World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece to ban Golden Dawn after fascists assassinate musician Pavlos Fyssas

இசைக்கலைஞர் பாவ்லோஸ் பைசஸ் பாசிஸ்ட்டுக்களால் படுகொலை செய்யப்பட்டபின் கிரேக்கம் கோல்டன் டோனைத் தடை செய்யவுள்ளது

By Cristoph Dreier and Alex Lantier
19 September 2013

புதனன்று கிரேக்க அதிகாரிகள் பாசிச கட்சியான கோல்டன் டோனை தடை செய்யவுள்ளதாக அறிவித்தனர்; அதனுடைய உறுப்பினர்கள் 34 வயதான பாசிச எதிர்ப்பு பாடகர் பாவ்லோஸ் பைசஸை நேற்றுக் காலை பட்டப்பகலில் படுகொலை செய்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கூறப்பட்டுள்ளது.

ஏதென்ஸ் புறநகரான கெரட்சினியில் ஒரு உணவு விடுதியை விட்டுப் புறப்படும்போது பைசஸ் 15 நவ-நாஜிக்களால் தாக்கப்பட்டார்; தாக்கியவர்களை கோல்டன் டோனின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என சாட்சிகள் அடையாளம் கண்டுள்ளனர். பைசஸ் மற்றும் அவருடன் வந்திருந்த மூவர் தப்பியோட முற்படுகையில், ஒரு கார் சாலையை தடுத்து நின்றது; மற்றும் ஒரு 10 பேர் அவர்களை நோக்கி வந்தனர். தாக்கியவர்களில் ஒருவர் கத்தி ஒன்றை எடுத்து பைசஸை இருமுறை குத்தினார்.

தாக்குதலின்போது மோட்டார் சைக்கிள் பொலிசார் இருந்தனர், ஆனால் பைசஸ் தரையில் விழும்வரை, அவரைத் தாக்கியவர்கள் பலர் தப்பியோடும்வரை எதுவும் செய்யவில்லை. கத்திக் குத்துக்குப்பின், தாக்குதல் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட வாதத்தின்போது ஏற்பட்டது, ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை அல்ல என்றது பொலிஸ்.

பலியானவர், போலி இடது குழுவான முதலாளித்துவ எதிர்ப்பு இடது— அதாவது வீழ்த்துவதற்கான செயற்பாடு (Antarsya) என்ற குழுவின் உறுப்பினர் எனக் கூறியுள்ளதுடன், இறக்குமுன் அவரைத் தாக்கியவர்கள் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பைசஸின் தந்தை, அவருடைய மகனை கவனித்த மருத்துவர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் “நிபுணத்துவமாகவுள்ள கத்திக்காயங்கள்” என்றார்.

45 வயதான கோல்டன் டோன் ஆதரவாளர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்; அந்த நபர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகத்திற்கு உரியவர் தன்னுடைய மனைவியிடம் அவருடைய கோல்டன் டோன் உறுப்பினர் அட்டையை குப்பைத் தொட்டியில் போடுமாறு கூறினார் எனக் கூறப்படுகிறது; பொலிசார் அதை அங்கிருந்து எடுத்துள்ளனர்.

ஏதென்ஸ், தெசலோனிகி மற்றும் பத்ரஸ் முழுவதும் கோல்டன் டோனுக்கான எதிர்ப்புக்கள் விரைவில் பரவின. 5,000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் பைசஸ் குத்தப்பட்ட இடத்தில் ஏதென்ஸில் கூடினர். அவர்கள் பொலிசாருடன் மோதினர்; பொலிசார் இன்னும் அதிக எதிர்ப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைவதை தடுக்க போக்குவரத்தை தடை செய்தனர்.

வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் கட்சியின் தலைவரான பானோஸ் காமெனோஸ் கொலை நடந்த இடத்திற்கு வர முயற்சிக்கையில், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டு, சிறிய காயமேற்பட்டது.

பொலிசார் தெசலோனிகியின் 6,000 ஆர்ப்பாட்டக்காரர்களை நகரத்திலுள்ள கோல்டன் டோன் தலைமையகத்திற்கு அணிவகுத்துச் செல்வதிலிருந்து தடுத்தனர். சீற்றமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் “கொலைகாரர்களுக்கு பாதுகாப்பு” அளிப்பதாகக் குற்றம்சாட்டினர்.

பழமைவாத புதிய ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயக PASOK ஆகிய கிரேக்கத்தின் ஆளும் கூட்டணியின் இரு கட்சிகளுடைய அதிகாரிகளும் கோல்டன் டோன் தடைசெய்யப்படவேண்டும் என அழைப்புவிடுத்தனர். பொது ஒழுங்கு மந்திரியான நிக்கோஸ் டென்டியஸ் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை இரத்துசெய்து, அவருடைய அரசாங்கம் கட்சியை தடை செய்ய அவசரக்கால சட்டத்தை தயாரிக்கும் என்றார். “அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது, சமூகம் ஏற்காது – சட்டமுறை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படாமல் இருக்க செயற்படும்” என்றார் அவர்.

“கேரட்சினியில் நடந்த இழிந்த கொலை, கோல்டன் டோனிடம் ஆதரவு கொண்ட ஒருவரால் நடத்தப்பட்டது, அவருடைய அறிக்கையின்படியே நவ-நாசிசத்தின் விருப்பங்களை மிகத் தெளிவாகக் கூறுகின்றது” என்றும் அவர் கூறினார்.
இதற்கான பொறுப்பை மறுத்து கோல்டன் டோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் அவர்கள் மீது குற்றம்சாட்டுபவர்களை “வாக்குகளைப் பெறவும், கிரேக்க சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் அரசியலுக்காக சோக நிகழ்வைப் பயன்படுத்துகின்றனர்,” என்று கூறியுள்ளது.

ஐரோப்பிய அதிகாரிகளும் சர்வதேச மனிதவுரிமை அமைப்பு போன்ற மனித உரிமைகள் குழுக்களும் கிரேக்க அதிகாரிகளை கோல்டன் டோனைத் தடை செய்யுமாறு அழைப்பு விடுத்தன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் ஜனநாயக குழுவின் தலைவரான ஹான்ஸ் ஸ்வோபோடா கூறினார்: “கோல்டன் டோனின் வெளிப்படையான இனவெறித்தன, நவ-நாசிச வெறுப்பு அரசியல் எதிர்ப்பாளர்களை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. இது அதிர்ச்சி தருவது, எந்த தரத்திலும் பொறுக்க இயலாதது, அதுவும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில்.”

பைசஸினுடைய கொலை ஒரு கொடூரக் குற்றமாகும்; கோல்டன் டோன் ஒரு வன்முறை பாசிச அமைப்பாகும், தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான விரோதப் போக்கை கொண்டது, அதனுடைய குடியேறுவோர் எதிர்ப்பு, செமிடிச எதிர்ப்புப் பிரச்சாரத்தால் இழிவுற்றது ஆனால் அரசு கிரேக்க பாசிச எழுச்சியை தடை செய்யும் என்று கூறப்படுவதில் நம்பிக்கை வைக்க முடியாது. இது கிரேக்க அரச மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை செயற்பட்டியலுக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் கீழ் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி போராடுவதின் மூலம்தான் அடையப்படமுடியும்.

பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை மீறிச் சுமத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூகநல வெட்டுக்கள், மக்களை வறிய நிலைக்குத் தள்ளி, கிரேக்கத்தில் எத்தகைய ஜனநாயக வழிமுறைகள் இருப்பதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் கோல்டன் டோனுக்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஆத்திமூட்டும் சோவனிச வெறி, இனவெறி ஆகியவைகளை வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர். கோல்டன் டோனின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் குடியேறுவோர், யூதர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் அரசியல் நபர்களை தாக்கியுள்ளனர்; அவர்கள் ஜனவரி மாதம் ஒரு பாக்கிஸ்தானிய குடியேற்றக்காரரை கொலை செய்தனர்.

கோல்டன் டோன் பல நேரமும் மிகநெருக்கமாக, பாதுகாப்புப் படைகளின் வெளிப்படையான பாதுகாப்புடன் வேலைசெய்கிறது. பாதிக்கும் மேலான பொலிஸ் அதிகாரிகள் கடந்த தேர்தல்களில் கோல்டன் டோனுக்கு வாக்களித்தனர் எனக் கூறப்படுகிறது, இப்பொழுது கோல்டன் டோனுக்கு எதிரான மக்களின் சீற்றத்திற்கு இடையே, அதிகாரிகள் அமைப்பின் மீது தடையை விதிக்க பரிசீலனை செய்கின்றனர்—கோல்டன் டோனின் குற்றங்களை பொறுத்துக்கொண்ட, ஆதரவளித்த அதே பொலிஸ் பிரிவுகள் அதைச் செயற்படுத்தும்!
அத்தகைய தடை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டால், ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சில பிரிவுகள் அத்தகைய நடவடிக்கையை ஒரு தற்காலிக பின்வாங்குதல் என்றுதான் ஏற்கும். மிகவிரைவில் அவர்கள் ஒரு புதிய, இன்னும் வன்முறை தோற்றுவிக்கும் பாசிச அமைப்பை உருவாக்குவார்கள்—கோல்டன் டோனே, நவ-பாசிச அமைப்பான LAOS அதனுடைய ஆதரவை 2011-2012 சிக்கன சார்பு தொழில்நுட்ப அறிஞர் அரசாங்கத்தில் பங்கு பற்றி ஆதரவு இழந்த்தை தொடர்ந்துதான் முக்கியத்துவம் பெற்றது.

மறுபுறமோ, கிரேக்க அரசு கோல்டன் டோனை தடை செய்வதை ஒரு முன்னோடியாக கொண்டு, இடதுசாரி அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ச்சி பெறுவதை தடை செய்ய பயன்படுத்தும். கோல்டன் டோனுக்கு எதிரான தடை, இறுதியில் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படும்.

போலி இடது அமைப்புக்களான கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் தீவிர இடது கூட்டணி (Syriza) போன்றவைகள்—அவைகளுடைய ஒரு அரசியல் சுற்றுவட்டத்தில் இருப்பதுதான்தான் Antarsya —பைசஸின் கொலையை எதிர்கொள்ளும் வகையில் அரசிற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் முறையீடுகளை அனுப்பியுள்ளன. அவைகள் கொலையை எதிர்கொள்ளும் வகையில் கிரேக்கத்தின் பிற்போக்குத்தன ஆளும் கட்சிகளிடம் நெருக்கமாக செல்லகின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தை கோல்டன் டோனுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்குமாறு வலியுறுத்தி, பாசிஸ்ட்டுக்களுக்கு எதிராக ஒரு தேசிய கூட்டு தேவை என்றும் KKE அழைப்புவிடுத்துள்ளது.

சிரிசா அதிகாரிகள் முறையீடு ஒன்றை வரைந்து, அவர்கள் வலதுசாரி “ஜனநாயகவாதிகள்” –ஆளும் கட்சியினர் என அழைப்பவர்களுக்கு அனுப்பியுள்ளது. ஏதென்ஸின் சின்டகமா சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பில் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் கூறினார்: “நாம் முன்னோக்கிச் செல்வதற்கு இயல்பு நிலை மற்றும் ஸ்திரப்பாடு தேவை. உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்த திட்டமுடையவர்களை, நாட்டை இருட்டில் தள்ள முயல்பவர்களை நாம் தனிமைப்படுத்த வேண்டும்.”

இவ்வகையில் “இயல்பு” “ஸ்திரப்பாடு” ஆகியவைகளுக்கு விடும் அழைப்பு முதலாளித்துவ தொடர்ச்சியை பாதுகாக்க ஒரு தெளிவான அறிக்கையாகும். அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய போராட்டத்திற்கும் இது உட்குறிப்பான தாக்குதலாகும்.”
இத்தகைய முறையீடுகள் அரசியல் ஸ்தாபனத்தின் சில பிரிவுகளின் வெற்றுக் கூற்றுக்கள்தான்—இவைகள் தொழிலாளர்களை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை ஆளும் உயரடுக்கு, அதனுடைய அதிகாரத்துவத்தினருக்கு விட்டுவிடும்படி கூறுவதாகும், அதாவது இறுதியில் அதனுடைய பொலிசாரிடம். இது ஒரு மோசடித்தனம் மற்றும் பொய்யாக இருக்கின்றன, பாசிசத்திற்கும் பாவ்லோஸ் பைசஸ் கொலை செய்தவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கும் ஒரு முட்டுச்சந்தாகும்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தின், சிக்கன நடவடிக்கைகளுக்கு சரணடைந்து தொழிற் சங்க அதிகாரத்துவத்தை பாராட்டுவதின் மூலம் போலி இடது கட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டத்திற்கு பகைமை காட்டுகின்றனர். ஏற்கனவே இந்த ஆண்டு கிரேக்க அரசாங்கம், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை இராணுவச் சட்டத்தின் கீழ் இருத்தியுள்ளது—மூன்று தனித்தனி நிகழ்வுகளில் அவர்கள் மீண்டும் வேலை செய்ய பலவந்தப்படுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆதரவு கொடுத்தது.

பாவ்லோஸ் பைசஸ் கொலை செய்யப்பட்டது, கிரேக்கத்திலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். முதலாளித்துவ வர்க்கம் பிற்போக்குத்தன சிக்கனக் கொள்கைகளை செயற்படுத்தவும், வங்கிகளின் இலாபங்களைப் பெருக்கவும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எதைச் செய்யவும் தயங்காது. கோல்டன் டோன் போன்ற பாசிச சக்திகளுக்கு எதிரான மக்கள் பாதுகாப்பு என்பது, அரசிடமோ அல்லது போலி இடதிடமோ விடப்பட முடியாதது. இதற்கு, இந்த அமைப்பக்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.