World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government announces the end of military restraint

ஜேர்மனிய அரசாங்கம் இராணுவ தடைகளின் முடிவை அறிவிக்கிறது

By Ulrich Rippert 
1 February 2014

Back to screen version

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) தனது அரசாங்க அறிக்கையை புதன் அன்று உக்ரேனில் நடக்கும் அரசாங்க எதிர்ப்புக்களுக்கு வெளிப்படையான ஆதரவைக் கொடுத்த வகையில் தொடங்கினார். ஆர்ப்பாட்டங்கள் தீவிர வலதுசாரித் தலைமையில் நடந்தாலும், ஓரளவு வெளிப்படையான பாசிச அரசியல் வாதிகளால் நடத்தப்பட்டாலும், அவரது சான்ஸ்லர் அலுவலகம், வெளியுறவு அமைச்சரகம் மற்றும் கீவில் இருக்கும் ஜேர்மனியத் தூதரகம் அனைத்தும் “எங்களிடம் இருக்கும் வழிவகைகள் அனைத்தின் மூலமும்” எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் என்றார்.

“ஐரோப்பாவிற்காக தைரியமான ஆர்ப்பாட்டங்கள்” குறித்து தான் பெரிதும் ஈர்க்கப்பட்தாக மேர்க்கெல் கூறினார். “நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பின்பற்றும் அதே மதிப்புகளுக்காகத்தான்” கீவின் எதிர்ப்பாளர்கள் விழைகின்றனர், எனவே அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும். ஜேர்மனிய அரசாங்கம், அனைத்து மட்ட தயாரிப்புகளிலும் மற்றும் உக்ரேனிய ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை சான்ஸ்லர் தெளிவுபடுத்தினார்.

வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி SPD), இன்னும் தெளிவாக தே பாராளுமன்ற தொடரில் ஜேர்மனியின் புதிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் முக்கிய கூறுபாடுகளை தெரிவித்தார். அவருடைய மையக் கருத்தாய்வு இராணுவத்தின் மீதான தடை என்னும் கொள்கை இனியும் தற்போதைய வடிவத்தில் பராமரிக்க முடியாது என்பதுதான்.

வெளியுறவு அமைச்சரகத்தின் இராஜதந்திர சொல்லாட்சியில் அது கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தப்பட்டது: “இராணுவத் தடைக் கொள்கை சரியானது என்றாலும், அது ஒதுங்கி நிற்கும் கலாச்சாரம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாதது.”

"வல்லரசு" என்னும் சொல்லை ஸ்ரைன்மையர் தவிர்த்தார்: ஆனால் "மிக பெரிய மற்றும் மிக முக்கியமான" ஜேர்மனி, உலக அரசியலில் முக்கியமான குவிய பகுதிகளில் இருந்தும் மற்றும் நெருக்கடிப் பகுதிகளில் இருந்தும் இனி ஒதுங்கி இருக்க முடியாது” என்றார். கிட்டத்தட்ட மிரட்டும் வகையில் அவர் கூறியது: “நாங்கள் ஒன்றும் ஐரோப்பாவின் ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு அல்ல” என்றார்.

“ஜேர்மனியும் உலகமும் என்னும் தலைப்பில் ஸ்ரைன்மைருடன் நடத்திய ஒரு முழுப் பக்க பேட்டியை, Süddeutsche Zeitung வியாழன் அன்று வெளியிட்டது. அதில், வெளியுறவு மந்திரி மீண்டும் கூறினார்: “ஜேர்மனி மிகப் பெரியது, உலக அரசியல் பற்றி வெறுமனே கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.” இறுதியில் காணவேண்டியது எனப்படும் இராணுவ சக்திப் பயன்பாடு என்பதற்கு வெளியுறவுக் கொள்கையில் என்ன பொருள் எனக் கேட்கப்பட்டதற்கு, ஸ்ரைன்மையர் கூறினார்: “உலகில் எந்த வெளியுறவுக் கொள்கையும் இறுதியில் காணவேண்டியதை அதன் அரசியில் சிந்தனையில் இருந்து தடை செய்ய முடியாது” என்றார்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி இப்பொழுது பேர்லினுக்கு வருகை புரிவதைக் கருத்திற்கொண்டு ஸ்ரைன்மையர் கூறினார்: “ஐரோப்பாவிலும் உலகிலும் அமெரிக்கா அதன் நலன்களை இழந்துவிடவில்லை. ஆனால் அமெரிக்கா எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்த பொறுப்பு அதிகம் ம் தோள்கள் மீது நகர்த்தப்பட்டுள்ளது.”

கடந்த வார இறுதியில் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையென் (CDU) ஜேர்மனி “அதன் நட்புக் கூட்டிற்குள் கூடுதல் பொறுப்பை கொள்ள வேண்டும்” என்றார். அதே நேரத்தில் வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவத்தின் (ஆயுதப் படைகள்) விரிவாக்கத்தையும் அறிவித்தார். ஸ்ரைன்மையர் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கெர்ட் முல்லர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் CSU)  உடன் இணைந்து “ஆபிரிக்காவிற்கான மூலோபாயம்” என்பதை வளர்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார். எப்பொழுதும்போல் இதை மனிதாபிமான வாதங்களால் நியாயப்படுத்தி, ஜேர்மன் இராணுவத்தின் புதிய சர்வதேச மூலோபாயம் “இராணுவ முறையில் இராஜதந்திர முன் முயற்சிகளை அடைதல், மனிதாபிமான உதவியளித்தல் மற்றும் பொருளாதார கட்டமைப்பிற்கான முயற்சிகள் கொள்ளல்” என இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த முடிவை ஒட்டி, ஜேர்மன் இராணுவம் மாலியில் பயிற்சிக்காக அது நிறுத்தியுள்ள துருப்புக்களை அதிகரிக்வேண்டும், அவர்களுக்கு இராணுவ ரீதியாக குறிப்பிடத்தக்க சிறந்த வசதிகள் கொடுக்கப்பட வேண்டும். ஜேர்மனி, மத்திய ஆபிரிக்க குடியரசியல் ஏற்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பணியில் தீவிரமாக பங்கு பெற வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளி என்னும் முறையில் இப்பணிக்கு உடன்பட்டுள்ளதால் “செயல்படவேண்டிய கட்டாயத்தை” ஜேர்மனி கொண்டுள்ளது என்று வொன் டெர் லையென் கூறினார்.

இராணுவத் தடை முடிவு குறித்த அதன் அறிவிப்பை இயன்றளவு அமைதியாக பேர்லின் முன்வைக்க முயன்று வருகிறது. ஆனால் இது ஜேர்மனிய கொள்கையில் இருந்து ஒரு அடிப்படை வரலாற்றுத் தன்மை உடைய முறிவைக் குறிக்கிறது. முதலாம் உலகப் போர் தொடங்கி 100 ஆண்டுகளுக்குப் பின், இரண்டாம் உலகப் போர், நாஜி சர்வாதிகாரத்தின் கொடூரக் குற்றங்கள் முடிந்து கிட்டத்தட்ட 7 தசாப்தங்களுக்கு பின்னர், ஒரு ஜேர்மனிய வெளியுறவு மந்திரி மீண்டும், ஜேர்மனியின் அளவும் பொருளாதார வலிமையும் உலகளாவிய இராணுவத் தலையீட்டு கொள்கையை வேண்டிநிற்கிறது என அறிவித்துள்ளார்.

ஜேர்மனிய இராணுவ வாதம் மீண்டும் ஒரு தீவிர பிரச்சார முயற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலையீடு இல்லாமல் இருப்பது போர்க்குற்றங்கள் மற்றும் கடந்த காலத்தில் நாஜிக்குற்றங்களுக்கு சரியான விடையிறுப்பு இல்லை, ஆனால் ஈடுபாடு கொள்வது, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கான விருப்பம் ஆகும்; ஜேர்மன் இராணுவம் ஒரு ஏகாதிபத்திய இராணுவம் அல்ல, அமைதிகாக்கும் படை, மனித உரிமைகள் மற்றும் மனித குலத்திற்காக ஆயுதங்களை எடுக்கத்தயாராக இருக்க வேண்டும் என்று இவர்கள் வாதங்கள் தொடர்கிறது.

இத்தகைய ஜனரஞ்சகத்தைப் பற்றி என்ன கூறமுடியும் என்பது, உக்ரேனில் தற்போது என்ன நடக்கிறது என்பதன் மூலம் காணப்படலாம். ஜேர்மனிய அரசாங்கம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்னும் பெயரில் விட்டாலி கிளிட்ஷ்கோ தலைமையில் இயங்கும் எதிர்த்தரப்பு இயக்கத்திற்கு ஆதரவளிக்கிறது; இது CDU சார்புடைய கொன்ராட் அடினார் அறக்கட்டளையின் ஆதரவு பெற்றது, வெளிப்படையான பாசிஸ்ட்டுக்களான அனைத்து உக்ரேனிய சங்கமான ‘ஸ்வோபோடா’ Oleh Tjahnybok உடன் தொடர்பு கொண்டது.

1991 ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர், ஜேர்மனிய அரசாங்கம் ரஷ்யாவின் செல்வாக்கில் இருந்து உக்ரேனை உடைக்கவும் அதைத் தன் செல்வாக்கிற்குள் கொண்டுவரவும் கடுமையாக இயங்கியுள்ளது. 1994ல் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் பங்காளித்துவம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டைக் மேற்கொண்டது. தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கை பெருமளவில் சமூகத் தாக்குதல்களுடன் பிணைந்துள்ளது, உக்ரேனை ஜேர்மனிய ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு குறைவூதிய உற்பத்தி அரங்காக மாற்ற முற்படுகிறது.

உக்ரேனில் அதன் நடவடிக்கைகளுடன் பேர்லின், கடந்த நூற்றாண்டின் ஜேர்மனிய போர்க்குற்ற மரபுகளுடன் நேரடியாக நிற்கிறது. இரண்டு முறை பேர்லின் உக்ரேனை ஜேர்மனிய இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றது: முதலாம் உலகப் போரின் முடிவில், அது இளம் சோவியத் ஒன்றியத்தை உக்ரேனை பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் (Brest-Litovsk) ஒப்பந்தத்தின் கீழ் ஒப்படைக்க கட்டாயப்படுத்தியது, Hetman Pavlo Skoropadskyj ன் கீழ், கைப்பாவை ஆட்சி ஒன்றை இருத்தியது. பின் இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனி மீண்டும் உக்ரேனை வென்று சாதாரண மக்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை  இழைத்தது.

இவ்வாறுதான் இப்பொழுது ஆபிரிக்காவில் நடக்கிறது. பாதுகாப்பு மந்திரி கூறுவது போல் “புதிய ஆபிரிக்க மூலோபாயம்” மனிதாபிமான உதவிக்கு எந்த இராணுவ ஆதரவையும் கொடுக்க முற்படவில்லை. போர்த்துருப்புக்களை மாலியில் ஈடுபடுத்தியிருப்பது, ஜேர்மனியின் பெருவணிகங்க, ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவுவதுடன் இரண்டாம் உலப் போரின் Deutsche Afrika Korks (DAK) பிரச்சாரங்களின் வகையிலேயே உள்ளது.

2011ல் அப்போதைய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல (FDP சுதந்திர ஜனநாயகக் கட்சி) லிபியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் வாக்களிக்காதபோது, அது பெரும் தவறு, இனி அவ்வாறு நடக்கக் கூடாது என விமர்சிக்கப்பட்டது. தற்போதைய சமூக ஜனநாயக வெளியுறவு மந்திரி அவசியமான முடிவுகளை எடுத்துள்ளதோடு, ஒரு புதிய வெளிநாட்டு இராணுவ ஈடுபாட்டு கொள்கை மூலோபாயத்தை அறிவித்துள்ளார்.

புதிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசாங்கத்துடனான நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கிறது. மந்திரியாக பதவி ஏற்றவுடன், ஸ்ரைன்மையர் உடனடியாக பாரிசுக்கு டிசம்பர் நடுவில் பறந்து அங்கு தான் பேர்லின்-பாரிஸ் அச்சுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை வலியுறுத்தினார். அப்பொழுது முதல் அவர் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரென்ட் ஃபாபியுசுடன் பலமுறை பேச்சுக்கள் நடத்தியுள்ளார். இரு வெளியுறவு மந்திரிகளும் நெருக்கடிப் பகுதிகளில் கூட்டாக செல்லவும் முடிவு எடுத்துள்ளர், ஐரோப்பிய உச்சிமாநாடுகளுக்கு கூட்டாகத் தயாரிப்புக்கள் நடத்தவும், ஐரோப்பியத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றாகத் தோன்றுவது எனவும் முடிவு எடுத்துள்ளனர்.

ஆபிரிக்க பாதுகாப்புப் பணியில் பிரான்ஸ் “தனியே செயல்பட முடியாது” என்று புதன் அன்று ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கூறினார், மேலும் தான் “பிரான்ஸ்-ஜேர்மனிய படைகள் நம் நாடுகளின் சிந்தனையின் வருங்காலம்” என நம்புவதாகவும் கூறினார்.

ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் இடையே அதிகரித்த ஒத்துழைப்பு என்பது வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளில் மட்டும் இல்லாமல், இராணுவப் படைகள் கட்டமைப்பு, கூட்டு போர் நடவடிக்கைகள் இவற்றிலும் இருக்கும். இரு அரசாங்கங்களும் சிக்கன நடவடிக்கைகள், சமூகநல செலவுகளில் தீவிர வெட்டுக்களை செயல்படுத்துவது குறித்து நெருக்கமாக உழைக்கின்றன.

ஜனாதிபதி ஹாலண்ட் இந்த ஆண்டு முன்னதாக அறிவித்த சிக்கனத் திட்டங்கள், 2010 செயற்பட்டியல் மற்றும் SPD பசுமைவாதிகள் அரசாங்கத்தின் (1998-2005) தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை கடுமையாக கொண்டுள்ளன. ஒரு சமூக ஜனநாயகவாதியாகவும் IG Metall தொழிற்சங்கத்தின் உறுப்பினருமான பீட்டர் ஹார்ட்ஸ் ஆல் இந்த விரிவான சமூக வெட்டு திட்டம்  உருவாக்கப்பட்டது, கடந்த சில வாரங்களாக ஹாலண்ட் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க பாரிசுக்கு பலமுறை விஜயம் செய்து, ஆலோசகராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

பதவிக்கு வந்த சில வாரங்களில் பேர்லினில் உள்ள CDU/CSU, SPD பெரும் கூட்டணி அதன் திட்டத்தின் கவனம் எங்கு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அது ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சியை தீவிரப்படுத்தி, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இராணுவ வாதத்தை வலுப்படுத்துகிறது.

SPD பெருகிய முறையில் முக்கிய பங்கை எடுத்து, எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகிறது. Frankfurter Allgemeine Zeitung க்கு அளித்த பேட்டி ஒன்றில், இடது கட்சி பாராளுமன்ற பிரிவுத் தலைவர் கிரிகோர் கீசி, SPD காத்திரமான விவாதங்களை "முன்நிபந்தனைகள் இல்லாமல்" வருங்கால ஒத்துழைப்புக்காக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.