World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US Army drafts blueprint for World War III

அமெரிக்க இராணுவம் மூன்றாம் உலக போருக்கான செயல்திட்டத்தை வரைகிறது

Bill Van Auken and David North
14 October 2014

Back to screen version

மத்திய கிழக்கில் சமீபத்திய அமெரிக்க யுத்தத்தை வழிநடத்தும் மூலோபாயம் குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளும் அமெரிக்க ஊடகங்களும் எரிச்சலூட்டும் ஒரு விவாதத்தில் பெரிதும் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்க இராணுவமோ இராணுவ செயல்முறை கருத்துரு (Army Operating Concept - AOC) என்று தலைப்பிட்ட ஒரு புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது மிக அச்சுறுத்தலான உள்நோக்கங்களைக் கொண்ட "எதிர்கால ஆயுத மோதலுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை" வழங்குகிறது. தொடர்ச்சியான பல ஆவணங்களில் சமீபத்திய ஒன்றான இதில், 1992ல் தொடங்கப்பட்ட முன்கூட்டிய யுத்த மூலோபாயத்தின் அடித்தளங்களை பென்டகன் விவரித்துள்ளதுஅதாவது உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைத் தடுக்க முக்கிய புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார போட்டியாளர்கள் போதிய பலத்தைப் பெறுவதற்கு முன்னரே, அவற்றை அழிக்க யுத்தத்தை ஒரு வழிவகையாக பயன்படுத்துவதாகும்.

இந்த ஆவணம் அமெரிக்க இராணுவ கூட்டமைப்பின் (AUSA) இந்த வார மாநாட்டில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வு, மூத்த உயரதிகாரிகள் மற்றும் இராணுவத்துறை உயரதிகாரிகளது தொடர்ச்சியான உரைகள் மற்றும் கூட்டு விவாதங்களுக்காக அவர்களை ஒன்றிணைப்பதுடன், ஆயுத உற்பத்தியாளர்கள் அவர்களின் புதிய ஆயுத உபகரணங்களைக் காட்சிக்கு வைக்கவும் மற்றும் பென்டகனிடமிருந்து ஆதாயமான ஒப்பந்தங்களைப் பெறவும் ஒரு பிரமாண்ட வர்த்தக கண்காட்சியும் அதில் நடைபெறும்.

இந்த ஆண்டின் பெரும்பாலான நிகழ்வுகளில், ஏறக்குறைய படை விலக்கலால் இராணுவ துருப்புகளின் பலத்தை வெட்டுவதன் தாக்கம் குறித்த பயங்கர எச்சரிக்கைகளே மேலாதிக்கம் செலுத்தின. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரேமாண்ட் ஒடெர்னோ, திங்களன்று ஏயுஎஸ்ஏ மாநாட்டு செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில், "நமது முழு பலத்தைக் குறித்து கவலைப்படத் தொடங்கியிருப்பதாக" தெரிவித்ததுடன், 2012ன் மாநாட்டில் இராணுவத்தால் 490,000 கடமையுணர்வு கொண்ட சிப்பாய்களுடன் நிர்வகிக்க முடியுமென கூறியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்த 490,000த்திற்கு கூடுதலாக, பென்டகனால் மொத்த இராணுவம் (Total Army) என்று குறிப்பிடப்படும் ஓர் ஒருங்கிணைந்த படைக்காக, அங்கே 350,000 தேசிய பாதுகாப்பு சிப்பாய்களும் மற்றும் 205,000 துணைப்படைகளுமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் உள்ளன. இந்தளவுக்கு ஒரு திரண்ட ஆயுதமேந்திய படையும் கூட ஜெனரல் ஒடெர்னோவுக்கு ஏன் போதுமானதாக இல்லை என்பதற்குரிய பதிலை இந்த புதிய இராணுவ செயல்முறை கருத்துரு (AOC) ஆவணத்தில் காணமுடியும். அது அமெரிக்காவையுமே கூட உள்ளடக்கி, ஒட்டுமொத்த பூமியையும் சுற்றிவளைக்கும் மொத்த யுத்த மூலோபாயத்தை வரைந்து கொடுக்கும் ஒரு பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான ஆவணமாக உள்ளது.

"தரைப்படையை இறக்குவது" மீது நடந்துவரும் விவாதத்தைப் பொறுத்த வரையில், அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளிடையே அங்கே எந்த கேள்வியும் இல்லை என்பதை அந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது: அதாவது அங்கே தரைப்படை இருக்கும், அதுவும் தாராளமாக இருக்கும்.

ஏஓசி ஆவணம், தொடங்கிய உடனேயே, அமெரிக்க இராணுவம் ஈடுபடும் வரவிருக்கின்ற யுத்தங்களுக்கு அதன் "தொலைநோக்கு பார்வையை" அறிவிக்கிறது. “தெரியாதவை தெரியாமலேயே இருக்கிறது" என்ற முன்னாள் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்டின் ஆத்திரமூட்டலை நினைவுபடுத்தும் மொழியில், அந்த ஆவணம் வலியுறுத்துவதாவதுது: “இராணுவம் செயல்பட உள்ள சூழல் தெரியாது. எதிரி யாரென்பது தெரியாது, எந்த இடமென்பது தெரியாது, அதில் ஈடுபடவுள்ள கூட்டணிகள் தெரியாது."

அமெரிக்க இராணுவம் அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒவ்வொரு நாட்டையும் ஒரு சாத்தியமான எதிரியாக பார்க்கிறது என்பது மட்டுந்தான், அந்த பைத்தியக்காரத்தனமான வசனத்திற்கு ஒரே தர்க்க விளக்கமாக இருக்கிறது. சூழ்நிலைகள், எதிரிகள், இடங்கள், எதிர்கால மோதல்களில் ஈடுபடும் கூட்டணிகள் எதுவும் தெரியாது என்ற அனுமானத்திலிருந்து தொடங்கி, அமெரிக்க இராணுவம் அனைத்து அரசுகள் மற்றும் மக்களுக்கு எதிராக ஒரு மூலோபாயத்தைக் கோருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த பூமியின் மீதும், அதன் சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மீதும் மேலாதிக்கத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மற்றும் அதன் வழியில் குறுக்கே வரும் எந்த எதிரியையும் இராணுவரீதியில் நிர்மூலமாக்க தயாராக உள்ளது என்ற அறிவிக்கப்படாத, ஆனால் அடியிலுள்ள கட்டாயத்திலிருந்து இந்த மூலோபாயம் பெறப்படுகிறது.

ஆயுதமேந்திய மோதலின் குணாம்சம்" பிரதானமாக, "அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போட்டியால் உருவாகும் புவிசார்-அரசியல் பரப்பெல்லை மாற்றங்களால்" மேலாதிக்கம் பெறுமென அந்த ஆவணம் மழுப்பலாக அறிவிக்கிறது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளைப் பொறுத்த வரையில், ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான அதுபோன்ற யுத்தங்கள் கட்டாயம் நேரிடக் கூடியவையாக இருக்கின்றன.

அந்த ஆவணத்தைப் பொறுத்த வரையில், இராணுவத்தின் மூலோபாய நோக்கமே வலிமையில் விஞ்சி" இருப்பதாகும். “வலிமையில் விஞ்சி இருப்பதென்பது "ஒரு விரோதியை திறமையாக பிரதிபலிக்க முடியாமல் செய்யும் விதத்தில் தகைமைகளைப் பயன்படுத்துவது அல்லது உத்திகளைப் பயன்படுத்துவதாகும்" என அது வரையறுக்கிறது.

இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அணு ஆயுதமேந்திய மற்றொரு சக்தியுடனான ஒரு மோதலில், அவர்கள் மக்களை நிர்மூலமாக்கும் ஒரு முதல்-தாக்குதல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதையே அவை உள்ளடக்கி உள்ளன. பூகோளத்தின் எந்தவொரு பகுதியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை மற்றும் மேலாதிக்கம் செலுத்துவதைப் பொறுத்த வரையில், மக்கள் எதிர்ப்பை நசுக்க மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை நடைமுறைப்படுத்த பாரிய தரைப்படை நடவடிக்கைகளுக்கு அவை அழைப்புவிடுக்கின்றன.

மிக முக்கியமாக, எங்கும் பரவியுள்ள அல் கொய்தா அச்சுறுத்தல் என்று கூறப்பட்டதை எதிர்கொள்வதற்காக அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் மேலோங்கிய திட்டமாக இருந்த, “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்" என்றழைக்கப்பட்டதன் ஒரு தசாப்தத்திற்கு அதிகமான காலத்திற்குப் பின்னர், இராணுவத்தின் அந்த முன்னுரிமை பட்டியலில் நாடுகடந்த பயங்கரவாத அமைப்புகள்" குறைந்த இடத்தையே பெற்றுள்ளன.

முதலும் முக்கியமுமாக "போட்டி சக்திகளே" உள்ளன. இந்த வகைப்பாடு சீனாவை, அதைத் தொடர்ந்து ரஷ்யாவை உள்ளடக்குகிறது. சீனா விடயத்தில், அமெரிக்க இராணுவம் தடுப்பதற்கு உறுதிகொண்டுள்ள, “சீனாவின் புற எல்லைகளை ஸ்திரப்படுத்துவதை” இலக்காகக் கொண்டதாகக் கூறப்படும் பெய்ஜிங்கின் "படை நவீனமாக்கும் முயற்சிகள்" குறித்து இந்த ஆவணம் தீவிர கவலைகளை வெளிப்படுத்துகிறது. சீனாவின் இராணுவ முயற்சிகள் "இராணுவ படைகளை முன்னோக்கி நிலைநிறுத்த அல்லது பிராந்தியளவில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை," மற்றும் "இராணுவ படைகள் நிலத்திலிருந்து வான்வழி, கடல்வழி, அண்டவெளி மற்றும் இணையவழி செயற்களங்கள் வரையில் தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தில் சிறப்புக் கவனம் காட்டுமாறு” அது குறிப்பிடுகிறது.

சமீபத்திய உக்ரேனிய சம்பவங்களின் அடித்தளத்தில், ரஷ்யா "அதன் எல்லையை விரிவாக்க மற்றும் யூரேஷிய வாழ்மக்கள் மீது அதன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக" இருந்துவருவதாக அந்த ஆவணம் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டிய போதிலும், துல்லியமாக அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சொந்த மூலோபாய இலக்காகும். அமெரிக்க தரைப்படைகளை பலமாக நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே, ரஷ்ய "வீரசாகசத்தை" முறியடிக்க முடியுமென வாதிடும் அது, “தேசிய பலத்தைக்காட்டி, அரசியல் மோதல்களில் செல்வாக்கை பெறவும்" வாதிடுகிறது.

அங்கே இருந்து தான், “பிராந்திய சக்திகளை" நோக்கி அந்த ஆவணம் திரும்புகிறது. முதல் எடுத்துக்காட்டாக வருவது ஈரான். “இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொள்வதாக" ஈரானைக் குற்றஞ்சாட்டும் அது, “ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஈரானிய நடவடிக்கை அமெரிக்க பிராந்திய இலட்சியங்களுக்குக் குழிபறிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதாக" வாதிடுகிறது -அதாவது மத்திய கிழக்கு மற்றும் அதன் எரிசக்தி வளங்கள் மீது சர்ச்சைக்கு இடமில்லாத மேலாதிக்கத்திற்காக அது வாதிடுகிறது. ஈரானின் நடவடிக்கைகள், "தேசிய அரசுகளின் களத்தில் நிற்கும் படைகளுக்கும், அதே போல், வலையமைப்பு கொண்ட கொரில்லா அல்லது கிளர்ச்சி அமைப்புகளுக்கும் எதிராக, இராணுவப் படைகள் செயலூக்கத்துடன் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தில் சிறப்புக் கவனம் காட்டுமாறு” அது முடிக்கிறது.

அந்த ஆவணம் அன்னியநாட்டு யுத்தங்களுக்குரிய எதிர்கால இராணுவ நடவடிக்கைகளின் "தொலைநோக்கு பார்வையோடு" மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக அது "உள்நாட்டில் நெருக்கடிகளைத் தணிக்கவும் மற்றும் விடையிறுக்கவும்" வேண்டிய அவசியத்தையும் உள்ளடக்கி உள்ளது. அவற்றை அது "கூட்டு படை மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பிரத்யேக அரங்கமாக" வர்ணிக்கிறது. அமெரிக்காவிற்குள் இராணுவத்தின் நடவடிக்கை "சிவில் அதிகாரிகளின் பாதுகாப்பு ஆதரவையும்" உள்ளடக்கி இருப்பதாக அது வலியுறுத்துகிறது.

ஏஓசி ஆவணம், ஓர் இராணுவ வெறியாட்டத்திற்கு பொருத்தமான சான்றாகும். இத்தகைய மூலோபாய கருத்துருக்களில் குறிப்பிடப்படுபவை, பெயரில் இல்லையென்றாலும் அமெரிக்காவிற்குள்ளேயே இராணுவ சர்வாதிகாரத்துடன் ஒருங்கிணைந்த அமைப்பாக, ஒரு மூன்றாம் உலக யுத்த சண்டைக்கான முன்னேறிய தயாரிப்புகளாக உள்ளன.

துருப்புகளின் பலம் குறித்த ஜெனரல் ஒடெர்னோவின் விமர்சனங்களை, பெண்டகன் வரவு-செலவு திட்ட கணக்கில் காங்கிரஸ் அனுமதியுடன் ஏதோ சிறிய சரிகட்டல்களைக் கொண்டு திருப்திப்படுத்திவிட முடியாது. இராணுவம் கருதிவரும் வகையான யுத்தமுறையானது, இராணுவத்திற்கு கட்டாய ஆள்சேர்க்கும் உலகளாவிய வழிவகைகள் மூலமாகஅதற்கான வரைவின் மீள்வரவுடன்ஒரு பாரிய இராணுவத்தை ஒன்றுதிரட்டாமல் நடத்த முடியாது.

அமெரிக்க ஸ்தாபகர்கள் மீண்டும் மீண்டும் ஒரு நிரந்தர இராணுவத்தின் மீது அதீத அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்கள். தற்போது இருக்கும் இராணுவமும் மற்றும் அதன் உலகளாவிய யுத்த திட்டமும், அவற்றின் அச்சுறுத்தும் காட்சிகள் இந்த கோரமான நவீனகாலத்தில் யதார்த்தமாக்கப்படுவதையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஒட்டுமொத்த யுத்தத்தின் இந்த கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பது, அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அரசுக்கு முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. அதனால் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து சமூக போராட்டங்களையும் இரக்கமின்றி ஒடுக்குவது அவசியமாகின்றது.

அதன் இறுதி தீர்மானமாக "உள்நாடு" என்றழைக்கப்படுவதற்குள் வாழ்வை இராணுவமயமாக்குவதற்கு, அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் மற்றும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் எந்தவித எதிர்ப்பும் இல்லை. வெளிநாட்டு கொள்கை மற்றும் உள்நாட்டு கொள்கை என்ற இரண்டு கொள்கை விவகாரங்களிலும், அரசியல்வாதிகள் தளபதிகளுக்கு அடிபணிவது வழக்கமாகி விட்டதுடன் சேர்ந்து, மக்களின் கட்டுப்பாட்டில் இராணுவம் என்பது ஜீவனற்றதாகி விட்டது.