World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Mass protests continue in Hong Kong

ஹாங்காங்கில் பாரிய போராட்டங்கள் தொடர்கின்றன

By Peter Symonds
1 October 2014

Back to screen version

இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இருக்குமென்ற எதிர்ப்பார்ப்பில் ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் மத்திய ஹாங்காங்கின் வீதிகளில் தங்கியிருந்தனர்—சீனாவின் தேசிய தினத்திற்காக, ஹாங்காங் மற்றும் பிரதான சீன நிலப்பகுதி இரண்டிலுமே இன்று ஒரு விடுமுறை நாளாகும். அரசு தலைமை செயலர் லீயுங் சுன்-யிங்கினது (Leung Chun-ying) இராஜினாமா மற்றும் 2017இல் அவரது பதவிக்கு வெளிப்படையான தேர்தல்கள் நடத்துவது ஆகிய முறையீடுகளுடன் சமீபத்திய நாட்களின் போது, அந்த போராட்டங்களுக்குள் ஏற்கனவே பத்து ஆயிரக் கணக்கானவர்கள் இழுக்கப்பட்டுள்ளனர்.

சீன தேசிய மக்கள் காங்கிரஸால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பே போராட்டங்களுக்கான உடனடி தூண்டுதலாக இருந்தது. அனைவருக்கும் வாக்குரிமை எனும் புதிய முறையின்கீழ், 2017 தேர்தலில் பெய்ஜிங்-ஆதரவு நியமன குழுவால் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என சீன தேசிய மக்கள் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த முடிவு, 2017இல் தலைமை செயலர் முற்றிலுமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற வாக்குறுதியை மீறுவதாக பரவலாக கருதப்பட்டது. 1997இல் முன்னாள் பிரிட்டிஷ் காலனியிடமிருந்து சீனா ஹாங்காங்கை ஏற்றுக் கொண்ட போது, அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய இந்த தலைமை செயலர் பெய்ஜிங்கிற்கு விசுவாசமானவர்களின் மேலாதிக்கம் கொண்ட 1,200 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

நாடுதழுவிய-ஜனநாயகவாதிகள் (pan-Democrats) என்று அறியப்படும் பரந்த குழுவின் சட்டமற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் அந்த திட்டத்தை விமர்சித்ததுடன், ஹாங்காங்கின் சட்டமன்ற கவுன்சிலில் அதை எதிர்த்து வீட்டோ அதிகாரத்தைப் (தடுக்கும் அதிகாரம்) பயன்படுத்த அச்சுறுத்தினர். கடந்த ஆண்டு கல்வியாளர்கள், தேவாலய தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள், பலரால் ஒன்றுகூடி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பான மத்திய ஆக்கிரமிப்பு (Occupy Central), ஓர் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது. பெய்ஜிங் அதன் முடிவைத் திரும்ப பெறுவதற்கு அதை நிர்பந்திக்க செய்ய அந்த இயக்கம் இன்று தொடங்க இருந்தது. இந்த கட்சிகளும், குழுக்களும் ஹாங்காங்கின் மேற்தட்டின் அடுக்குகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை அவர்களின் நலன்களுக்கு பெய்ஜிங்கின் கட்டுப்பாடு குழுபறிக்குமென கவலைக் கொண்டுள்ளதுடன், முதலாளித்து ஆட்சியையே நிலைகுலைக்கக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் குறித்து பெரிதும் அதிகமாக பயந்து போயுள்ளன.

நாடுதழுவிய-ஜனநாயகவாதிகள் மற்றும் மத்திய ஆக்கிரமிப்பு அமைப்பின் கவனமான அணுகுமுறை, அதாவது பெய்ஜிங்குடன் ஒரு சமரசத்திற்கு போவதற்கு காத்திருப்பதுடன், கடந்த வாரம் ஹாங்காங் மாணவர்களின் கூட்டமைப்பு மற்றும் இதர மாணவர் அமைப்புகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்த போது உடனடியாக அவற்றை முன்கூட்டியே கைப்பற்றி கொண்டன. வெள்ளியன்று அரசு தலைமையகத்திற்கு வெளியே மாணவர்கள் மற்றும் பொலிஸிற்கு இடையிலான மோதல்கள் வாரயிறுதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது. ஹாங்காங் நிர்வாகம் கலக-தடுப்பு பொலிஸைப் பயன்படுத்தி போராட்டங்களை உடைக்க முயன்று, தோல்வியடைந்தது.

திங்களன்று போராட்ட தளங்களில் இருந்து கலக-தடுப்பு பொலிஸ் திரும்ப பெறப்பட்ட பின்னர் ஒரு பதட்டமான மோதல் தொடர்கிறது. தலைமை செயலர் லியுங் இராஜினாமா செய்ய மறுத்துள்ளார். அவர் பெய்ஜிங் அதன் தேர்தல் திட்டத்திலிருந்து பின்வாங்காதென அறிவித்ததுடன், மத்திய ஆக்கிரமிப்பு அமைப்பின் தலைவர்களுக்கு போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தினார். அந்த இயக்கம் கட்டுப்பாட்டை மீறி செல்லுமானால், அவர்கள் அதை நிறுத்த அழைப்புவிடுப்பதாக அவ்வியக்கத்தின் ஸ்தாபகர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்தார்கள்.

எவ்வாறிருந்தபோதினும், மத்திய ஆக்கிரமிப்பு இயக்கம் கடந்த சனியன்று தான் போராட்டங்களுக்குள் களமிறங்கியது. அதன் தலைவர்கள், பல்வேறு நாடுதழுவிய-ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து, பல்வேறு கூறுகளைக் கொண்ட அந்த கலவையான இயக்கத்தைத் தெளிவாக அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைந்து வருவது மட்டுமின்றி, மாறாக குறிப்பாக போராட்டக்காரர்களில் இளைஞர் அடுக்குகள் மீது அவர்களின் செல்வாக்கை பெற முனைந்து வருகிறார்கள், இதுவோ நிச்சயத்தன்மையிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. போராட்டங்களின் பரவலான மற்றும் குழப்பமான அரசியல் குணாம்சமானது, “ஜனநாயகம்" என்ற அவர்களின் வெற்று முழக்கங்கள் மற்றும் "ஹாங்காங் வாழ்க" "எங்களுக்கு ஒரு நிஜமான வாக்குரிமை வேண்டும்" என்ற கோஷங்களுடன் சேர்ந்து, அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட முறையீடுகளிலேயே பிரதிபலிக்கிறது.

இந்த கட்டத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் தலையீடு என்பதும் மட்டுப்பட்டதாகவே தெரிகிறது. நாடுதழுவிய-ஜனநாயகவாதிகளுடன் அணிசேர்ந்திருக்கும் ஹாங்காங் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பு பெரிதும் புறக்கணிக்கப்பட்டது. South China Morning Postஇன் செய்தியின்படி, சில ஆசிரியர்களும் மற்றும் சமூக தொழிலாளர்களும் வேலையை நிறுத்தி இருந்தார்கள். திங்களன்று, கோகோ-கோலா வினியோக நிறுவனத்தின் சுமார் 200 தொழிலாளர்கள், வெளிநடப்பு செய்தார்கள்.

எவ்வாறிருந்தபோதினும், அந்த எதிர்ப்பு ஹாங்காங்கில் ஆழமடைந்துவரும் சமூக பிளவைப் பிரதிபலிக்கும் வகையில் பரந்த ஜனநாயக மற்றும் சமூக கவலைகளால் எரியூட்டப்பட்டு வருகிறது. நேற்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது: “ஹாங்காங் சமூகத்தின் மிகவும் அதிருப்திகரமான மற்றும் சாத்தியமானளவுக்கு கொந்தளிப்பான பிரிவு மாணவர்களோ, நடத்தர வயது முன்னாள் அனுபவஸ்தர்களோ அல்லது பல தசாப்தங்களாக ஜனநாயக இயக்கத்தைக் கட்டிக்காத்த வயதான செயல்வீரர்களோ கிடையாது. அதற்கு மாறாக, உள்ளூர் உற்பத்தித்துறை வாடிப்போயிருக்கும் நிலையில் மற்றும் வங்கிகளும் ஏனைய சேவை தொழில்துறையும் உள்ளூர் கல்லூரி பட்டதாரிகளை விடுத்து பிரதான சீன நிலப்பகுதியிலிருந்து நியமனங்களைச் செய்திருக்கும் நிலையில், நல்ல-ஊதிய வேலைகளைக் காண போராடியுள்ள 20 வயது மற்றும் 30களின் தொடக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தே பாரிய ஜனநாயகத்திற்கானபல சமயங்களில் பெரும் பொருளாதார ஜனரஞ்சகவாதத்திற்கான—மிக கடுமையான அழைப்புகள் வந்துள்ளதை கடந்த ஆண்டின் கருத்துகணிப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன," என்றது.

ஹாங்காங் பகுப்பாய்வாளர் மைக்கேல் டிகோல்யெர் நியூ யோர்க் டைம்ஸிற்குக் கூறுகையில், இந்த அடுக்குகள் மத்திய ஆக்கிரமிப்பு இயக்கத்தின் மீது அல்லது நாடுதழுவிய-ஜனநாயகவாதிகளின் மீது கவனம் செலுத்துவதை விட மாணவர் தலைவர்களின் மீதே கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். “அங்கே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள் மற்றும் அன்னியப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் மாணவர்கள் கிடையாது, அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள், அவர்கள் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள்," என்றார்.

ஆழமடைந்துவரும் பொருளாதார மந்தநிலைமை மற்றும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு இடையே, ஹாங்காங்கின் போராட்டங்கள் கட்டுப்பாட்டை இழந்து பிரதான சீன நிலப்பகுதியில் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுமோ என பெய்ஜிங் ஆழமாக கவலை கொண்டுள்ளது. பெய்ஜிங் அந்த போராட்டங்களைக் குறித்த செய்திகளை சீன ஊடகங்களிலும், இணையத்திலும் பலமாக தணிக்கை செய்திருப்பதோடு, ஹாங்காங்கில் எதிர்ப்பை ஒடுக்க படைகளின் மீதும் தங்கியிருக்கக்கூடும்.

இன்று வரையில், சீன அதிகாரிகள் நிலைமையை அரசே கையாள ஹாங்காங் நிர்வாகத்திடம் விட்டுவிட்டு, போராட்டங்கள் சிதைந்துவிடும் என்ற நம்பிக்கையில், மிகவும் எச்சரிக்கையான மனோபாவத்தை ஏற்று உள்ளனர். நேற்று அரசு பத்திரிகை Global Timesஇல் வெளியான ஒரு தலையங்கம் அந்த ஆர்ப்பாட்டங்களை "வெறும் கூச்சல்" என்று புறக்கணித்ததுடன், “மத்திய அரசாங்கம் அதன் மனதை மாற்றிக் கொள்ளாதென" ஹாங்காங் மக்களுக்குத் தெரிய வந்ததும் அந்த "அலை எதிர்ப்பாளிகளுக்கு எதிராக திரும்புமென" கணித்திருந்தது.

ஒரு மிகவும் கடுமையான தொனி திங்களன்று அதிகாரப்பூர்வ People’s Dailyஆல் ஒலிக்கப்பட்டது. ஹாங்காங்கில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்டு வர்ணமிடப்பட்ட புரட்சியின் பேயுருவை அதிகரிக்கும் வகையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் "சீன-விரோத சக்திகளிடமிருந்து" ஆதரவைப் பெற முயன்ற ஜனநாயக-சார்பு தலைவர்களை அது கண்டித்தது. இருந்தபோதினும், அந்த போராட்டம் இயக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து இறக்க பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிதியுதவி வழங்கப்பட்ட பதவிக்கவிழ்ப்பின் தனித்தன்மைகளைப் போன்ற எதையும் தாங்கி இருக்கவில்லை. எது என்னவாக இருந்தாலும், அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச அமைப்புகளால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டு, கியேவில் யானுகோவிச்சுக்கு விரோதமாக மிக-கவனமாக அரங்கேற்றப்பட்ட போராட்டங்கள், ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

தற்போதைக்கு, ஹாங்காங்கின் சம்பவங்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விடையிறுப்பு, கியேவ் ஆட்சிக்கவிழ்ப்புடன் சம்பந்தப்பட்ட மனதை மரத்துபோகச் செய்யும் ரஷ்ய-விரோத பிரச்சார பிரளயத்துடன் ஒப்பிடுகையில், சந்தேகத்திற்கிடமின்றி மிக குறைவாகவே இருக்கிறது. திங்களன்று வெளியிட்ட கருத்துக்களில், வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர்களுக்கான செயலர் ஜோஸ் எர்னெஸ்ட் அறிவிக்கையில், அமெரிக்கா "ஹாங்காங்கின் நிலைமைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக" அறிவித்ததுடன், “நிதானமாக இருக்குமாறு" உள்ளூர் அதிகாரிகளுக்கு முறையிட்டார். பிரிட்டிஷ் துணை பிரதம மந்திரி நிக் க்லெக் அந்த நிலைமை மீதான அவரது "பயத்தை மற்றும் எச்சரிக்கையை" வெளிப்படுத்த சீன தூதருடன் ஒரு சந்திப்புக்கு அழைப்புவிடுத்தார்.

உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைப்பதை மற்றும் கடுமையான சிக்கன முறைமைகளைத் திணிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்கா இப்போதைக்கு ஹாங்காங்கில் உள்ளதை உள்ளபடியே வைத்திருக்க அதிக கவலைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஹாங்காங்கில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போலிக்கவசத்தை ஏற்று எர்னெஸ்ட் கூறுகையில், “சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச சுயாட்சியைக் கொண்டதும் மற்றும் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு வெளிப்படையான சமூகம் ஹாங்காங்கின் ஸ்திரப்பாட்டுக்கும், செல்வ வளமைக்கும் அத்தியாவசியமென்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

அமெரிக்காவும் மற்றும் பிரிட்டனும் அவற்றின் சொந்த ஆதாயத்திற்காக அந்த போராட்டங்களை சுரண்ட முயல்வதற்கு, ஹாங்காங் அரசியல் மேற்தட்டு மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் உட்கூறுகளுடன் அவற்றின் நெருங்கிய உறவுகளைப் பயன்படுத்தும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை. அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம் அப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்த ஓர் ஒருங்கிணைந்த இராஜாங்கரீதியிலான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

பிரதான சக்திகள் அந்த ஜனநாயக-ஆதரவு ஆர்ப்பாட்டங்களைச் சூழ்ச்சியுடன் கையாளக்கூடிய அபாயமானது, தற்போதைய குழப்பம் மற்றும் அரசியல் முன்னோக்கின்மையிலிருந்து எழுகிறது. சீன ஆட்சியின் பொலிஸ்-அரசு அணுகுமுறைகளுக்கு போராட்டக்காரர்கள் விரோதமாக இருப்பதைப் போலவே, அவர்கள் ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு தலையீட்டையும் கூட எதிர்க்க வேண்டும். அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளோ நிச்சயமாக ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்கள் அல்ல—உள்நாட்டிலும் கிடையாது, அல்லது உலகெங்கிலும் அவற்றின் ஆணவமான தலையீடுகள் மற்றும் யுத்தங்களிலும் அவ்வாறு கிடையாது. ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு நிஜமான போராட்டம் முற்றிலுமாக ஹாங்காங், சீனா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச சர்வதேசவாதத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் அபிவிருத்தி அடைவதுடன் பிணைந்துள்ளது.