World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European Union: From economic community to alliance of warmongers

ஐரோப்பிய ஒன்றியம்: பொருளாதார சமூகம் என்பதிலிருந்து போர் வெறியர் கூட்டணியாகிறது

Peter Schwarz
14 April 2014

Back to screen version

ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவுடன் ஒரு மோதல் போக்கில் உள்ளன. அவை அதை வெளிநாட்டு அரசியல் நோக்கங்களை மட்டுமல்ல, மாறாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவும் பின்தொடர்கின்றன.

ஒரு பிளவுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கியப்படுத்துவதும் மற்றும் அனைத்து சமூக எதிர்ப்புகளை மவுனமாக்குவதுமே மாஸ்கோவுடனான ஒரு நெருக்கடியை மற்றும் மோதலைத் தூண்டுவதன் நோக்கமாகும். முன்னதாக, மூலதனங்களையும் பண்டங்களையும் சுதந்திரமாக நகர்த்துவது மற்றும் பொதுவான செலாவணி போன்ற பொருளாதார பிரச்சினைகளையே ஐரோப்பிய ஒன்றியத்தின் அடையாளம் அடித்தளமாக கொண்டிருந்தது. எதிர்காலத்திலோ, ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளார்ந்து ஒருங்கிணைப்பதற்கு அடித்தளமாக உள்ள பொருளாதாரத்தை, ஒரு பொது எதிரிக்கு எதிரான போராட்டம் மாற்றீடு செய்யும்.

ஜேர்மன் பத்திரிகைகளில் வெளியான பல தலையங்கங்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன. Der Spiegelஇன் பிரஸ்ஸ்செல்ஸ் செய்தியாளர் கிரெகோர் பீட்டர் ஸ்மித்ஸ், “ஐரோப்பாவின் தலைச்சிறந்த வாய்ப்பு" என்ற தலைப்பில் மார்ச் 20இல் எழுதுகையில், “எந்தளவிற்கு கிரிமிய நெருக்கடி வருந்ததக்கதாக இருந்தாலும், பல அம்சங்களில், அது ஒரு பலமான ஐரோப்பாவை ஒன்றுபடுத்த ஒரு வரலாற்றுரீதியிலான வாய்ப்பை வழங்குகிறது," என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் வெறுமனே ஒரு பொருளாதார சமூகம் அல்ல, மாறாக ஒரு அரசியல் நடவடிக்கையாளர்", அதன் "மூலோபாய நலன்கள்" “சக்திவாய்ந்த விதத்தில் மீள்-எழுச்சி" பெற்றுள்ளதை மாஸ்கோவ் உடனான மோதல் ஐரோப்பியர்களுக்கு நினைவூட்டுவதாக மார்ச் 30இல் Süddeutsche Zeitungஇன் ஒரு கருத்துரையில் பசுமை கட்சியின் தலைவரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஜோஸ்கா பிஷ்ஷெசர் அவரது உடன்பாட்டை வெளியிட்டார்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவர் நோர்பெர்ட் றோட்கென் மார்ச் 20 அன்று பைனான்சியல் டைம்ஸிற்கு விவரிக்கையில், “ஆனால் இந்த மோதல் வெறுமனே கிரிமியா அல்லது உக்ரேன் குறித்ததல்ல... நாம் கடந்த காலங்களில் பெரும்பாலும் ஒரே குரலில் பேச போராடி இருந்த போதினும், ரஷ்யா உடனான இந்த மோதல் ஐரோப்பியர்களை நெருக்கமாக கொண்டு வருகிறது. அது ஒரு பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையை வகுக்க ஒரு வினையூக்கியாக மாறக்கூடும்," என்றார்.

ஆளும் மேற்தட்டு, ஒரு ஆக்ரோஷ வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைக்கு திரும்பியதன் மூலமாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு விடையிறுப்பு காட்டி வருகிறது. ஐரோப்பாவை பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் ஐக்கியப்படுத்தும் அனைத்தும் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. 2008 நிதியியல் நெருக்கடிக்கு எதைக் கொண்டு பிரஸ்செல்ஸ் மற்றும் பேர்லின் எதிர்வினை காட்டியதோ அந்த சிக்கன முறைமைகள், EU அங்கத்துவ நாடுகளுக்கு இடையே மோதல்களை தீவிரப்படுத்தி உள்ளதோடு, வர்க்க விரோதங்களையும் பரந்தளவில் ஆழப்படுத்தி உள்ளன.

சமூக உறவுகள் உடையும் புள்ளிக்கு இழுத்து வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே, அங்கே 11 சதவீதம் என்ற விகிதத்தில், உத்தியோகப்பூர்வமாக 26 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலையின்றி உள்ளனர். அங்கே பல பிராந்தியங்களில், குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் EU உடன் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், EU மற்றும் IMFஇன் உத்தரவின்படி சிக்கன திட்டங்களைச் சமர்பித்திருந்த நாடுகளிலும் கடுமையான வறுமை நிலவுகிறது. ஆனால் பணக்கார நாடாக கருதப்படும் ஜேர்மனியிலும் கூட, மூன்று பணியாளர்களில் ஒருவர் படுமோசமான நிலைமைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார், அத்தோடு அங்கே 6 மில்லியன் மக்கள் மக்கள்நல திட்டங்களைச் சார்ந்து வாழ்கின்றனர்.

மக்கள் மேலும் மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக திரும்பி வருவதோடு, அது என்ன என்பதையும் அவர்கள் கண்டு கொண்டுள்ளனர் — அதாவது, ஐரோப்பாவை முற்போக்காக ஐக்கியப்படுத்தும் நிலைமைகளை உருவாக்காமல், மாறாக தேசியவாத மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கி கொண்டு, உழைக்கும் மக்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட, மிகவும் சக்திவாய்ந்த வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்குரிய ஒரு கருவியாக அது விளங்குகிறது. அடுத்த மாத ஐரோப்பிய தேர்தல்களில், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு சாதனையளவில் அதிக வாக்குகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழல்களின் கீழ், உள்நாட்டு பதட்டங்களை ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக வெளிப்புறமாக திசைதிருப்ப ரஷ்யாவிற்கு எதிரான யுத்த பிரச்சாரம் சேவை செய்கிறது. இது முக்கியமாக கிழக்கு ஐரோப்பாவிற்கு வெகுவாக பொருந்துகிறது, அங்கே ஊழல் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக ரஷ்ய-விரோத மனோபாவத்தை (Russo-phobia) தங்கள் ஆட்சியைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக சுரண்டிக் கொண்டுள்ளனர்.

மாஸ்கோவுடன் முன்னர் ஒரு கூட்டுறவை விரும்பிய ஜேர்மன் அரசாங்கம், தற்போது ரஷ்ய-விரோத போக்கை தொடங்கி உள்ளது. அது ரஷ்யாவை நோக்கிய ஆக்ரோஷ கொள்கையை, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்றுபடுத்தி வைப்பதற்கான மற்றும் ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்குரிய ஒரு பொருத்தமான கருவியாக காண்கிறது. அது "இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையை" முடிவுக்கு கொண்டு வந்தோடு, “மிகவும் உறுதியாகவும் மற்றும் மிக முக்கியத்துவத்தோடும், முந்தைய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் பங்களிப்பு வழங்கும்" வகையில் ஒரு புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டு, பெப்ரவரியில் அறிவித்த அதன் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தளவிற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த ஜேர்மனி தயாராகி உள்ளது. நேட்டோவோ, ரஷ்ய எல்லையை நோக்கி யுத்த விமானங்களை, கப்பல்களை மற்றும் துருப்புகளை நகர்த்த தொடங்கி உள்ளது, அத்தோடு இராணுவ உபாயங்களையும் செயல்படுத்தி வருகிறது.

உக்ரேனில், மேற்கின் ஆதரவோடு அதிகாரத்தில் கொண்டு வரப்பட்ட வலதுசாரி தேசியவாத மற்றும் பாசிச சக்திகள், ஒரு மிக மிகச் சிறிய சம்பவமும் கூட ஒரு பரந்த மோதலை அல்லது யுத்தத்தை தூண்டிவிடுமளவிற்கு ஒரு வெடிப்பார்ந்த சூழலை உருவாக்கி வைத்துள்ளன. உக்ரேனை நேட்டோவின் செல்வாக்கெல்லைக்குள் கொண்டு வரும் மற்றும் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் அதன் முயற்சிகளில், ஜேர்மன் அரசாங்கமும் அதன் பங்காளிகளும் அணுஆயுத போர் ஆபத்தை ஆதரவிக்க விரும்புகின்றனர்.

உக்ரேனில் அவர்களின் தலையீடு மேலதிகமாக வேறொரு நோக்கமும் கொண்டுள்ளது. பாசிச கட்சிகள் மற்றும் இராணுவ குழுக்களோடு ஒருங்கிணைவதன் மூலமாக, அவை ஐரோப்பா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்கி உள்ளன.

நாஜிகளை மற்றும் அவற்றின் யுத்த குற்றங்களைப் பாதுகாக்கும் அல்லது யூத-விரோதத்தைப் பரப்பும் கட்சிகளுக்கு நீங்கள் ஒத்துழைக்காதீர்கள் என்பதே நீண்டகாலமாக, (குறைந்தபட்சம் உத்தியோகப்பூர்வமாக) அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள கட்சிகளிடையே இருந்த விதியாக இருந்தது. ஸ்வோபோடா கட்சி தெளிவாக இந்த வகைப்பாட்டிற்குள் இருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக, உயர்மட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஸ்வோபோடா தலைவர் ஓலெஹ் தியாஹ்ன்பொக்கைச் சந்தித்துள்ளனர் என்பதோடு அவரது அமைப்போடு நெருக்கமாக இணைந்து வேலை செய்தனர். தியாஹ்ன்பொக்கின் வெறித்தனமான யூத-விரோத பேச்சுக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றை யூ-டியூப்பில் காண முடிகிறது. ஸ்வோபோடாவின் வீரபிரதாபி ஸ்டீபன் பண்டேரா, யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பாரிய படுகொலைக்குப் பொறுப்பான ஒரு நாஜி ஒத்துழைப்பாளர் ஆவார். 1959இல் முனீச்சில் முசோலினி மரணம் அடையும் வரையில் பண்டேரா அவரை உறுதியாக ஆதரித்து வந்தார்.

ஸ்வோபோடாவிற்கு என்ன பொருந்துகிறதோ அதேவிட மேலதிகமாக Right Sector போன்ற பாசிச இராணுவ போராளிகள் குழுக்களுக்குப் பொருந்துகின்றது, அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை விரட்டுவதில் மேற்கத்திய சக்திகள் அவற்றின் சேவைகளைத் தாங்கியிருந்தன. பாசிஸ்டுகள் மட்டுமல்ல, குற்றத்தனமான உட்கூறுகளும் கூட Right Sectorஇன் பதவிகளில் காணப்படுகின்றன.

ஸ்வோபோடா மற்றும் Right Sector ஆகியவற்றுடன் ஒத்துழைப்பது, அத்தகைய சக்திகளை ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த கதவைத் திறந்து விட்டுள்ளது. இதற்கான தயாரிப்புகள் நன்கு அபிவிருத்தி அடைந்துள்ளன.

கிரேக்க பிரதம மந்திரி ஆண்டோனிஸ் சமாராஸின் நெருங்கிய கூட்டாளி Panayiotis Baltakos, பாசிச கோல்டன் டௌன் அமைப்புடனான அவரது நெருங்கிய, நேசமான உறவுகளைக் காட்டும் ஒரு வீடியோ வெளியானதும் ஒருசில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா செய்திருந்தார். பிரான்சில், மானுவேல் வால்ஸின் நவ-தாராளவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகள் மரீன் லீ பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணியை மேலதிகமாக ஊக்குவிக்கும் என்பதை நன்கறிந்திருந்தும், ஜனாதிபதி ஹோலாண்டு அவரை அரசு தலைவர் பதவியில் [பிரதம மந்திரியாக] நியமித்தார். ஹங்கேரியில், பாசிச ஜோபிக் கட்சி ஆளும் கட்சியான Fideszஆல் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு, ஐந்து பங்கை விட அதிக வாக்குகளை வென்றுள்ளது.

ஐரோப்பிய தலைவர்கள் இந்த பாதையில் தடையின்றி செல்ல முடியும் ஏனென்றால் அரசியல் ஸ்தாபகத்தினுள் உள்ள எந்தவொரு கட்சியும் அவர்களை எதிர்க்கவில்லை. அவற்றின் வட்டத்திற்குள் செயல்பட்டு வரும் உத்தியோகப்பூர்வ "இடது" கட்சிகளும், போலி-இடது குழுக்களும் யுத்த கொள்கையை ஆதரிப்பதோடு, உக்ரேனிய பாசிசவாதிகளோடு ஒத்துழைக்க ஆதரவளிக்கின்றன. அவை கியேவில் உள்ள பாசிச-தலைமையிலான ஆட்சிசதியை "ஜனநாயக புரட்சி" என்று பெருமைப்படுத்துகின்றன, ரஷ்யாவை "வலிந்து மோதலுக்கு இழுக்கும் விரோதி" என்று சித்தரிக்கின்றன. ஜேர்மன் இடது கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் துருப்புகளை நிறுவுவதற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலமாக, முதல்முறையாக ஜேர்மன் இராணுவ படைகளை (Bundeswehr) ஜேர்மனிக்கு வெளியே நிறுவ ஒப்புதல் அளித்து, ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு அக்கட்சி விடையிறுப்பு காட்டியுள்ளது.

யுத்தம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக போராட விரும்புபவர்கள் ஜேர்மனியின் சோசலிச சமத்துவ கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) மற்றும் பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியை ஆதரிக்க வேண்டும், அவை இராணுவவாதம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை ஒருங்கிணைக்க அடுத்த மாத ஐரோப்பிய தேர்தல்களில் பங்கு பெற்றுள்ளன. PSG மற்றும் SEP, ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிக்கின்றன, அவை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராடுகின்றன. ஐரோப்பாவை ஒரு சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே தேசியவாதம் மற்றும் யுத்தத்திற்குள் திரும்புவதிலிருந்து அந்த கண்டத்தைக் காப்பாற்ற முடியும்.