World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

EU imposes its first sanctions against the Russian economy

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு எதிராக முதல் பொருளாதார தடைகளை விதிக்கிறது

By Peter Schwarz
30 July 2014

Back to screen version

செவ்வாயன்று ரஷ்ய பொருளாதாரத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் அதனது முதல் பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு முந்தைய தடைகள் குறிப்பிட்ட  தனிநபர்கள், நிறுவனங்களை நோக்கி இருந்தது, பயணத்தடைகளுக்கும் வாங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதற்கும் அவர்கள் முகம்கொடுத்தனர். தற்போது ரஷ்ய வங்கிகள் ஐரோப்பிய மூலதனச் சந்தைகளுக்குள் அணுகும் வழிகள் மட்டுப்படுத்தப்படுகின்றது. எரிசக்தி துறை, மூலப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளோடு சேர்த்து, இராணுவ ஏற்றுமதிகளும், இராணுவ, பொதுமக்கள் தேவைகள் ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தகூடிய பன்முக பயன்பாட்டு பொருட்களும் மட்டுப்படுத்தப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் முன்னுதாரணத்தை பின்தொடர்கிறது. மிகப் பெரிய எரிசக்தி நிறுவனங்களான ரோஸ்னெப்ட், காஸ்ப்ரோம் மற்றும் நோவாடெக் உட்பட பல ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதன் நிதியியல் சந்தைகளை மூடிவிட்டது. இது உக்ரேனிய வானத்தில் மலேசிய MH17 விமானம் நொருங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே நடந்ததாகும்.

இதனை தொடர்ந்து ஒபாமா நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியம் இதே வழிவகைகளை பின்தொடரச் செய்வதற்கு பெரும் அழுத்தம் கொடுத்தது. திங்களன்று, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி ஆகியோருடனான ஒரு தொலைபேசி கலைந்துரையாடலில் ஒபாமா கடுமையான தடைகளுக்கு அழுத்தம் அளித்தார்.

நிபுணர்களின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியியல் துறைக்கு எதிரான தடைகள், ரஷ்யாவின் மீது விசேட கடுமையான தாக்குதலை செய்யும்.

650 பில்லியன் டாலராக உள்ள ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வெளிநாட்டுக் கடனில், 161 பில்லியன் அடுத்த பன்னிரெண்டு மாதங்களில் திருப்பி செலுத்துவதற்கு வேண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போதைய தடைகள் இந்த கடன்களின் மீள்நிதியாக்கத்தைக் குறிப்பிடத்தக்களவிற்கு சிக்கலுக்கு உள்ளாக்கும், அல்லது குறைந்தபட்சம் அதை இன்னும் அதிக செலவுடையதாக ஆக்கும். சிறிய, மத்தியதர ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நிதி, இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 20 சதவீத அளவிற்குப் பொறிந்ததிலிருந்து முழுமையாக இல்லாமல் போகும்.

இந்த நிலைமை, ரஷ்யாவிலிருந்து பாரிய மூலதன வெளியேற்றத்தால் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது, அது இந்த ஆண்டு 100 பில்லியன் டாலரைத் தாண்டக்கூடும்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் கணக்கீடுகளின்படி, இந்த தடைகள் ரஷ்யாவை ஒரு ஆழ்ந்த மந்தநிலைக்குள் தள்ளும். ஏற்கனவே பலவீனமாக உள்ள ரஷ்யப் பொருளாதாரம் இந்த ஆண்டு 1.5 சதவீதம் அளவிற்கு சுருங்கும் என்பதோடு, திட்டமிடப்பட்ட அபராதங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அடுத்த ஆண்டு 4.8 சதவீத அளவிற்கு சுருங்குமென்றும் அந்த ஆணைக்குழு மதிப்பிடுகிறது.

எவ்வாறிருந்த போதினும், இந்த தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அபாயத்திற்கு உட்படுத்துகின்றன. ரஷ்யா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக அளவு, அமெரிக்கா உடனான ரஷ்யாவின் வர்த்தக அளவை விட சுமார் பத்து மடங்கு அதிகமாகும். அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவில் ஏற்படகூடிய ஒரு அலை திவால்நிலைமைகள் ஐரோப்பிய வங்கிகளுக்கு கடுமையான பின்விளைவுகளைக் கொடுக்கும். ஐரோப்பிய வங்கிகளில் இருந்து கடன் வாங்கியிருக்கும் ரஷ்யர்களுக்கு சுமார் 155 பில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது, இதில் பிரெஞ்சு வங்கிகள் 47 பில்லியன் டாலர்களை அளித்திருக்கின்றன, மற்றும் ஜேர்மன் நிறுவனங்கள் 17 பில்லியன் டாலர்களை வழங்கி இருக்கின்றன

பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகங்களில் பெருமளவில் தங்கியுள்ளன. இந்த தடைகளால் இத்தகையவற்றின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டால் அதுவொரு ஆழ்ந்த நெருக்கடியைத் தூண்டிவிடும்.

உத்தியோகபூர்வமாக, கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா உதவுவதாக கூறப்படுவதையும், மற்றும் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் காரணமாக காட்டி இந்த தடைகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கத்திய சக்திகளால் ஒரேயொரு ஆதாரத் துணுக்கைக் கூட காட்ட முடியாமல் இருந்தாலும், அந்த அழிவுக்கு அவை பிரிவினைவாதிகளையும் மற்றும் மறைமுகமாக ரஷ்யாவையும் பொறுப்பாக்கி வருகின்றன. ஜனாதிபதி புட்டினை, பிரிவினைவாதிகளைத் தனிமைப்படுத்துமாறு செய்விக்க மற்றும் கியேவில் உள்ள ஆட்சியோடு ஒத்துழைக்க செய்வதற்காக மற்றும் உக்ரேன் மீதான மேற்கத்திய மேலாதிக்கத்தை அவர் ஏற்றுகொள்ளுமாறு செய்வதற்காகவே இந்த தடைகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது

எவ்வாறிருந்தபோதினும், இந்த தடைகளின் அளவும் உருவாக்கமும், அதையும் விட அதிகமாக பேராவல்மிக்க இலக்குகளை எட்ட நோக்கம் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ரஷ்யாவை பொருளாதாரரீதியில் முழந்தாள் இடச் செய்து, அரசியல்ரீதியாக  நிலைகுலைத்து இறுதியாக மாஸ்கோவில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதை அவை அர்த்தப்படுத்துகின்றன.  

ஐரோப்பிய அரசாங்கங்களும் ஊடகங்களும் MH17 விமான வெடிப்பிற்குப் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு மேலதிகமாக ஆக்ரோஷ போக்கை எடுத்துள்ளன. இது விசேடமாக ஜேர்மனியைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையாகும். நீண்ட காலமாக, தடைகள் விதிப்பதற்கு மத்திய (சமஸ்டி) அரசாங்கம் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களின் மீதான தாக்கங்களைக் குறித்து அஞ்சியதால் சிறிது தயக்கம் காட்டி வந்தது. இப்போது அது முற்றிலுமாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானமாக இருக்கிறது.

முன்னணி ஜேர்மன் ஊடகங்கள், பனிப்போர் காலத்திய மிகவும் மோசமான நாட்களுக்கு சமமான ஒரு போர் முழக்கத்தோடு, ரஷ்ய-விரோத நிலைக்கு மாறியுள்ளன. இந்த கூட்டத்தின் தலைமை பதவியை வாராந்தர சஞ்சிகை Der Spiegel ஏற்றுக் கொண்டிருக்கிறது. திங்களன்று, MH17 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களின் படங்களை முதல் அட்டையில் வெளியிட்டு "இப்போதே புட்டினை நிறுத்துங்கள்!" என்ற பிரதான தலைப்போடு அது பிரசுரமானது.     

அதன் ஆசிரியத்தலையங்கம், "கோழைத்தனத்தை முடிவுகட்டு" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. “ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான தடைகளுக்கு" இறுதியாக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருக்கும் உண்மையை Der Spiegel வரவேற்பதோடு, புட்டினை நோக்கி "பெரிய களத்தில் போரிட அறைகூவல் விடுக்கின்றது“. 9/11 பயங்கரவாத தாக்குதல்களைச் சாடையாக சுட்டிக்காட்டும் விதத்தில், மலேசிய விமானம் வெடித்த இடத்தை "ஐரோப்பாவின் Ground Zero" எனக் குறிப்பிடுகிறது.   

Der Spiegel பொதுமக்களின் அபிப்பிராயங்களை பொய்மைப்படுத்துவதற்காக ஒரு பேரழிவின் படங்களைச் சுரண்டுவதில் எந்தவொரு தயக்கமுமின்றி செயல்படுகின்றது: “ஒரு 'விளையாட்டு மாற்றத்திற்காக', இந்த மட்டத்திலான பெரும்துயரத்தையும், அப்பாவி மக்களது துன்பங்களின் தொலைக்காட்சி படங்களையும், முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டுவதென்பது சில சமயங்களில் அரசியல் வல்லுனர்களின் ஆத்திரமூட்டும் வியாபாரத்தின் ஒருபாகமாகும்“. “ஒரு நெருக்கடியின் பாதை 'முன்னர்', 'பின்னர்' என்று ஒரு கணத்தில் பிரிக்கப்படுகின்றது. அந்த நேரம் பொதுமக்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மூச்சை நிறுத்திக்கொண்டு நிலைமையினை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்று குறிப்பிடுகின்றது.

Spiegel Online இல் அவரது வழமையாக எழுதும் பகுதியில், பொருளாதார எழுத்தாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் ரஷ்யாவை திவால்நிலைமைக்குள் தள்ளுவதற்கு ஒரு திட்டத்தை விவரிக்கிறார். “கொடுக்கல் வாங்கல் வழிவகைகள்நிதியியல் யுத்தத்தின் அணுகுண்டுகள்," என்ற தலைப்பின் கீழ் அவர் குறிப்பிடுகையில், “ஒருவர் எரிவாயுவிற்கான அடைப்புக்குழாயை அல்ல, பண ஓட்டத்திற்கான அடைப்புக்குழாயை அடைத்துவிட வேண்டும்," என்று அறிவிப்பதோடு தடைகளுக்கான நீண்டகால கொள்கைகளுக்காக வாதிடுகிறார்.

ரஷ்யாவிற்கு சுமார் 500 பில்லியன் டாலர் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு இருக்கிறதென்ற முதன்மையான காரணத்தினால் அதற்கு அதிகமாக தாக்குப்பிடிக்கும் சக்தி இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு அவர் பதிலளிக்கின்றார். அரசாங்கம்தான் இந்த கையிருப்பினை வைத்திருக்கின்றது அவற்றை ரஷ்ய பொருளாதாரத்திற்குப் பயன்படுத்த அவற்றின் பரிவர்த்தனைகளின் சில பகுதிகளை அமெரிக்க அல்லது ஐரோப்பிய கொடுக்கல்-வாங்கல் வழிவகைகள் இல்லாமல்" செய்ய முடியாது. யூரோக்களும் டாலர்களும் ரஷ்யர்களுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, பணத்தின் அசைவானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டத்திற்கு உட்பட்டு இருக்கின்றன," என்று அவர் பதிலளிக்கிறார்.

"இறுதிக் கட்டத்தில், ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களை எங்களால் உறைய வைக்க முடியும் என்பதோடு ரஷ்யாவின் மீதி பொருளாதாரத்தையும் முற்றிலுமாக முதலீட்டு சந்தையிலிருந்து வெட்ட முடியும்," என்று முன்சௌவ் தொடர்கிறார். “அந்த மாதிரியான நேரத்தில், ரஷ்ய பொருளாதாரம் ஒரு சில வாரங்களில் பொறிந்து போகும். இது தான் டாலர் அத்துடன் ஒரு பகுதியாக யூரோ போன்ற உலக செலாவணிகளின் மூலோபாய மதிப்பாகும். எங்களது நாணயங்களை யாரும் பாவிக்கலாம் ஆனால் கொடுக்கல் வாங்கல் வழிவகைகள் எங்களுக்கு மட்டுமே உடமையாக இருக்கின்றன. கொடுக்கல் வாங்கல் வழிவகைகளானது நிதியியல் யுத்தத்தின் அணு குண்டுகளாகும்".

அமெரிக்காவில் குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிராஹாம் ஒரு செய்தியாளரிடம் இதே மனோநிலையில் பேசுகின்றார், “ரஷ்ய பொருளாதாரத்திற்கு எதிரான தடைகள்; அதை எங்களால் அடி மட்டும் துளைத்தெடுக்க முடியும். இத்தாலிய பொருளாதாரத்தின் அளவை விட அது பெரியதல்ல. ரஷ்ய மக்கள் உருவாக்கிய வலிக்கு பிரதியீடாக அவர்களும் வலியை உணர வேண்டுமென நான் விரும்புகிறேன்," புட்டினை மடக்குவதற்கான பாதைஅடிப்படையில் அவரை ஆதரிப்பதற்காக ரஷ்ய மக்களை விலை கொடுக்க செய்வதில்தான் இருக்கின்றது என்றார்.

ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள், தடைகள் மற்றும் பொருளாதார போர்முறைகளைப் பரிந்துரைக்கும் முன்சௌவ், கிரஹாம்  உட்பட்ட ஏனைய பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் அவர்கள் கொள்கைகளின் விளைவுகள் குறித்து முழுமையாக சிந்திதிருக்கின்றர்களா என்று ஒருவர் ஆச்சரியப்படக்கூடும்.

உலகில் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை ஈராக், லிபியா, சிரியாவில் செய்ததைப் போல நிலைகுலையச் செய்ய இவர்கள் விரும்புகிறார்களா? இவர்கள் புட்டினுக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தூண்டிவிட விரும்புகிறார்களா? பாதுகாப்பு எந்திரத்திற்குள் இருக்கும் வலதுசாரி சக்திகளை ஒரு இராணுவ பதிலீடுக்காக அத்திரமூட்டுவதன் மூலம் யுத்தத்திற்கான ஒரு போலிக்காரணத்தைப் பெற விரும்புகின்றர்களா?

எப்படி இருந்தபோதிலும், இவர்கள் பேசுவது ஒரு ஆளும் வர்க்கத்திற்காக, அது உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து உருவாகும் அழுத்தங்களின் கீழ், வல்லரசுகளுக்கு இடையே முரண்பாடுகளும் கூர்மையான சமூக பதட்டங்களும் அதிகரித்து வருகையில், நிதானத்தை இழந்து வருகின்றது. அதனது பொறுப்பற்றத்தனம் அதன் மூர்க்கத்தனத்தோடு மட்டுமே பொருந்தி உள்ளது.