World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The assassination of Yasser Arafat

யாசர் அராபத்தின் படுகொலை

Jean Shaoul
16 November 2013

Back to screen version

பிரெஞ்சு இராணுவ மருத்துவமனையில் நவம்பர் 11, 2004இல் யாசர் அராபத் மரணமடைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நச்சு இயல் ஆய்வாளர்களின் ஒரு சுவிஸ் குழு அவரது தோண்டியெடுக்கப்பட்ட சடலத்தின் எஞ்சிய துணுக்குகளிலும், அவரது உடலை மூடியிருந்த சவச்சீலையிலும் மற்றும் அவரது கல்லறை மணலிலும் அணுக்கதிர் ஐசோடோப்பு பொலோனியம்-210 கலந்திருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்தது.

இதேபோன்று ஒரு ரஷ்ய குழுவும் அந்த ஃபத்தாஹ் தலைவரின் மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஜனாதிபதியின் உடலில் பொலோனியத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தது. பாலஸ்தீன தலைவர் விஷத்தால் கொல்லப்பட்டிருப்பதற்கான 83 சதவீத சாத்தியக்கூறு இருப்பதாக சுவிஸ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அராபத்தின் மரணம் குறித்து பிரெஞ்சு அதிகாரிகளின் பரந்த புலனாய்வுகளின் ஒரு பாகமாக அவர்களின் கண்டுபிடிப்புகள், பாலஸ்தீன தலைவர் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த அராபத் அக்டோபர் 2004இல் அவரது ரமல்லா வீட்டில் உணவு உட்கொண்ட பின்னர் நோய்வாய்பட்ட உடனேயே, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் அங்கே எழுந்தன. ஆனால் அதுதான் விவகாரமா என்பதை தீர்மானமாக கூற அங்கே சாத்தியமில்லாமல் இருந்தது. பாலஸ்தீனத்திலோ அல்லது பிரான்சிலோ, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் யாராலும் அவரது உடல்நலக்குறைவுக்கு காரணங்களைக் கண்டறிய முடியவில்லை. குடல் அழற்சி, மஞ்சள் காமாலை மற்றும் இன்ட்ராவாஸ்குலர் கோகுலேஷன் (intravascular coagulation) என்றழைக்கப்படும் இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல் போன்றவொரு நிலைமைகளால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

அராபத்தின் நண்பராக மாறியிருந்த ஒரு முன்னாள் அமெரிக்க உளவுத்துறை பாதுகாவலரான புலனாய்வு இதழாளர் கிளேடன் ஸ்விஷர் அராபத்தின் மரணம் குறித்து அவரது சந்தேகங்களை வெளிப்படுத்திய பின்னர் தான், கட்டாரை மையமாக கொண்ட அல் ஜசீரா செய்தி சேனல் ஒரு புலனாய்வைத் தொடங்கியது. கட்டார் தற்போது ஹாலெட் மெஷாலை ஆதரிக்கும் ஒரு நாடாக மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் துணை அமைப்பான ஹமாஸின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தலைமைகளின் புகலிடமாக விளங்குகிறது. காசாவில் ஆட்சி செலுத்திவரும் ஹமாஸ், பாலிஸ்தீன ஆணையத்தை எதிர்க்கிறது.

அல் ஜசீராவின் புலனாய்வு அராபத்தின் உடல்நல பாதிப்புகளில் பொலோனியத்தின் அடையாளங்கள் இருந்ததைக் கண்டறிந்ததால், அது பிரான்ஸ் மூலமாக ஒரு மனிதப்படுகொலை விசாரணையை நடத்த மற்றும் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுக்க இட்டு சென்றது. இதேபோன்ற பதட்டங்கள் திருமதி. அராபத் மற்றும் பாலஸ்தீன ஆணையத்திற்கு இடையேயும் இருந்தன. திருமதி. அராபத் சவத்தின் எஞ்சிய மாதிரிகளை ஸ்விட்சர்லாந்திற்கு அனுப்பினார், அதேவேளையில் பாலஸ்தீன ஆணையம் மாதிரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பியது.       

அராபத்தின் நெருங்கிய கூட்டாளி அபு ஜிகாத் உட்பட பல பாலஸ்தீனிய தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருந்ததால், அராபத் மரணத்தின் பொறுப்பு உடனடியாக நியாப்படுத்தல்களோடு இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டது

முன்னாள் பிரதம மந்திரி ஏரியல் ஷரோன் பகிரங்கமாகவே அராபத்தைக் கொல்லும் முயற்சியில் தோல்வி அடைந்ததை ஒப்பு கொண்டார். பாலஸ்தீன தலைவர்களைப் படுகொலை செய்வது இஸ்ரேலின் அரச கொள்கையாக மாறியிருந்தது.

செப்டம்பர் 2003இல், துணைப் பிரதம மந்திரி இஹூத் ஓல்மெர்ட் கூறுகையில், அராபத்தை ஒழித்துக்கட்ட கேபினெட் எடுத்த முடிவானது அமைதிக்கு ஒரு தடையை நீக்கும் ஒரு முடிவாக இருந்தது என்று கூறி, பாலஸ்தீன ஜனாதிபதியை இஸ்ரேலிய அரசாங்கம் படுகொலை செய்ய முனைந்திருந்ததை பகிரங்கமாகவே அறிவித்தார்.

செப்டம்பர் 2000இல் தோற்றப்பாட்டளவில் இரண்டாவது பாலஸ்தீன புரட்சி (Intifada) தொடங்கியதில் இருந்து, அராபத் ரமல்லாவில் குண்டுக்கு இரையான அவரது அலுவலகங்களில் ஒரு கைதியைப் போல வைக்கப்பட்டிருந்தார். பாலஸ்தீனியர் வாழ்வில் மிக குறைந்த அதிகாரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய இயலாமல் இருந்தது. அராபத்தை ஒழித்து கட்டுவதற்கான இஸ்ரேலின் முடிவை கண்டித்த .நா. பாதுகாப்பு அவை தீர்மானத்தை புஷ் நிர்வாகம் வீட்டோ அதிகாரம் செலுத்தி தடுத்து இஸ்ரேலின் பிடிக்கு ஆதரவளித்தது.

இஸ்ரேல் ஒருபோதும் அதன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அராபத்தின் உடல்நலம் இறுதியாக மோசமடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, அவரைக் கொல்லும் அச்சுறுத்தலை ஷரோன் வலியுறுத்தி இருந்தார்.

1990களில் இருந்தே தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஓர் இணக்கத்திற்கு வர விரும்பிய அராபத், 1993இல் ஓஸ்லோ உடன்படிக்கைகளின் கீழ் பாலஸ்தீன தேசிய ஆணையம் ஸ்தாபிக்க உடன்பட்டார். அதற்கு கைமாறாக, நடைமுறை வாழ்வெனும் சிறைக்கூடத்தில் மாட்டியிருந்த வறிய மற்றும் மூர்க்கமான பாலஸ்தீன மக்கள் மீது பொலிஸ் வேலை அவர் செய்ய நியமிக்கப்பட்டார். அதேவேளையில் அந்த மக்களின் தலைவர்களோ நம்பவியலாத செல்வவளத்தில் செழித்தனர்

இருந்தபோதினும் பாலஸ்தீன ஆணையத்தைப் பயன்படுத்தி முன்செல்ல மறுப்பதிலும், அவரது சொந்த மக்களுக்கு எதிராக ஓர் உள்நாட்டு யுத்தத்தை தொடங்கி வைத்த அல்-அக்சா மார்ட்டிர்ஸ் பிரிகேட், இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹமாஸ் ஆகியவைகளிடமிருந்து வந்த இஸ்ரேலுக்கு எதிரான மூர்க்கமான எதிர்ப்பை ஒடுக்குவதிலும் அராபத் அவரது கடந்தகால புரட்சிகர தேசியவாதிகளோடு போதுமான அளவிற்கு தொடர்புகளைத் தக்க வைத்திருந்தார்.   

அவரது மரணம் தடைகளை அகற்றி மஹ்மூத் அப்பாஸின் கீழ் இன்னும் வளைந்து கொடுக்கின்ற ஒரு தலைமையை நிறுவ பாதை அமைத்து கொடுத்தது

இஸ்ரேலிய இராஜாங்க காரியதரிசிகளின் பல ஆண்டு மறுப்புகளுக்குப் பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிரோன் பெரெஸ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நியூ யோர்க் டைம்ஸிற்கு அளித்த ஒரு பேட்டியில், அது சென்ற வாரம் தான் பிரசுரமானது, அராபத் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று தெரிவித்த பெரெஸ் அவரைக் கொலை செய்யும் கொள்கையை தாம் எதிர்த்து வந்ததாக குறிப்பிட்டார். “அராபத்தின் வாழ்நாளில் அவருக்கு எதிராக செய்யப்பட்ட பல சதித்திட்டங்களில் இருந்து அவரை தாம் பாதுகாத்திருப்பதாகவும்" பெரெஸ் தெரிவித்தார்.    

அராபத்தின் படுகொலை, வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய கூட்டாளிகளின் நடத்தையில் இருக்கும் ஒட்டுமொத்த குற்றஞ்சார்ந்த குணாம்சத்தை நிரூபிக்கின்றது. அந்த சம்பவம் 9/11 தாக்குதல்களைப் போலிக்காரணங்களாக பயன்படுத்தி மற்றும் ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மற்றும் காலனித்துவ மேலாதிக்கத்திற்குப் பின்னர் வந்ததாகும். “இலக்கில் வைத்து கொல்லுதல்" என்று நாசூக்காக கூறப்படும் டிரோன் தாக்குதல், அராபத்தின் படுகொலையில் இருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ அரச கொள்கையாக மாறி உள்ளது.

எவ்வாறிருந்த போதினும், அராபத் படுகொலையின் பொறுப்பு வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றோடு மட்டும் முடிந்துவிடாது. ரமால்லாவில் இருந்த அராபத்தின் பரிவாரங்களில் இருந்த ஒருவர் தான் விஷம் வைக்க உத்தரவிட்டிருக்க வேண்டுமென்பதால், அராபத் கொல்லப்பட்ட விதம் பாலஸ்தீன தலைமைக்குள் இருக்கும் உட்கூறுகளிடையே நிலவும் சிக்கல்களைக் எடுத்துக் காட்டுகிறது.

மரணத்தின் காரணங்களைக் கண்டறிய ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளது, ஏனென்றால் அப்பாஸின் கீழ் புதிய பாலஸ்தீனிய தலைமை உண்மை வெளியில் வருவதைத் தடுக்க அதனால் ஆனமட்டும் அனைத்தும் செய்தது. பாலஸ்தீன ஆணையம் அராபத் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்து ஆராய எதுவும் செய்யவில்லை. அது ஒரு பிரேத பரிசோதனையையும் கூட நிராகரித்தது. 2009இல் தான் கூடுதல் மருத்துவ அறிக்கைகளைக் கோரி அது பிரெஞ்சு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. அது தடய சான்றுகளுக்கு உதவும் பொருட்களை திருமதி. அராபத்திடம் இருந்து ஒருபோதும் கோரவே இல்லை.

சடலத்தைத் தோண்டி எடுப்பதிலும் விருப்பமின்றி இருந்த பாஸ்தீன ஆணையம், சிரியாவால் அல்லது அரபு லீக்கின் ஒன்றால் இலக்கில் வைக்கப்பட்ட லெபனானிய தலைவர் ரபீக் ஹரீரியின் படுகொலைக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் போன்ற ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையைக் கோரியது.

அராபத்தின் படுகொலையானது, ஏகாதிபத்தியத்தால் மற்றும் அதன் ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்படுவதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு மாற்றீட்டை எடுக்க தடுக்கும் தேசியவாத முன்னோக்கின் முழுமையான முட்டுச்சந்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு அரசு அமைக்கும் போராட்டத்தோடு நெருக்கமாக தொடர்புபட்ட ஒரு மனிதர், அவராலேயே உருவாக்கப்பட்ட அமைப்பின் தலைமையில் உருவான பில்லினியர்களின் கோஷ்டியால் நயவஞ்சகமாக கொல்லப்பாட்டர் என்ற பாலஸ்தீன தொழிலாளர்களின் புரிதலை அந்த சம்பவம் எதிர்கொள்கிறது.

அவ்விதத்தில் அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கும் மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை, அங்கே லஞ்ச, ஊழல் தொடர்புகொண்டதேசியவாத தலைவர்கள் அவர்களின் சொந்த தொழிலாள வர்க்கத்தை பணயமாக வைத்து எண்ணெய் நிறுவனங்களின் மற்றும் வங்கிகளின் நலன்களுக்கு உதவுகின்றனர்.

பெரிதும் தம்பட்டமடிக்கப்பட்ட மத்திய கிழக்கின் "முழு ஜனநாயகம்", எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நலன்கள், அத்தோடு பாலஸ்தீனியர்களின் சிறைக்கூட காவலர்கள் மற்றும் தங்களின் சொந்த தொழிலாள வர்க்கத்தை சுரண்டுபவர்களின் பாதுகாவலனாக செயல்படும் இராணுவ குண்டர்களால் நடத்தப்படுகிறது என்ற உண்மையோடு அராபத்தின் படுகொலை இஸ்ரேல் தொழிலாளர்களை எதிர்கொள்கிறது.

சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கு மட்டுமே, பொருளாதார தனியார்மயமாக்கல், ஒடுக்குமுறை மற்றும் யுத்தம் ஆகியவற்றிற்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டை வழங்குகிறது. அதில் தனியார் இலாபங்களுக்காக இல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் உற்பத்தியை மறுஒழுங்கு செய்ய, உலகளாவிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்டு முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாட்டை தொழிலாள வர்க்கம் கையில் எடுக்கிறது.

இஸ்ரேல்/பாலஸ்தீன தொழிலாளர்கள் மதவாத, வகுப்புவாத அல்லது இனவாத சார்பில் அல்லாமல், பிராந்திய ஆளும் மேற்தட்டுக்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள அவர்களின் எஜமானர்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தை இழுப்பதன் மூலமாக மட்டுமே சோசலிசத்தை அடைய முடியும்.