World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German media and politicians promote rearmament

ஜேர்மன் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மீள்-ஆயுதமயமாக்கலை ஊக்குவிக்கிறார்கள்

By Christoph Dreier
29 September 2014

Back to screen version

பல மாதங்களாக ஜேர்மன் ஊடகங்களும் மற்றும் பிரதான அரசியல்வாதிகளும் ஜேர்மனியின் யுத்தத்திற்குப் பிந்தைய இராணுவக்கட்டுப்பாட்டு கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுத்து வருகின்றனர். கடந்த வாரம் இராணுவவாதத்திற்கான பிரச்சாரம் ஒரு புதிய மட்டத்தை எட்டியது. கடுமையான வரவு-செலவு திட்ட கொள்கை மற்றும் வெட்டுக்கள் நிறைந்த ஆண்டுகளின் போது, பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தில் எந்தவொரு பெரிய அதிகரிப்பும் தவிர்க்கப்பட்டிருந்தது. இப்போதோ இந்த முறையீடு ஊடக பிரச்சாரத்தின் மையத்திற்கு நகர்ந்துள்ளது.

ஊடக பிரச்சாரம் மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் இராணுவத்தை விரிவாக்கும் நிலை குறித்த ஒரு "எதிர்பாராத" புதிய செய்திகள் இல்லாமல் எந்தவொரு நாளும் கடந்து செல்வதில்லை.

திங்களன்று வந்த செய்திகளின்படி, கடற்படையின் 43 ஹெலிகாப்டர்களில் வெறும் மூன்று மட்டுமே செயல்பாட்டுக்கு உரியவையாக இருந்தன. ஈராக்கில் குர்திஷ் போராளிகளுக்கு பயிற்சியளிக்க சென்றுள்ள ஆறு ஜேர்மன் சிப்பாய்கள், அவர்களின் விமானத்தில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்கேரியாவில் தவிக்க விடப்பட்டதாக செவ்வாயன்று செய்திகளில் குறிப்பிடப்பட்டது. மற்றொரு விமானம், இது நெதர்லாந்திடமிருந்து வாங்கப்பட்டு, லைப்சிக்கில் பல நாட்களாக செயல்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த இந்த விமானத்தின் கோளாறினால், ஜேர்மன் ஆயுதங்கள் ஈராக்கை சென்றடைய முடியாமல் போன செய்தியும் தொலைக்காட்சியில் பரபரப்பு விடயமாக இருந்தது.

புதனன்று, பாதுகாப்பு கமிட்டியிடமிருந்து வந்த ஓர் இரகசிய அறிக்கை பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆய்வாளர்களால் எழுதப்பட்ட அந்த ஆவணம், “ஆயுத படைகளின் தயார்நிலையை" மதிப்பீடு செய்திருந்தது. அதன் முடிவுரையில், அவ்வறிக்கை ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) பாதுகாப்பு தகைமைகளுக்கு உத்தரவாதமளித்து முடித்திருந்தது. எவ்வாறிருந்த போதினும், ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இராணுவத்தை பழமையானது மற்றும் தகைமையற்றதென சித்தரிக்க சில குறிப்பிட்ட தளவாடங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் கடந்த வாரத்தின் மிஞ்சிய நாட்களில், பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அதிகரிக்க முறையிட்டு அனைத்து பிரதான பத்திரிகைகளிலும் அங்கே ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரம் இருந்தது.

வாய்வழி பிரச்சாரத்தை நடவடிக்கைகள் பின்தொடர வேண்டுமென வியாழனன்று Spiegel Online இன் நிக்கோலஸ் ப்ளோம் முறையிட்டார். அவர் எழுதுகிறார், “உலகில் ஜேர்மனின் பொறுப்புறுதி மற்றும் ஈடுபாடு மீது ஒரு பரந்த விவாதத்தைத் தொடங்கியது சரியானதே என்றபோதினும், அது மெதுமெதுவாக கேலிக்குரியதாக மாறி வருகிறது.” பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (CDU) இறுதியாக "மொத்த பாதுகாப்பு வரவு-செலவு திட்டம் குறித்து வாதிட" வேண்டுமென்கிறார்.

ஜேர்மன் சிப்பாய்கள் "மோசமானவகையில் ஆயுதம் தாங்கியுள்ளனர் என்பதுடன் அவர்களது ஆயுத அமைப்புகளும் காலத்திற்கு ஒவ்வாதவை ஆகும்" என்று Süddeutsche Zeitung இல் வெள்ளியன்று நிக்கோ பிரீட் ஆதங்கப்பட்டார். அங்கே "அரசியல் அபிலாஷைகளுக்கும் இராணுவ யதார்த்தத்திற்கும் இடையே பொருத்தமின்மை" இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மீள்-ஆயுதமயமாக்குவதை பொதுமக்கள் நிராகரிப்பதனால், ஜேர்மன் இராணுவத்திற்கு "அரசியல் மற்றும் சமூக இடைத்தரகு வேலை" அவசியப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

ஜேர்மனது ஆயுதங்கள் வழங்கும் நடவடிக்கையின் பாகமாக ஈராக்கிய குர்திஷ் தலைநகர் எர்பிலுக்குப் பயணித்துள்ள பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயன், போக்குவரத்து விமான கோளாறின் காரணமாக வெறுங்கையோடு திரும்பியதாக வியாழனன்று ஊடகங்கள் சற்றே மூடிமறைத்து ஏளனத்துடன் குறிப்பிட்டன. ஆபிரிக்காவிற்கு உதவிப்பொருட்கள் அனுப்புவது போன்ற மிகவும் முக்கிய நடவடிக்கைகளுக்கு கோளாறு விமானத்தைப் பயன்படுத்தினால், பிரச்சாரத்தின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்குமென பிரீட் குறிப்பிட்டார். அவர் எழுதுகிறார், “ஆம், இதுவொரு ஆத்திரமூட்டும் சிந்தனை தான், ஆனால் ஈராக்கிற்கான ஆயுதங்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பதிலாக, எபோலா பிராந்தியங்களுக்கு ஜேர்மன் நிவாரண பணியாளர்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து விமானம் நடுவில் பாதிக்கப்பட்டால் அது இன்னும் அதிகமாக கேடு விளைவிக்கும்.”

Stern இதழில், (இராணுவத்தில்) சேவை செய்துள்ள செய்தித்துறையில் இருக்கும் ஒருசிலரில் ஒருவராக" வர்ணிக்கப்பட்ட தில்மான் கேர்வின், "ஜேர்மன் இராணுவம் குறித்து ஜேர்மானியர்கள் அவர்களின் அக்கறையைக் குறைத்துக் கொள்ள முடியாது" என்று சீறியதுடன், “'இஸ்லாமிக் அரசு', தலையைத் துண்டிக்கும் மற்றவர்கள், கற்பழிப்பவர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சந்தையில் தற்கொலை குண்டுதாரிகள் இருக்கும் இந்த உலகில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களைத் தேட வேண்டுமென்பதைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை," என்று முழங்கினார். இரண்டு முறை உலகம் யுத்தத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட பின்னர், எதிர்காலத்திலும் மற்றும் எல்லா காலத்திலும் மரணிப்பதை மற்றவர்களிடம் -முன்னுரிமையாக அமெரிக்கர்களிடம்விட்டுவிட வேண்டுமென, அவர்கள் தசாப்தங்களாக தங்களைத்தாங்களே சமாதானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்”.

இராணுவக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திய இனப்படுகொலையை", இறுதியாக ஜேர்மானியர்கள் "ஓர் உள்ளார்ந்த முக்கிய அம்சமாக" மதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேர்வின் முழங்கினார். “ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஓர் இராணுவத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அதன் தளவாடங்களோ கேலிக்கிடமாக இருக்கின்றன. இது பல ஆண்டுகளாக தெரிந்தது தான், கொள்முதல் செய்வதில் நிறைய பணம் மற்றும் நிறைய நிபுணத்துவங்களுடன் அதை மாற்றி இருக்கலாம்,” என்றார்.

Stern இன் முந்தைய பதிப்புகளில் கேர்வின், ஒட்டுண்ணித்தனத்துடன் முறைகேடாக சமூகநல உதவித்தொகை பெறுவோரையும் மற்றும் ஜேர்மன் அரசியலில் முன்னாள் நாஜிக்கள் வகித்த பாத்திரத்தை அம்பலப்படுத்த 1960களில் இருந்த பிரச்சாரத்தையும் சாடியிருந்தார்.

அரசியல்வாதிகளின் ஒரு கூட்டமும், ஜேர்மன் இராணுவத்தை நலிந்துபோயிருப்பதாக மற்றும் அவசரமாக நவீனப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக காட்டும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பசுமை கட்சியின் சேர்மேன் செம் ஒஸ்டிமியர் (Cem Özdemir) Neue Zeitung Osnabrückக்கு தெரிவிக்கையில், ஜேர்மனி, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக, அதுவே நகைப்புக்கிடமான கையிருப்புகளைக் கொண்டிருக்கிறது என்றார். ஜேர்மன் இராணுவத்தின் சிப்பாய்கள் மிகவும் பொறுப்பானவர்கள், ஆனால் அவர்களது உபகரணங்கள் —அதாவது ஹெலிகாப்டர்கள், யூரோபோர்விமானங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள்— ஒருவேளை குப்பைக்கிடங்கிலிருந்து வந்திருக்கலாம். “இது வெட்கக்கேடானது, அன்றாடம் இது பெருகிக்கொண்டு வருகிறது,” என்றார்.

அவர்கள் எதை நோக்கி செயல்பட திட்டமிடுகிறார்கள் என்பதை மந்திரி இப்போது தெளிவுபடுத்த வேண்டும்", இது SPD நாடாளுமன்ற குழுவின் பாதுகாப்புத்துறை செய்திதொடர்பாளர் ரைனர் ஆர்னோல்ட் கோரியது. பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டத்தைக் குறித்து CDU வெளியுறவு கொள்கை வல்லுனர் ரோடிரிக் கீஸ்ஸவெட்டர் அறிவிக்கையில், “அடுத்த சில காலங்களுக்கு வரவு-செலவு திட்ட ஆதாரங்களை உயர்த்துவதற்கு அங்கே வழியே இல்லை," என்றார்.

இடது கட்சியின் பாதுகாப்புத்துறை நிபுணர் அலெக்சாண்டர் நொய், இப்போது நிலவும் பிரச்சினைகளுக்கு வொன் டெர் லெயன் பொறுப்பேற்க வேண்டுமென அழைப்புவிடுத்தார். “எல்லா பாதுகாப்புத்துறை திட்டங்களும் விரிவாக ஆராயப்பட்டு, முந்தைய விளைவுகளிலிருந்து முடிவுகள் எடுக்கப்படுமென்ற அவரது அறிவிப்பில் உறுதியாக இருக்கிறாரா அல்லது அதெல்லாம் வெறும் ஊடகங்களுக்கான ஒரு நாடகமா என்பதை இப்போது நாம் பார்ப்போம்", நொய் Handelsblattக்குத் தெரிவித்தார். ஜேர்மனியின் 35 பில்லியன் யூரோ பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டுக்கு இடையே, ஜேர்மன் இராணுவம் பகுதியாக மட்டுமே செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) பாதுகாப்புத்துறை கமிஷனர் ஹெல்மூட் கோனிக்ஸ்ஹவ்ஸ் (FDP) கூறுகையில், ஜேர்மன் இராணுவம் அதன் சமீபத்திய வெளிநாட்டு நடவடிக்கைகளில் இருந்த சவால்களைப் போன்று, புதிய சவால்களுக்கு மிகவும் மோசமாகவே தயாராகி உள்ளது என்றார். CSU நிர்வாகி ஃபுளோரியான் ஹான் "இராணுவ தகைமையை" அச்சுறுத்தும் ஒரு "நிர்வாக கோளாறு" என்று பேசினார்.

உண்மையில், ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் வரவு-செலவு திட்டம் உலகின் ஏழாவது மிகப்பெரிய திட்டமாகும். மூன்றாண்டுகளுக்கு முன்னர் கட்டாய இராணுவ சேவை விலக்கப்பட்டதால், இந்த ஒதுக்கீட்டின் பெரும் பகுதிகள் பிரதான பாதுகாப்பு திட்டங்களுக்கு வந்தன. கடந்த வியாழனன்று, ப்ரிகேடியர் ஜெனரல் ஜோர்க் லீபேர்ட் ஒரு தேவாலய நிகழ்வில் கூறுகையில், ஜேர்மன் இராணுவம் 2025க்குள் 16 ஆயுதமேந்தும் டிரோன்களை வாங்க திட்டமிடுவதாக அறிவித்தார்.

இராணுவத்தின் பழைய டிரான்ஸால் போக்குவரத்து விமானங்களின் தற்காலிக பிரச்சினைகள், தற்போதைய பேரார்வத்துடன் செய்யப்படும் நவீனப்படுத்தும் திட்டங்களால் ஏற்படுவதாகும். நவீன ஏர்பஸ் A400M வாங்குவது ஒத்தி வைக்கப்பட்டது, ஏனென்றால் இராணுவம் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு புதிய கோரிக்கை ஆணைகளைச் சமர்பித்துள்ளது.

ஊடக மற்றும் அரசியல் வட்டாரங்களின் பக்கத்திலிருந்து இராணுவ வரவு-செலவு திட்டத்தை உயர்த்துவதற்கு செய்யப்படும் ஒருங்கிணைந்த பிரச்சாரமானது, இரண்டு உலக யுத்தங்களுக்குப் பின்னர், ஜேர்மன் பொருளாதார நலன்களுக்காக சாவதற்கோ அல்லது சாவடிப்பதற்கோ தயாராயில்லாத ஜேர்மன் மக்களின் பக்கத்தில் இருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பின் முன்னால், மீள்-ஆயுதமயமாக்கும் ஒரு பாரிய திட்டத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் தான் இதழாளர்களும் அரசியல்வாதிகளும் அவர்களின் பிரச்சாரத்தில் இந்தளவிற்கு தீவிரமாக இருக்கிறார்கள்.