World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US media and the release of POW Bowe Bergdahl

அமெரிக்க ஊடகங்களும், யுத்த கைதி போவே பேர்க்டாலின் விடுதலையும்

Patrick Martin
5 June 2014

Back to screen version

பிரச்சார பரப்புரைகளைப் பரப்புவதிலும், மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துருக்களை ஊக்குவிப்பதிலும் மீண்டுமொருமுறை அமெரிக்க ஊடகங்கள் அதன் எல்லையில்லா தகமையை எடுத்துக்காட்டி உள்ளன. தலிபான் உடனான கைதிகள் பரிவர்த்தனையில் மே 31 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட சார்ஜண்ட் போவே பேர்க்டாலுக்கு (Bowe Bergdahl) எதிராக திருப்பி விடப்பட்டுள்ள அவதூறு பிரச்சாரங்கள் இவ்விதத்திலானவை ஆகும்.

செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு தலையங்கம், சுட்டுக்கொல்லும் ஒரு படையை உருவாக்குவதுதான் பேர்க்டால் நாடு திரும்புகையில் தரப்படும் சரியான விடையிறுப்பாக இருக்குமென்ற அறிவுரையை தொடக்கிவைத்து புதிய ஆழத்தைத் தொட்டது. “எந்தவொரு நபரும் இராணுவ பொறுப்பைத் துறந்ததற்காக அல்லது பொறுப்பைத் துறக்க முயன்றதற்காக குற்றவாளியாக காணப்பட்டால், அந்த குற்றம் யுத்த காலத்தின் போது நடந்திருந்தால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது இராணுவ-நீதிமன்றம் விதிக்கும் அதுபோன்ற வேறு தண்டனையோ வழங்கலாம்,” என்ற இராணுவ நன்னடத்தை நெறிமுறைச் சட்டத்தின் (Uniform Code of Military Justice) 85வது ஷரத்தை அந்த தலையங்கம் மேற்கோளிட்டு காட்டியது.

பேர்க்டாலுக்கு எதிரான பிரச்சாரம் ஆப்கானிஸ்தானில் இருந்த அவரது படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவால் ஊக்குவிக்கப்படுகிறது, அவர்கள் குடியரசு கட்சியின் வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர்களால் ஒன்றுதிரட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். 2012இல் மிட் ரோம்னியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலை செய்ய சென்றவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அப்போதைய அமெரிக்க தூதருக்கு ஒரு முன்னாள் ஆதரவாளருமான ரிச்சர்டு கிரினெல், அந்த முன்னாள் சிப்பாய்கள் மற்றும் அவர்களின் ஊடக விளம்பரதாரர்களில் முக்கிய நடுநாயகமாக அடையாளம் காணப்படுகிறார்.

அத்தகையவர்களின் உண்மைத்தன்மை குறித்து எந்தவொரு சுயாதீனமான விசாரணையுமின்றி, ஊடக வலையமைப்புகள் பேர்க்டாலுக்கு எதிரான அவர்களின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஒலி/ஒளிபரப்பி வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த தாக்குதலின் இலக்கில் இருக்கும், ஜேர்மனில் உள்ள அமெரிக்க இராணுவ மருத்துவமனையில் முடங்கி இருக்கும் பேர்க்டால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு விடையிறுக்கவோ அல்லது தன்னையே பாதுகாக்க இயலாத நிலையில் உள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ், ரேடியோ உரையாடல்கள், மற்றும் அதிவலது வலைப்பதிவுகளில் உள்ள வழக்கமான ஐயுறவுக்குரிய நபர்களுக்கு அப்பாற்பட்டு, “முதன்மை ஊடகங்கள்" என்றழைக்கப்படுபவையும் இந்த தாக்குதலில் சேர்ந்துள்ளன. பேர்க்தஹலுடன் இராணுவ சேவையில் இருந்த ஒரு முன்னாள் சிப்பாயை நேர்காணல் செய்கையில், NBC Today நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சவன்னாஹ் குத்ரே, பொறுப்பைத் துறந்ததற்காக முன்னாள் யுத்த கைதி (POW) தண்டிக்கப்படுவாரா என்று நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

நியூ யோர்க் டைம்ஸின் தலையங்க பக்கத்தில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் டைம்ஸூடன் ஒன்றிணைந்திருந்த முன்னாள் செய்தியாளர் அலெக்ஸ் பெரென்சனும் 85ஆம் ஷரத்தை மேற்கோளிட்டு காட்டினார், அவர் தொடர்ந்து கூறுகையில், “சார்ஜண்ட் பேர்க்டால் பல இராணுவ சட்டங்களை மீறி இருக்கக்கூடும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜூன் 30, 2009இல் நடந்ததன் மீது பெண்டகன் எவ்வாறு மறுவிசாரணை செய்வதை தவிர்க்க முடியுமென்று எனக்கு தெரியவில்லை,” என்றார், [அந்த நாளில் தான் பேர்க்டால் அவரது படைப்பிரிவிலிருந்து வெளியேறினார் மற்றும் தலிபானால் பிடிக்கப்பட்டார்]. “சார்ஜண்ட் பேர்க்டால் புத்தி சுவாதீனத்தோடு வழக்கைச் சந்திக்க முடியும் என்று நிரூபித்தால், கடமை தவறிய செயலுக்காக அவர்  லீவென்வொர்த்தில்[இராணுவசிறையில்] சில ஆண்டுகள் இருக்கவேண்டியிருக்கலாம்.”

தலிபானிடம் அவர் பிடிபடுவதற்கு முந்தைய மாதங்களில் பேர்க்டால் அவரது பெற்றோருக்கு எழுதிய மின்னஞ்சல் சேதிகளில் இருந்த குறிப்புகளை சில ஊடக செய்திகள் மேற்கோளிட்டு காட்டின. அவை ஆப்கானிஸ்தானிய யுத்தத்தோடு அவருக்கு அதிகரித்து வந்த அதிருப்தியை எடுத்துக்காட்டுவதாக இருந்தன. Rolling Stoneஇன் ஜூன் 21, 2012 பதிப்பில் அமெரிக்காவின் இறுதி http://www.rollingstone.com/politics/news/americas-last-prisoner-of-war-20120607யுத்தக்கைதி என்ற தலைப்பில் பேர்க்டால் மற்றும் அவரது குடும்பத்தைக் குறித்து அளிக்கப்பட்ட விபரங்களில் அத்தகைய மின்னஞ்சல்களின் நீண்ட துணுக்குகள் காணப்படுகின்றன. பேர்க்டால் அவருக்கு அறிமுகமாகி இருந்தவரும் அவரின் நேசத்திற்குரியவருமான ஒரு இளம் அதிகாரி, ஒரு சாலையோர குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும், ஜூன் 25, 2009இல் மிக வெளிப்படையாக உடையும் புள்ளியை எட்டியிருந்தார்.

அதற்கடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் அவரது பெற்றோருக்கு எழுதினார், “... நான் அமெரிக்கராக இருக்கவே வெட்கப்படுகிறேன். சுய-நேர்மையற்ற இறுமாப்பின் கொடூரம் வளர்ந்தோங்கி உள்ளது. இவை அனைத்தும் அருவருப்பூட்டுகின்றன.”

அவர் தொடர்ந்து எழுதினார், “இங்கே நிலவும் ஒவ்வொன்றுக்கும் நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது, ஆனால் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அவர்கள் ஒன்றுமே இல்லை, அவர்கள் முட்டாள்கள், எவ்வாறு வாழ்வதென்று கூட அவர்களால் யோசிக்க முடியாது என்று உலகின் மிகவும் ஆணவம் கொண்ட நாடு அவர்களிடம் கூறுகிறது.”

அவர் நேரடியாக கண்ட ஒரு குறிப்பிட்ட கோர சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் எழுதுகிறார், “எங்களின் ஆயுத வாகனங்கள் அந்த புழுதி வீதிகளில் வரும் போது குழந்தைகள் அதற்கடியில் அகப்படுவதை கண்டு ஒருவருக்கொருவர் பேசுவதை நாங்கள் கேட்கிறோம், ஆனால் அதை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை.”

அதற்கு பின்னர் விரைவிலேயே, பேர்க்டால் ஒரேயொரு கத்தியோடு, அவரது படைப்பிரிவை விட்டு வெளியேறி,  நடந்தே பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு செல்ல முயன்றிருக்கவேண்டும். பின்னர் விரைவிலேயே கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டார். Rolling Stone தரும் தகவலின்படி, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2011இல், குறைந்தபட்சம் ஒருமுறை அவர் தப்பிக்க முயன்றிருக்கிறார், ஆனால் அப்போது பிடிக்கப்பட்டு விட்டார்.

அவர் நவீன வெடிகுண்டு சாதனத்திற்குள்ளோ (IED) அல்லது தலிபானின் திடீர் தாக்குதலில் மாட்டிக் கொண்டாரோ என கிழக்கு ஆப்கானிஸ்தானில் அவரைத் தேடிச் சென்று உயிரிழந்த அமெரிக்க சிப்பாய்களின் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பாகிறார் என்று கூறப்படும் கருத்து தான் பேர்க்டாலுக்கு எதிரான மிகவும் இழிந்த அவதூறாக இருக்கிறது. பரந்த ஊடக பிரச்சாரங்களில் ஆறு அல்லது எட்டு சிப்பாய்களின் ஒரு பட்டியல் தரப்படுவதோடு, அவர்களின் உயிரிழப்புகளுக்கும் பேர்க்டால் காணாமல் போனதன் உண்மையை உறுதிபடுத்தும் நடவடிக்கைக்கும் இடையே தொடர்பிருப்பதாக அவற்றில் கூறப்படுகிறது.

எவ்வாறிருந்த போதினும் புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் அதன் முதல் பக்க செய்தியில் இராணுவ சிப்பாய் செல்சியா (பிரட்லி) மேனிங்கால் விக்கிலீக்ஸிற்கு கசியவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் யுத்த ஆவணங்களில் இருந்து ஆதாரங்களை மேற்கோளிட்டு காட்டி, இந்த உயிரிழப்புகளுக்கும் பேர்க்டாலுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான ஆதாரம் எதுவும் அங்கே இல்லை என்பதை ஒப்புக் கொண்டது.

ஆனால் வாஷிங்டன் போஸ்டின் முன்னாள் செய்தியாளரும் ஈராக் யுத்தம் மீது பல புத்தகங்கள் எழுதிய எழுதாளருமான தோமஸ் ரிக்ஸிடம் இருந்து மிக பொருத்தமான விடையிறுப்பு வந்தது, அவர் ட்விட்டரில் பேர்க்டாலை பற்றி: சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை வழக்கிற்கு இழுக்கிறோம் என்றால், இந்த மன அழுத்தத்திற்கு ஆளான சிப்பாயை விட குற்றத்திற்கு அதிகமாக உடந்தையாய் இருந்த பலரை எனக்குத் தெரியும்,” என்று எழுதினார்.

அதுமாதிரியான ஒரு பட்டியலின் முதலிடத்தில் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மற்றும் பராக் ஒபாமா இருப்பார்கள்.

பேர்க்டாலுக்கு எதிரான பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம் அவரது யுத்தவிரோத கண்ணோட்டமாகும். அது பெரும்பான்மை அமெரிக்க மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. இது யுத்தத்தின் நவ-காலனித்துவ சுபாவத்தையும், குற்றத்தன்மையையும் மூடிமறைக்க ஊடக முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகும். பேர்க்டாலுக்கு எதிரான வேட்டையானது, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் யுத்த குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் இராணுவ சிப்பாய் மேனிங்கை பழிவாங்குவதில், அவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறு மற்றும் இழிபடுத்தும் அமெரிக்க ஊடக பிரச்சாரங்களோடு ஒப்பிடக்கூடிய ஒன்றாகும்.

ஏகாதிபத்தியத்திற்கான ஊடக அனுதாபிகளைப் பொறுத்த வரையில், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களால் அதிர்ந்து போன மற்றும் அதில் பங்கெடுக்க மறுக்கும் ஒரு சிப்பாய் குற்றவாளி ஆகிவிடுகிறார், அதேவேளையில் சத்தமில்லாமல் அட்டூழியங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் வீரபிரதாபிகளாகி விடுகிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிக்களின் குற்றங்கள் மீதான நூரெம்பேர்க் விசாரணையில், “வெறுமனே உத்தரவுகளைப் நிறைவேற்றியதற்காக" மன்னிக்கப்படுவது என்ற வாதத்தை பாதுகாப்பது முற்றுமுதலாக நிராகரிக்கப்பட்டது இங்கே நினைவுகூரப்பட வேண்டும். இன்று அதற்கு புத்துயிரூட்டுபவர்கள் இன்னும் மேலதிகமான பெரும் குற்றங்களுக்கு பாதை அமைக்கிறார்கள்.