World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

What way forward for the Air France pilots’ strike?

ஏர் பிரான்ஸ் விமானிகளின் வேலைநிறுத்தத்திற்கு முன்னோக்கிய பாதை என்ன?

By Alex Lantier
30 September 2014

Back to screen version

வேலைநிறுத்தம் செய்துவரும் ஏர் பிரான்ஸ் விமானிகள், தற்போது மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு தொழிற்சங்கங்களால் உத்தரவிடப்பட்டு, ஓர் அரசியல் முட்டுச்சந்தில் நிற்கிறார்கள். அது சர்வதேசரீதியாக தொழிலாளர்களுக்கு வர்க்க முன்னோக்கின் மீது அடிப்படை கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஏர் பிரான்சின் செலவு-குறைந்த துணைநிறுவனங்களை விரிவாக்குவதன் மூலமாக அச்சுறுத்தப்பட்டிருந்த ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக, இரண்டு வாரகால வேலைநிறுத்தத்தில், விமானிகள் மிகவும் பலமான நிலைமையில் இருந்தார்கள். ஏர் பிரான்ஸ் 290 மில்லியன் யூரோவை இழப்போடு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆழ்ந்த நிதியியல் அழுத்தத்தின் கீழ் இருக்கிறது. ஏர் பிரான்சின் முறையீடுகளுக்கு விமானிகள் இணங்க வேண்டுமென முறையிட்டிருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் பெரிதும் செல்வாக்கிழந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் ஆதாரங்கள் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், விமானிகளுக்கு ஆதரவாக பொதுமக்களின் கருத்து ஒரு திடீர் திருப்பமெடுக்கலாம் என அவர்கள் அஞ்சுவதாக தெரிவித்தார்கள்.

இருந்தபோதினும், ஞாயிறன்று திடீரென தேசிய ஏர்லைன் விமானிகளின் தொழிற்சங்கம் (SNPL) வேலைநிறுத்தம் தோற்றுப்போய்விட்டதென அறிவித்தது. நிர்வாகத்திடமிருந்து மேற்கொண்டு எந்த முன்னேற்றங்களையும் பெற முடியாதென வலியுறுத்தி, அது நிறுவனத்திற்கு "ஈடுசெய்ய முடியாத" இழப்பை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் கூறி, வேலைநிறுத்தத்திற்கு விடுத்திருந்த அதன் அழைப்பை திரும்ப பெற்றது.

பிரான்சுக்கு வெளியே, வேலைநிறுத்தத்தின் பரந்த தாக்கத்தைக் கணக்கிட்டு நடுக்கத்தோடு வேலைநிறுத்தத்தைக் கவனித்து வந்த பத்திரிகை பகுப்பாய்வுகள், வேலைக்குத் திரும்புவதற்கு அதன் உறுப்பினர்களை நிர்பந்திக்க அவர்களுக்கு SNPL கூறிய அப்பட்டமான கட்டுக்கதைகளையும் விட மிகமிக துல்லியமாக இருந்தன. ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான Lufthansa விமானிகளின் வேலைநிறுத்தங்களை பின்தொடர்ந்து எழுதிவரும் ஜேர்மன் நிதியியல் நாளிதழ் Handelsblatt எழுதியது: “விமானிகள் அவர்களின் தொழில்வழங்குனர்களின் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தை, இந்த நிகழ்வு அடையாளப்படுத்துகிறதுமேலும் இது Lufthansa விற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.”

இழிவானமுறையில் சரணடைவதற்கு SNPLஆல் முறையிடப்பட்ட முறையீட்டை விமானிகள் நிராகரிக்க வேண்டும், அது பேரிழப்புக்கு மட்டுமே இட்டுச் செல்லும். டிரான்சாவியா-பிரான்ஸ் (Transavia-France) போன்ற செலவு-குறைந்த விமான நிறுவனங்களிடம் விமானிகளை ஒப்பந்த முறைக்குள் தள்ளி, தொழிலாளர் செலவுகளைக் குறைக்க தற்போது அவர்கள் நகர்வார்கள் என்பதை ஏர் பிரான்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். என்ன தயாரிக்கப்பட்டு வருகிறதோ அதன் ஒரு அறிகுறி என்னவென்றால், பிரிட்டனில் உள்ள மோனார்க் விமான நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் 900 வேலைகளைக் குறைக்க மற்றும் செலவு-குறைந்த ஏர்லைன்களுக்குள் நிறுவனத்தை மாற்றி 30 சதவீதத்திற்கு சம்பள வெட்டுக்களைச் செய்ய கடந்த வாரம் உடன்பட்டன.

தேசியவாத, தொழிலாளர்-விரோத தொழிற்சங்கங்களின் கட்டமைப்பிற்குள் வேலையிட நிலைமைகளைப் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதே ஹோலண்ட் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் இந்த முதல் பிரதான போராட்டத்தில் வெளிப்பட்டிருக்கும் மைய பிரச்சினையாகும். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளால் சீரழிக்கப்பட்ட ஒரு கண்டத்தில், விமான நிறுவனங்களுக்கு இடையே சந்தை பங்குகளுக்கான கடுமையான போட்டிக்கு நடுவே, தொழிற்சங்கங்களுக்கு அடிபணிவது என்பது தோல்வியையே குறிக்கிறது. தொழிலாளர்களின் மீது மிகப்பெரிய வெட்டுக்களைச் சுமத்துவதன் மூலமாக சர்வதேச சந்தைகளின் அவர்களின் முதலாளிமார்களை மிகவும் போட்டிமிக்க இடத்தில் வைக்க, தொழிற்சங்கங்கள் தமக்கிடையே ஒன்றுக்கொன்று போட்டியிட்டு தாம் பிரநிதித்துவப்படுத்தும் தேசிய விமானச்சேவை நிறுவனங்களை பலப்படுத்த முனைகின்றன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன முனைவுக்குப் பின்னர், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், லூஃப்தான்சா, அலிடாலியா, இபேரியா மற்றும் இதர பிற நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் அனைத்தும் விட்டுகொடுப்பு ஒப்பந்தங்களைத் திணித்தன. அநேகமாக மிகவும் கோரமான காட்டிக்கொடுப்பு 2010இல் அயர்லாந்தின் ஏர் லின்ங்குஸில் (Aer Lingus) வந்தது. பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் ஒரு 10 சதவீத சம்பள வெட்டுக்கான தொழிற்சங்கத்தின் ஒரு பரிந்துரையை நிராகரிப்பதென தொழிலாளர்கள் வாக்களித்த பின்னர், அரசின் பரிந்துரையான ஒட்டுமொத்த கேபின் பணியாளர்களையும் நீக்கிவிட்டு, அவர்களில் முக்கால்-பங்கினரை கடுமையாக குறைக்கப்பட்ட ஊதியங்களுடன் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள தொழிற்சங்கங்கள் உடன்பட்டன.

ஏர் பிரான்ஸ் விமானிகள் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து போராட்டத்தை வெளியே எடுப்பது, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் மற்றும் வேலைகள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும். இருந்தபோதினும், இதை, சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே செய்ய முடியும்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நிலவும் வெடிப்பார்ந்த தற்போதைய அரசியல் நிலைமையில், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பரந்த போராட்டமும் உடனடியாக அரசுடன் ஒரு மோதலை எழுப்பும். அதன் பணியாளர்களது ஏனைய அடுக்குகளிடையே நிலவும் வெடிப்பார்ந்த அதிருப்தியைக் குறித்து ஏர் பிரான்ஸூக்கு நன்றாக தெரியும். முன்னொருபோதும் கேள்விப்பட்டிராத அளவுக்கு 13 சதவீதத்துக்கு குறைந்த செல்வாக்கு அளவினை கொண்டுள்ள ஹோலாண்ட், பிரான்சின் விமானநிலையங்கள் அல்லது இதர தொழில்துறைகளையும், பின்னர் 1936 அல்லது 1968 போல, முழு பிரான்சிற்கும் அதற்கு அப்பாற்பட்டும் அனைத்தையும் வேலைநிறுத்தங்கள் முடக்கும் என்பது குறித்து அஞ்சுகிறார்.

பிரதம மந்திரி இமானுவெல் வால்ஸின் ஸ்திரமற்ற, மதிப்பிழந்த மந்திரிசபை ஒரு பரந்த வேலைநிறுத்தத்திற்கு முன்னால் உயிர்வாழ முடியாது. இது, விமானிகளின் வேலைநிறுத்தத்தை முற்றிலுமாக தனிமைப்படுத்த சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்கும் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்தில் பிரதான கவனத்தில் இருந்தது. வால்ஸ் விமானிகளை கண்டிப்பதை தொடர்ந்து வந்தார், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சோசலிஸ்ட் கட்சியின் பல்வேறு போலி-இடது கூட்டாளிகள் அந்த வேலைநிறுத்தம் குறித்து வெளிப்படையாகவே மௌனமான இருந்தார்கள். இந்த சக்திகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்திலிருந்து விலகி மறுதரப்பில் நிற்கின்றன.

தொழிற்சங்கங்களினதும் மற்றும் போலி-இடது கட்சிகளினதும் அரசியல் துறையில் பிரதிபலிக்கும் துரோகம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைவிடாத சிக்கன நடவடிக்கையின் உந்துதலில் வெளிப்படுத்தப்படும் அதே அடித்தளமான பொருளாதார துறையில் வெளிப்படுகிறது: இதுவே முதலாளித்துவத்தின் தோல்வியாகும்.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகர போராட்டங்கள் மற்றும் முறையீடுகளுடன் மட்டுமே ஐரோப்பா எங்கிலுமான முதலாளித்துவம் மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவத்தால் தொடுக்கப்படும் வர்க்க யுத்தத்திற்கு விடையிறுப்புக் காட்ட முடியும். ஏர்லைன்ஸ் உட்பட ஐரோப்பிய பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பெரிய தொழில்துறைகள் நிதியியல் பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டு சர்வதேச பொது உடைமையின்கீழ் கொண்டுவரப்பட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக்காக சமூக சேவைகளாக நடத்தப்பட வேண்டும்.

வேலைநிறுத்தம் செய்துவரும் ஏர் பிரான்ஸ் விமானிகள் WSWS உடன் பேசுகையில், அவர்கள் குறைந்த-கட்டண விமானசேவைகளிலும் பறக்க விரும்புவதாகவும், அவ்விதத்தில் அவர்கள் தொழிலதிபர்களுக்காக மட்டும் பறக்காமல் மாறாக குடும்பங்களை பார்க்க பயணிக்கும் உழைக்கும் மக்களுக்கு, அல்லது சுற்றுலாவுக்காக செல்லும் இளைஞர்களுக்காகவும் பறக்க விரும்புவதாக தெரிவித்தார்கள். ஆனால் இந்த நிகழ்முறையில் சம்பள வெட்டுக்களை மட்டும் ஏற்க விமானிகள் மறுப்பதாக தெரிவித்தனர்.

கண்ணியமான-சம்பள வேலைகள், வணிக தன்னலக்குழுக்களுக்காக விமானம் ஓட்டும் விமானிகளுக்கு மட்டும் காப்பாற்றி வைக்க முடியாது. எவ்வாறிருந்த போதினும், உயர்ந்த பயணக் கட்டணத்திற்காக செலவு செய்ய தகுதிபடைத்த ஒரு மேற்தட்டுக்கான விமானங்களுக்கும், குறைந்த-கட்டண பயணத்தை மட்டுமே ஏற்க இயலக்கூடிய பெருந்திரளான மக்களுக்கும் இடையே இருக்கும் விமானச்சேவை இடைவெளியை ஏற்றுக்கொள்ளும் ஒரு கடினமான தர்க்கம் அங்கே இருக்கிறது என்பதையே ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தம் எடுத்துக்காட்டுகிறது.

விமான பயணம் அனைவராலும் செலுத்தக்கூடிய கட்டணத்தில் கிடைக்க வேண்டும், பாரியளவில் அரசாங்க நிதி மற்றும் முதலீட்டையும் பாய்ச்சுவதன் மூலம் விமானிகளும் மற்றும் இதர விமானச்சேவை தொழிலாளர்களும் கண்ணியமான ஊதியங்களைப் பெறவேண்டும்.

இதற்கான பணமில்லை என்ற முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களின் அபத்தமான வாதங்களை தொழிலாளர்கள் இழிவோடு நிராகரிக்க வேண்டும். வோல் ஸ்ட்ரீட் குற்றத்தனம், 2008இல் உலக பொருளாதாரத்தை பொறிவின் விளிம்பிற்கு கொண்டு வந்தபோது, ஏனைய அரசு தலைமைகள் செய்ததைப் போலவே, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் அந்த பிரதான வங்கிகளுக்கு பணத்தை வாரிவழங்க ஒரேயிரவில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் கிடைத்ததே. ஐரோப்பிய மத்திய வங்கி, ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு மத்தியில் வங்கி அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை காலத்திற்கு காலம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் ஒட்டுமொத்த நிறுவனங்களில் அல்லது கிரீஸைப் போலவே முழு நாடுகளிலும் கூட தொழிலாளர்கள் மீது 30 சதவீத சம்பள வெட்டுக்களை திணித்து வருகிறது.

அந்த நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளின் அடிப்படையில் பொருளாதார மற்றும் தொழில்துறை அடித்தளத்தை உருவாக்க, உற்பத்தி பயன்பாட்டிற்கு திருப்பிவிடப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை எட்டுவதற்கு, தொழிலாள வர்க்கம் பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவையின் அடித்தளத்தில் மறுசீரமைப்பு செய்ய அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நோக்கத்துடன் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.