு செய்கின்றது. முதலாவதும் முதன்மையானதுமாக, நாங்கள் போருக்கான தூண்டுதல் தீவிரப்படுத்தப்படுவதை வெளிப்படுத்தி, அத்துடன் அத்தனை இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகளும் பகிரங்கமாக்கப்பட வலியுறுத்துவோம். இருபதாம் நூற்றாண்டின் பாதையில் இரண்டு முறை, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மனிதகுலத்தை உலகப் போருக்குள் அமிழ்த்தி பேரழிவுகரமான பின்விளைவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. அவர்கள் மீண்டும் அதனைச் செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது!

தொழிலாள வர்க்கம் அதிமுக்கிய கேள்விகளுக்கான பதில்களை கோருவதுடன் அதற்கான பதிலையும் பெற வேண்டும். கில்லார்ட் செய்திருக்கும் இரகசிய ஒப்பந்தங்கள் என்ன? ஆஸ்திரேலிய இராணுவம் அமெரிக்க இராணுவத்தின் தரப்பிற்குக் கொடுத்திருக்கும் உறுதிப்பாடுகள் என்ன? ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் படைத்தளங்களின் உண்மையான நோக்கம் என்ன? புதிதாக என்ன இராணுவத் தளங்களும் இராணுவ தலையீடுகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன? சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் எவ்வளவு முன்னேறியிருக்கின்றன?

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க இராணுவத் தளங்கள் எதுவும் கிடையாதுஎன்று தொழிற்கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித் கூறியிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார். பனிப்போர் காலத்தில் பைன் முனை மற்றும் வடமேற்கு முனை பகுதிகளில் அமைக்கப்பட்ட தளங்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையில் நடைபெற்ற போர்களில் ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன. சீனாவுக்கு எதிரான போருக்கென அமெரிக்க  இராணுவம் இடும் திட்டங்களுக்குள் இவை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

2011 நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒபாமா நிகழ்த்திய உரையின் போது அறிவித்த டார்வின் அமெரிக்க கடற்தளம் சீனாவுக்கு எதிரான முன்னுரிமை கொடுத்தலின் இராணுவவாத நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்போது, மத்திய கிழக்கில் இருந்தும் ஆபிரிக்காவில் இருந்தும் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களுக்காக சீனா எந்த கடல்வழிப் பாதைகளை சார்ந்திருக்கிறதோ அந்த முக்கிய பாதைகளை தடைசெய்யும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கு அண்மித்த வடக்கில் கடற்படை, தரைப்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகள் இதில் இடம்பெற்றிருக்கும்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற இராணுவ விமானங்களை இயக்குவதற்கான ஒரு தளத்தை கோகோஸ் தீவுகளில் அமைப்பதற்கும் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஸ்டேர்லிங் கடற்படைத் தளத்தை அமெரிக்காவின் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஒரு தங்கும் துறைமுகமாக மாற்றுவதற்கும் கூட திட்டங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே ஆசியப் பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் ஏராளமான பல பதட்டம்மிக்க பகுதிகளை உருவாக்கி விட்டிருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று கூட ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்று அதன்மூலம் ஆஸ்திரேலியாவை உடனடியாக போருக்குள் இழுத்து விட முடியும்.

* வரலாற்றுரீதியாக சீனா ஒரு மூலோபாய இடைத்தாங்கியாக கருதும் வட கொரிய ஆட்சிக்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் மூலம் கொரியத் தீபகற்பத்தில் பதட்டங்கள் அதிகரித்திருக்கின்றன.

* சர்ச்சைக்குரிய தீவு வரிசைகளுக்கு உரிமை கோருவதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரக்கக்கூடிய ஒரு மோதலில் அமெரிக்கா ஜப்பானுக்கு இராணுவ ஆதரவை உறுதியளித்திருக்கிறது.

* சீனாவுக்கு எதிரான பிராந்திய உரிமைப் பிரச்சினைகளைத் தொடர்வதற்கு வியட்நாமும் பிலிப்பைன்ஸும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

* சீனாவுடன் தொடர்புடைய மூலோபாய இருப்பிடம் காரணமாக பர்மாவும் மங்கோலியாவும் அமெரிக்காவின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கையில் சீனாவுக்கான மாற்று எடையாக இந்தியாவுடன் நெருக்கமாக பிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கக் கூட்டணிகளின் வலைப்பின்னல் பெருகுவதும், இந்தப் பிராந்தியத்திலான இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளும் சீனப்பெருநிலத்தை சுற்றி தொடர்ந்து இறுக்கப்படும் ஒரு கயிறாக இருக்கிறது.

பிராந்திய மோதல்கள் பெரிய சக்திகளின் நலன்களை ஊடறுக்கும் நிலையில் இருக்கின்ற ஆசியச் சூழ்நிலையானது முதலாம் உலகப் போருக்கு தூண்டுதலளித்த 1914க்கு முந்தைய பால்கன்களின் நிலையை அதிகமாய் ஒத்திருக்கிறது. சீனாவின் பொருளாதார விரிவாக்க நிலைக்கு அமெரிக்கா காட்டுகின்ற ஆழமான குரோதம் அத்தகையதொரு எரியூட்டலுக்கான எரிபொருளாக அமைந்திருக்கிறது. சீனா உலக மேலாதிக்கத்தினை தேடும் ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. இந்நாடு பெரும் ஏகாதிபத்திய சக்திகளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பூகோள-அரசியல் கட்டமைப்பினுள் ஒரு இரண்டாம்தர நிலையையே வகிக்கின்றது. ஆனால் உலக முதலாளித்துவத்தின் மலிவு உழைப்பு மற்றும் உற்பத்திக்கான களமாக சீனா எழுச்சி கண்டிருப்பது, முக்கியமான ஆதாரவளங்களும், கச்சாப் பொருட்களும் மற்றும் சந்தைகளும் ஆபிரிக்காவிலோ அல்லது உலகின் வேறெங்கிலுமோ இருந்தாலும் அவற்றைத் தன் பிடிக்குள் கொண்டிருப்பது என்ற அமெரிக்காவின் தீர்மானமிக்க உறுதியுடன் சீனாவை மோதலுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

போருக்கு தொழிலாள வர்க்கத்திலும் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களின், பரந்த அடுக்குகளிடையேயும் ஆழமான எதிர்ப்பு இருக்கிறது. 2003 இல், ஈராக் போர் தொடங்கப்பட்டதற்கு எதிராக உலகளவில் தன்னெழுச்சியாக வெடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர்-எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய வரலாற்றின் மிகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த போர் எதிர்ப்பு உணர்வுகள் மறைந்து விடவில்லை. ஆனால் உத்தியோகபூர்வ பாராளுமன்ற வடிவமைப்பினுள் இது தனக்கான வெளிப்பாட்டைக் காணமுடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இராணுவவாதத்திற்கான பரந்த எதிர்ப்புக்கு ஒரு சக்தி வாய்ந்த குரலையும் அதன் நனவான அரசியல் வெளிப்பாட்டுக்கான வழிவகையையும் வழங்கும். போருக்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆசியா முழுவதிலும் உழைக்கும் மக்களுக்கு தீர்மானகரமான தலைமையை அது வழங்கும்.

ஒபாமாவின் இராணுவத் தயாரிப்புகளுக்கு அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் ஆதரவு வழங்குவது மட்டுமல்ல, அமெரிக்க கொள்கை குறித்தும் அதில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பு குறித்தும் ஒரு சதிகாரத்தனமான மவுனத்தை அவை பராமரிக்கின்றன. உண்மையில் நடப்பு தொழிற்கட்சி அரசாங்கமே சதியையே அடித்தளமாய் கொண்டு எழுந்ததாகும். 2010 ஜூன் 23-24 ஆட்சிக்கவிழ்ப்பில் கெவின் ரூட் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை கில்லார்ட் ஒருபோதும் விளக்கியதில்லை.

ரூட், அவரதுநிர்வாக பாணிக்காகவோ அல்லது கருத்துக் கணிப்பில் ஆதரவு வீழ்ச்சி கண்டதாலோ அகற்றப்படவில்லை, மாறாக ஒபாமா நிர்வாகம் அதன் சீன விரோத முன்னுரிமை கொடுத்தலின் கடுகளவு விலக்கத்தைக் கூட எதிர்கொள்ள தயாரில்லாதிருந்ததே காரணம். ரூட், அமெரிக்காவுடனான ஆஸ்திரேலியக் கூட்டணிக்கு உறுதியான ஆதரவாளராய் இருந்த அதேநேரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு இணக்கத்தை மத்தியஸ்தம் செய்வதற்கு முனைந்தார். இது அமெரிக்காவின் மோதல் திட்டத்திற்கு முரணானதாக இருந்தது. அதனால் தான் ஆஸ்திரேலிய மக்களை விடுங்கள், நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சிக்கும் கூட தெரியாமல் அமெரிக்காவின் தொழிற்கட்சிசெல்வங்களின்ஆசியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உட்கட்சி கவிழ்ப்பின் மூலமாக அவர் அகற்றப்பட்டார். கில்லார்ட் பிரதமராகி ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதருடன் பொது அரங்கில் காட்சி தந்த நாள் முதலாகவே, அவரது அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்தின் பாதையை அடியொற்றிச் செல்லவிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி வந்திருக்கிறார்.

சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் முக்கியமான மூலோபாயப் படிப்பினைகள் அனைத்தின் மீது சோசலிச சமத்துவக் கட்சி தன்னை  அடித்தளமாக கொள்வதுடன், குறிப்பாக கடந்த பத்தாண்டு காலத்தின் மூலோபாய அனுபவங்களை கவனத்திற்கு எடுக்கின்றது. ஒரு தசாப்தத்திற்கு முன்னால் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஈராக் ஆக்கிரமிப்புப் போரை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற உண்மையானது பொதுக் கருத்தின் அழுத்தம் மட்டுமே தன்னளவில் ஏகாதிபத்திய பெருஞ்சக்கரத்தை நிறுத்துவதற்குப் போதுமானதில்லை என்பதை விளங்கப்படுத்துகிறது. அந்த இயக்கம் தோற்றதற்குக் காரணம் அதற்கு ஆதரவு போதவில்லை என்பதால் அல்ல. அதன் தலைமைகள் அந்த இயக்கத்தை நடப்பு அரசியல் கட்டமைப்பிற்கு அடிபணியச் செய்து, ஐக்கிய நாடுகள் அமைப்போ, அல்லது அரசியல் ஆளும்வர்க்கத்தின் ஏதேனும் ஒரு பிரிவின் மீது அழுத்தத்தை கொடுப்பதன் மூலமோ, அமெரிக்காவின் பாதையை மாற்ற நிர்ப்பந்திக்கலாம் என்று வலியுறுத்தி வந்ததே காரணம் ஆகும்.

அதற்குப் பின், போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகள் மேலும் வலது நோக்கி நகர்ந்து விட்டன. அவை அனைத்துமே இப்போது அமெரிக்க இராணுவவாதத்தின் பின்னால் தங்களை நிறுத்திக் கொண்டு விட்டன. பல்வேறு போலி-இடது போக்குகளும் 2011 இல் லிபியாவில் குற்றவியல் அமெரிக்க-நேட்டோ தலையீட்டை ஆதரித்து, இப்போது சிரியாவில்ஆட்சி மாற்றத்தை நடத்துவதற்கு அமெரிக்க தலைமையிலான நடவடிக்கையின் பின்னால் அணிவகுத்து நிற்பதில் இந்த மாற்றம் தெளிவாக காணக்கூடியதாய் இருக்கிறது.

குறிப்பாக பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாதசோசலிச மாற்றீடுஇப்போதுஎதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்பதைக் கைவிடுவது அவசியம்என்று வலியுறுத்தி வருவதில் போலி-இடதுகளின் நிலை இரத்தினச் சுருக்கமாய் விளங்கப்படுத்தப்படுகிறது. இவ்வாறாக நேற்று போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களாய் இருந்த இவர்கள் இன்றோ ஏகாதிபத்தியத்தின் தளராத வக்காலத்துவாதிகளாகி விட்டார்கள். மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு இவர்களிக்கும் ஆதரவும், ஆசியா-பசிபிக்கில் அமெரிக்க போர் தயாரிப்புகள் குறித்து அவர்கள் கொள்ளும் மௌனமும், அவர்கள் ஏற்கனவே சீனா மீதான தாக்குதலை ஆதரிக்க அணிவகுத்து விட்டனர் என்பதையே குறிக்கிறது.

இந்தப் போக்குகளின் பரிணாம வளர்ச்சி ஆழமான சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் தான் வேர் கொண்டிருக்கிறது. இவை தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசுவதில்லை, மாறாக கடந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்குகளில் திரண்ட பரந்த சொத்துகளுக்கான மூலவளமாக இருந்த கட்டற்ற நிதி ஒட்டுண்ணித்தனத்தின் மீதும் ஏகாதிபத்தியம் மூலப்பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பின் முக்கியமான மூலவளங்களை தனக்காகப் கட்டுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளின் மீதும் (முதலில் கூறிய சொத்துகள் இறுதியாக சார்ந்திருப்பது இவற்றின் மீது தான்) தங்களது பொருளியல் நலன்கள் பொதிந்திருக்கக் காணும் உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான தட்டுகளுக்காகவே அவர்கள் பேசுகின்றனர்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமானது, போரின் மூலாதாரமான முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அது அணிதிரட்டுகின்ற மட்டத்திற்குத் தான் முன்செல்ல முடியும் என்பதே கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பாடம் ஆகும்.

உண்மையான போர் எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தியுறுவதற்கு தேசிய எல்லைகள் கடந்து தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாக இருக்கிறதுஅதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சி தேசியவாதம், பேரினவாதம் மற்றும் இனவெறியின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை தனது பிரச்சாரத்தின் மையத்தானத்தில் வைக்கிறது. கில்லார்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைமையில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அகதிகள்-விரோத வெறுப்புப் பிரச்சாரத்தைத் தூண்டி விடுகின்றன, அதேவேளையில் கில்லார்டும் அவரது அமைச்சர்களும் அத்துடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருக்கிற இவர்களது ஆதரவாளர்களும் சேர்ந்துவெளிநாட்டு தொழிலாளர்களைகண்டனம் செய்வதோடுஆஸ்திரேலியர்களுக்கு வேலைகளுக்குஅழைப்பு விடுகின்றனர். தொழிற்கட்சியின் வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கையின் மோசமான மரபுகளை மறுபடியும் தட்டி எழுப்புகின்ற வேலையானது, உலகெங்கிலும் இருந்தான புலம் பெயர்ந்தவர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தை ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் உலகளவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிளவுபடுத்துகிற மிகப் பிற்போக்குத்தனமான அரசியல் நோக்கத்திற்கே சேவைசெய்கிறது.

இரண்டாம் உலகப் போரையொட்டி லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: ”மனிதகுலத்தை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கு முன்பாக முதலாளித்துவமானது உலகச் சூழலை, தேசிய மற்றும் இன வெறுப்பின் நச்சு ஆவிகளைக் கொண்டு அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.” அவரது எச்சரிக்கை சிறிதும் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற சோசலிச இயக்கத்தின் அறைகூவல் முழக்கம் மட்டுமே போருக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாய் நிலைநிறுத்துவதற்கான ஒரே அடிப்படை ஆகும். ஏகாதிபத்தியம் உலகப் பேரழிவுக்கு அச்சுறுத்தும் ஒரு வலிமையான பயங்கரமான சக்தியாக இருக்கிறது. அதனினும் வலிமையான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கம் என்ற சக்தியால் மட்டுமே அதைத் தோற்கடிக்க முடியும்.

ஒரு சமூக எதிர்-புரட்சி

வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போர் என்பது தவிர்க்கவியலாமல் தாயகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்துடன் கைகோர்த்தே வருகிறது. 2008 இன் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின், ஒவ்வொரு நாடாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தினால் வென்றெடுக்கப்பட்ட அனைத்து சமூக நலன்களுக்கும் எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒப்பானவை. கிரீசிலும், சைப்ரஸிலும், ஸ்பெயினிலும், இத்தாலியிலும் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாள வர்க்கமானது 1930களின் நிலைமைகளுக்கு மீண்டும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் போருக்குப் பிந்தைய சமூக நலன்புரி அரசில் எஞ்சியிருந்த கொஞ்சமும் திட்டமிட்டு அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்க தொழிலாளர்களும் பெருமந்தநிலை காலத்திற்குப் பிந்தைய மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். டிரில்லியன் கணக்கான டாலர்களை நிதி மூலதனத்தின் ஒட்டுண்ணிகளுக்கு தாரை வார்த்து விட்டு, ஆளும் உயரடுக்கினர், முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை செலுத்தச் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஒரேயொரு கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

சுரங்கத் துறை எழுச்சியின் காரணமாக ஆஸ்திரேலியா எப்படியோ இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்து விட்டதாக கூறியதெல்லாம் சுக்குநூறாகிக் கிடக்கிறது.

உலகின் முக்கியமான மத்திய வங்கிகள் டிரில்லியன் டாலர் கணக்கில் அச்சடித்ததால் விளைந்த அதிகரித்த தாதுப்பொருள் ஏற்றுமதி விலைகள் மற்றும் உலகளாவிய நாணய மதிப்புகளிலான ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் ஒரு விளைபொருளான ஆஸ்திரேலிய டாலரின் பரிவர்த்தனை மதிப்பிலான அதிகரிப்பு  தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு புதிய சுற்றுத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு ஆளும் உயரடுக்கினால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு தொழிற்சாலை மூடப்படுவதும் அல்லது ஒரு புதிய சுற்று ஆட்குறைப்புகளும் அல்லது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சரிக்கும் நோக்குடனான பொருளாதாரமறுசீரமைப்பும்அன்றாடச் செய்திகளாகி விட்டன.

ஆஸ்திரேலிய முதலாளித்துவம்சர்வதேசரீதியாக போட்டித்திறனுடன் திகழஉற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் (தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக) என்பதே ஆளும் உயரடுக்கின் அத்தனை பிரிவுகள் மற்றும் அவற்றின் ஊடக ஊதுகுழல்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது. நிதி மூலதனம் மேலும் மேலும் இலாபம் அதிகமான முதலீடுகளைத் தேடுவதன் காரணத்தால் ஒட்டுமொத்த தொழிற்துறைகளுமே அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ளன.

சமூக ஏற்றத்தாழ்வு ஆழமடையும் காரணத்தால், பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் துரிதமாக சேதமடைந்து கொண்டிருக்கின்றன. பலருக்கும் வீட்டுவசதிக்கான செலவுகள் ஏற்கனவே சகிக்க முடியாத மட்டங்களை எட்டி விட்டன. அதேநேரத்தில் வீட்டளவிலான கடன் 2000 இல் வருமானத்தில் 94 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று வருமானத்தில் 150 சதவீதம் என்ற மட்டத்திற்குச் சென்று விட்டது. இதில் பெரிய வங்கிகள் தான் ஆதாயமடைந்து இருக்கின்றன. 2012 இல் 25 பில்லியன் டாலரளவுக்கு இலாபங்களைத் திரட்டியுள்ளன.

நிதி மூலதனம் சாதனை அளவான இலாபங்களை ஈட்டுகின்ற அதேநேரத்தில் தான் சமூக சேவைகளும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுச் சுகாதார அமைப்புமுறை அதன் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தெரிந்தெடுத்த அறுவைச்சிகிச்சை (எலெக்டிவ் சர்ஜரி) என்று சொல்லப்படுவதற்கான காத்திருப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிற அதேசமயத்தில் ஊழியர் எண்ணிக்கை வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதுஆதாரவளம் குறைந்தசெயல்திறன் குறைந்தஅரசுப் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அகற்றி தனியார் அமைப்புமுறைக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட கில்லார்டின்கல்விப்  புரட்சியின் காரணத்தால் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், கூட்டம் மிகுந்த வகுப்பறைகளுக்கும் உரைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதேபோல கல்விக் கட்டணத்திற்காக அவர்கள் உழைக்கும் நேரம் முன்னெப்போதையும் விட நீண்டுகொண்டு சென்று கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 14க்குப் பிறகு அதிகாரத்திற்கு வரக் கூடிய எந்தவொரு அரசாங்கமும் அமல்படுத்தவிருக்கும் தாக்குதலுடன் ஒப்பிட்டால் இதுவரை வந்த தாக்குதலும் கூட முக்கியத்துவம் குறைந்ததாகி விடும் என்கிற அளவுக்கு வரவிருக்கும் அரசாங்கத்தின் தாக்குதல் இருக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. 2012 ஏப்ரலில், இலண்டனில் வழங்கிய ஒரு உரையில், தாராளவாத எதிர்க்கட்சியின் கருவூல செய்தித்தொடர்பாளர் ஜோ ஹாக்கி பெருநிறுவன உயரடுக்கினர் கோருகின்ற திட்டத்தை வார்த்தைகளில் வடித்தார்: “உரிமைகளுக்கான காலத்தைமுடித்து வைப்பதன் மூலமாக - அதாவது நலன்புரி அரசிலும் மில்லியன்கணக்கான சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்வதற்குச் சார்ந்திருக்கக் கூடிய அத்தியாவசியமான சமூக சேவைகளிலும் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் அகற்றுவதன் மூலமாக - நிதிப் பற்றாக்குறையை உபரியாக மாற்றுவது தான் அந்தத் திட்டம்.

சர்வாதிகார அச்சுறுத்தல்

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவில்லை என்பதோடு உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகத்தை நோக்கிய முன்கண்டிராத வெறுப்பும் கோபமும் எழுந்திருக்கிறது. நாடாளுமன்றக் கட்சிகள் - தொழிற்கட்சி, தாராளவாத-தேசியவாத மற்றும் பசுமைக் கட்சிகள் - அனைத்தும் ஜீவமரணப் போராட்டத்தில் இருக்கின்றன. தனது திட்டநிரலைச் சாதிக்க முடியாமல் போவது குறித்து நாளுக்கு நாள் வெறுப்படைந்து கொண்டு செல்லும் ஆளும் உயரடுக்கினர் அதனைத் திணிக்க நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகளிலும் சர்வாதிகார நடவடிக்கைகளிலும் இறங்குவர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் இதில் இடம்பெற்றிருக்கும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தளைகளில் இருந்து விடுபடுவதற்கு ஆஸ்திரேலிய முதலாளித்துவம் கொண்டிருக்கும் விருப்பமானது 1975, நவம்பர் 11 கான்பெரா ஆட்சிக் கவிழ்ப்பில் விளங்கப்பட்டது. ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விட்டலமின்  தொழிற்கட்சி அரசாங்கம் சிஐஏ உள்ளிட்ட சக்திகளால் அகற்றப்பட்டமை மற்றும் அதற்கு விட்லாமே கூட கோழைத்தனமாக சரணடைந்தமை ஆகியவற்றின் முக்கியத்துவம் அதனையடுத்து தொழிற்கட்சி பெற்ற உருமாற்றத்தில் வெளிப்பட்டது. அடுத்து வந்த ஹாக் மற்றும் கீட்டிங்கின் தொழிற்கட்சி அரசாங்கம் சமூக சீர்திருத்தங்களுக்கான எந்த உறுதிப்பாட்டையும் கைவிட்டதோடு, அதற்குப் பதிலாக பெருநிறுவன உயரடுக்கினரின் நலன்களின் பேரில் ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் ஒரு பெரியமறுசீரமைப்பையும் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாறு கண்டிராத ஒரு தாக்குதலையும் செயல்படுத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே முன்கூட்டி எச்சரித்திருந்ததைப் போல, 2010 ஜூன் 23-24 இல் ஜனநாயகவிரோதமான முறையில் ரூட் ஆட்சி கவிழ்க்கப்பட்டமையானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதன், ஆளும் வர்க்கம் தனது வர்க்க நலன்களை முன்னெடுக்க எதேச்சாதிகார நடவடிக்கைகளில் மீண்டும் இறங்கவிருப்பதன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். அதற்கான தயாரிப்புகள் எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. 2007 முதலாக, தொழிற்கட்சி அரசாங்கமானது, அதற்கு முன்பிருந்த ஹோவார்டு லிபரல் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பினை கட்டியெழுப்பும் விதமாகவும் மோசடியானபயங்கரவாதத்தின் மீதான போர்என்ற பதாகையின் கீழும் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதன் அடிப்படையிலான ஒரு போலிஸ் அரசுக்கு சாரக்கட்டினை வலுவாக வடிவமைத்து உருவாக்கியிருக்கிறது.

போர், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகிய பிரச்சினைகளுக்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்தத் தீர்வினை முன்வைக்க ஒரு தொழிலாளர்அரசாங்கத்திற்காகவும் சமூகத்தை சோசலிசரீதியில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்கும் போராடுவதன் மூலமாக  ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் போராடும்.

முதலாளித்துவ இருகட்சி நாடாளுமன்ற அமைப்புமுறையில் இருந்தும் அதன் பசுமைக் கட்சி மற்றும் போலி-இடது வக்காலத்துவாதிகளிடம் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே இத்தகையதொரு இயக்கத்தின் அடிப்படைக் கடமையாக இருக்கும். “குறைந்த தீமைஎன்ற அடிப்படையில் லிபரல்களைக் காட்டிலும் தொழிற்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதாக போலி-இடதுகள் மோசடித்தனமாகக் கூறுகின்றனர். எல்லா பொய்களைப் போலவே இந்தப் பொய்யும் ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கம் கொண்டதாகும். தொழிலாள வர்க்கத்தை முடக்கி அதன் போராட்டங்கள் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கழுத்துப்பிடியை உடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதே அந்த நோக்கமாகும்.

தொழிற்சங்கங்களின் அரவணைப்பின் கீழ் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் நலன்களுக்காகப் போராட முடியும் என்பதான போலி-இடதுகளின் கூற்றும் இதே அளவுக்கு நச்சுத்தனம் கொண்டதாகும். உண்மை என்னவென்றால் தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்திலும் தொழிலாளர்களது அமைப்புகளாக இல்லை. கடந்த மூன்று தசாப்த காலத்தில், உற்பத்தியின் உலகமயமாக்கம் தேசிய ஒழுங்குநெறிகளின் அடிப்படையிலான தொழிற்சங்கங்களின் பழைய, மட்டுப்படுத்தப்பட்ட, சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களை எல்லாம் முற்றுமுதலாக உடைத்தெறிந்து விட்டது என்பதோடு அவற்றை பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி மூலதனம் ஆகியவற்றின் உத்தரவுகளை நிறைவேற்றும் தொழிற்துறை போலிஸ் படை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதாக மாறிவிட்டிருக்கிறது. தொழிற்கட்சியும் சரி தொழிற்சங்கங்களும் சரி ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கே நேரடியாக சேவை செய்து வருகின்றன.

வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். தொழிற்சாலைகளிலும் தொழிலகங்களிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட, அவற்றுக்கு எதிரான புதிய சாமானியத் தொழிலாளர்களுக்கான அமைப்புகளை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், சுகாதார வசதிகளுக்கும் மற்றும் பிற சமூக சேவைகளுக்கும் பெருநிறுவனக் கட்சிகள் அமல்படுத்தி வருகின்ற சிக்கன நடவடிக்கை வெட்டுகளுக்கு எதிரான வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

எங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு தர தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் மற்றும் தொழில் அறிஞர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. சாத்தியமான மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை வழங்க அழைக்கும் அதேவேளையில் தேர்தல் மூலம் வெற்றிகாண்பது மட்டுமே எங்களது பிரதான நோக்கம் அல்ல. மாறாக உலகப் போர், சமூகப் பேரழிவு மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றின் அச்சுறுத்தலுக்கு முடிவுகட்ட முதலாளித்துவ இலாப அமைப்பு முறையைத் தூக்கியெறிவது மற்றும் உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பது ஆகியவற்றுக்கு குறைந்த எதுவும் பிரயோசனமற்றது என்ற விஞ்ஞானபூர்வமான சோசலிச நனவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் அதனை ஆயுதபாணியாக்குவதுமே அடிப்படை நோக்கமாகும்.

இதற்கு ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது எல்லாவற்றுக்கும் முதலான அவசியமாக உள்ளது. இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு ஆகும். ரஷ்யப் புரட்சியில் லெனினின் சக தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்திற்கும் தேசியவாத சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக நடத்திய போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவடிவம் பெற்ற புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் மீது தனது அரசியல் வேலைகளுக்கான அடித்தளத்தை மிக நனவுடன் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே. சமூக சமத்துவத்திற்கும், வறுமை, சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் போர் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்குமாய் சோசலிசத்திற்கான அவசியமிருப்பதன் மீது உடன்பாடு கொண்ட அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபெறுவதற்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய அங்கமான உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதற்கும், எங்களது வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை ஆய்வு செய்து எங்களது தோழர்களாக இணைவதற்கும் நாங்கள் அழைப்புவிடுக்கின்றோம்.