World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US, EU hail election staged by ultra-right regime in Ukraine

உக்ரேனிய அதிதீவிர-வலது ஆட்சியால் நடத்தப்பட்ட தேர்தலை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்கின்றன

By Niles Williamson
28 October 2014

Back to screen version

ஞாயிறன்று நடத்தப்பட்ட உக்ரேனிய நாடாளுமன்ற தேர்தல்களை, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், திங்களன்று, ஜனநாயகத்தின் "வெற்றியாக" புகழ்ந்துரைத்தன. ரஷ்ய-ஆதரவு நகரங்கள் மற்றும் கிழக்கு உக்ரேனிய சிறுநகரங்களுக்கு எதிராக கியேவ் ஆட்சியால் நடத்தப்பட்டு வருகின்ற இரத்தந்தோய்ந்த தாக்குதலையும் மற்றும், அந்நாட்டின் பிறப் பகுதிகளில் அதன் பாசிச கூட்டாளிகளை மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறை சூழலையும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களின் செய்தி தொடர்பாளர்கள் புறக்கணித்தனர்.

வாக்குப்பதிவு அண்ணளவாக 52 சதவீதமென மதிப்பிடப்பட்டுள்ளது, இது கணிசமானளவிற்கு 2012இல் பதிவான 58 சதவீத வாக்குப்பதிவை விட குறைவு என்பதோடு, இந்த ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 60 சதவீதத்தினரை விடவும் கூட குறைவாகும்.

வலதுசாரி தேசியவாத UDAR கட்சியின் தலைவரும் கியேவின் தற்போதைய மேயருமான விடாலி க்ளிட்ஸ்ச்கோ தலைமையில் பெட்ரோ பொறோஷென்கோ அணி, 125 இடங்களுடன், நாடாளுமன்றத்தில் (ரடா - Rada) மிகப்பெரிய பிரதிநிதிகள் அணியாக இருக்கும். தற்போதைய பிரதம மந்திரி அர்செனெ யாட்சென்யுக்கின் மக்கள் முன்னணி 82 இடங்களுடன் இரண்டாவது மிகப்பெரிய அணியாக இருக்கும்.

உக்ரேனிய மத்திய தேர்தல் ஆணையம், தற்போது ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலோ அல்லது மார்ச்சில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவிலோ வாக்கெடுப்பை ஒழுங்கமைக்க முயலவில்லை. அதன் விளைவாக, ரடாவின் 450 இடங்களில் 27 இடங்கள் நிரப்பப்படாமல் விடப்படும்.

பில்லியனிய செல்வந்தரான தற்போதைய உக்ரேனிய ஜனாதிபதியின் பெயரில் பெட்ரோ பொறோஷென்கோ அணி, ஒரு கூட்டு அரசாங்கம் அமைப்பது குறித்து மக்கள் முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. அவ்விரு அணிகளும் ஓர் உடன்படிக்கையை எட்டினாலும் கூட, நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் ரடாவின் ஏனைய கட்சிகளில் ஒன்றினது ஆதரவைப் பெற வேண்டியிருக்கும்.

இந்த தேர்தல்கள், Right Sector மற்றும் ஸ்வோபோடா கட்சியின் பாசிச சக்திகளால் தலைமையேற்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து வெளியேற்றிய, ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எட்டு மாதங்களுக்குப் பின்னர் வந்துள்ளன. கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சந்தை-சார்பு "சீர்திருத்தங்களை" உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார திட்டத்துடன் இணைந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டு உடன்படிக்கையில், யானுகோவிச் கையெழுத்திட மறுத்து, மாறாக ரஷ்யாவுடன் அவரது நிலைநோக்கைத் தொடர விரும்பியதும், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசாங்க படைகள் மற்றும் நவ-நாஜிக்களுடன் சேர்ந்த போராளி குழுக்கள், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்க்கும் கிழக்கில் உள்ள ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் மீது நடத்திவரும் தாக்குதலுக்கு இடையே இந்த ஞாயிறன்று நாடாளுமன்ற வாக்குபதிவு நடந்திருந்தது. மாதக்கணக்கில் நீண்டிருக்கும் இந்த அரசாங்க தாக்குதலின் விளைவாக இன்றுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் மற்றும் சுமார் 3,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வன் ரோம்பே மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் இமானுவெல் பரோசோவும், திங்களன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், தேர்தல் முடிவை "உக்ரேன் மக்களின் வெற்றியாகவும், ஜனநாயகத்தின் வெற்றியாகவும்" புகழ்ந்தார்கள். ரோம்பே மற்றும் பரோசோ, “அத்தியாவசிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைத்" தீவிரப்படுத்துமாறு வரவிருக்கின்ற அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார்கள்.

உக்ரேனுக்கான அமெரிக்க தூதர் ஜெஃப்ரி ப்யாட் தேர்தல்களை "உக்ரேனின் ஜனநாயக பயணத்தில் மற்றொரு படியாக" பாராட்டினார். குறிப்பாக இதுபோன்ற வார்த்தைகள் ப்யாட்டிடம் இருந்து வருவது, அருவருப்பாக உள்ளது. இந்த அமெரிக்க தூதர், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலாண்டுடன் இணைந்து, யானுகோவிச்சை வெளியேற்றிய அந்த பதவிக்கவிழ்ப்பை மேற்பார்வையிடுவதிலும் மற்றும் தற்போதைய கைப்பாவை ஆட்சியை நிறுவுவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தவராவார்.

யானுகோவிச்சைத் தூக்கியெறிந்த பெப்ரவரி 22 ஆட்சிக்கவிழ்ப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க-ஆதரவிலான எதிர்ப்பு தலைவர்களில் யாரை நியமிப்பதென விவாதித்துக் கொண்டிருந்த அவ்விருவருக்கும் இடையிலான உரையாடல் இணையத்தில் கசிந்திருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவர்களின் விருப்பத்தேர்வே, அர்சென்னி யாட்சென்யுக், அரசாங்கத்தின் புதிய தலைவரானார்.

அமெரிக்கா "உக்ரேனிய மக்களின் விருப்பங்களை ஆதரிக்கத் தயாராக உள்ளது, அத்துடன் மேற்கொண்டு ஜனநாயக அபிவிருத்தியை ஊக்குவிக்க, சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்த, மற்றும் உக்ரேனின் பொருளாதார ஸ்திரப்பாடு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த அவசியமான சீர்திருத்தங்களைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துகையில் உக்ரேனின் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும் தயாராக உள்ளது" என்று அறிவித்து, ஜனாதிபதி பராக் ஒபாமா ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை மற்றும் நேர்மையற்றவை ஆகும். நியூ யோர்க்கை அடிப்படையாக கொண்ட உரிமைகள்சார் அமைப்பான Human Rights Watchஆல் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, கிழக்கின் பொதுமக்களுக்கு எதிராக, தடைசெய்யப்பட்ட தொகுப்பு வெடிகுண்டுகளை (cluster munitions) உக்ரேனிய அரசாங்கம் பிரயோகித்ததாக ஆவணப்படுத்தி இருந்தது. Human Rights Watchஆல் கடந்த வாரம் தான், அதன் சொந்த மக்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அதே ஆட்சி, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜனநாயகத்திற்கு முன்மாதிரியாக இப்போது புகழப்பட்டு வருகிறது.

பொறோஷென்கோ உட்பட, ஊழல்மிகுந்த பலகோடி-மில்லியனிய மற்றும் பில்லியனிய தன்னலக்குழுக்கள் உக்ரேனில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. இந்த புதிய அரசாங்கம், இரண்டு நோக்கங்களுக்காக வாஷிங்டன் மற்றும் பேர்லினால் நடத்தப்பட்ட ஓர் ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் விளைபொருளாக உள்ளது: முதலாவது, ரஷ்யாவுடன் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிட்டு, உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவுக்குள் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவ படைகளை அனுப்புவதற்கு ஒரு போலிக்காரணத்தை உருவாக்கி, ரஷ்யாவை ஒரு அரை-காலனித்துவ அந்தஸ்திற்குக் குறைப்பதற்காக, அப்பகுதிகளை பொருளாதாரரீதியிலான, இராஜாங்கரீதியிலான மற்றும் இறுதியாக இராணுவரீதியிலான தாக்குதலுக்குரிய ஒரு களமாக மாற்றுவது; அடுத்து, இரண்டாவது, அந்நாட்டின் ஆதாரவளங்களின் மீது ஏகாதிபத்திய சுரண்டலுக்கு இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குகின்ற அதேவேளையில், உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தும் ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வருவது.

ஞாயிற்றுக்கிழமை தேர்தல்கள், இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஒரு போலி-ஜனநாயக மூடிமறைப்பை வழங்குவதையே அர்த்தப்படுத்துகின்றன. இதற்கிடையே, அஜொவ் படைப்பிரிவுகள் போன்ற கியேவ் ஆட்சியால் ஆதரிக்கப்பட்ட பாசிச படைப்பிரிவுகள், ரஷ்ய மொழி பேசும் அரசாங்க எதிர்ப்பாளர்களை பீதியூட்டியும், கொன்றும், டான்பாஸ் பிராந்தியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

"உக்ரேனிய மக்களின் விருப்பத்தேர்வுகளை" ஆதரிக்கும் ஒபாமாவின் உரை, குறிப்பிடத்தக்க வகையில் பொருத்தமற்றதாகும். பொறோஷென்கோவும் மற்றும் அவரது குழுவும் முற்றிலுமாக அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சார்ந்துள்ளனர் என்பதுடன், அதன் கட்டளைகளுக்கும் கீழ்படிந்துள்ளனர். அமெரிக்க சிறப்பு படைகளுடன் சேர்ந்து சிஐஏ முகவர்களும் கிழக்கு உக்ரேனிய தாக்குதலை வழிநடத்திக் கொண்டு கியேவில் உள்ளனர். முன்னதாக பிளாக்வாட்டர் என்று அறியப்பட்ட அமெரிக்க நிறுவன பயிலகத்தின் கைக்கூலிகளும், அங்கே யுத்தக் குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கிழக்கின் மண்ணில் தான் உள்ளனர்.

ரஷ்யாவை-ஆதரிக்கும் கட்சிகள் ரடாவில் ஓரங்கட்டப்பட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி யானுகோவிச்சின் பிராந்தியங்களின் கட்சி (Party of Regions) முற்றிலுமாக சிதைந்து போயுள்ளது. பிராந்தியங்களின் கட்சியின் ஒரு முன்னாள் உறுப்பினர், விடாலி ஜுஹூராவ்ஸ்கி செப்டம்பரில் ஒரு கும்பலால் உக்ரேனிய நாடாளுமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டார், அந்த கும்பல் அவரை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து, ஒரு டயரால் அவரைத் தாக்கி இருந்தது.

உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் (KPU) உறுப்பினர்கள், கிழக்கு உக்ரேனில் பிரச்சாரம் செய்ய முயன்றபோது இராணுவச் சீருடையில் வந்த முகமூடி மனிதர்கள் மற்றும் கால்பந்தாட்ட போக்கிரிகளால் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. பிராந்தியங்களின் கட்சி மற்றும் KPU உறுப்பினர்களை அதிகாரத்துவம் மற்றும் பொதுப்பணித்துறை பதவிகளில் இருந்து வெளியேற்றும் ஒரு சட்டத்தில் பொறோஷென்கோ அக்டோபர் 9இல் கையெழுத்திட்டார். உக்ரேனிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக KPUஐ சட்டவிரோதமாக்க தயாரிப்பு செய்து வருகிறது.

இத்தகைய ஜனநாயக கேலிக்கூத்துக்கு வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்அனுமானிக்கத்தக்க விடையிறுப்பு, மீண்டுமொருமுறை, உக்ரேனிலும் மற்றும் அதைக் கடந்தும், ஏகாதிபத்திய சக்திகளால் பின்பற்றப்படும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக நடந்துகொள்கிறோம் என்று கூறப்படுவதன் மோசடி குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற அமெரிக்காவின் கூட்டாளிகளாக உள்ள எதேச்சதிகார மற்றும் ஒடுக்குமுறை அரசாங்கங்கள் "ஜனநாயக முகாம்" என்றழைக்கப்படுவதில் உள்ளடங்கி உள்ளன, அதேவேளையில் ஈரான், சிரியா மற்றும் ரஷ்யா உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பவையாக கருதப்படும் ஆட்சிகள், ஜனநாயக மற்றும் மனிதாபிமான உரிமைகளை மீறுவதாக கண்டிக்கப்படுகின்றன.