World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

The only way to prevent a world war with nuclear weapons is through the international unity of workers
Australia: Strong support for online May Day celebration

அணு ஆயுதங்களைக் கொண்டான ஒரு உலகப் போரைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஐக்கியப்படுவது மட்டுமே

ஆஸ்திரேலியா: இணையவழி மே தினக் கொண்டாட்டத்திற்கு வலுவான ஆதரவு 

By our reporters 
1 May 2014

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் நடத்தவிருக்கும் இணையவழி மே தின ஊர்வலத்திற்கும் சர்வதேச தொழிலாளர்’ தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களை மீட்டெடுப்பதற்கான அதன் போராட்டத்திற்கும் ஆஸ்திரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் உற்சாகத்துடன் மறுமொழி தந்துள்ளனர். (காணவும்: 2014 சர்வதேச மே தினம்)

ஒபாமா நிர்வாகம் சீனாவின் மீதான தனது இராணுவச் சுற்றி வளைப்பை அல்லது “ஆசியாவை நோக்கிய திருப்பம்” என்று அழைக்கப்படுவதை தீவிரப்படுத்தி, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான தனது ஆத்திரமூட்டல்களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலைமைகளின் மத்தியில் இந்த இணையவழி நிகழ்வு நடக்கவிருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைகள் ஒரு பேரழிவான இராணுவ மோதலாகவும் அணு ஆயுதப் போராகவும் தீவிரமடைய அச்சுறுத்துகின்றன.

இந்த மே தின நிகழ்விற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொள்பவர்கள் போரின் அபாயங்களைக் குறித்த தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இன்னும் பலர் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி குறித்தும், பெருநிறுவன ஊடகங்களின் ஒருபக்கச் சார்பான செயல்பாடு ஆகியவை குறித்தும் பேசினர். தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கைச் சுற்றி ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

சிட்னி உயர்நிலைப் பள்ளி மாணவியான 17 வயது ஆஸ்லி, “தொழிலாள வர்க்க ஒற்றுமையை ஆதரிக்கவும் ஏகாதிபத்தியப் போர் அபாயத்திற்கு எதிராகப் போராடவும்” இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்ததாக கூறினார். அவர் ஆறு மாதங்களாக உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்.

”உக்ரேனில் நடந்த சமீப நிகழ்வுகள் குறித்த WSWS இன் பகுப்பாய்வின் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் எனக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. அமெரிக்காவும் ஜேர்மனியும் அங்கு ஒரு பாசிச அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம், கடந்த இரண்டு தசாப்தங்களில், தனது நலன்களுடன் நேரடியாக இணக்கம் காட்டாத ஏராளமான நாடுகளில் தலையீடு செய்திருக்கிறது.

ஆஸ்லி தொடர்ந்து கூறினார்: “இராணுவவாதத்தின் புதுப்பிப்பும் ஆஸ்திரேலியாவில் முதலாம் உலகப் போரை கொண்டாடுவதும் போர் தயாரிப்புகள் நடந்து வருவதை சுட்டிக் காட்டுகின்றன.” அபோட் அரசாங்கம் 12.4 பில்லியன் டாலர் தொகைக்கு 58 அமெரிக்க போர் ஜெட் விமானங்களை வாங்கியதை அவர் சுட்டிக் காட்டினார். “இதுவும் போர் தயாரிப்புக்கான மேலதிகக் கவலை தருகின்ற ஆதாரமாகும்.”

”ஒரு தீர்வினை, ஒரேயொரு சாத்தியமான முன்னோக்கினை” வழங்குகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தனக்கு முன்னுதாரணமாகக் கொள்வதாக ஆஸ்லி தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று மூலோபாய அனுபவங்களின் அடிப்படையில், அது ஒரு சர்வதேசிய, சோசலிச அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறது. ஒரு முழு-மூச்சிலான போரின் அச்சுறுத்தல் நிலவுகின்றதொரு சமயத்தில் அழிவுகரமான தேசியவாதத்தை எதிர்க்கின்ற ஒரு நிகழ்வாக இணையவழி சர்வதேச மே தின ஊர்வலம் அமைகிறது.” 

மேற்கு ஆஸ்திரேலிய தலைநகரான பெர்த் நகரத்தைச் சேர்ந்த ஜோன் பேசுகையில், உலக முதலாளித்துவத்தின் நடப்பு நெருக்கடி குறித்தும் சர்வதேசரீதியாக தொழிலாளர்கள் இப்போது முகம் கொடுக்கும் அபாயங்கள் குறித்தும் தான் கவலை கொள்வதாகக் கூறினார்.

”முதலாளித்துவ அமைப்புமுறை மிக மோசமானதொரு நிலையில் இருக்கிறது” என்றார் அவர். “தொழில்நுட்ப ரீதியாக கிரீஸ் திவாலாகி விட்டது என்றே சொல்லலாம், ஆறு மில்லியன் மக்கள் முழுமையாக அரச நல உதவிகளை நம்பியுள்ளனர், அத்துடன் இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதம் 60 சதவீதம் வரை இருக்கிறது. ஸ்பெயினில் இது 70 சதவீதம் வரை இருக்கலாம்.”

“அன்றைய நாள் பிரச்சினைகளின் கீழ் - தற்காலிக பித்துகள் மற்றும் சமீபத்திய பரபரப்புகள் - மே தினம் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.... தொழிலாளர்’ புரட்சி என்பது தான் இந்த நிகழ்வின் உண்மையான அர்த்தமாக இருந்தது, ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் மே தினம் என்பது ‘மேற்கு ஆஸ்திரேலியாவிற்கான வேலைகள்’ குறித்தானதாக ஆகி விட்டது. இது ஒரு அரசியல் போக்காகவே இருக்கிறது. இது இடையூறில்லாமல் வலதுபக்கமாய் தொடர்ந்து நகர்ந்து செல்லுமானால், கிரீஸில் போல் இதுவும் பாசிச கோல்டன் டோனை (Golden Dawn) போல் முடியக் கூடும்.

”மே தின ஊர்வலம் என்பது தாக்கம் ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வழியாகும், நடப்பு அமைப்புமுறையை மாற்ற வேண்டும் என்பதே செய்தியாக இருக்க வேண்டும். இன்னும் நிறையப் பேரை நாம் எட்டுவது அவசியம், அதனைச் செய்வதற்கான ஒரு வழியாக இந்த வலைத்தளம் இருக்கிறது.”

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியான இஸோபெல் பேசுகையில், அவரது இளம்வயதில் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைச் சந்தித்திருந்தார் என்றும் அதன் சர்வதேச முன்னோக்கிற்கு ஆதரவளித்தார் என்றும் விளக்கினார். “தொழிலாளர்களுக்குத் தேவை வெறும் தேசியப் போராட்டங்கள் அல்ல, மாறாக உலகப் புரட்சிக்காக போராடுகின்ற ஒரு சர்வதேச அமைப்பே என்பதை 1968 லேயே பிரான்சில் மே-ஜூன் நிகழ்வுகளுக்குப் பின்னரும், அடுத்து மத்திய கிழக்கிலான நிகழ்வுகளிலுமாய், நான் புரிந்து கொண்டேன்...”

”மே தின ஊர்வலம் என்பது ஒரு அதிமுக்கியமான முன்முயற்சியாகும், அது இளைஞர்களை நோக்கி நிலைநோக்கு கொண்டதாக இருக்க வேண்டும். இளைஞர்களை எட்டுவதும் மே தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவதும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு முக்கியமானதாகும்.”

”தொழிலாள வர்க்கத்தால் மேலெழுந்து அதிகாரத்தைக் கையிலெடுக்க முடியும் என்ற ரஷ்ய புரட்சியின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் உண்மையாகவே நன்கு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் புரட்சியை நான் பாதுகாக்கிறேன், அதேபோல் இளைஞர்களும் அதனைப் பாதுகாக்க வேண்டும்.”

மெல்போர்னைச் சேர்ந்த சாந்தா கூறுகையில், மே தின ஊர்வலம் “இன்றைய உலக நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்வதை நோக்கிய ஒரு அடியெடுப்பு” என்று கூறினார்.

”முதலாம் உலகப் போர் தொடங்கி ஒரு நூறு ஆண்டுகளாகி விட்ட பின்னர், நாம் மனிதகுல நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். ஆளும் உயரடுக்கினர் பெருமை அடிக்கின்ற இந்நாளின் ஜனநாயகமானது, செல்வந்தர்களுக்கு கம்ப்யூட்டர் விசைப்பலகையில் ஒரேயொரு விசையை தட்டுவதன் மூலமாக தாங்கள் விரும்புகின்ற எந்த இடத்திலும் முதலீடு செய்வதற்கும், உலகெங்கிலும் மூலதனத்தை இடம்பெயர்த்துவதற்குமான வாய்ப்புகளை வழங்குகிறது.

”அதே ஜனநாயகத்தின் பேரில் தான், உலகின் உழைக்கும் ஏழை மக்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக தேசிய அரசுகளுக்குள் நிர்ப்பந்தமாகத் தள்ளப்பட்டு, பிரேசில், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் சீனா என உலகெங்கிலும் மலிவு உழைப்புக் களங்கள் உருவாக்கப்படுகின்றன. நாம் பார்ப்பது செல்வந்தர்களுக்கான ஜனநாயகமே அன்றி ஏழைகளுக்கான ஜனநாயகம் அல்ல.”

பெர்த் நகரைச் சேர்ந்த ஆரோன் பேசுகையில், வெகுஜன ஊடகங்களிடம் இருந்து “இடைவிடாத பிரச்சாரக் குண்டுகள் வீசப்படுவது” குறித்து அவர் கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். “பெருநிறுவன ஊடகங்களிடம் இருந்து நாம் பெறுகின்ற ஏறக்குறைய எல்லாத் தகவல்களுமே உள்நோக்கங்களாலும் சார்புகளாலும் நிரம்பியதாக இருக்கின்றன, பல சமயங்களில் இவை முற்றுமுதலான பொய்களாகவும் கபடவேடங்களாகவும் இருக்கின்றன.”

”பொதுமக்களுக்கு வணிக ஊடகங்கள் எத்தனை மிருகத்தனமாய் தவறான செய்திகளை வழங்கி ஒருதலைப்பட்சமாய் நடந்து கொள்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு பெரும் கோபம் எழுகிறது, அதிலும் பலரும் இதைக் கேள்வி கேட்க ஒன்றுமில்லை என்று கருதுகின்ற போது. ஓரினச்சேர்க்கை திருமணம், அரச குடும்பம், தனிநபர் விடயங்கள், திருச்சபை விவகாரங்கள் மற்றும் அடையாளப் பிரச்சினைகள் போன்று கவனம் சிதறடிக்கும் விதமான விடயங்களில் கவனம் செலுத்த வாசகர்கள் தள்ளப்படுகிறார்கள்”.

”சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் குறித்து நான் அறிந்த பின்னர் தான் வணிக உலகின் ஒவ்வொரு பிற செய்தி ஆதாரத்தில் இருந்தும் என் மீது கொட்டப்படுகின்ற சகிக்க முடியாத குப்பைக்கு உண்மையான விபரங்கள் நிறைந்த ஒரு மாற்றுமருந்தினை என்னால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் நான் இணையவழி மே தின ஊர்வலத்தில் பங்கேற்க பதிவு செய்திருக்கிறேன் அத்துடன் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்தும் படித்து வருவேன்.”

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவம் (biomedicine) முதலாமாண்டு பயிலும் டமிண்டா என்ற மாணவன் கூறுகையில், உலகப் போரின் அபாயம் குறித்து இந்த ஊர்வலம் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கும் என்றார்.

“இந்த நிகழ்வுக்காக பிரச்சாரம் செய்கிறேன். சர்வதேசச் சூழல் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதைக் காட்டிலும் அதிக முக்கியமானதாக எதனையும் நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆழமான சம்பந்தம் இதிலிருக்கிறது. அணு ஆயுதங்களுடனான ஒரு உலகப் போரை தடுக்க ஒரே வழி என்றால் அது தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே சாத்தியம்.

"நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை இளைஞர்கள் அதிகம் அறிந்து வைத்திருப்பதாக நான் கருதவில்லை. ஏதோ பிரதிபலனுக்காக ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பக்கமாய் நிற்கிறது என்பதே அவர்களுக்குத் தெரிகிறது. அமெரிக்கா மூர்க்கமாய் நடந்து கொள்கிறது என்பதையும் வேண்டுமானால் அவர்கள் அறிந்து வைத்திருக்கலாம். செய்திகளை பார்த்தீர்களென்றால், உக்ரேனுடனும் மற்ற நாடுகளுடனும் அமெரிக்கா நியாயமாக சண்டையிடுவதைப் போலவே நீங்கள் நினைக்கத் தோன்றும்.

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் எவ்வாறு போருக்கு இட்டுச் செல்கின்றன என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் இவை போருக்கு இட்டுச் சென்றன என்பதை அவர்கள் காண வேண்டும்; அதே பிரச்சினைகள் தான் இன்றும் சண்டைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன, இந்தமுறை ஆயுதங்கள் மட்டுமே நவீனமானவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அத்துடன் தத்தமது அரசாங்கங்களின் போர்வெறிக் கூச்சலுக்குப் பின்னாலிருக்கும் உண்மையான காரணங்களையும் அவர்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.

இது வெறுமனே தேசியப் பெருமிதம் சம்பந்தமான விடயமோ, அல்லது உங்கள் தேசத்திற்கான சரியான விடயத்தை செய்வது குறித்தான விடயமோ அல்லது சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பதான விடயமோ அல்ல. இந்தப் போர்கள் எல்லாம் இலாபம் குறித்தவை, முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பது குறித்தவை.

மெல்போர்னை சேர்ந்த ஓய்வுபெற்ற கிட்டங்கித் தொழிலாளியான ஸ்டீவ் கூறுகையில், Anzac தின ஊர்வலத்தில் தேசியவாதம் மற்றும் தேசப்பற்றுவாதம் கிளறப்படுவதையும் முதலாம் உலகப் போரின் காரணங்கள் மறக்கடிக்கப்படுவதையும் கண்டு கொதிப்புற்றதாக கூறினார். மே தின ஊர்வலத்தில் பதிவு செய்வதற்கான காரணமாக அவர் பின்வருமாறு கூறினார்: உலகெங்கிலும் இருக்கும் நமது சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொள்ள விரும்பினேன்... உக்ரேனில் போர் அச்சுறுத்தலானது உக்ரேனிய, ரஷ்ய, ஜேர்மனிய மற்றும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கங்கள் ஐக்கியப்படுவதை அவசர அவசியமாக்கியிருக்கிறது. இதைச் செய்வதற்கு தொழிலாளர்களுக்கு இருக்கின்ற ஒரே ஊடகம் WSWS மட்டுமே. நான்காம் அகிலம் மட்டுமே ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போகிற ஒரே சக்தி ஆகும்.