World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Ukrainian regime bows to pressure from Washington, EU and far-right opposition

உக்ரேனிய ஆட்சி வாஷிங்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தீவிர வலது எதிர்ப்பு அழுத்தங்களுக்கு அடிபணிகிறது

By Peter Schwarz and Alex Lantier 
22 February 2014

Back to screen version

உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், மேற்கின் ஆதரவுடைய பாசிச எதிர்த்தரப்பின் கோரிக்கைகளுக்கு நேற்று அடிபணிந்து, தன் அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டு, எதிர்த்தரப்பை அராசாங்கத்திற்குள் அனுமதித்து, முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்புவிட அனுமதிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

உக்ரேனிய தலைநகரான கீயேவில் மிக இரத்தம் தோய்ந்த தினத்திற்கு மறுநாள் இது வந்துள்ளது. தீவிர வலது எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற தெரு மோதல்களிலும் துப்பாக்கிச் சண்டைகளிலும் குறைந்தப்பட்சம் 77 எதிர்ப்பாளர்களும் கலகப் பிரிவு பொலிசாரும் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். உக்ரேனிய பாராளுமன்றம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான எதிர்த்தரப்பினரின் சட்டவரைவு ஒன்றிற்கு எதிராக இந்த வாரம் வாக்களித்ததில் இருந்தே மோதல் அதிகமாயிற்று.

வியாழக்கிழமை மோதலுக்குப்பின், யானுகோவிச் பின்வாங்கி, எதிர்த்தரப்பின் முக்கியக் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டார். அவர் 10 நாட்களுக்குள், எதிர்த்தரப்பு பிரதிநிதிகள் உட்பட ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பார். அமெரிக்க ஆதரவு பெற்ற ஆரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் இயற்றப்பட்ட 2004 ஆண்டின் அரசியலமைப்பு சட்டம் செப்டம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும். இது பாதுகாப்புப் படைகள் மீதான யானுகோவிச்சின் கட்டுப்பாட்டை பறித்தெடுக்கும். அந்த அதிகாரம் இனி பிரதம மந்திரியிடம் இருக்கும். டிசம்பரை ஒட்டி முன்கூட்டிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடக்க உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முதலில் மார்ச் 2015ல் நடக்க இருந்தது.

அட்லான்டிக் குழுவின் சிந்தனைக் குழுவில் மூத்த ஆய்வாளராக இருக்கும் ஆட்ரியன் கரட்நிக்கி, அமெரிக்காவிலுள்ள PBS நியூஸ் இடம்  யானுகோவிச் அதிகாரத்தை ஒரு சில வாரங்களில் அல்லது நாட்களில்கூட இழக்கலாம் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். நேற்று இரவுக் கடைசியில் யானுகோவிச் கீயேவை விட்டு நீங்கி யானுகோவிச் ஆட்சிக்கு முக்கிய ஆதரவு நாடான ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள கார்கோவ் நகரத்திற்குப் பறந்து சென்றார்.

உக்ரேனியப் பாராளுமன்றம் சிறையில் இருக்கும் யானுகோவிச்சின் போட்டியாளரும் ஆரஞ்சுப் புரட்சிக்காலத்தில் பிரதம மந்திரியாக இருந்த பில்லியனர், தன்னலக்குழுத் தலைவர், யுலியா திமோஷெங்கோவை விடுவிக்க விரைவில் செயல்பட்டது. அவர் 2011ல் ரஷ்யாவுடனான இயற்கை எரிவாயு உடன்பாடுகளில் பணமோசடிக்காகத் தண்டனை பெற்றிருந்தார். பாராளுமன்றம், திமோஷெங்கோ குற்றம் சாட்டப்பட்ட குற்றவியல் தொகுப்பு விதியை குற்றமற்றது என ஆக்கிவிட்டது.

வியாழன் இரவு முழுவதும் நடைபெற்று வெள்ளியன்றும் தொடர்ந்த பேச்சுக்களை அடுத்து யானுகோவிச் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அப்பொழுது கீவ் நகரில் குருதி கொட்டும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. வியாழன் அன்று கீயேவிக்கு வந்திருந்த ஜேர்மனி, பிரான்ஸ், போலந்தின் வெளியுறவு மந்திரிகள் எதிர்த்தரப்புத் தலைவர்களான உதார் கட்சியின் விட்டாலி கிளிட்ஷ்கோ, திமோஷெங்கோவின் தந்தை நாட்டு கட்சியின் ஆர்செனி யாட்சென்யுக் மற்றும் பாசிச ஸ்வோபோடா கட்சியின் ஓலே தியானிபோக் ஆகியோருடன் நெருக்கமான ஒத்துழைத்தனர்.

யானுகோவிச் மற்றும் மூன்று முக்கிய எதிர்த்தரப்புத் தலைவர்களைத் தவிர உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்களில் ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர், பிரான்சின் லோரோன்ட் ஃபாபியுஸ், போலந்தின் ராடோஸ்லா சிகோர்ஸ்கி ஆகியோர் அடங்குவர். ஆனால் முதலில் கையெழுத்திடுவதாக இருந்த ரஷ்யாவின் பேச்சு வார்த்தையாளர் விளாடிமிர் லுகின் பின்னர் மறுத்துவிட்டார்.

உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன், ஜேர்மனிய, போலந்து வெளியுறவு மந்திரிகள் எதிர்த்தரப்பின் ஆர்ப்பாட்டங்களுக்கு மையமாக இருந்த மைதான் சுதந்திர சதுக்கத்திற்கு எதிர்ப்பாளர்களின் விருப்பத்தைப் பெறுவதற்கு சென்றனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் மத்தியதர வகுப்பு எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒரு விடுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மைதான் குழுவின் 30 உறுப்பினர்களைச் சந்தித்தனர்.

வலதுசாரித் தலைர்கள், உக்ரேனில் ஏகாதிபத்திய சக்திகள் கட்டவிழ்த்துள்ள குண்டர்களைக் கட்டுப்படுத்த திணறினர் எனத் தோன்றுகின்று. கிளிட்ஷ்கோ, யானுகாவிச்சுடன் கொண்ட உடன்பாட்டை ஆதரித்துப்பேச முற்படுகையில் அவர் எதிர்ப்பாளர்களால்வெட்கம்என கூச்சலிடப்பட்டு பேசவிடாமல் செய்யப்பட்டார்.

வெளிப்படையாக யூத எதிர்ப்பு, இனவெறிக் கருத்துக்களைக் கூறும் ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஓலே தியானிபோக், ஜேர்மனிய தூதரகத்தில் வரவேற்கப்பட்டு வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையருடன் புகைப்பட எடுத்துக்கொள்ளும் வாய்ப்பளிக்கப்பட்டார்.

யானுகோவிச் சரணடைந்துள்ளது பாசிச எதிர்தரப்பை இன்னும் ஆக்கிரோஷத்துடன் செயல்பட ஊக்கம் அளித்துள்ளது. நவ-நாசிRight Sector” இன் தலைவர் டிமிட்ரி யாரோஷ், Vkontakte சமூக இணையத்திடம் நேற்று தன் இயக்கம் யானுகோவிச் அறிக்கையைஏமாற்றுத்தனம்எனக் கருதியதாகவும் மோதலைத் தொடர இருப்பதாகவும் கூறினார். “தேசியப் புரட்சி தொடர்கிறதுஎன்று அவர் எழுதினார்; ஆட்சி அகற்றப்பட்டபின்தான் இது முடிவிற்கு வரும் என்றும் சேர்த்துக் கொண்டார்.

பேச்சுவார்த்தைகளுக்குள் முறையான ஒரு பிரிவாக இல்லை என்றாலும், வாஷிங்டன் கீயேவின் முடிவைப் பாராட்டியது. வெள்ளை மாளிகை ஒபாமா நிர்வாகம் உடன்பாட்டைவரவேற்கிறதுஎன்று அறிக்கை விடுத்து இதுநாம் வாதிட்டுள்ளதற்கு இணங்க உள்ளதுஎன்றும் கூறியுள்ளது.                                   

இந்த அறிக்கைகள், ஏகாதிபத்திய சக்திகளின் முற்றிலும் பிற்போக்குத்தன, பொறுப்பற்ற கொள்கைகளை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன. இவை உக்ரேனையும் முழுப் பிராந்தியத்தையும் போர் விளிம்பிற்குக் கொண்டு செல்ல பாசிசக் குழுக்களுடன் கூடிஉழைத்தன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யானுகோவிச், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதை கடைசி நேரத்தில் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக ரஷ்யாவுடன் நெருக்கமானார். அப்பொழுது முதல் ஜேர்மனியும் அமெரிக்காவும் திட்டமிட்டபடி உக்ரேனில் உறுதியைக் குலைத்து அதைப் பிரிக்க முற்பட்டன.

அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகங்கள், பாசிச சக்திகளின் கொள்கைகளை எழுதுபவை, உக்ரேனிய மக்கள்மீது பாசிஸ்ட்டுக்கள் அரசாங்கத்தைச் சுமத்தியதாக எழுதியுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் இடக்கரடக்கலாக Right Sector இனை கடுமையான தேசியவாதகுழு எனக் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் ஸ்வோபோடாவை விமர்சிக்கும் நாஜிச் சார்பு உடைய இக்குழு ஒரு பாசிசக் கட்சியாகவுள்ளதுடன், நாஜி SS பிரிவுகளில் சேர்ந்த உக்ரேனியர்களையும் பாராட்டியது. அப்பிரிவுகள் மேற்கு உக்ரேனிய பிராந்தியமான காலிசியாவில் இரண்டாம் உலகப் போரின்போது மிகமிதவாதமானவர்கள்என்று யூதர்கள் ஏராளமானவர்களைக் கொன்றன.

பிரியும் போக்குகள் உக்ரேன் முழுவதும் தலை தூக்கியுள்ளன. உக்ரேனிய தேசியவாதத்தின் மையமாக விளங்கும் மேற்கு நகரமான எல்விவ் தன்னை சுயாட்சிப்பகுதி என அறிவித்துக் கொண்டுள்ளது.

தென்கிழக்கில், 1954 இருந்து அப்போதைய உக்ரேன் சோவியத் குடியரசில் இருந்ததும் முக்கியமாக ரஷ்ய குடிமக்களைக் கொண்டதுமான கிரிமியத் தீபகற்பத்தின், பாராளுமன்றத் தலைவர் உக்ரேனில் இருந்து பிரிந்து போவதாக அச்சுறுத்தியுள்ளார். தலைவர் வோலோடைமிர் கான்ஸ்டான்டிநோவ்நாடு உடைந்தால் பிரிவினை நடக்கலாம்என்றார். “எல்லாம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதுஎனச் சேர்ந்துக் கொண்டார்.

இது ரஷ்ய இராணுவம் உக்ரேனில் தலையிடும் வாய்ப்பையும் எழுப்பியுள்ளது. லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் மூத்த ரஷ்ய அதிகாரியைஉக்ரேன் உடைந்தால், அது போரைத் தூண்டும். அவர்கள் கிரிமியாவை இழப்பர், ஜோர்ஜியாவில் செய்ததைப் போல் நாங்கள் சென்று அதைப் பாதுகாப்போம்எனக்கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. இது 2008ம் ஆண்டு ஜோர்ஜிய போரைக் குறிக்கிறது. அமெரிக்கா ஆதரவு கொண்ட ஜோர்ஜியா ஆட்சி தெற்கு ஒசிஷியாவின் பிரிவினைப் பிராந்தியத்தில் இருந்த ரஷ்ய அமைதிக்காப்பாளர்களை தாக்கியபின் இது ஆரம்பித்தது.

மற்றொரு ரஷ்ய அதிகாரி பைனான்சியல் டைம்ஸிடம்நாங்கள் ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரேனை எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடுகள் என்ற முறையில் நாங்கள் ஒரு குடும்பத்தினர். அவர்கள் ரஷ்யா இன்னமும் 1990களின் துவக்கத்தில் இருந்தது போல் வலுவற்று உள்ளதாக நினைக்கின்றனர். நாங்கள் அப்படி இல்லை.”

Spigel Online இல் இரண்டு நாட்களுக்கு முன் வந்த கட்டுரை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது போல் ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனில் ஏகாதிபத்திய, பூகோள அரசியல் நோக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. “ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒருங்கிணைப்பு உடன்பாடு மட்டும்தான் பணயத்தில் இல்லைஎன அதில் உவே க்ளவ்ஸ்மான் எழுதினார்: “ஊழல் வதந்திகளால் சூழப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் வருங்காலத்தில் மட்டும் கவனம் இல்லை. மாறாக, பூகோள அரசியல் மைய அரங்கிற்கு வந்துள்ளதுடன், ஐரோப்பாவிலும் யுரேசியப் பிராந்தியத்திலும் வருங்காலத்தில் மேலாதிக்கம் கொள்ளும் சக்தி எது என்பதுதான் மிகமுக்கிய கேள்வியாகியுள்ளதுஎனவும் எழுதியுள்ளார்.