World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Dozens killed in Ukraine as EU and Washington step up pressure on Yanukovych government

ஐரோப்பிய ஒன்றியமும் வாஷிங்டனும் யானுகோவிச் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கையில் உக்ரேனில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர்

By Stefan Steinberg 
21 February 2014

Back to screen version

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் வியாழன் அன்று உக்ரேனிய அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை அதிகரித்தபோது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் டஜன் கணக்கானவர்கள் உயிரைப் பலி கொண்டது. இறப்பு எண்ணிக்கை மதிப்பீடு 25 முதல் 100 வரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தகவல்கள் எண்ணிக்கையை 70 என அறிவித்துள்ள. இது கடந்த வியாழனை ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸ் கலகப்பிரிவிற்கும் இடையே பல நாட்கள் மோதலில் மிகவும் இரத்தம் சிந்திய நாளாகச் செய்துள்ளது.  

நேற்று பிரஸ்ஸல்ஸில் அவசரக்காலக் கூட்டம் ஒன்றில் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் உக்ரேன்மீது பொருளாதாரத் தடைகளைச் சுமத்த உடன்பாடு கொண்டனர். இதில் விசாத்தடைகள், சொத்து முடக்கங்கள், கலக தடுப்பு கருவிகள் ஏற்றுமதித் தடைகள் முதலியவை உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ஐரோப்பிய சக்திகள் உக்ரேன் ஆட்சிக்கு எதிரான தண்டிக்கும் நடவடிக்கை வேண்டும் என்னும் பெரிய அமெரிக்க அழுத்தங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் 20 முக்கிய அரசியல்வாதிகள் மீது பயணத் தடைகளைச் சுமத்தியுள்ள்ளது.

வியாழக்கிழமை முன்னதாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தின் வெளியுறவு மந்திரிகள் ஜனாதிபதி யானுகோவிச் பதவியில் இருந்து இறங்கவேண்டும் என்ற இலக்குடன் அரசாங்கத்துடனும் எதிர்த்தரப்புடனும் பேச்சுக்கள் நடத்த கீயேவிற்கு பயணித்திருந்தனர். 

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திற்கு முன் கொடுத்த அறிக்கையில், உக்ரேனுக்கு எதிரான எந்தப் புதிய தடைகளையும் கண்டித்தார். கலகக்காரர்களுக்கு அமெரிக்கத் தடைகள் ஊக்கம் அளிக்கின்றன என லாவ்ரோவ் அறிவித்தார். எந்தப் புதிய தடைகளும் மிரட்டலுக்கு ஒப்பாகும் என்றார் அவர். மேற்கு தலைநகரங்கள் நாட்டின் நிலைமையில் தலையீடு செய்வது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என முடித்தார்.

ஒபாமா நிர்வாகம், ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கீயேவிலும் இன்னும் பிற உக்ரேன் நகரங்கள் முழுவதும் சமீபத்தில் வன்முறை பெருகியிருப்பதற்கான முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளன.

பொலிசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதலில் செவ்வாயன்று 26 பேர் மரணதடைந்தும், நூற்றுக்கணக்கானவர் காயப்பட்டதைத் தொடர்ந்தும் ஜனாதிபதி யானுகோவிச் புதன் அன்று உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார், குருதி சிந்துதல், நாட்டில் நிலைமையை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கத்தை கொண்ட பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

யானுகோவிச் சமாதான உடன்படிக்கைக்கு அழைப்புவிடுக்கத் தயாராக இருப்பதை, வலதுசாரி தந்தைநாட்டு கட்சித் தலைவர் ஆர்செனி யாட்சென்யுக் உறுதிப்படுத்தினார். பொதுமன்னிப்பின் நோக்கம் மைடான் சுதந்திர சதுக்கத்தை இன்று முற்றுகையிடல் என்னும் அதிகாரிகளின் திட்டம் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தவே என்றார்.

பாசிச Right Sector அமைப்பு, தீவிர வலது, யூத எதிர்ப்பு ஸ்வோபோடாக் கட்சியுடன் சேர்ந்து தெருச் சண்டைகளில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. புதன் அன்று இரவு அது வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தின் சமாதான உடன்படிக்கையில் அது கையெழுத்திடவில்லை, பேச்சுவார்த்தைக்கு ஒன்றுமில்லை என அறிவித்துள்ளது.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, வியாழனில் வன்முறை மோதல்கள் வெடிப்பு அதிகாலையில் எதிர்ப்பாளர்கள் கோடாரிகள், கத்திகள், குறுந்தடிகள் மற்றும் இரும்புக் கேடயங்களைக் கொண்டு சுதந்திர சதுக்கத்தை சுற்றி நின்ற கலகப் பிரிவு பொலிசாரை தாக்குதல் நடத்தியபோது ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் கலகப் பிரிவுப் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த Ukrania hotel இனை சுற்றியுள்ள பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாயிற்று. அரசாங்கக் கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள் மீது தொடர்ந்த தாக்குதலை தொடர்ந்து, நகரத்தின் மத்திய தொழிற்சங்க அலுவலகங்கள் தீயூட்டப்படுதல் உட்பட, தீவிர வலதுசாரிக் கூறுபாடுகள் ஏராளமான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தம்வசமாக்கிக்கொண்டனர். வியாழன் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு காட்சிகள் எதிர்ப்பாளர்கள் பொலிசார் மீது துப்பாக்கிகளால் சுடுவதைக் காட்டுகின்றன.

மிக அதிகம் வெறுக்கப்படும் யானுகோவிச் ஆட்சி, இதற்கு விடையிறுக்கும் வகையில் அதன் பெர்க்கு சிறப்புப் படையை கலகக்காரர்களை துரத்த திரட்டியது. கடந்த நவம்பர் மாதம் திட்டமிடப்பட்ட உடன்பாட்டில் இருந்து விலகியதின் மூலமும், மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொள்ள விரும்பிய விதத்தில் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்தை எரியூட்டிய யானுகோவிச், எதிர்த்தரப்பிற்கு ஆதரவு தரும் மேற்கு சார்புடைய தன்னலக்குழுக்களில் இருந்து மாறுபட்ட உக்ரேனிய தன்னலக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

வலதுசாரி மற்றும் தேசியவாத சக்திகளும் நாட்டின் மேற்கே பல நகரங்களில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. புதன் அன்று எதிர்ப்பாளர்களால் கெமெல்நிட்ஸ்க்யி, ஐவனோ-பிராங்கிவ்ஸ்க், உஷ்ஹோராட் மற்றும் தெர்னோபில் ஆகிய நகரங்களில் மத்திய நிர்வாகக் கட்டிடங்கள முற்றுகையிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. மேற்கில் மிகப் பெரிய நகரான எல்விவில் எதிர்ப்பாளர்கள் அரசாங்க வக்கீல் அலுவலகத்தைப் பற்றி, பொலிசார் நிலையங்களையும் சூறையாடினர். இதன் பின் அவர்கள் கீயேவ் மத்திய அரசாங்கத்தில் இருந்து நகரத்தின் அரசியல் சுயாட்சியை அறிவித்தனர். சுயாட்சி இயக்கத்தின் ஆதரவாளர்கள் போலந்துடனான எல்லைகளில் தடுப்புக்களை நிறுவி போக்குவரத்து அங்கு செல்ல முடியாமல் தடுத்தனர்.

உக்ரேனிய-போலந்து எல்லையில் அழுத்தங்கள் அதிகரிக்கையில் போலந்துப் பிரதம மந்திரி டோனால்ட் ருஸ்க் போலந்து தொலைக்காட்சியில் தான் மருத்துவமனைகளை உக்ரேனிய அகதிகளுக்காக தயார்ப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் இதே போன்ற தயாரிப்புக்களைச் செய்கின்றன என்ற ருஸ்க் மேலும்: இன்று நடப்பது போர் அல்ல, ஆனால் நிலைமை எக்கணத்திலும் கட்டுக்கடங்காமல் போகக்கூடும். நாம் மோசமான நிலைக்கும் தயாராக உள்ளோம் எனக் கூறினார்

வலதுசாரி தீவிரக் குழுக்களினதும் குண்டர்களினதும் ஆத்திரமூட்டல்கள் மேற்கு அரசியல்வாதிகளாலும் செய்தி ஊடகத்தாலும் பெரும் மௌனத்துடன் வரவேற்கப்பட்டுள்ளன. இவை உக்ரேனில் உள்ள நெருக்கடிக்கு யானுகோவிச் அரசாங்கத்தையும் ரஷ்யாவையும் பொறுப்புக் கூறுகின்றன.

வெள்ளை மாளிகையும் பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவமும் இச்சக்திகள் நாட்டில் தெரு வன்முறை மூலம் உறுதிப்பாடு குலைவதற்கு அனுமதிப்பதுடன் அதே நேரத்தில் இவை யானுகோவிச் அதிகாரத்தில் இருந்து அகலவேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு தலைமையும் தாங்குகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் உக்ரேனில் ஒரு தமது வாடிக்கை ஆட்சியை சுமத்தி, அது சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கனக் கொள்கையை நிறைவேற்றவேண்டும் என்றும், ரஷ்யாவுடன் இன்னும் அதிக மோதல் நிலைப்பாட்டைக் கொள்ளவேண்டும் எனவும் கோருகின்றன.

மெக்சிகோவிற்குப் பயணித்திருக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  உக்ரேனில் ரஷ்ய அரசாங்கத்தின் பங்கைக் பகிரங்கமாக குறைகூறியுள்ளார். பலபிரச்சினைகளில் [மக்களின் அடிப்படை சுதந்திரங்களில்] திரு.புட்டின் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். இதில் இரகசியம் ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன் என்றார்.

அமெரிக்காவில் எங்கள் அணுகுமுறை ஏதோ பனிப்போர் சதுரங்க விளையாட்டுபோல் ரஷ்யாவுடன் நாம் போட்டியில் இருக்கிறோம் என்று நாம் பார்க்கவில்லை. எங்கள் இலக்கு உக்ரேன் மக்கள் தங்கள் வருங்காலம் பற்றி தாங்களே முடிவெடுக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதுதான்.

உண்மையில் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான மத்திய ஐரோப்பிய கொள்கை, புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் தொடர்ச்சிதான். அது ரஷ்யா, தன் முன்னாள் சோவியத் குடியரசுகள், முன்னாள் கிழக்கு முகாம் என்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவில் உள்ள சோவியத் குடியரசுகள் மீதான செல்வாக்கைக் இல்லாதொழிக்க முயன்றது. ஒபாமாவின் ஜனநாயக விழைவுகள் பற்றிய உரையின் அவலம் சமீபத்தில் ஐரோப்பிய, யூரேசிய விவகாரங்களுக்கு அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளர் விக்டோரியா நியூலாந்தின் கருத்துக்களில் தெளிவாக அம்பலமாயின.

உக்ரேனில் உள்ள அமெரிக்கத் தூதருடன் நடத்திய கசியவிடப்பட்ட உரையாடலில், நவ பழைமைவாத யுத்தபிரியரான ரோபர்ட் காகனுடைய மனைவி நியூலாந்த் உக்ரேனிய அரசாங்கத்தின் எதிர்காலக் காட்சி குறித்த தன் விருப்பத்தை முன்வைத்து ஐரோப்பியத் தலைவர்களின் கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியத்தை இழிந்த வார்த்தைகளால் திட்டி (Fuck the EU) உதறித்தள்ளினார்.

முன்னதாக நியுலாந்த் அமெரிக்காவிற்கு உக்ரேனின் பூகோள மூலோபாய முக்கியத்துவம் எப்படி என்பதை, அவர் சர்வதேச வணிக மாநாட்டில் அமெரிக்கா $5 பில்லியனை அரசு சாரா அமைப்புக்கள் இன்னும் பிற அமைப்புக்களுக்கு யானுகோவிச் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு முதலீடு செய்துள்ளது என்று கூறிய வகையில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

லிபியாவிலும் சிரியாவிலும் ஒபாமா நிர்வாகமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஆட்சி மாற்றத்தை சாதிக்க மிகப்பிற்போக்குத்தன அரசியல் சக்திகளைப் பயன்படுத்தத் தயாராக இருந்தன. இப்பொழுது உக்ரேனில் அவை தீவிர வலதுசாரிக் குழுக்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட யானுகோவிச் அரசாங்கத்தை அகற்ற ஆதரவு கொடுக்கின்றன. இவ்வாறு செய்கையில் அவை நாடு உடைவதை தூண்டி அதை உள்நாட்டுப் போரினுள் மூழ்கவும் செய்கின்றன.