World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP election campaign receives wide hearing

இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பரந்த ஆதரவைப் பெறுகிறது

By our correspondents
6 March 2014

Back to screen version

இலங்கையின் மாகாண சபை தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ...) பிரச்சாரம் தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்ப பெண்கள் மற்றும் வறியவர்களது பெறுமதிமிக்க ஆதரவை பெற்று வருகிறது. கட்சி மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில், அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தலைமையில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் மார்ச் 29 நடைபெறவுள்ளன.

சோசக மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பினதும் உறுப்பினர்கள் சமீப நாட்களில் கொழும்பு வனாதமுல்ல, கொம்பனித்தெரு மற்றும் வெள்ளவத்தை பகுதியிலும் புறநகர் பகுதியான ரத்மலானையிலும் பிரச்சாரம் செய்தனர். சோசக ஆதரவாளர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கட்சியின் தேர்தல் அறிக்கைகளையும் உலக சோசலிச வலை தளத்தின் கட்டுரைகளில் நூற்றுக்கணக்கான பிரதிகளையும் விநியோகித்தனர்.

கொழும்பை தெற்காசிய வர்த்தக மையமாக மாற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முயற்சிகளின் பாகமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படவுள்ள பிரதான பிரதேசமாக வனாதமுல்ல மற்றும் கொம்பனித்தெரு இருப்பதால், தேர்தல் பிரச்சாரம் அங்கு குவியமயைப்படுத்தப்பட்டது. 70,000க்கும் அதிகமான குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளன.

சுமார் 5,000 வனாதமுல்ல மக்கள் உடனடி வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றனர். அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சாதாரண நாள் கூலி தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளரும் மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ, அண்மையில் வந்தபோது வனாதமுல்ல மக்கள் அவருடன் தர்க்கம் செய்திருந்தனர். வெளியேற்றங்களை எதிர்க்கும் மக்களை எச்சரிக்கவே தனிப்பட்ட முறையில் கோடாபய வனாதமுல்லவுக்கு வந்திருந்தார்.

அவரது விஜயத்தின் பின்னர், அரச புலனாய்வு அதிகாரிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் சமராதீர சுனில் கடத்தப்பட்டார். வனாதமுல்ல வாசியான அவர், பாதுகாப்புச் செயலருடன் வாக்குவாதப்பட்டிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் சுனிலை விடுவிக்கக் கோரி வீதிக்கு இறங்கியதோடு சுனிலை விடுவிக்க கடத்தல்காரர்களை நெருக்கினர். மக்கள் சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாக அந்த பகுதிக்கு வந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உள்ளூர் மக்கள் விரட்டியடித்தனர்.

சோசக பிரச்சாரகர்கள் இரண்டு நாட்களின் பின்னர் இந்த சம்பவங்கள் நடந்த பகுதிகளுக்கு சென்று பிரதேசவாசிகளுடன் பேசியதோடு கடத்தலையும் மற்றும் பிரதேசத்தை கைப்பற்றி முதலீட்டாளர்களுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளையும் கண்டித்தனர்.

இலங்கையை மற்றொரு சிங்கப்பூராக மாற்றுவோம் என்று அரசாங்கம் கூறுவதைப் பற்றி ஒரு பெண் கருத்துத் தெரிவித்தார். "அவர்கள் எங்கள் நிலங்களில் இருந்து எங்களை வெளியேற்றினால் அதில் என்ன பிரயோசனம்?" என்று அவர் கேட்டார். "நாம் வாழ்வதற்கு அன்றாடம் போராட்டத்தில் இருக்கின்றோம்." அவர் ஜனநாயக விரோத வெளியேற்றங்களை கண்டித்ததுடன் பல குடியிருப்பாளர்கள் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்தே வீடுகளைக் கட்டினர் என்று விளக்கினார்.

எதிர்வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று சோசக பிரச்சாரகர்களிடம் மற்றொரு பெண் கூறினார். "தேர்தல்களில் எங்களுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுப்பர், நாம் அவர்களது தேர்தல் பொறியில் சிக்கிக் கொள்வோம். நாம் இப்போது இந்த ஊழல் கொள்கைகளை பற்றி அறிந்துள்ளதோடு இந்த வகையான வேட்பாளர்களை எதிர்த்து நிற்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு பயப்படவில்லை. எங்கள் வீடுகளை தகர்க்ப்பவர்களே வந்து எங்கள் வாக்குகளை கேட்க முயற்சிக்கின்றனர்," என்று அவர் கூறினார் .

ஐந்து குடும்பங்கள் தனது வீட்டில் வசித்து வந்தாலும் அவர்கள் அனைவரும் தற்போதுள் வீட்டையும் விட சிறிய, ஒரு 350 சதுர அடி கட்டிடத்துக்குள் அடங்க நெருக்கப்படுவதாக ஒரு பெண் தெரிவித்தார். தனது மகள் மூன்றாம் தரத்தில் கற்பதோடு தனது குடும்பம் இப்போது அதிக கல்விச் செலவுகளையும் அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைவாசி உயர்வையும் எதிர்கொண்டுள்ளது என அப்பெண் கூறினார்.

சோசக மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது என்றும் தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போர் அச்சுறுத்தல்களை பற்றி விளக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றது என்றும் கட்சி பிரச்சாரகர்கள் விளக்கினார். "எந்த பிரச்சினையும் முதலாளித்துவ அமைப்பில் தீர்க்க முடியாது. ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும், சோசலிச கொள்கைகளை செயல்படுத்த வேண்டும்," என ஒரு சோசக உறுப்பினர் கூறினார்.

சுமார் 50 வயதான ஒருவர் தெரிவித்ததாவது: "அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவர்கள் சொல்வது ஒன்று செய்வது வேரொன்று. ஜே.வி.பி. [மக்கள் விடுதலை முன்னணி] உறுப்பினர்கள் இங்கு வந்து எங்களை வெளியேற்றுவதை எதிர்ப்பதாக கூறினர். இப்போது அவர்கள் எங்களுக்கு பொருத்தமான வீடுகள் கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றனர். அதாவது நாங்கள் வெளியேற்றப்பட்டு மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்."

நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளன, என்று அவர் மேலும் கூறினார். பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர், ஆனால், எங்கள் துன்பம் முடிவுக்கு வரவில்லை."

கொழும்பில் ஒரு இரசாயன தொழிற்சாலை ஊழியர், தான் மின்சாரம் மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்த வேண்டும் தற்போதுதான் சில நகைகளை அடகுக்கடையில் வைத்துவிட்டு வந்ததாக விளக்கினார். அவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி, தனது பெற்றோர்கள் கொடுத்த நிலத்தில் வீட்டை கட்டியுள்ளார். "கோடாபய இராஜபக்ஷ, தான் விரும்பினால் பலாத்காரமாக எங்களை வெளியேற்ற முடியும் என்று கூறினார். அவர் இராணுவ பாஷையை பயன்படுத்தினார், ஆனால் நாங்கள் போராடப் போகிறோம்," என்று அவர் கூறினார்.

சோசக குழுவினர் ஆசியாவிலும் உலகம் பூராவும் போர் ஏற்படும் அபாயத்தை பற்றி விளக்கினர். தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அல்லது இலங்கை ஊடகங்கள் இந்த வாழ்வா சாவா பிரச்சினை பற்றி பேசவில்லை. பிரதேசவாசிகள் கவனமாக செவிமடுத்தனர்.

சோசக உறுப்பினர்கள் ஒரு அவசர வீதிக் கூட்டத்தை கூட்டினர். வேட்பாளர்களான விலானி பீரிஸ், பாணினி விஜேசிரிவர்தன மற்றும் W.A. சுனில் ஆகியோர் அங்கு உரையாற்றினார். அவர்கள் அபிவிருத்தியடையும் உலகப் போர் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு சோசகயின் சோசலிச மற்றும் சர்வதேசிய பதிலீட்டை விளக்கினர். அரசாங்கத்தின் வெளியேற்றும் திட்டங்களை தோற்கடிக்க, அனைத்து பிரதான கட்சிகள் மற்றும் அவற்றின் போலி இடது ஆதரவாளர்களிடமும் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு பேச்சாளர்கள் மக்களிடம் வலியுறுத்தினர்.

ஏன் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கேட்டனர். ஸ்தாபனக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டும் பொருட்டும், வேலைகள் மற்றும் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் பிற தொழிலாளர்களுடன் குடியிருப்பாளர் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை குழுக்கள் அவசியம் என்று சோசக வேட்பாளர்கள் விளக்கினார். சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே இந்தப் பிரச்சினைகளை அனுக முடியும் என அவர்கள் கூறினர். அனைவருக்கும் ஒழுங்கான வீடுகள் வழங்க பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவை.